சனி, 19 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -22

    


    தேவாலயத்தை விட்டு வெளிவரும் பொழுது, தெருவில் அங்கங்கு வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தனர், ஆண்களும், அவர்களது எருதுகளும். முற்றிலும் இருளாத அந்தியின் பூச்சு. நாள் முழுவதையும் மனக்கண்ணில் ஓட்டியவரின் முகத்தில் கசப்பான புன்னகை. தன்னிச்சையாக ஏதோ ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தார். மென் குளிர்ச்சி, பறவைகளின் கிரீச்சிடல். சுவர்க்கோழியின் மினுங்கும் குழறல். சின்னச்சின்னப் பூச்சிகளின் மொலுமொலுப்பு. உண்மையில் முழுதுமாகவேத் தன் தைரியத்தை இழந்திருந்தார். தீர்க்கமாக நிலத்தில் குத்திட்டவர், எந்த சலனமுமின்றி மேரியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

    மேரி தன் வீட்டின் குறுகிய முற்றத்தில் அமர்ந்து நூல் நூற்றுக்கொண்டிருந்தாள். அந்தியின் குழைதல், இருளும் ஒளியுமற்ற பிரதேசங்களில் ஓயாத முணுமுணுப்புகள். வானின் அடர்நீல ஒளியில், தூரம் கோட்டு வெளிச்சமாய் மாறிக் கொண்டிருந்தது. இருளினுள் பிசுபிசுப்பு போல ஒளியின் குமிழ்கள் படிந்து சிதறிக் கிடந்தது வெளி. அடுக்களைகளில், இரவுணவிற்கான ஆயத்தங்கள். அடுப்புகளின் மஞ்சள் தீ, பெயர் தெரியா ஏதோ ஒரு பறவையின் கண்கள் போல சிமிட்டியது. நினைப்புகளைக் கோர்ப்பதும், அழிப்பதுமாய் மேரியின் கைகளில் ஊசி நுனிகள் சுழன்று கொண்டிருந்தன. பழங்கதைகளையும், உண்மையும் கலந்த ஒரு விசித்திரமான வாழ்வு அவளுடையது. உண்பதும், உழைப்பதும், உறங்குவதுமாய்க் கடந்து விட்டது ஒரு நீள் வட்டக் காலம். திடீரென தங்கஒளி படர, அவள் வேதனைகளையெல்லாம் விழுங்கி விடும் ஒரு தெய்வீக சிறகடிப்பு. ஒரு அதிசயம், விந்தையின் மாயக்கரங்களால் வரைந்தது போல,  மயில்பீலிகளின் ஜொலிக்கும் கண்கள் அவளை நோக்கி நடனமாடியதைக் கண்ணுற்றாள்.

    எடுத்துக்கொள்! இறைவா! என்னிடம் உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்கொள்! நீ என் கணவனைத் தேர்ந்தாய்! என் மகனை நரகத்தின் பாதைகளில் வழி நடத்தினாய். என் சொந்த வாதைகளில் என்னை உழலவிட்டாய். என்னை அழச்சொன்னாய்! அழுது கொண்டே இரு உன் வாழ்நாள் முழுதும் என்றாய்! அழுதேன். பொறுமையாக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளச் சொன்னாய்! ஏற்றுக்கொண்டேன். உண்மையில் நான் யார்? உன் வலுமிக்க கைகளால் உனக்கேற்ற வடிவினில் பிசைந்து கொண்டிருக்கும் வெறும் மண். ஆனால் நான் உன்னிடம் மன்றாடுகிறேன். என் மகனிடம் கருணை கொள்! அது ஒன்று தான் என் இறுதிப்பிரார்த்தனை. உன்னிடம் பிச்சை கேட்கிறேன்.

    ஒரு வெண்புறா அவளது வீட்டின் கூரையிலிருந்து தன் மென் சிறகுகள் படபடக்க, கூழாங்கற்கள் பாவித்த முற்றத்தின் ஓரத்தில் தத்தி தத்தி நின்றது. மென் சிவப்பான கூர் அலகும், முத்து போன்ற சோளிக் கண்களும் கொண்டிருந்த அது தன் சிறகுகளை படபடத்திக் கொண்டே சுற்றிலும் பார்த்தது, கழுத்தைத் திருப்பி மேரியை நோக்கி வாஞ்சையுடன் வந்தது. அவள் அதனிடம் பேச எத்தனித்தாள். ஆஹ்! அந்த முதியத்துறவி வந்தார் என்றால், இச்சின்னஞ்சிறியப் பறவை எதற்காக என்னைப் பார்க்க வந்தது என்று கேட்டிருக்கலாம். பறவைகளின் மொழியறிந்த அவரும் அதை எனக்கு விளக்கியிருப்பார். ஆனால் அதற்கு அவசியம் ஏதுமின்றி அது தன் செம்பழுப்பு நிறக்கால்களால் தத்தி வந்துக் குதித்து மேரியின் மடியினில் அமர்ந்து கொண்டது. பின் தன் இறகுகளை அலகினால் நீவி விட்டு, குழந்தை தாயின் அரவணைப்பில் எப்படி சுகித்துக் கிடக்குமோ அது போல, அசைவின்றி தன்னைக் குறுக்கிக் கொண்டது.

    அதன் மென்மையானப் பாரமும், வெம்மையும் அவளுக்கு உண்மையில் தேவையாக இருந்தது. கடவுள் மனிதனிடம் இது போன்றக் கருணையுடன் தான் வருவார் என்று நினைத்துக்கொண்டவள், தன் மணமகன் ஜோசப்புடன், அருளாளர் எலிஜாவின் மலைக்குன்றான, கார்மல் மலைஉச்சிக்கு சென்று கொண்டிருந்தது, அவளின் மனதின் எண்ண ஓட்டங்களில் ஓடின. அன்று மாலைதான் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இறைவனின் முன் தனக்கு ஒரு மகன் வேண்டும் எனும் பிரார்த்தனையை அவர்கள் நெஞ்சில் பதித்திருந்தனர். அன்று தீர்க்கதரிசி எலிஜாவின் வாக்கினைப் போல மேகங்களற்ற வானில் இடி முழங்கியது. ஒரு வசந்ததின் சுகந்தம் பெருகும், மகரந்தங்கள் துளிர்க்கும் அவ்வேளையில், பள்ளத்தாக்குகளில் மனிதர்கள் எறும்புகள் போல நகர்ந்து கொண்டிருந்தனர். அத்திப்பூத்திருந்த நறுமணம். சூரியனின் இளம் ஒளிக்குழாய்கள் வானிலிருந்து பூமிக்கு இறங்கியது. அது மாபெரும் தூண் போல, கூரையான நீல வானத்தை பூமி தாங்குவதற்கு இலகுவாக அமைந்தது போன்ற மயக்கு. பதினைந்து வயதான மேரியின் கைகளைத் தன் வலுவான நரம்புகள் புடைத்த கைகளால் பிணைத்திருந்தார் ஜோசப்.

    புனித மலையின் உச்சியை அவர்கள் அடையும் பொழுது நண்பகலாகி விட்டிருந்தது. வழிப் பாதையில் கூர்மையானப் பாறைகளையும், கற்களையும் மிதித்து வந்த அவர்கள் சோர்வுற்றிருந்தனர். ஜோசப்பின் கைகளை இறுக்கப் பிடித்துக் கொணடு ஒரு மேடு போல இருந்த குன்றினை உந்தி மேலேற முயல்கையில், கைகளில் சரளைக்கல்லின் நுனி பதிந்து காயமாகியது மேரிக்கு. ஜோசப் அவளை மெல்ல அணைத்து தன் கைகளில் அவள் மொத்த பாரமும் தாங்கும் வண்ணம், சாய்ந்து நின்றான். பின் தன்னைத்தானே சலித்துக் கொண்டு முணுமுணுத்தான். அந்நொடியில் பலத்த காற்றும் இடியும், மின்னலும் வெட்டியது. மழை வலுப்பது போல சமிஞ்சை காட்டியது வானம். எங்காவது மறைந்து கொள்ள எத்தனித்து ஜோசப், அவளைக் கைகளில் தாங்கிக் கொண்டே விரைந்தான். தீப்பிழம்பு போல மின்னல் வெட்டுகையில், பதற்றமான மேரி மயக்கமானாள். அவள் கண்கள் திறக்கும் பொழுது தன் முன்னே ஜோசப் நிலைகுத்திக் கிடந்தான். அவனது கைகால்கள் விரைத்து வளைந்திருந்தன.

    அவள் கைகளினுள் சிறகுகள் ஒடுக்கி அமர்ந்திருந்தது வெண்புறா. அதன் வெம்மையானத் துடிப்புகளைத் தன் உடல் முழுதும் பரவ ஓட விட்டுக் கொண்டு கண்கள் மூடி அமர்ந்திருந்தாள். ஒரு ராட்சசன் போலக் கடவுள் தன்னை ஆட்படுத்தியிருக்கிறான். தன் வாழ்வின் குறுக்கே அவனது கை நகங்களால் பிறாண்டியப் பாதைகளின் வடுக்கள் என்றைக்குமே ஆறப்போவதுமில்லை.

    அவள் அந்தத் துறவியை எப்பொழுது பார்த்தாலும் இதைத்தான் கேட்பாள். ஏன்! இப்படி ஒரு பயங்கரத் தன்மையைத் தேவன் என்னிடம் காண்பித்தான். தயையும், அன்பும் கொண்ட அவனது வழிகள் மட்டும் எப்பொழுதும் வன்முறையைக் கைக்கொண்டுள்ளதே! ஏன்?

இறைவன் சில சமயங்களில் இடிமுழக்கம் போலவே நம்முள் இறங்குகிறான். வேறு வழியில்லை. அதனை ஏற்றுக் கொள்வதன் மூலமே அவனை அணுக முடியும். நினைவு கொள்! அதன் மூலமே உன் மகன் நித்தியமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் வதையின் விதியை நம்மால் அறிய முடியும். முதியதுறவி சன்னமான குரலில் மேரியிடம் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக