சரி! நீ போகிறாய்! தாமஸ் ஆவேசத்தில் கத்தினான். ஆனால் உனக்குத்தெரியுமா, யூதாசும் அங்குதான் போய்க்கொண்டிருக்கிறான். அவன் கைகளில் கத்தியும் உள்ளது. உன்னிடம் கத்தி இருக்கிறதா?
"அதை நான் வைத்திருப்பதால் மட்டும் என்ன பயன்?" மேரியின் மகன் இன்னும் தன் தலையை உயர்த்தாமல் அதே உணர்வற்றக் குரலில் கேட்டான்.
தாமஸ் வெறுமனேப் பற்களைக் காட்டிச் சிரித்தான்.
"ஆடு....ஆடு...ஆடு...!" என்று ஆட்டைப் போலவேக் கனைத்து அவனைப் பரிகாசம் செய்தான். பின் தன் மூடையை எடுத்துத் தலையில் ஏற்றிக் கொண்டான்.
"சரி, நான் விடைபெறுகிறேன். உனக்கு என்ன விருப்பமோ அதைச்செய்!, நான் உன்னைத் திரும்பப்போகச் சொல்கிறேன். நீயோ, போய்த்தான் தீருவேன் என்று அடம் பிடிக்கிறாய். போ! சீக்கிரம் போ! பிறகு தாமதமாகி விடப்போகிறது. உன்னை நீயேதான் மிதித்து அதை நோக்கித் தள்ளுகிறாய். இதில் நான் செய்ய என்ன இருக்கிறது". என்று வெறுப்பானக் குரலில் முணுமுணுத்தான் தாமஸ்.
தன் மாறுக்கண்களைச் சுருக்கிச் சிமிட்டுக்கொண்டுத் திரும்பவும் வந்த வழியில், ஊதுகுழலை ஊதிக்கொண்டே, இப்பொழுது மேடாக இருக்கும் நிலத்தை நோக்கி உந்தி முன்னேறினான்.
இரவின் இருள் தீவிரமாக இறங்கியிருந்தது. ஏரியின் நீர்ப்பரப்பின் சலசலப்பைக் கேட்க முடிந்தது. இருளினுள் அது மூழ்கி வெளித்தது. பறவைகள் தங்கள் சிறகுகளை ஒடுக்கி நித்திரையில் ஆழ்ந்தன. இரவுப் பறவைகள் கூட்டிலிருந்துக் கிளம்பி இரைக்காக அங்காங்கே காத்துக்கொண்டிருந்தன. அதன் கார்வையானக் குழறல் ஒலிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்க ஆரம்பித்தது. எண்ணிலடங்கா விண்மீன்கள் வானத்தை ஆக்கிரமித்திருந்தன. அரைக்கோள வடிவ நிலா நிலைத்திருந்தது. தலைக்கு மேலும், கால்களுக்குக் கீழும் இருள் சூழ்ந்திருந்தது. மூடுபனியின் சில்லிட்டக் காற்று சுருள் சுருளாகப் பரவத் தொடங்கியது. இரவின், குரலின் மொத்த சலசலப்புகளுக்குள்ளும், கிராமத்தின் முதல் வீட்டிலிருந்து விளக்கொளி இருளினுள்ளிருந்து முளைத்தது.
இது ஒரு புனிதமான நேரம். நான் போவதற்கு சரியானத்தருணம். இருளினுள் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள். போகலாம்! மேரியின் மகன் பயணத்தைத் தொடங்க எத்தனித்தான்.
தாமசின் சொற்கள் அவன் எண்ணங்களில் சுழன்றது.
எது கடவுளின் விருப்பமோ அது நடந்தே தீரும்! என்று சொல்லிக் கொண்டவன் தொடர்ந்து விரைவாக நடந்தான்.
என்னுடைய மரணத்திற்காகத் தான் அவர் என்னை உந்துகிறார் என்றால், சீக்கிரமே நான் கொல்லப்படவேண்டும். அதுவே என்னால் செய்ய முடிந்தது. அதை நான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டே ஒரு முறைத் திரும்பிப் பார்த்துக் கொண்டான்.
நாம் போகலாம் என்று கண்ணுக்குத்தெரியாத தன் துணையிடம் சொல்லிக் கொண்டவன் ஏரிக்கு மிக அருகில் வந்திருந்தான்.
இரவு ஈரப்பதத்துடனும், மெல்லியக் காற்றுடனும் அமைதியாகக் கடந்து கொண்டிருந்தது. மீனின் கவுச்சியான வாசனையும், மல்லிச்செடியில் பூக்கள் மொட்டவிழ்க்கும் நறுமணமும் கார்பெர்னத்தின் தெருக்களிலும், வீடுகளின் முற்றத்திலும் வீசியது. தன் வீட்டின் முற்றத்தில் முதிய செபெதீ தன் மனைவி சலோமியுடன், ஓய்வாக அமர்ந்திருந்தார். அங்கு நிலத்தில் கட்டையாகக் கிளைகள் விரித்திருந்தப் பாதாம் மரத்தினடியில் அவர்கள் தங்கள் இரவுணவை அருந்துகின்றனர். உள்ளே அறையில் ஜேக்கப் தன் கால்களைப் பின்னிக் கொண்டு படுத்துக்கிடந்தான்.
அவனுக்கு உறக்கம் வரவில்லை. மனதினுள் எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளின் படலம் அவனது எண்ணங்களைத் தாறுமாறாக அலைத்தது. எந்த வாய்ப்புமற்று சிலுவையில் அறையப்பட்ட புரட்சியாளனின் முகமும், கடவுளால் அநீதி இழைக்கப்பட்ட விவசாயிகளின் புலம்பல்களும், அரற்றல்களும் அவனுள் நிழலாடின. தன்னை ரோமானியர்களுக்கு விற்றுவிட்ட, அந்த உளவாளியான மேரியின் மகனின் முகமும் ஒரு இடைவெளிச்சம் போல அவன் முன் தோன்றியது. எல்லா முகங்களும் குழைந்தும் கலைந்தும் அவனை அலைத்தது. அவனால் உறங்கமுடியாது புரண்டுக் கொண்டே இருந்தான். பத்தாதற்கு தன் தந்தை வெளியே உரையாடிக் கொண்டிருப்பது அவனை இன்னும் எரிச்சலூட்டியது. அவனது உளம் ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்துக் குதித்து எழுந்தவன் அறையை விட்டு வெளியே வந்து முற்றத்தைக் கடந்தான்.
எங்கே போகிறாய்? கவலையுடன் அவனது அம்மா அவனைக் கேட்டாள்.
நான் ஏரிக்கரைக்குச் சென்றுக் கொஞ்சம் காற்று வாங்கப் போகிறேன். உள்ளே புழுக்கமாகவும் எரிச்சலாகவும் இருக்கிறது என்று எரியும் குரலில் பதிலுரைத்தவன் அங்கிருந்து மணற் பரப்பை நோக்கி விரைந்தான்.
முதிய செபெதீ! வெறுமனேத் தலையை அசைத்துக் கொண்டு பெருமூச்சிட்டார். அவனிடம் எதுவும் பேசவில்லை.
"உலகம் முன்பு போல இல்லை", அவர் தன் மனைவி சலோமியிடம் பேசத்தொடங்கினார்.
"இன்று, இரண்டுப் பருத்த, நன்கு சதைப்பற்றுள்ள இளம் மீன்கள். அவை மீன்கள் கூட இல்லை! பறவைகள், சிறகுள்ளப் பறவைகள். அந்தப் பறக்கும் மீன்கள் துள்ளிக் குதித்ததை நீ பார்த்திருக்க வேண்டும். அதற்கு இந்தக் கடல் ரொம்பச் சின்னது. அதற்கு எல்லையற்ற இப்பெருவெளியே காணாதுதான். அதனால் நீரிலிருந்து உந்தி உந்திப் பறக்கப் பார்க்கிறது. ஆனால் அதனால் ரொம்ப நேரம் தாக்குப் பிடிக்க முடியாது. திரும்பவும் கடலிற்குள்ளேயே வந்து வீழும். பிறகுத் திரும்பவும், திரும்பவும் குதித்துக் குதித்து, அவைகளால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் குதிக்கும். எதற்கு இருப்பு கொள்ளாமல் இந்த மீன்கள் இப்படிச் சாடிக் கொண்டே இருக்கிறது? அன்று உன் இளையமகன் ஜான், அவனே என்னிடம் வந்து சொன்னான், நான் மடத்திற்கு செல்லவேண்டும் என்று. நான் இறைவனுக்குச் சொந்தமானவன். அவனுக்காக பிரார்த்தனைகளும், நோன்பும் செய்வதுதான் எனக்கான வழி என்றான்.
இந்த மீன் பிடிப்படகுகள் அவனது இருப்பிற்கு மிகச்சிறியது, அந்த மீன்களைப் போலவே. அவனால் இதில் குறுக்கி இருக்க முடியாது. இப்பொழுது உன் மூத்தமகன் ஜேக்கப்பை நினைத்தாலும் எனக்குக் கவலையாக இருக்கிறது. கொஞ்சமாவது இவனுக்கு மண்டையில் ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன். வேண்டுமென்றால் பார்! இவனும் அதே வழியில்தான் தன் சுக்கானைச் செலுத்திக் கொண்டுப் போகிறான். பார்த்தாயா! வீடு அவனுக்கு எவ்வளவுச் சின்னதாக இருக்கிறது. அவனால் இதனுள் இருக்க முடியவில்லை. இந்தக் கோபமும், எரிச்சலும். எப்படிச் சூடாக வார்த்தைகளை உன்முன் உதிர்க்கிறான். ஒரு வெறி நாய் போல இருக்கிறது அவனின் முகம். எக்கேடு கெட்டாவது போகட்டும். எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் எனக்கு பின் என் படகுகளை, இந்த மீனவர்களை, என் தொழிலை யார் பார்த்துக் கொள்வார். அதுதான் என் பிரதானப் பிரச்சனை. என் உழைப்பெல்லாம் வீணாகிப் போய்க்கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. எனக்கு உண்மையில் இந்தப் பயல்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. எனக்குக் கொஞ்சம் மதுவும், கணவாப் பொறியலும் கொடு. நான் என்னை சமாதானப் படுத்திக் கொள்கிறேன்.
சலோமிக் கிழவி செவிடி போல உட்கார்ந்திருந்தாள். அவளது கணவன் ஏற்கனவே மூக்கு முட்டக் குடித்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும்.
பேச்சை மாற்ற நினைத்தவள், "அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள், சின்னப்பயல்கள், அவர்கள் வழியில் சரியாகி விடுவார்கள். விடுங்கள்" என்றாள்.
ஆமாம்! நீ சொன்னது சரிதான். அவர்களுக்கான வழிகளில் அவர்களே ஒரு வழிக்கு வரட்டும். உனக்கும் மூளை இருக்கிறது. இதற்குத்தான் உன்னிடம் விஷயங்களைக் கேட்க வேண்டும் என்பது, என் அன்பு சலோமியே! எதற்கு நான் இப்படி உட்கார்ந்துக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும். அதானே! அவர்கள் வாலிபர்கள். வாலிபத்துடிப்பிலும், ஆர்வக் கோளாறிலும் எதிலாவது ஈடுபடுகிறார்கள். வாலிபம் உண்மையில் ஒரு நோய். எல்லோரும் அதைக்கடந்துதான் வரவேண்டும். நானும் என் இளமையில் பலமுறை இதைப் போலத்தான் கோபாவேசப்படுவதும், படுக்கையில் தூக்கம் வராமல் முறுக்கிக் கொள்வதுமாய் இருந்திருக்கிறேன். அப்போது நான் என்னவோ கடவுளுக்கான தேடலில் இருப்பதாக எண்ணிக் கொள்வேன். ஆனால் உண்மையில் ஒரு பெண்ணிற்காகத்தான் அப்படி ஏங்கிக் கொண்டிருந்தேன். உன்னைப் பார்த்தேன், கல்யாணம் செய்துகொண்டேன். எல்லாம் அமைதியாகிவிட்டது. நம் பையன்களும் அதுபோலவே தெளிவடைந்து விடுவார்கள். வேறு எதுவும் பேசாதே! நான் இப்போதுதான் திருப்தியாக உணர்கிறேன். எனக்குக் கொஞ்சம் நொறுக்குத்தீனிகளும், கணவாப் பொறியலும் எடுத்து வை. கொஞ்சமே கொஞ்சம் மது, உன் ஆரோக்கியத்திற்காக! என்று சிரித்துக் கொண்டே தன் மனைவியிடம் கேட்டார் கிழவர்.
முதிய ஜோனா தன்னுடையக் குடிலில் தனியே அமர்ந்திருந்தார். வலையில் பின்னிக் கிடக்கும் சிக்கலான முடிச்சுகளை உதறி உதறி சரிசெய்து கொண்டிருந்த்தார். செபெதீயின் விட்டிலிருந்து கூப்பிடும் தொலைவில்தான் அவரின் குடில் இருந்தது. முதியவர் தன் எண்ணங்களில் ஏதோ முடிச்சுகள் இடுவதும், அவிழ்ப்பதுமாய் இருந்தார். மீன்களுடன் மட்டுமேயான அவரின் தனிமையின் நாட்கள் ஓய்ந்த பாடில்லை. சிந்தனையில் ஆழ்ந்திருந்தவரின் கைகள் அனிச்சையாக வலை முடிச்சுகளில் போராடிக் கொண்டிருந்தது. அவர், ஒரு வருடம் முன்பு போய்ச் சேர்ந்தத் தன் அன்பு மனைவியைப் பற்றியோ, இல்லை அந்த மாட்டு மூளைக்காரன், அறிவற்ற மடைப்பயல் ஆன்ட்ரூவைப் பற்றியோ, இல்லை இன்னும் நாசரேத்தின் மதுக்கடைகளில் சுற்றித்திரியும் தன் இன்னொருமகன் பீட்டரைப் பற்றியோ நினைக்கவில்லை. மாறாக செபெதீயின் வார்த்தைகளைத்தான் அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். தன்னை ஒரு தீவிர விசாரணைக்கு உட்படுத்தியிருந்தார். ஒருவேளை தான் ஒரு தீர்க்கதரிசியா என்று கேட்டவர், தன் கை, கால்களை, உடலை ஒருமுறை உற்றுப்பார்த்தார். அவரின் மூச்சிலும், வியர்வையிலும் கூட மீன் வாடைதான் அடித்தது. முந்தைய நாள் தான் தன் மனைவியின் பிரிவினை எண்ணி தன்னந்தனியேத் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்ததை நினைத்தார். அவரது கண்ணீரும் மீனின் மணமன்றி வேறில்லை. மற்றும் அந்த செபெதீ கபடமாக ஒன்று சொன்னானே, என் தாடிக்குள் நண்டின் கொடுக்குகள் இருப்பதாக...அதனால் தான் தீர்க்கதரிசி ஜோனாதான் என்று, ஆனால் அவன் என்னிடம் சரியாகப் பேசும் மனநிலையில் இன்று இல்லை. இருந்தும் அவனின் சொற்கள் என்னுள் நங்கூரம் போல நிலை குத்தி நிற்கிறது என்று சிந்தனைக்குள் ஆழ்ந்தார்.
நிலத்தில் நடக்கும் பொழுது எப்பொழுதும் ஒரு வித தடுமாற்றமும், விழுந்து விடுவோமோ என்றக் கலக்கமும் அவருக்கு இருந்தது. ஆனால் நீரினுள், படகில் காலூன்றி நின்று விட்டால் அப்படி ஒரு மகிழ்ச்சி, நீரில் இறங்கியவுடன் மனநிம்மதியும், சந்தோஷமும் கொள்கிறார். நீர்மை அவரை மென்மையாகத் தழுவிக் கொண்டு ஒரு காதலியைப் போல அவர் காதுகளில் கிசுகிசுக்கிறது. தானும் ஒரு மீன் என்றே அவர் உணர்ந்தார். மீனைப் போலவே நீரில்லா விடில் வாழ முடியாதவர். நினைவுகளின் நிலைத்த தப்படிகளின் சப்தங்களினுள் அமிழ்ந்து தன் வலையை இன்னும் சரிபார்த்துக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.
" எனக்கு எந்த சந்தேகமுமில்லை. நான் தீர்க்கதரிசி ஜோனா" அவர் தனக்குதானே சொல்லிக்கொண்டார். இந்தச் சுறாமீன் என்னைத் திரும்பவும் கக்கி வெளியேற்றுகிறது. நான் உயிர்த்தெழுகிறேன். ஆனால் இம்முறை நான் சிறிது புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவேண்டும். நான் ஒரு தீர்க்கதரிசி என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் ஒரு மீனவன் போலவே என்னைக் காட்டிக் கொள்ளப் போகிறேன். என்னைப்பற்றிய உண்மையை யாரிடமும் கூறப் போவதில்லை. திரும்பவும் என்னை வாதைக்குள்ளாக்கித்தான் இதைக் கண்டறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை என்று சொல்லிக் கொண்டவர், தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு அமைதியானார். இத்தனை வருடங்கள் யாரும் இதைப்பற்றி அறிந்துவிடவில்லை. எப்படியோ இந்த விஷயத்தை நான் லாவகமாக இது நாள்வரை சமாளித்து வந்துவிட்டேன். செபெதீ இதைப் பற்றிக் கூறாத வரை எனக்கும் இது தெரிந்திருக்காது. நல்லது! அவன் என் கண்களைத் திறந்துவிட்டான்.
இரு கிழவர்களும் வெவ்வேறு வகையில் தங்களைத் திருப்திபடுத்திக்கொண்டு அமைதியுறும் போது, மேரியின் மகன் ஏரிக்கரையின் ஓரமாகப் போய்க்கொண்டிருந்தான். தன் எண்ணங்களில் ஆழமாக மூழ்கியிருந்தான். கண்டிப்பாக அவன் தனியாக இல்லை. அவனைத் தொடர்ந்து வரும் காலடிகள், மண்ணில் நிலைத்து ஊன்றிப் பின் தொடர்கிறது.
புதிய வியாபாரிகள் மேரியின் குடிலுக்கு வந்துவிட்டார்கள். அங்கே முற்றத்தில், எப்போதும் போலக் கூழாங்கற்கள் பாவியத் தரையில் குந்தி அமர்ந்து, தங்களுக்குள் வம்பளந்து கொண்டும், பேரீச்சைகள் மற்றும் நண்டுக்கறிகளை சுவைத்துக் கொண்டும் தங்களின் அழைப்பிற்காக அமைதியற்றுக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மடாலயத்தில் துறவிகளும், மடாதிபதியும் அவரவர் அறைகளில் விழிப்புடன் அமர்ந்து, கடவுளைத் தியானித்துக் கொண்டிருக்கின்றனர்.
அவன் மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான். தன் முன்னே திறந்திருக்கும் கதவுகள் வழியே உள்ளேத் தன் நீண்டகண்கள் விரியப் பார்த்தான். அவனது மெலிந்து வெளுத்த முகத்தில், எதையோ கேட்க நினைத்து தயங்கி நிற்கும் பாவம்.
துறவிகள், வாதிலில் அவனைக் கண்டதும், தங்களுக்குள் கிசுகிசுத்தனர். இந்த இளைஞன் என்ன யோசித்துக் கொண்டு கேட்பதற்குத் தயங்கி நிற்கிறான் என்று அவர்களுக்குக் குழப்பமாக இருந்தது.
"ஒருவேளை நாசரேத்திலிருந்து வந்த முதியத்துறவி, அவரைக் குணப்படுத்த வந்துவிட்டாரா இல்லையா"
"இல்லை,கரியச் சிறகுகள் கொண்ட மரணத்தின் தேவதூதன் அருகில் வந்துகொண்டிருக்கிறானா இல்லையா"
"அதுவும் இல்லையெனில், மெசியாவின் காலடிகள் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறதா"
இப்படி ஏதேனும் கேள்விகள் கேட்பான் என்று அவனை எதிர்நோக்கினர்.
அக்கணம் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஸ்தம்பித்து நின்றனர். ஒவ்வொருவரின் ஆன்மாவும் நிகழுப்போகும் அற்புதத்தை எதிர்கொள்ளத் தயாராகியது. தங்கள் செவிகளைக் கூர்ந்து அமைதியாக நின்றுகொண்டிருந்தனர். ஆனால் மாறி மாறிச் சுத்தியல் அறையும் சப்தம் மட்டும் தான் காற்றில் அலைவுறுகிறது. சிறிது தூரத்தில் இருக்கும் வெளியில் யூதாஸ் தன் பட்டறையில் உலை அமைத்து தீ மூட்டியிருந்தான். செம்பை நழுக்கி அறையும் "நங்க், நங்க்...என்ற சப்தம் மட்டும் தான் இரவினுள் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக