வியாழன், 24 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -40

   


 

    மழை மெதுமெதுவாக வெறிக்கத் தொடங்கியது. வானம் தன்னை முற்றிலுமாகக் கொடுத்து விடுவித்திருந்தது. மண் தன்னுள் வானை நிறைத்து அமர்ந்தது. சிற்சில ஓடைகளும், குட்டைகளும் புதிதாய்த் தோன்றியிருந்தன. ஓடைகளின் சிரிப்புச்சப்தங்கள் கற்கள் பாவிய கிராமத்தின் முடுக்குகளுக்குள் புகுந்து சென்று கொண்டிருந்தன.

    சிறிய அலமாரியிலிருந்த திராட்சை ரசக்குப்பி முழுதும் தீர்ந்திருந்தது. சுவையான பேரீச்சம் பழங்கள் இன்னும் கொஞ்சம் தட்டில் இருந்தன. இருவரும் முன்னே அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பைப்பார்த்துக் கொண்டிருந்தனர். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கனன்றுத் தீய்ந்து கங்கு மட்டுமேயாக அது மாறிக் கொண்டிருந்தது. அவர்களும் அதுபோலவே எரிந்து எரிந்து, இன்னும் அடங்காமல் காத்திருக்கும் தீக்குமிழ்கள் போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.  

    இன்னும் குளிர் அடங்கவில்லை. இளைஞன் எழுந்து இன்னும் கொஞ்சம் சுள்ளிகளை எடுத்து தீயினில் இட்டான். மாக்தலேன் கை நிறையக் காய்ந்த புன்னை இலைகளை அதனுள் போட்டாள். மணம் பரவத் தொடங்கியது. தீக்கங்கு பிடித்து எரிந்து நாக்குகள் நீட்டித் தழலாடியது அவள் எழுந்துக் கதவைத் திறந்தாள். நீர்மையின் சுகந்தம் மாறாக் குளிர்க்காற்று இன்னும் கச்சை தெறிக்க அறையினுள் வியாபித்துப் பரவியது. வானில் மேகங்கள் சிதறிப்பரவியிருந்தன. நீலமும் கருமையும் கலந்த வானில் எந்த மாசுமருவுமற்ற இரு நட்சத்திரங்கள் மிளிர்ந்தன. அண்ணாந்து அதனை நோக்கியவளை அவைகளும் சிமிட்டிக் கொண்டேப் பார்த்தன.

    மழை வெறித்து விட்டதா! அறையின் மத்தியில் அமர்ந்திருந்த இளைஞன் திரும்பவும் கேட்டான். அவனால் அவன் மனதை எந்தவகையிலும் மூடி மறைக்க முடியவில்லை.

அவள் எதுவும் பேசாது பாயை விரித்தாள். தன் பெட்டியினுள் இருந்த கம்பளிப் போர்வைகளை எடுத்து, கனப்படுப்புக்கு முன்னே படுக்கை ஒருக்கம் செய்தாள்.

    இங்கே உறங்கு! வெளியே இன்னும் பனியும், குளிர்க்காற்றும் குறைந்தபாடில்லை. ஏற்கனவே நடுநிசி ஆகிவிட்டது. இந்நேரம் வெளியேசென்றால் இந்தக்குளிரில் உறைந்து நீ மரணிக்கத்தான் வேண்டும். அதனால் சங்கோஜம் கொள்ளாமல் பேசாமல் படு, என்றாள்.

இங்கேயா! இளைஞன் நடுக்கமுறக் கேட்டான்.

பயப்படுகிறாயா! ரொம்ப நல்லது! 

    நீ ஓய்வெடு. என் அப்பாவிக் குழந்தையே! நான் உன்னைச் சபலப்படுத்த மாட்டேன், உன் மதிப்பு மிக்க கன்னித்தன்மைக்கு என்னால் எந்த பங்கமும் வந்துவிடாது. கவலைப்படாதே! அமைதியாக உறங்கு!

    இன்னும் கொஞ்சம் சுள்ளிகளை இட்டவள், விளக்கை அணைத்தாள். நிம்மதியாக நித்திரைகொள் என் தங்கமே! நாளை நமக்கு செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. நீ உன்னுடையப் பாதையில் உனக்கான இரட்சிப்பைத் தேடிச்செல். நான் என்னுடையப் பாதையில் எனக்கே எனக்கான இரட்சிப்பினைத் தேடிச் செல்கிறேன். இணையாகச் சென்றாலும் இனி நாம் எங்கேயும் சந்தித்துக் கொள்ளவேண்டாம். இனிய உறக்கங்கள்! ஜீசஸ்! அதே தழும்பலானக் குரல் அவனுள் நிறைந்தது.

    அவள் தன்னுடையப் படுக்கைவிரிப்பில் குப்புற விழுந்து, தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள். ஜீசஸ்! ஜீசஸ்! ஜீசஸ்! எனும் பெயர் ஒன்றிலிருந்து ஒன்றாகத் துளிர்த்து அவளுள் பெருகிக் கொண்டே இருந்தது. அத்தனை ஆதுரத்துடனும், கனிவுடனும் அப்பெயரைத் தழுவிக் கொண்டே இருந்தாள். தன் ரேகைகள் படிந்த அப்பெயரை மார்புக்குவைகளுள் அழுத்தி நெஞ்சினுள் நிறைத்துக் கொண்டாள். விம்மி விம்மி அப்பெயரின் விளிகள் அவளை மீறி வெளியேறத் துடித்தன. அடக்க அடக்க அப்பெயர் அவள்,  உடலின் ரத்த அணுக்கள் முழுதும் பீறிட்டுப் பாய்ந்தது. பெயர் ஒரு உயிருள்ளப் பொருள் போல அவள் கைகளில் துடிதுடித்தது. ரத்தம் கசிய அதனைத் தன் வாயினுள் அதக்கினாள். கடித்துச் சவைத்துக் கூழாக்கினாள். கசக்கும் அச்சுவையைத் தொண்டைக் கமற விழுங்கினாள். தன்னுடைய அழுகையும், விம்மலும் வெளித்தெரியாமல் அடக்க  மிகவும்  பிரயத்தனப்பட்டாள். அவனுக்கு அது கேட்டுவிடுமோ என்று பயந்தாள். அவன் முழு தைரியத்துடன் இங்கிருந்து போகட்டும் என்று சமாதானம் அடைந்தாள். ஆனால் உண்மையில் அவளால் கண்களை மூட முடியவில்லை. மூடினால் அக்குரல்! அப்பெயர்! அணைக்க முடியா விளி!. ஒரு முலையூட்டும் தாய், தன் மகவை நெஞ்சினுள் அமிழ்த்தியிருக்கும் பொழுது அதன் மூச்சின் வெப்பத்தை சுகித்துக் கொண்டும், அது சிறிதே சிணுங்கினால், அழைத்தால், இன்னும்இன்னும் எனத் தன்னுள் இறுக்கிக் கொண்டு கதகதப்பூட்டி அது உறங்குவதையேக் கண் கொள்ளாமல் கவனித்துக் கொண்டிருப்பாளே, அது போல மேரியும், அவன் உறங்குவதைக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்

    அடுத்த நாள், விடியத் தொடங்கியது. உறங்காமலிருந்தவள் அரைக்கண்ணில் அவன் எழுவதை நோட்டமிட்டாள். அவன் எழுந்துத் தன் இடைக்கச்சையினை சரிசெய்து கொண்டான். இடுப்பில் இருந்த தோல்வாரினை இறுக்கி வெளியைப் பார்த்தான். வெளிச்சம் அப்பொழுதுதான் குமிழ்கிறது. அவன் போக எத்தனித்தான். ஆனால் அவனுக்கு போக விருப்பமில்லை. திரும்பிப் பார்த்தவன், தயக்கத்துடன் அவளது படுக்கையை நோக்கி இரண்டடிகள் வைத்தான், பின் திரும்பிக் கொண்டான். அறையினுள் போதுமான அளவு வெளிச்சம் இருந்தது. அவளை அணுகித் தழுவிக் கொள்ள வேண்டும் என்று பேரவாக் கொண்டான். அவனது இடது கை இன்னும் தனது இடுப்பு வாரின் முட்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. வலது கையால் சத்தம் எழும்பா வண்ணம் வாயினைப் பொத்திக் கொண்டிருந்தான்.

    அவனுக்குப் பின்னே தன் கூந்தலினால் மேலுடம்பை மறைத்துக் கொண்டு முலைகள் அசையப் படுத்துக் கிடந்தாள் மேரி. அவள் இன்னும் அவனை அரைக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவன் வருவான்! வருவான்! வருவான்! ஓராயிரம் முறைத் துடித்துக் கொண்டே இருந்தது அகம்!

யாருக்குமே கேட்காத குரலில், சொன்னான் அப்பெயரை! மேரி!

    அது வெறும் பெயரல்ல. அது அவளின் ஆகிருதி. அவள் ரத்தமும் சதையுமாய் அப்பெயரில் வீற்றிருக்கிறாள். செல்! செல்! என முடுக்கியது அவனுள்ளம்.

    ஆனால் இன்னும் இன்னும் எண்ணிலடங்கா கணங்கள். அங்கு அவன் அசையாமல் அப்பெயரை உச்ச்ரிக்க மட்டும் தான் முடியும்! ஒவ்வொரு முறை அப்பெயர் அவனுள் கொப்பளிக்கும் பொழுதும் அவனது அகம் பயத்தை உணர்ந்தது. தாவித் தாவிச்செல்லும் அகம், அப்பெயரிலேயேத் திரும்பத் திரும்ப அகப்பட்டுக் கொண்டிருந்தது. 

    நொடித் தெறித்த கணம்! தன் நெஞ்சில் வலது கை முஷ்டியால் ஓங்கிக் குத்தினான். பொங்க்! என்ற சத்தம் அறையினுள் எதிரொலித்தது. அவள் இன்னும் அசையவில்லை.

    திரும்பிப்பாராமல் வாதிலிலிருந்து வெளியே காலடி எடுத்து வைத்து, முற்றத்தின் வழியேப் பூட்டியிருந்தக் கதவைத் திறந்து, சூரியன் இரைந்து கிடக்கும் பாதை வழியே விரைந்து சென்றான்.

    படுக்கைவிரிப்புகளையும், பாயினையும் தூற எரிந்து விட்டு, தன் தன்னந்தனிமையுடன் அழுவதற்குத் தயாரானாள் மேரி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக