வியாழன், 24 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -39

    


    ஜீசஸ்! திரும்பவும் அவனை அழைத்தாள்.

    அப்பொழுது உனக்கு சரியாக மூன்று, எனக்கு ஒரு வயதிருக்கும். நம் வீட்டின் மூன்று படிகள் கொண்ட வாசலில் மேலே இருந்த முதற்படியில் நான் அமர்ந்திருப்பேன். கீழேத் தரையில் நீ கால்சருகி விழுந்து கிடந்தாய். நீ எழுந்திருக்கப்போராடிக் கஷ்டப்பட்டு முதல் படியைத் தொடுவாய், ஆனால் உடல் இன்னும் தரையில் தான் இருக்கும். வெகு நேரம் நீ திரும்பத் திரும்ப எழுவதும் விழுவதுமாய் இருக்கும். நான் என் சுண்டு விரலைக் கூட உனக்காக அசைக்காமல் ஆனால் நீ எப்படியும் என்னருகில் வந்துவிடுவாய் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். ஞாபகமிருக்கிறதா உனக்கு! நீ எனக்காக வர வேண்டும். ஆனால் அதற்குமுன் நீ உன்னால் தாங்கமுடிந்த பெரும்துன்பத்தை அடைந்திருக்கவேண்டும். 

    ஏழு சாத்தான்களில் எதுவோ ஒன்று, சபலப்படுத்தும் சொற்களால் அவளைச் செலுத்திக் கொண்டிருக்கிறது. இளைஞன் முணுமுணுத்தான்.

    மணிக்கணக்கில் எழும்பி வீழ்ந்துக் குதித்து வந்து முதற்படி. இரண்டாம் படி. இதோ வருகிறாய், முக்கி முனகி உன் உடலை உயர்த்தி மூன்றாவது படியைத் தொடுகிறாய். அசைவின்றிக் காத்திருக்கிறாள் அங்கு ஒரு சிறுமி! உனக்காக, உனக்கே உனக்காக! அதன் பிறகு------

    "இளைஞன் கைகளை உயர்த்திக் கத்தினான். நகராதே! அங்கேயே நில்! இதற்கு மேல் முன்னே வராதே!

    ஆனால் அந்தப் பெண்ணின் முகம் சாந்தமும், வாஞ்சையுமாக ஒளியுடன் அவனை நோக்கியது. அடுப்பின் ஜ்வாலையின் மஞ்சள், அவள் முகம், கண்கள் அனைத்தையும் பொன்னாக்கியது. அவள் தன் கைகளில் வைத்திருந்த புன்னை இலைகளை அடுப்பினுள் எறிந்தாள். அதன் பொசுங்கும் சப்தமும் அவளது மூச்சும் ஒருங்கே இணைந்தது.

    பின் உன் கைகளால் என் விரல்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாய். அங்கிருந்து கூழாங்கற்கள் பாவிய முற்றம் வழியே நீ என்னைக் கைப்படித்து அழைத்துச் சென்றாய். நம் கால்கள் ஒன்றுடன் ஒன்றுப் பிணைந்து உராசிக் கொண்டன. ஒருவரின் சூடு இன்னொருவரின் உடலினுள் அமிழ்ந்தது. நிலத்திலிருந்துப் பற்றி கால்கள் வழியே நகர்ந்து நம் இடுப்பினுள் நகர்கிறது, அழிவற்ற சூடு, பின் நாம் நம் கண்களை மூடிக் கொண்டோம்.

    நிறுத்து! ஜீசஸ் திரும்பவும் அதிரும்படிக் கத்தினான். அவள் வாயைப் பொத்த நினைத்தவன், உதடுகளைத் தொட பயந்து தன்னைத் தடுத்துக் கொண்டான்.

    அவளின் மூச்சலைகளில் நெருப்பு அலைந்தது. அவர்களின் நிழல்கள் பின்னே சுவற்றில் நெழிந்தது. குரலைத்தாழ்த்தி மர்மமான ரகசியக் குரலில் அவள் தொடர்ந்தாள்.

    என்னுடைய வாழ்வில் அது போல ஒரு மகிழ்வினை நான் அனுபவித்ததில்லை. சற்று நின்றவள் பின் தொடர்ந்தாள், உனக்குத் தெரியுமா! ஜீசஸ்! எந்த மனிதர்களிலும், அது போல இன்பத்தை என்னால் கண்டறியமுடியவில்லை. ஒரு மனிதனால் மட்டுமே கொடுக்க முடிந்த உச்சபட்ச அன்பை நீ எனக்குத் தந்தாய். இன்று வரை அதன் துளிகளையே நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

தெய்வமே! முடியவில்லை! தெய்வமே!

    எதிரில் தன் தலையை முழங்கால்களுக்குள் புதைத்துக் கொண்டு தனக்குத் தானே மறுதலிக்கும் படி முணங்கினான் அவன்.

    அமைதி முற்றித் தளைத்திருந்தது. எரியும் நெருப்பின் முறியும் குரல்களும், பானையில் கொப்பளிக்கும் அவரைக்காய்களின் மணமும் தவிர்த்து, முற்றிலுமான மோனம். 

    வெளியே அடர்பிசுபிசுப்பான விந்துத்துளிகள் போல, வானம் கொந்தளித்து ஊற்றுகிறது. தன் தொடைகளை விரித்து அமைதியுடன் அனைத்து நீர்மையையும் மிச்சமின்றி உறிஞ்சிக் கொள்கிறது  நிலம்.

    ஜீசஸ்! அதே வாஞ்சையான அழைப்பு! என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்? அவன் நாடியைப் பிடித்து தலையைத் தூக்கிக் கேட்கிறாள். அழுது கொண்டிருக்கும் அவனது கண்ணீர்த்துளிகள் அவளது நடுங்கும் விரல்களில் துளிர்க்கிறது.

    நான் கடவுளை நினைக்கிறேன்! ஒரு மாதிரி கழுத்திழுபடுவது போல, தொண்டைக் கமற பதிலளித்தான்.

    அவன் பேசுவது, இறைவனின் திருநாமத்தை இந்த இல்லத்தில் விளிப்பது அவனுக்கு வருத்தமளிப்பதைப் போல இருந்தது.

    அவன் அருகில் இருந்து எழுந்தவள், அடுப்பின் ஜ்வாலைக்கும், கதவிற்கும் இடைப்பட்ட இடத்தில் அவனுக்கு முதுகுகாட்டி நின்றாள். அவளது அகம் தழுதழுத்துக் குமிழிகளாய் வெளிவந்தது. ஒவ்வொரு முறை அக்குமிழிகள் பொட்டித்தெறிக்கும் பொழுதும், நாள்பட்ட அவளின் வலிகளின் ஓலம், இன்னும் இன்னும் எனப் பெருகியது.

    கடவுள்! மனிதனின் முதல் எதிரி! அவன் எப்பொழுதுமே மனிதனை சந்தோஷமாக இருக்க விடமாட்டான். உண்மையில் அவன் ஒரு பிசாசு! எப்படியெல்லாம் ஊடுருவ வேண்டும் என்ற தந்திரம் அறிந்தவன். பொறாமை பிடித்தவன். மனிதனின் துக்கத்தினால் மட்டுமே உயிர்வாழ்பவன். கதவிற்கு பின்னால் வெளியே, காற்றும் மழையும் ஊளையிடுகிறது. மாதுளைச்செடிகள் முறிந்தும் வளைந்தும் கிடக்கிறது. சொர்க்கத்தின் நீர்மை இண்டுஇடுக்கெல்லாம் பெருகி வழிகின்றன.

    மழை கொஞ்சம் ஓய்ந்திருப்பது போல இருக்கிறது. அவள் சொன்னாள்.

    அப்படியென்றால் நான் செல்கிறேன், உடனே இளைஞன் எழுந்திருக்க முயன்றான்.

    முதலில் சாப்பிடு! கொஞ்சம் உடலில் வலுவேற்றிக் கொள். இந்த மாதிரியான இருளில், மழையில் இந்நேரம் நீ எங்கு எப்படிச் செல்வாய்? கண்டிப்பானக் குரலில் பிள்ளையை அதட்டுவது போலவே அவனை அதட்டினாள்.

    மூலையில் சுருட்டி வைத்திருந்த வட்ட வடிவப் ஈச்சம்பாயினைத் தரையில் விரித்தாள். சட்டுவத்தில் கொதித்துக் கொண்டிருந்த காய்கறிக்கூழை ஆவி பறக்க எடுத்து வைத்தாள். பின் தயாராக சுட்டுவைத்திருந்த வாற்கோதுமை ரொட்டித்துண்டங்களையும், இரு மண் கிண்ணங்களையும் வைத்தாள். உணவின் வெம்மணம் நாசி துளைத்தது.

    இது இந்த விபச்சாரியின் உணவு,  உனக்கு எந்த அருவருப்பும் இல்லையெனில், உன்னுடைய கடவுளின் பெயரால் பக்தியுடன் உண்.

    பசியில் அவன் சொல்வதையேக் காதில் வாங்கிக் கொள்ளாமல் எந்தக் கூச்சமுமின்றி தன் கிண்னத்தில் கூழை உற்றிக் கொண்டு, ரொட்டியைப் பிய்த்து அவசர அவசரமாக வாயினுள் திணித்தான்.

    சற்றே முகம் சுழித்தவள், என்ன இது? இதுதான் நீ உணவு உண்ணும் லட்சணமா! கடவுளுக்கு இந்த அருமையான உணவை, ரொட்டியை, இந்தப்பெண்ணை அருளியதற்கு ஒரு நன்றி கூட இல்லையா! என்னத் துறவி நீ! என்று கேலி செய்து நாக்கைத் துருத்தினாள். அவளுக்குள் இருந்த சிறுமி சற்றே எட்டிப்பார்த்தாள்.

    ஏன் என்னை வெறுக்கிறாய்? மேரி! ஜீசஸ் வாயில் உணவை சவைத்துக் கொண்டே இன்னும் விழுங்காமல் அவளைக் கேட்டான்.

ஏன் என்னை வெறுக்கிறாய்? கேலி செய்கிறாய்?

    பார். இன்று இரவு, ஆனந்தமாய் உன்னுடன் சேர்ந்து நான் உண்ணுகிறேன். நாம் மறுபடியும் நண்பர்கள் ஆகி விட்டோம். இன்னும் காலகாலத்திற்கும் நாம் இப்படியே அன்புடன் இருப்போம். என்னை மன்னி! அதற்காகத்தான் நான் உன்னிடம் வந்தேன்.

    பேசாமல் சாப்பிடு! மறுபடியும் உன் போதனைகளை ஆரம்பித்து விட்டாய்!

    மன்னிப்பு கிடைக்காவிட்டால், அதை எடுத்துக்கொள்ள வேண்டும். இது கூடத் தெரியாதா! நீ ஆம்பளைதானே!

    தன் கையிலிருந்த ரொட்டியை இரண்டாகப் பிரித்தாள். இந்த அருமையான ரொட்டியையும், காய்கறிக் கூழினையும், பரத்தையர்களையும், பக்திமான்களையும் இவ்வுலகில் ஒருங்கே தருவித்ததற்காக நன்றி கூறுகிறேன் கடவுளே! என்னை ஆசிர்வதியும்!கிண்டலும் கேலியுமாக ஈறுகள் தெரியச் சிரித்தாள்.

    எதிரெதிரே அவர்கள் அமர்ந்திருந்தனர். விளக்கின் ஒளி நெழிந்து வளைந்து அவர்களை மஞ்சள் நிற ஓவியங்களாக்கியது. எதுவும் பேசிக்கொள்ளவில்லை. முழு நாளையும் பசியிலும் வேதனையிலும் கடத்தியிருந்தனர். இந்த உணவு  வழியாய் அவர்கள் ஒருவரில் ஒருவரை நிரம்பிக் கொண்டு தழும்பினர்.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக