வியாழன், 17 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -19



    நாம் செல்வோம்! குழந்தைகளே! குழம்பிப் போய் நின்ற மக்கள் திரளை நோக்கி கைகள் உயர்த்தி முதிய துறவி, தொண்டை கமுறக் கதறினார். உங்களுக்கு எப்ப்பொழுதும் நினைவில் இருத்த வேண்டிய ரகசியத்தை சொல்கிறேன்! கேளுங்கள்! பெலப்படுங்கள்!

    சர்ப்பம் போல நீண்டு கிடக்கும் பாதையில், குதிரை வீரர்களுக்கு முன்னே மந்தை ஆடுகள் போல அவர்கள் விரைந்து செல்ல ஆயத்தமாகினர். இல்லத்தரசிகள் தங்கள் வீட்டின் கதவு ஜன்னல்களைக் காற்று கூட புகாதபடி இறுக்க மூடியிருந்தனர், ரத்தத்தின் துளி தெறிப்பு கூட அவர்களுக்கு சகிக்கவொண்ணாததாக இருந்தது. முதியத்துறவி இருமுறை கீழே விழுந்தார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இருமியவர் ரத்த வாந்தியெடுத்தார். திடுக்கிட்ட யூதாசும், பராபசும் அவரைத் தூக்கிக் கொண்டு நடந்தனர்.  ஒரே திரளாய்க் குழுமியிருந்த அத்தனை பேரும், தேவாலயத்தை நோக்கித் தங்களை செலுத்தினர். ஆலயத்திற்கு முன் இருக்கும் சதுக்கத்திலும் கூட்டம் கூட்டமாய் வந்து நிரம்பி நின்றனர். தெருக்கள் ஆளரவமற்றிருந்தது.

    முதியத்துறவியின் சொல்லிற்காக அம்மக்கள் திரள் காத்துக் கொண்டிருந்தது. தங்களுக்குள் அங்கலாய்த்துக் கொண்டும், நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டும் பொறுமையின்றி நின்று கொண்டிருந்தனர். இனிமேலும் என்ன ரகசியத்தை வெளிப்படுத்தப் போகிறார் என்று சற்று ஆரவாரப்பட்டனர். வெகு காலமாக துக்கத்தின் நிழல்களில் தான் அவர்கள் வசிக்கின்றனர். திரும்பத் திரும்ப அவர்கள் வதைப்படுகின்றனர். ஜோர்டானிலிருந்தும், ஜெருசலேமிலிருந்தும், பாழ் நிலத்திலிருந்தும் வந்த தேவனின் தூதர்கள் திரும்பத் திரும்ப ஒவ்வொருவராக சிலுவையில் அறையப்பட்டு மரணித்ததை அவர்கள் அனைவருமே அறிவர்.

    அவர்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருந்தனர். கோபாவேசத்துடன் தங்களுக்குள் வாதிட்டனர். ஈச்சை மரங்களின் அழகான நீண்ட கிளைகளினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆலயத்தின் சுவர்களை, பீடத்தை, அதில் அடுக்கி வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த புனிதப்பட்டயங்களை, பின்னால் தொங்கும் ஒளி நிறைந்த நட்சத்திர விளக்கைப் பார்க்க பார்க்க சொற்களின் பெருங்குரல்களில் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புனிதர்கள், கையளிக்கப்பட்ட நிலம், சொர்க்க ராஜ்ஜியம், மீட்பர், எதுவுமே நிகழவில்லை. மீள மீள நம்பிக்கைகளின் விதைகள் கருகிக் கொண்டே இருக்கின்றன. சாத்தியமில்லாத சொற்களின் தூறல்களால் இச்சுவர்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இனிமேலும் எந்த நம்பிக்கையின் மீதும் நம்பிக்கை கொள்ள நாங்கள் தயாராக இல்லை. கடவுளுக்கு எந்த அவசரமுமில்லை. மனிதனுக்குத் தான் மரணிக்கும் அவசரம். ஒருமுறை நமது தீர்க்கதரிசி இசக்கியேல் சொன்னதை வாசிக்கும் பொழுது, இந்தத் துறவிகள் கடவுளின் சொற்களால் தூக்கி எறியப்பட்டனர். பின் கத்தியும், கதறியும், அழுது புலம்பியும் எந்தப்பலனுமில்லை. இத்தீர்க்கதரிசனம் இவர்களின் ரத்தத்திலிருந்து கூட அழியா வண்ணம் கலந்துவிட்டது.  அதைக் கொண்டு மீண்டும் மீண்டும் முலாம் பூசிக் கொண்டு நம்மிடம் வருகின்றன இத்துருபிடித்த நம்பிக்கைகள். இத்தீர்க்கதரிசனத்தின் மீட்பர்களின் பாதைகளில், முடிவே இல்லாத பாலை நிலமும், மண்டை ஓடுகளும், எலும்புகளும், ரத்தத் திட்டுகளும், மனிதப்பிணங்களின் குவியல்களும் தான் இருக்கும். அங்கு சொர்க்கம் நிச்சயமாக அடர் சிவப்பில் கனன்று கொண்டிருக்கும். உலையில் கனலும் இரும்புக்குண்டம் போல.

    அப்பொழுது வானிலிருந்து வெளிவந்த ஒரு மாபெரும் கை இசக்கியேலைப் பிடித்து  கழுத்திழுபடக் காற்றில் உலுக்கியது. ஆனால் அவரது சொல்லைத் தடுக்க முடியவில்லை. சுவர்களைத் தாண்டி ஈரத்தில் பாசி பீடித்து விடுவது போல அது எல்லா இடமும் பரவியது. இசக்கியேல் அமைதியுடன் தன் சொந்தக்கால்களில் நின்று அம்மந்திரத்தை நவின்றார். காலகாலத்துக்குமான நம் தளைகளின் ஆதிச்சொல்! இஸ்ரவேலின் மக்களே! இஸ்ரவேலின் மக்களே! நம் மீட்பன்! நம் மெசிய்யா! வருகிறான்! எலும்புகள் உடைபடுகின்றன! மண்டை ஒடுகள் தெறிக்கின்றன. அதன் இளித்தப் பற்களில் மண்ணின் நரநரப்பு. அந்த அமானுஷ்யக் கைகளில் இப்பொழுது ஒரு புதிய உலகம்! புதிதாய்க் கச்சிதமாய் வடிவமைத்த ஜெருசலேம் நகரம் உருள்கிறது! நந்தா ஒளி பொருந்திய அதன் கூரைகளில், மரகதங்களும், மாணிக்கங்களும், வைர வைடூரியங்களும் மழை போலப் பொழிகின்றன.

    தேவாலயத்தில் பதிக்கப்பட்டிருந்த ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனங்களில் சிலர் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொள்வதை முதிய துறவி பீடத்தில் நின்று கவனித்தார்.

அவர் ஆவேசத்துடன் மக்கள் திரளைப்பார்த்துக் கத்தினார். எதற்காக இப்படி சலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். நம் தந்தையின் சொல்லில் நம்பிக்கை இல்லையா! இன்னொருவனும் சிலுவையில் அறையப்பட்டான், ஆனால் நாம் நம் மீட்பரை கண்டறியும் பாதையில் ஒரு படி முன்னால் வந்துவிட்டோம் இது தானே உங்களின் குறுகிய நம்பிக்கை! சீ! அற்பர்களே!

    ஒரு வித வெறியுடன் இறைவனின் சொற்கள் அடங்கிய பட்டயச்சுருளை விரித்தார். பிற்பகல் சூரியனின் சாய்ந்த சென்னிறக் கதிர்கள் ஜன்னல் வழி பீடத்தை அணுகியது. ஒரு மஞ்சள் நிற நீள் மூக்குப்பறவையும் பிரசங்கத்திற்கு செவி கூர்வது போல ஜன்னல் கிராதியில் வந்தமர்ந்தது.

    வருத்தப்பட்ட நெஞ்சங்களே! பெலப்படுங்கள்! நம் வெற்றியின் சாசுவதத்தைக் கொண்டாடுவோம்! பறையறிவியுங்கள்! முழங்கட்டும்! நம் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் பாடல்! ஆம்! கத்தி அழைக்கிறேன்! சியோன் மலைக்குன்றிலிருந்து நம் எதிரொலிகள் பூமியின் மண்ணெங்கும் ஒலிக்கட்டும். நம் இறைவன்! ஞானத்தந்தை ஜெகோவாவின் வருகையினை அறிவிப்போம்! நம் மக்களில் ஒருவராக நம் தந்தை எழுந்தருளியிருக்கிறார்! எல்லா திசைகளிலிருந்தும் நம்மை வழி நடத்த அவர் ஆயத்தப்படுத்துகிறார்! நல்லிதயங்களே! உரக்கக் கூவுங்கள்! நம் பயங்களைப் போக்கி பெலப்படுத்த நம் தேவன் உடனிருக்கிறான்! மகிழ்ச்சி கொள் இதயமே! பிள்ளைகளைத் தன் இதயத்தில் பாதுகாக்கும் அப்பனின் ராஜ்ஜியத்திலல்லவா நாம் இருக்கிறோம்! ஏன் பயம்! எதற்கு பதற்றம்! நன்றியுறுகிறேன்! என்றைக்குமே அழியாத அழிக்கவும் முடியாத வல்லமை பொருந்திய நம் தேவனின் சொல்லில் நாங்கள் மகிழ்ந்திருக்கிறோம். எங்களுக்கு வீழ்ச்சியில்லை! இஸ்ரவேலின் பிள்ளைகளே! மகிழ்ந்திருங்கள்! காலங்களற்று நாம் இறைவனின் சொர்க்க ராஜ்ஜியத்தில் சாசுவதப்படுவோம்! ஆமேன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக