புதன், 23 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -34

     

Author: Nikos Kazantzakis

    நிழலடர்ந்தப் பாதை வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே நீண்ட வெண்ணிற அங்கியும், தலையில் கரியப்பட்டயம் பதிந்த முக்காடும் அணிந்த அரேபிய வணிகர்கள், விலையுயர்ந்த காஷ்மீரியச் சால்வைகளை வைத்திருக்கும் மஞ்சள் நிற வணிகர்கள் என விதவிதமான மனிதர்கள் அவனைக் கடந்து சென்றனர். குறுக்கே ஒரு சிறியக் கதவினைத் திறந்து, மத்திம வயதுப் பெருத்த ஆண் ஒருவன் வெடித்துச் சிரித்துக் கொண்டே வெளியேவந்தான். கூடத்திற்குள்ளே நின்றிருந்த அவள் தன்னைப்பார்க்க வேண்டும் என்பதற்காக இன்னும் சத்தமாக, ஆபாசமாக சிரித்தான்.

     இருளில் உள்ளே நின்று கொண்டிருந்த கரிய நிறப் பெண்ணொருத்தி, ஜீசஸை அறிந்திருந்தாள். நல்லது! தச்சனின் மகனே இறுதியில் நீயும் இங்கு வந்துவிட்டாயா, உன் வழிபாடுகளை நடத்த, உதடுகளைப் பிதுக்கிக் கேலியாகச் சிரித்துக் கொண்டாள்.

    சட்டென மேரியின் மகனின் முகம் சிவந்து விட்டது. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

    உறுதியாக நான் அவளைச் சந்திக்க வேண்டும். அவள் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு பிச்சைக் காரன் போல அவள் முன் மண்டியிட்டு என் உயிரை உருக்கிக் காணிக்கையாக்குவேன், என்று வலுவாகத் தன்னுள் ஆணி அறைவதைப் போலச் சொல்லிக் கொண்டான்.

    நடையை விரைவுபடுத்தினான். கிராமத்திற்கு மறுபக்கம் தெற்கு நோக்கி, மாதுளை மரங்கள் அடர்ந்த தோப்பினிற்கருகில் அவளது இல்லம் இருக்கிறது என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். கருப்பும் வெளுப்புமாய் இரு பாம்புகள் பச்சையடர்ந்த, நரம்புகளோடும் ஒற்றை இலையினில் பிண்ணிப் பிணைந்து ஒன்றன் முகத்தை ஒன்றுப் பார்க்கும் படி, இரட்டை நாக்குகள் உரச, தீக்கண்கள் மிளிரத் தீட்டப்பட்ட ஓவியம், அவளது காதலன் ஒருவனால் அந்த வாசற்கதவை நிறைத்து வரையப்பட்டிருந்தது. உள்ளே பாலையின் மணற்திட்டுகளைப் பிரதி செய்வது போல சின்னஞ்சிறிய மணற் திட்டு, ஒரு வட்ட வடிவப் பாத்திரத்தில் பரப்பப்பட்டு, அதில் இரு சென்னிறக் கற்கள் பதியப்பட்டு, மஞ்சள் வண்ணச் செதில்களும், தலைப்பகுதியில் கொம்புகளும், கூர்ந்த சாம்பல் வண்ண உருளைக் கண்களும் கொண்ட ஓணான் ஒன்று, ஒற்றைக் கால் மட்டும் கட்டப்பட்டுக் கிடந்தது. மற்றொரு காலால் சதா மண்ணை அளைந்து மூர்ச்சையுற்று அயர்ந்து பின் அதையேத் திரும்பச் செய்து செய்து, தன் நீண்ட நாக்கினை நீட்டியும் மடித்தும், அங்கு வருவோரையும் போவோரையும் வெறித்துப் போக்கு காட்டிக் கொண்டிருந்தது. 

    வழி தவறியிருந்தான். வந்த அதே பாதைக்கேத் திரும்பவும் வந்திருந்தான். நண்பகல் கழிந்து கொண்டிருந்தது. வெப்பத்தின் கதிர்கள் நேராக தலைக்கு மேலே எரிந்தது. ஒரு ஆலிவ் மரத்தின் நிழலில் நின்று சற்று இளைப்பாறினான். ஒரு வசதியுள்ள வியாபாரி அவனைக் கடந்து சென்றான். கத்தையான கருத்த சுருள் கேசமும், வாதுமைப் போன்ற கண்களும் கொண்டிருந்தான். எல்லாக் கைவிரல்களிலும் விதவிதமான மோதிரம் போட்டிருந்தான். எதிரே நிற்கும் அனைத்தையும் எந்த மதிப்புமுமின்றிப் பார்க்கும் ஒரு அலட்சியப்பார்வை . மேரியின் மகன் அவனைப் பின் தொடர்ந்தான். 

    உயரமான, வலுவான இளமையானத் தேகம் கொண்ட அந்த வியாபாரி, மதிப்பு மிக்க உடுதுணிகளும், தோள்களில் காஷ்மீரத்து சால்வையும், பறவை இறகுகளும், மணிகளும் கோர்த்துத் தைக்கப்பட்ட மேலங்கியும் அணிந்திருந்தான். காதுகளில் நீல நிறக் கடுக்கன்களும், தங்கவளையம் பொருத்திய மூக்கும், கைகளும் வெள்ளி வளையும் அணிந்திருந்ததைப் பார்ப்பதற்கு ஒரு சிறகுகளற்றத் தேவதூதன் போலக் காட்சியளித்தான். நிச்சயமாக என்னை வழி நடத்த இறைவன் அனுப்பி வைத்த தேவதையாகத் தான் இவன் இருக்க வேண்டும் என இளைஞன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

    பலப்பல முடுக்குகளின் வழியாக அம்மனிதன் நடந்து கொண்டே சென்றான். சற்றுத் தொலைவில் மாதுளை மர நிழலில் கரும்பச்சை இலையில் சீறும் இருப்பாம்புகள் வரைந்திருந்த கதவு தெரிந்தது. வாசலில் ஒரு கிழவி அடுப்பு மூட்டியிருந்தாள். சட்டியில் கரித்துண்டங்களின் கனலில், நண்டுகள் வெந்து கொண்டிருந்தது. அருகே சட்டுவங்களில் வேகவைத்த பூசணி விதைகளும், கொண்டைக் கடலைகளும், பொறித்த இறைச்சித்துண்டங்களும் மிளகுத்தூவல்கள் கலந்து  சுடச்சுட விற்பனைக்காக மூடி வைக்கப்பட்டிருந்தது. 

    அவன் பின்தொடர்ந்து வந்த மனிதன், ஒரு வெள்ளிக்காசைக் கிழவியிடம் தூக்கி எறிந்து விட்டு கதவைத் திறந்து உள்ளே சென்றான். இளைஞனும் அவன் பின்னாலேயே பேசாமல் சென்றான். 

    உள்ளே, நான்கு வியாபாரிகள் தரையில் சம்மணமிட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தனர். இருவர் இளைஞர்கள், இருவர் வயதானவர்கள். வயதானவர்கள் கண்களுக்கு மையிட்டிருந்தனர், மணிக்கட்டில் குலச்சின்னங்களைப் பச்சைக் குத்தியிருந்தனர். கருமையானக் கேசமும், தாடியும் கொண்டிருந்த இளைஞர்கள் சற்றே பொறுமையின்மையிடன் தங்களுக்குள் எதுவோ குசுகுசுத்துக் கொண்டும், கோப்பையில் இருந்த மதுவை உறிஞ்சிக் கொண்டுமிருந்தனர்.

    அனைவரது கண்களும், எதிரே இருந்த சிறியக் கதவுகள் கொண்ட மேரியின் படுக்கை அறையைத் தாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அறையினுள்ளிருந்து உடல்களின் முயக்கத்தின் முடிவில்லா ஒலிகள், முணகல்களும், மூச்சிரைப்புகளும், க்ரீச் க்ரீச்... எனக் கட்டிலின் சப்தமும், வியர்வையுடன் சதைகள் மோதும் பொழுது உருவாகும் நீர்மைக் குமிழும் ஒலியும் மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருந்தது. எதிரே பெருமூச்சுக்களுடனும், தவிப்புகளுடன் கால்கள் மாற்றிச் சம்மணமிட்டு அமர்ந்திருந்தனர். உள்ளே சென்றிருந்த ஒரு வயதான நாடோடி அரபி , வெகு நேரம் ஆகியும் வெளிவரவில்லை. காத்திருப்புக்களின் கனங்கள் கூடிக் கூடி, காலம் எடைமிக்க உலோகக் குண்டு போலக் கிடந்தது. நகராத நேரத்தை எண்ணி அவர்கள் சலித்துக் கொண்டனர். எல்லோருமே ஏதோ ஒரு அவசரகதியில் அக்கதவை எதிர் நோக்கியிருந்தனர். இளைஞன் பின்தொடர்ந்து வந்த இந்திய வியாபாரி உள்ளே வரிசையில் உட்கார்ந்துக் கொண்டான். அவனுக்குப் பின்னால் கடைசியாக மேரியின் மகன் அமர்ந்தான்.

    நடு முற்றத்தில் நன்குப் பழுத்துச் சிவந்த பழங்கள் அடர்ந்த மாதுளைச் செடி. அதன் கிளையில், ஈச்சங்கிளைகளால் முடையப்பட்ட கூண்டில் தவிட்டு நிற உடலில் கருப்புத்திட்டுகளும், சிறிய பழுப்பு அலகுகளும் கொண்ட ஆண் கௌதாரி ஒன்று இருந்தது. அது குடைவது போலக் க்ரீட்...க்ரீட் என்று சத்தமெழுப்பியும், கால் நகங்களால் கூண்டினைப் பிறாண்டிக் கொண்டுமிருந்தது. வாசலின் வலதுபுறம் நெடிதாய்க் கூம்பு போல ஒடுங்கியும், இடதுபுறம் விரிந்து கிளைகள் பரப்பியும் அழகான இரு சைப்ரஸ் மரங்கள் நின்றிருந்தன. 

அமர்ந்திருந்த அவளின் வாடிக்கையாளர்கள், தங்கள் கச்சைகளில் வைத்திருந்த பேரீச்சம் பழங்களை, வாதுமைக் கொட்டைகளை மென்று கொண்டும், ஜாதிக்காய்களை கடைவாயில் அதக்கி வாய்துர்நாற்றத்தை அகற்றவும் முயற்சி செய்து கொண்டிருந்தனர். தங்களுக்குள் ஊர்ப்பாடுகளும், வணிக நிலவரங்களும் பேசிக் கொண்டுக் காலம் கடத்தினர். மற்ற அனைவரும் புதிதாய் வந்தமர்ந்திருந்த இந்தியனைப் பார்த்து முகமன் கூறினர். அவனுக்கு பின்னே அழுக்கான உடையுடன் அமர்ந்திருக்கும் பாவப்பட்ட மேரியின் மகனை, அலட்சியத்துடன் பார்த்தனர். வரிசையில்  முதலில் அமர்ந்திருந்த வயதானவர் பெருமூச்சு விட்டுக் கொண்டு தன் உரையாடலில் அமிழ்ந்தார்.

    "என்னை விட மகத்தான தியாகி வேறு யாரும் இருக்க மாட்டார்கள். பாருங்கள்!  என் முன்னே சொர்க்க லோகம் இருக்கிறது . ஆனால் அதன் கதவுகளோ அடைபட்டிருக்கின்றன என்றார் பெரியவர்.

    நான் யூப்ரிடஸின் சுவை மிகுந்த மசாலாப் பொருட்களை மகாசமுத்திரத்தின் வழியேக் கொண்டு சென்று வியாபரம் செய்கிறேன்.  கப்பல் நிறைய இலவங்கப்பட்டையையும், நல்ல மிளகையும் பதிலீடாகக் கொடுத்து மேரியை இன்றே விலைக்கு வாங்கி விடுவேன். இதோ பார்க்கிறாயே, இந்த சிவந்த கால் நகங்கள் கொண்ட கௌதாரி அடைபட்டிருக்கும் கூண்டு, இது போலவே ஒரு தங்கக் கூண்டு செய்து அவளை அடைத்து விட்டால், பாவம்! என் தாபம் மிகுந்த நண்பர்களே, நீங்கள் என்ன செய்வீர்களோ! அதனால் என்ன உங்களால் இன்று அனுபவிக்க முடியுமோ, அதை இப்பொழுதே அனுபவித்து விடுங்கள். இதுதான் நீங்கள் அவளுக்குக் கொடுக்கும் கடைசி முத்தம். பின்னால் உங்களுக்கு ஏதும் கிடைக்கப்போவதில்லை. சற்றுக் குரூர சிரிப்புடன், கணுக்கால்களில் தங்க வளையங்கள் இட்ட இளைஞன் மற்றவர்களைப் பார்த்துக் கேலி செய்தான்.

    நன்றி! எனதருமை, இளைஞனே! உயரமும், ஒல்லியுமாக இருந்த வெளுத்த முதியவர் நறுமணத் தைலம் தேய்த்த தாடியை, விரல்களால் கோதிக்கொண்டே அந்தத் திடமான இளைஞனைப் பார்த்து சிரித்தார். அவரது உள்ளங்கைகளில் சிங்கோனா விதைகளிலிருந்தும் எடுக்கும் தைலத்தின் வீச்சமான நறுமணம் கமழ்ந்தது.

    என்ன சொன்னாய்! உன் வார்த்தைகளால் இன்றைய முத்தத்தின், எச்சிலின் சுவை மென்மேலும் வளர்ந்துவிட்டது, என்று தன் வாய் அகலக் கிழிய, ஈறுகள் தெரியப் பல்லைக் காட்டினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக