மேரியின் மகன், அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்காக, பூசணிக்கொடிகள் படர்ந்த புதரை எட்டிச்சாடினான். வயலிலிருந்த வெளியே நின்று கொண்டிருந்த இரு பெண்கள் தங்கள் கதிர் அரிவாள்களை, அவனை நோக்கி வெட்டுவதைப் போலப் பம்மாத்து காட்டி நின்றனர்.
குண்டு பிலீப்! செபெதீயைப் பார்த்து, இந்தப் பாவ ஜென்மத்தைத் தொட்டதற்காக நம் கைகளைக் கழுவ வேண்டும். அவனோடு பேசியதற்காக வாயினையும் கழுவவேண்டும் என்றான்.
கவலைப்படாதே! நாம் இங்கு நிற்க வேண்டாம். ஏரிக்கு செல்வோம். என்னுடன் துணைக்கு வா! நான் கொஞ்சம் சீக்கிரமே செல்ல வேண்டும். உனக்குத்தான் தெரியுமே! என் மகன் ஒருத்தன், நாசரேத்திற்கு அந்தப் புரட்சியாளைனைச் சிலுவையில் அறைவதைக் காணச்சென்றவன், இன்னும் திரும்பவில்லை. இன்னொருத்தன் பாலை நிலத்திலுள் இருக்கும் மடாலயத்தில் துறவியாகி விட்டான். நான் மட்டும் தனியனாக என் மீன்பிடிப் படகுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். நிச்சியமாக வலை நிறைய கொழுத்த மீன்கள் பிடிபட்டிருக்கும். நீயும் என்னுடன் உதவிக்கு வந்தால் நாம் அதைப் பங்கிட்டுக் கொள்ளலாம். வா! என்றார் முதியவர்.
அவர்கள் இணைந்து ஏரிக்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். முதியவர் ஒருமாதிரியானக் குதூகல மன நிலையில் இருந்தார்.
"நல்லக் கடவுள் தான்! பாவம் அவர் மட்டும் என்ன செய்வார்! உலகை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது கால்களில், கொதிக்கும் நீரை ஊற்றி விட்டாள் அவரது மனையாள். எல்லாம் ஒரு துளி பிசகி விட்டது.
இங்கே ஒரு புறம் மீன்களோ, ஓலமிடுகின்றன எங்களை வலைகளில் அகப்படுத்தி விடாதீர் என்று, மறுபுறம் அங்கே நாம் மீனவர்கள் வலைகளில் மீன்களை விழ வைக்க அதே கடவுளிடம் பிரார்த்திக்கிறோம். ஒற்றைக் கடவுள் எதையெல்லாம் தான் தீர்த்து வைப்பார்! அதனால் தான் சமயோஜிதமாக ஒரு தராசு போல அவர் நடந்து கொள்கிறார். ஒரு முறை வலையில் மீன்கள் கொழிக்கின்றன. மறுமுறை எந்த மீனும் கிடைக்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்புகிறோம். அவர் தம் பிள்ளைகளை, அவ்வளவுக்கொன்றும் ஏமாற்றி விடுவதில்லை. அதனால் தான் உலகமும் நிற்காமல் இன்று வரை சுழல்கிறது.
இளைஞன், மாக்தலேன் வழியாக செல்லாமல், அவ்வூரைக் கடக்க ஒரு செங்குத்தானக் கழுதைப் பாதையினைத் தேர்ந்தான். அந்த மோசமானக் கிராமத்தின் வழியே செல்லாமல் சுற்றிச்செல்வதே சரியாக இருக்கும் என்று நினைத்தான். உண்மையில் அழகானதும், திறந்த இதயம் படைத்தவர்களும் வாழும் அந்நிலத்தில், மிகச்சுவையான பேரீச்சம் பழங்கள் விளைகின்றன. இரவும் பகலும், உலகின் வெவ்வேறுப் பகுதிகளில் இருந்து வணிகர்கள் அந்தக் கிராமத்தின் சந்தையில் கூடுகிறார்கள். மத்தியத்தரைக்கடல் பகுதியின் யூப்ரடீஸ் அல்லது அராபியப்பாலை நிலத்திலிருந்தும், டமாஸ்கஸ் அல்லது ஃபோனிசியா என்ற வளம் மிகுந்த நைல் நதிப் படுகைகளின் நிலத்திலிருந்தும் எப்பொழுதும் வணிகர்கள் வந்தும் போயுமிருக்கின்றனர். கிராமத்தின் நுழைவாயிலில் வற்றாத குளிர்ச்சுணை கொண்ட கேணி. வாயிலின் இருபுறமும் தோரணங்கள் போல மார்புக்கச்சையற்ற அழகிய பெண்களின் ஓவியங்கள், வியாபாரிகளை வரவேற்கும் வண்ணம் மிகுந்த சிரத்தையுடன் தீட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து வேறுபாதையில் ஏரிக்கு குறுக்கே செல்லும் பாதை வழியே பாலை நிலத்தை அடையலாம். அங்கே ஒரு பாழ்க்கிணற்றின் விளிம்பில் கடவுள் அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
இறைவனை மட்டுமேத் துணைக்கு அழைத்துக் கொண்டு அவன் வேகமெடுத்து செல்கிறான். தொலைவில் சூரியனின் சாய்ந்த ஒளிக்கதிர்கள் சென்னிறம் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது. அந்தியின் குளிர்க் காற்று, அங்கு வியர்வை ஏறி, நெருப்புத்துண்டங்கள் போல நின்று கொண்டிருந்த வேலையாட்களைத் தழுவியது. பருவ நிலை மாற்றங்களுக்கு இயைந்து எதிர்ச்சொல் சொல்வது போல அவர்களது உடல்களும் சிலிர்த்துக் கொண்டன. மலை நுனியிலிருந்து, சட்டென அவிழ்த்து விடப்பட்ட காற்றின் சாம்பல் நிறம். வானமும் மெல்ல மெல்ல அதைப் பசை போலப் பூசிக் கொள்ளத்தயாராகிக் கொண்டிருந்தது. குன்றுகளுக்கிடையில் முயங்கிக் கொண்டிருந்த மேகக்குவைகள், நகரத் தொடங்கின. இளம் காதலர்களின் ஊடல் போல அவைகள் உராசிக் கொண்டும் பின் மெது மெதுவாக ஒன்றினில் ஒன்றாகக் கலந்தும் புது உருவும் கொண்டன. வயல் வேலைகளை முடித்து வைக்கோல் தாள்களை முடைந்து உருள் உருளாகக் கட்டி வைத்திருந்தனர். தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது பிரம்மாண்டமான அந்த உருளைகள், வானிலிருந்து எறியப்பட்ட தாயக்கட்டைகளைப் போல சிதறிக்கிடந்தது. அதன் எண்களின் துலக்கம் கூடத் தெரிந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறதோ என்று வியப்பும் தோன்றியது. தானியங்கள் அடங்கிய மூட்டைகளில் மாட்டு வண்டிகளிலும், கழுதைப் பொதிகளிலும் நிரப்பி ஏற்கனவே கிடங்கிற்கு அனுப்பி விட்டிருந்தனர். அரிவாள்களும், வாய்களும் மட்டும் அயர்ந்து சோர்ந்திருந்தது. அயர்வினைச் சற்றுத் திசை திருப்பும் வண்ணம், கிழவர்கள் சிலர் ஆபாசமானக் கேலிகளையும், முன்னர் நடந்த நிகழ்வுகளைத் தங்கள் போக்கில் வெட்டி ஒட்டிக் கதையாடிக் கொண்டிருந்தனர். அந்தக் கதைகளின் நெடி அவர்களைச் சோர்விலிருந்து சற்று ஆசுவாசப்படுத்தியது.
அவர்களின் கிண்டலும், கேலியும், பெண்களின் அதீதச்சிணுங்கல்களும் இளைஞனை பொறுமையிழக்கச் செய்தது. மனித சஞ்சாரமே அற்ற ஓரிடம் பற்றியக் கனவில் ஆழ்ந்தான். பிலிப்பின் கோபமான வார்த்தைகள் அவனைத் திரும்பவும் துன்புறுத்தின.
நான் எவ்வாறு வதைபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று யாருக்கும் தெரியாது. எதற்காக நான் சிலுவைகளை செய்கிறேன். யாருடன் நான் திரும்பத் திரும்பப் போராடிக் கொண்டிருக்கிறேன். யாருமே இதைப் புரிந்து கொள்ளவில்லை. அதற்கான பொறுமையும் யாருக்கும் இல்லை.
குடிலின் முன்னே சோளப்பயிர்கள் தாட்டையாக குவித்திருந்த முற்றத்தைத் தாண்டி இரு விவசாய இளைஞர்கள் தங்கள் அழுக்கான முகத்தினை அழுத்திக் கழுவிக் கொண்டிருந்தனர். நிச்சயமாக அவர்கள் சகோதரர்களாகத்தான் இருக்கும். உள்ளே ஒரு எப்படியும் ஒரு அம்மா! பிள்ளைகளின் இரவுணவிற்காகத் தனியாக சமைத்துக் கொண்டிருப்பாள். சோளம் பொறியும் மணம். காற்றினில் நிரம்பியது.
அந்த இருவரும் மேரியின் மகனைப் பார்த்தனர். அவன் தன் அழுக்கான மேலங்கியால் முகத்தை மூடிக் கொண்டான். உண்மையில் அவர்கள் அவர்கள் அவனை வரவேற்றனர்.
ஹேய்! எங்கே போகிறாய்! உன்னைப் பார்த்தால் வெகுதூரம் பயணத்திலிருக்கிறாய்ப் போலிருக்கிறது. ஆனால் கைகளில் உடைமைகள் எதுவுமில்லை. வா! எங்களுடன் இரவு உணவை அருந்திச்செல் சகோதரா! என்றான் அந்த இருவரில் ஒருவன்.
சுவையான ரொட்டிகளும், சோளமும் தயாராகின்றன. வா! என்று அவனைப் பார்த்த அந்த இல்லத்தின் அன்னையும் அழைத்தாள்.
சிறிதே திராட்சை ரசமும் குடி! வறண்டு சோர்ந்திருக்கும் உதடுகளையும் இதயத்தினையும் குளிர்மைப் படுத்து.
பரவாயில்லை! எனக்கு இப்போது பசிக்கவில்லை! எதுவும் வேண்டாம். நீங்கள் உண்ணுங்கள் என்றான் இளைஞன்.
சொன்னவன் நிற்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். ஒரு வேளை என்னை அவர்கள் கண்டறிந்தார்கள் என்றால், அவர்கள் அதற்காக வெட்கப்படவேண்டியிருக்கும். என்னைத் தொட்டதற்கும், என்னுடன் பேசியதற்கும் அவர்கள் கூசுவதை என்னால் தாங்கமுடியாது என்று நினைத்துக் கொண்டான்.
மூன்று சியர்ஸ்! வேண்டா வெறுப்பாக எங்களை அணுகியதற்கு. ஒருவேளை நாங்கள் உன்னுடன் சேர்ந்தமர்ந்து உண்ணத் தகுதியற்றவர்கள் போலும்! இருக்கட்டும்! என்று கொஞ்சம் கடுமையாகவே சொன்னான் அதில் மூத்தவன்.
நான் தான் சிலுவைகள் செய்பவன். பாவி! உடனடியாக தன்னிடமிருந்த எத்ரிவினையை அடக்கிக் கொண்டு தலைகுனிந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.
மலைஉச்சி இருள இருள, ஜீசஸ் தனித்து விடப்பட்டான். மரங்களின் கிளைகளில் தொற்றியிருந்த ஒளித்துணுக்குகள் ஒரு மின்னாமினுங்கியினைப் போல வானம் நோக்கிப் பறந்தது. உண்மையில் இருள் மட்டுமே சாசுவதமாக இருப்பது போல அனைத்தும் நிழல்கள் ஆகின. இருந்தும் ஒரு பறவையின் தத்தல் போல ஒளி ஆங்காங்கே நகர்ந்தது. ஸ்தூல இருப்புகள் புகை மயமாகின. அந்தி இறங்குவது என்பது பலவிதமான வண்ணச்சேர்க்கைகளைத் தன் வாளி நிறையக் கொண்டு வரும் ஒரு சிறுவன் அதைத் தனக்குப் பிடித்த மாதிரி இங்கும் அங்கும் தெளிப்பது போல. இருளோ ஒரு கனத்தப் போர்வை போல அனைத்தையும் மறைக்கிறதா இல்லை பாதுகாக்கிறதா என்பது இன்னுமேத் தனக்கு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வண்ணங்களிலிருந்து கருமைக்குள் அடர்கையில், ஒளிப்பூச்சிகள் ரீங்காரத்துடன் மலையின் பின்புறம் கூடடைகின்றன. பின் அதிகாலையில் கண் விழித்துப்படபடக்க பூமியை நோக்கி ஆதுரத்துடனும் நம்பிக்கையுடனும் பறக்கத் தொடங்குகின்றன. என்றாவது இம்மலையின் தாழ்வாரங்களில் எனக்கே எனக்கான கூட்டினைக் கட்டிக் கொள்ளவேண்டும். இப்பூச்சிகளைப் போல கணம் தோறும் லயிக்கும் ஒற்றை வாழ்வு அமைந்தாலே போதுமானது. நான் இம்மண்ணில் நித்தியத்துவனாகி விடுவேன். இளைஞனின் உளமெங்கும் பொங்கிக் கொண்டிருந்தது. ஏனோ ஒரு பித்துப்பிடித்தவன் போலவே மலைகளின் உள்ளிருந்து அந்தி இறங்குவது எல்லா நாட்களிலும் அவனது அனைத்து வேதனைகளிலும் இருந்து விடுவித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக