திங்கள், 21 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -29

    

Author: Nikos Kazantzakis

    எங்கிருந்தாலும் அவர்கள் என்னைப் பிடித்து விடுவார்கள். என்ன ஆனாலும் சீக்கிரமே நான் பிடிபட்டுவிடுவேன் அலறிக் கொண்டே மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தான் இளைஞன்.

    கோதுமை வயல்களில், பெண்கள் அறுப்பு வேலையிலும், ஆண்கள் கதிரடித்துக் கொண்டுமிருந்தனர். தூர தூரத் தொலைவுகள் முழுதுமிருந்தப் பரந்த நிலமெங்கும், தானியங்கள் மலை போல குவித்து வைக்கப்பட்டிருந்தன. கதிரடிப்பில் சிந்தியத் கோதுமைத்தாள்கள் பொன்னிறத் தூவல்களாய் நிலமெங்கும் காற்றின் பாதைக்கு ஏற்ப சுழன்றடித்தன. வழிப்போக்கர்கள் கை நிறையக் கோதுமையை அள்ளி முகர்ந்து, மகிழ்ச்சியுடன் இன்னும் வரும் காலங்களிலும் எந்தக் குறைவில்லாமல் போகம் நடக்க வாழ்த்து தெரிவித்தனர்.

    அருகருகே இரு மலைக்குன்றங்களுக்கிடைப்பட்ட பாதையில் சற்று அயர்ந்து அமர்ந்திருந்து தூரத்தொலைவில் புள்ளிகளாய், எறும்புகள் போல ஊரிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான், இளைஞன். டைபரீஸ் மலை அடிவாரத்தில் கடல் அலைகளின் ஆரவாரத்தை ஒரு சன்னமான ஊளை போலக் கேட்க முடிந்தது. அங்கே ரோமர்களின்  புனிதக்கோவிலினுள், கவர்ச்சிகரமான ஆண், பெண் உருவச்சிலைகள், ஓவியங்கள், உருவ வழிபாட்டிற்கான தெய்வங்களின் சிலைகள் அழகுறச் செதுக்கப்பட்டிருந்தன. பரந்த சதுக்கங்களும், கேளிக்கை விழாக்கள் நிகழ்த்தும் அரங்கங்களையும் பார்த்தான். தன் மாமா சிமியோனுடன் சிறுவயதில் இங்கு வந்திருக்கிறான். இங்கிருக்கும் முழுமையடைந்த ஒரு ரோமன் பெண்ணைப் பற்றியும் அவளது பரிவாரங்களான சாத்தான்களைப்பற்றியுமானக் கதைகளையும், அவைகளை விரட்டியடிக்கவேண்டிய கட்டாயத்தையும் தனது மாமா, தன்னிடம் சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்தான். இரவுகளில் தெருக்களில அம்மணமாக வலம்வரும் அப்பெண், வழியில் கடக்கும் மனிதர்களை வஞ்சனையாலும், ரகசிய மர்மம் பொதிந்தக் கவர்ச்சியினாலும் பீடித்துக் கொள்வாள். அவர்கள் பின் அவளிடமிருந்து தப்பிக்கவே முடியாது. சிமியோனும், அவனது மருமகனான ஜீசஸும் அவளின் அரண்மனைக்குள் செல்லும் பொழுது, அவள் சாத்தான்களால் பாதுகாக்கப்படும் ஆசனத்தில் அமர்ந்திருந்தாள். அங்கிருந்து வழிப்பாதையில் ஆளரவத்தை நிழல் போலத் தொடர்ந்து சென்றவள், அவர்களைப் பிடித்துக் கொள்ள விரைந்தாள். துறவி தன் கவைக்கோலால் அவளைத் தடுத்து நிறுத்தினார். அக்கணம் அவள் அருகில் நின்று கொண்டிருந்த சிறுவனை விசனத்துடன் பார்த்தவள், சட்டென அவனுள் பாய்ந்தாள். அலறிக் கொண்டே மயங்கி விழுந்தான் அவன். இவ்விடத்தைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், நடுக்கமுற  இந்நிகழ்வுதான் ஜீசசின் எண்ணங்களில் வந்து போனது

    தனது மாமா, சிமியோன் பலமுறை எச்சரித்திருக்கிறார். இந்நிலம் கடவுளால் சபிக்கப்பட்டது. இப்பாதை வழியே பயணம் செய்ய வேண்டியக் கட்டாயம் இருந்தால் திடமான மனதுடன் மரணத்தை எதிர்கொள்வதைப் போல நிலத்தைப் பார். இல்லையேல் கடவுளை வேண்டிக் கொண்டு வானத்தைப் பார். முடிந்தவரை கார்பெர்னம்முக்கு செல்ல இவ்வழியைத் தேர்வு செய்யாதே! 

    வெம்மையான நண்பகல் ஒளியில், துடுக்கான நகைப்புகளுடன் மக்கள் வாசலுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டிருந்தனர். குதிரைக்குளம்படிகளின் பொறுமையற்ற சப்தம். ரோம் பேரரசின் கழுகுக் கொடி உயரேப் பறக்கிறது. படைவீரகளின் வெண்கலக் கவசங்கள் மிளிர்கின்றன.

    ஒரு நாள் ஜீசஸ், ஒரு பெண்குதிரையின் சடலத்தைக் கண்டான். அடர்த்தியான சதுப்பில் அகப்பட்டு அழுந்தி வெளிவர முடியாமல் அது இறந்து விட்டது. ஊதிப்பெருத்த சடலத்தின் வயிறு வெடித்து, குடல்களும் ரத்தமும் சிதறிக் கிடந்தது. தலைகீழாக விரைத்த  கால்களின் குழம்புகள் அந்தரத்தில் வான் பார்த்து நின்றது. உடலும் தலையும் பாதி சதுப்பிலும், மீதி வெளியேயும் தெரிந்தது. அமிழ்ந்திருக்கும் தலையில், கண்ணாடிக்குண்டுகள் போலக் கண்கள் வெறித்தன. சுற்றிலும் காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. சிதைந்து அழுகியப் பகுதியில் எல்லாம் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. ஈக்களின் கார்வையான ரீங்காரம். சடலத்தின் அழுகல் வீச்சம் வெகுதொலைவினைக் கடந்தும் அடித்துக் கொண்டிருந்தது. ஒரு சமயம் சடலம் போலவே அல்லாது இப்போதே எழுந்து விடும் எனும் உடல் அசைவுகளும் சிலிர்ப்புகளும்  அதில் இருப்பது போல மயக்கு. ஆனால் அந்த சாம்பல் நிறப் பெண்குதிரையின் சடலம் பழுத்து ஒரு வகையான சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சீந்துவார் யாருமின்றிக் கிடந்தது. 

    இந்த டைபரீசும் அக்குதிரையின் சடலம் போலத்தான் என்று சொல்லிக்கொண்டான். ஆனால் ஜொலித்துக்கொண்டே இருக்கும் அந்நகரத்தை விட்டு அவனது பார்வை நகரவில்லை. இறைவனால் தரைமட்டமாக்கப்பட்ட நகரங்களான சோடோம், கொமாரோ போல, மனிதர்களின் பாவ ஆவிகள் நடமாடும் நகரம் இது.

    தன் கழுதையை ஓட்டிக் கொண்டு வந்த ஒரு கனிந்த முதியவர், ஜீசஸைப் பார்த்து நின்றார்.

    என்னப் பார்க்கிறாய்? உனக்கு தெரியாதா அவளை? அவள் தான் நம் புதிய அரசி. பரத்தையர்களின் தலைவி. கிரேக்கர்களும், ரோமானியர்களும், அரபிகளும், எகிப்தியர்களும், சால்டியர்களும், யூதர்களும் ஒருங்கிணைந்து அவளை இங்கே இருத்தியிருக்கின்றனர். உனக்கு நான் சொல்வது புரிகிறதா?

"இரண்டும் இரண்டும் நான்கு!"

    தன் தோள்ப்பையிலிருந்த வாதுமைக் கொட்டைகளைக் கையளவு எடுத்து ஜீசஸிடம் கொரிக்கக் கொடுத்தார், பின் அவனைப் பார்த்து, 

ஒன்றுக்கும் ஆகாத மேன்மையைத் தூக்கி சுமப்பவன் போல இருக்கிறாய். பாவம்! வழியில் உனக்கு பசியாற இவைகள் உதவும்! 

    மறக்காதே! இறைவனின் ஆசிர்வாதங்கள், காபெர்னம்மின் வயதான செபதீனுக்கு நித்தியமாய்க் கிடைக்கட்டும் என்று நீ போகும் வழியில் சொல்லிக்கொண்டே செல்! என்ன! என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

    ஒரு பெருத்த உயரமான மனிதன், தன் நீண்ட சிகை  அசைய,திறந்த உடலுடன்,  இளைஞனை நோக்கி வந்தான். அருகிலிருந்த முதியவரை சட்டை செய்யாமல் அவனை அணுகினான். மதிப்பிற்குரிய இளைஞனே, நீ அந்தத் தச்சனின் மகனில்லையே! எங்களுக்கான சிலுவைகளைச் செய்து கொடுக்கும் நாசரேத் நகரைச் சேர்ந்த அந்தக் கொடியவன் இல்லையே! என்று துடுக்குத்தனமாகக் கேட்டான்.

    அருகில் வயலில் அறுப்பு வேலையிலிருந்த இரு பெண்கள் இவர்களின் பேச்சைக் கேட்டு அருகே வந்தனர்.

நான்....? நான்...?

தடுமாற்றத்துடன் ஜீசஸ் அங்கிருந்து நகர முயன்றான்.

    எங்கே தப்பிக்கப் பார்க்கிறாய்? அவனது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், வசைகளைப் பொழிந்தான்.

    உன்னை இன்று கொல்லாமல் விடுவதாக இல்லை! இழிபிறவியே! சொந்தக்குலத்தை சிலுவையில் ஏற்றிக் கொல்லும் கொலைகாரா!

பெருத்த மனிதனின் குரல் ஓங்கியிருந்தது.

    அந்த  முதியவர் தன் வலிமையானக் கைகளால், அவன் கைகளைப் பற்றியிழுத்து விடுவித்தார்.

ஒரு நிமிடம் பொறு! பிலிப்!

    நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேள்! இவ்வுலகில் நிகழ்வது அனைத்தும் கடவுளின் செயலன்றி வேறில்லை! இதை நம்புகிறாயா?

ஆம், நிச்சயமாக செபெதீ, எல்லாமும்தான்!

    அது தான் சரி! அப்படியென்றால் இந்த பாவப்பட்ட மனிதன் சிலுவைகள் செய்ததும் கடவுளின் விளைவுதான். நீ தேவையில்லாமல் கடவுளின் விவகாரங்களில் தலையீடாதே என்னப் புரிந்ததா!

"இரண்டும் இரண்டும் நான்கு!" அவ்வளவுதான். அதே நமட்டுச்சிரிப்பு மேய்ப்பனின் கண்களில் ஒளிர்ந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக