சனி, 26 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -48

    

    நீ நரகத்திற்கு போ! செந்தாடிக்காரா! என்றுத் தான் விட்ட வேலையைத் தொடர்ந்தார், செபெதீ. வலையின் அடிப்பகுதி தரை தட்டியது. பாரம் இருமடங்கானது. குவியலாக விளைமீன்களும், மடவைகளும் துடித்துக் கொண்டிருந்தன. 

    இருவருக்கும் இடையில் நின்று கொண்டிருந்த பிலிப்பிற்கு எந்தப்பக்கம் செல்வது என்று குழப்பமாக இருந்தது. யூதாஸ் சொன்னதுதான் உண்மை. தைரியமாகவும் மிகச்சரியாகவும் அவன் அதை விளம்பினான். பிலிப்பும் இது போலத்தான் அதிகாரமாக அக்கிழவனின் முகத்தை நோக்கிப் பேச வேண்டும் என்று நினைப்பான். ஆனால் கிழவன் அவ்வூரின் பெரிய ஆள். நிலச்சுவான்தார் வேறு. இவன் தன் மந்தைகளை அவருக்குச் சொந்தமான புல்வெளியில் தான் மேயவிடுகிறான். அதனால் அவனால் கிழவனை மறுத்து எக்காலத்திலும் பேச முடியாது. அதற்கு ஒன்று, தான் அதிகாரத்தில் இருக்கவேண்டும் இல்லையேல் கிறுக்கனாக இருக்க வேண்டும். அவன் இரண்டுமல்லன். அவன் வெறுமனே நிறைய நிறையப் பேசுவான் ஆனால் கிழவரிடம் கேலி பேசுவதோ, சண்டை போடுவதோ அவனைத்தான் பாதிக்கும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

    அவன் பதிலுக்கு எதுவும் பேசாது அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்தான். தயக்கமும் வெட்கமும் கொள்ள யூதாஸ் சென்று கொண்டிருப்பதை நோக்கினான். மீனவர்கள் வலையின் பெரும்பகுதியை கரைக்கு இழுத்து வந்துவிட்டனர். செபெதீ ஏரியினுள் மூழ்கி வலையைக் கரை நோக்கி உந்திக் கொண்டிருந்தார். பிலிப்பும் அவர்களுடன் சேர்ந்து வலையைப் பிடித்து கரைக்குத்தள்ளிக் கொண்டிருந்தான். கிழவர் நீரினுள் முங்கித் தள்ளுவதும், மீனவர்களைக் கண்காணிப்பதுமாய் இருந்தார்.  அவர் சொல்லுக்கு வேலையாட்களும், மீன்களும் கட்டுப்பட்டிருந்தன.

    அவர்கள் வலையை முழுதுமாக இழுத்து கரைக்குக் கொண்டு வந்துவிட்டனர். கொத்துக் கொத்தாக துள்ளுகிற துடிக்கிற மீன்களின் குவியல் வலை முழுதும். பாரம் அழுந்த மண்ணில் அழுந்தியது. அவர்கள் அனைவரும் குதூகலித்தனர். செந்தாடிக்காரனின் குரல் அங்கு பாறைகளுக்குப் பின்புறம் இருந்து எதிரொலித்தது.

ஹேய்! செபெதீ!

கிழவர் எதுவும் கேட்காதது போல நடித்தார்.

    திரும்பவும் அதே கரகரப்பானக் குரல், ஹேய்! செபெதீ, நான் சொல்வதைக் கொஞ்சம் கேள். போ! போய் ஜேக்கப்பைப் பிடித்துக் கொண்டு வந்துவிடு!

    "ஜேக்கப்!" தாள மாட்டாது கிழவரின் குரல் தழுதழுத்தது. அவரது இளையமகன். அவர் தன்னுள் எதுவோ முறிந்தது போல உணர்ந்தார். மூத்தவனை நான் பறிகொடுத்தேன். இப்பொழுது இவனையும் இழந்துவிடுவேனா என்று புலம்பினார். அவருக்குள்ளது இரு மகன்கள். இவனும் இல்லாமல் அவரால் வாழமுடியாது. "ஜேக்கப்!" அவர் யூதாசைப் பார்த்து கவலையுடன் கத்தினார். அவன் எங்கிருக்கிறான். உனக்கேதும் தகவல்கள் தெரியுமா?

    அவனை நான் கடைசியாக நாற்சந்திகள் சந்திக்கும் சாலையில் கண்டேன். அவன் அந்த சிலுவைகள் செய்பவனுடன் ஏதோ தொடர்ச்சியாக ஆதுரத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.

    என்ன சிலுவை செய்பவனா! ஐயோ! அந்தப்பாவியுடனா! என்று கதறினார்.

    ஆம்! அந்தத் தச்சனின் மகன். நம் தீர்க்கதரிசிகளையெல்லாம் கொல்பவன். என்ன செய்ய, ரொம்பத்தாமதம்! ஒன்றும் செய்வதற்கில்லை. நீ உன் இந்த மகனையும்  இழந்துவிட்டாய்க் கிழவா! ஒருத்தனைக் கடவுள் பிடித்துக் கொண்டார். இன்னொருத்தன் சாத்தானின் வசம் சென்று விட்டான். 

    முதிய செபதீயின் உடல் முழுதும் தீப்பட்டது போல எரிந்து கொண்டிருந்தது. அவர் வார்த்தைகள் எதுவும் உதிர்க்கவில்லை. வெறுப்புடன் தூரத்தை அளந்து கொண்டிருந்தார். வலையிலிருந்து ஒரு மீன் பறந்து வெளியே சாடியது. துடித்துத் துடித்து நீரினுள் சென்று ஏரியினுள் நுழைந்து மறைந்தது.

    கெட்ட சகுனம்! இது கெட்ட சகுனம்! பதைபதைக்க முணுமுணுத்தார் செபெதீ. இந்த மீனைப் போல என் மகனும் என்னைத் தனியாக விட்டு விட்டு ஆழ்ப்புதைக் குழிகளில் மூழ்கப் போகிறானா?

    வர் பிலிப்பைப் பார்த்தார். நீ அந்த மீனைப் பார்த்தாயா? இவ்வுலகில் எந்த நிகழ்வும் சும்மா நிகழாது. சொல்! இதற்கு என்ன அர்த்தம். அந்த மீன் துள்ளத்துடிக்க நீர்மையினுள் மூழ்கி மறைந்தும் விட்டது. நீ சொல் பிலிப்! என்று கிழவர் அதிர்ச்சியில் குழறினார்.

    ஒரு ஆட்டுக்குட்டி என்றால் என்னால் சொல்லியிருக்க முடியும். ஒரு வழிதவறிய ஆட்டுக்குட்டியின் பாதைகளை,  ஒரு மேய்ப்பனாக. நான் நன்கு அறிவேன். ஆனால் மீன்களைப்பற்றி எனக்கொன்றும் தெரியாது ஐயா! என்று சற்றுப் பணிவுடன் சொன்னான். அவனது சொற்கள் அவருக்குக் கோபத்தைத்தான் கிளப்பியது. யூதாசைப் போல ஒரு ஆண்மகனாய் இவன் என்னிடம் தைரியமாகப் பேச வாய்ப்பில்லை என்று, அவனைக் கேட்டதற்கு தனக்குள் நொந்து கொண்டார்.

    பிலிப் தன் துரட்டியைத் தோள்களில் வைத்துக் கொண்டு, யூதாஸ் சென்ற திசை நோக்கி பாறைகளைத்தாண்டிக் குதித்து சென்று கொண்டிருந்தான்.

நில்! என் சகோதரனே! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.

    போ! போய் உன் ஆடுகளின் குண்டிகளை முகர்ந்து அதனை வழி  நடத்துக் கோழையே! திரும்பிப் பார்க்காமலேயே செந்தாடிக்காரன் பதிலுரைத்தான். உன் கவலைகளை உன் மந்தையிடம் போய்க்காட்டு. மனிதர்கள் அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்கட்டும். என்னை சகோதரன் என்று அழைக்காதே! நான் யாருக்கும் சகோதரன் அல்ல.

கோபப்படாதே! நான் உன்னிடம் பேச வேண்டும். கொஞ்சம் நில்!

    யூதாஸ் நின்று அலட்சியமாக அவனைப்பார்த்தான். ஏன் நீ வாயைத்திறக்க மாட்டுக்கிறாய்? எதற்கு இவ்வளவு பயம் அந்தக் கிழவனிடம்? என்ன நிகழகிறது எனத்தெரிந்தும் எதற்காக ஒரு பேடியைப் போல நடந்துகொள்கிறாய்? எதற்காக நாம் நம் தலைகளை சுவற்றில் முட்டிக்கொண்டிருக்கிறோம்? யார் வருகிறார்? இல்லை, நீ எதையுமே புரிந்துகொள்ளத் திராணியற்ற முட்டாள் ஜென்மமா?

    நல்லது! கேள்! காலம் நெருங்கி விட்டது. நம் யூதர்களின் அரசன், தனது மகிமைகளை அளிக்க நம்மை நெருங்கிவிட்டான். கோழையாக இருப்பதற்கு வெட்கம் கொள், இழிஞனே!

    இன்னும், யூதாஸ், இன்னும்! பிலிப் மன்றாடினான். என்னை உன் துரட்டிக்கம்பால் அடித்து இழுத்துச்செல். கொஞ்சமாவது ஒரு சுயமரியாதை வேண்டாமா!, ஒரு ஆண்மகனுக்கு! என் முகத்தில் காறித்துப்பு யூதாஸ்! நான் என் பயங்களை மடியில் வைத்துக் கொண்டு மிகவும் சோர்ந்துவிட்டேன்.

    யூதாஸ் அவன் கைகளை இறுக்கிப்பிடித்துக் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். நீ உண்மையிலேயே உன் இதயத்திலிருந்து என்னிடம் பேசுகிறாயா? இல்லை! வெற்றுச் சொற்களால் பசப்புகிறாயா?

    எனக்கு என்னைப் பார்த்தாலேக் கேவலமாக இருக்கிறது. நான் எப்படிப்பட்டப் பிறவி. என்னால் இதற்கு மேலும் தாங்க முடியுமா என்று தெரியவில்லை.

    நீ எனக்குக் காட்டு! யூதாஸ்! நீ வழியை எனக்குக் காட்டு! நான் தயார்! என்று பிலிப் அழுகுரலில் கதறினான்.

    செந்தாடிக்காரன் சுற்றும் முற்றும் பார்த்தான். தாழ்ந்தக் குரலில் அவன் கண்களை நோக்கிக் கேட்டான். 

"பிலிப்! உன்னால் கொலை செய்யமுடியுமா?"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக