திங்கள், 21 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -31

     

Author: Nikos Kazantzakis

    மலை உச்சியை அடையும் பொழுது முழுவதும் இருண்டிருந்தது. ஓங்கி உயர்ந்த ஒரு வயதான தேவதாரு மரத்தின் வேர்களின் மேலே நின்று கொண்டிருந்தான் இளைஞன். வலுவான அதன் பாதங்களில் தன் பாதத்தையும் புதைத்துக் கொண்டு, கைகளை உரசித் தன்னைக் கதகதப்பூட்டினான். அடிவாரத்தில் ஊர்களிலிருந்து, இரவுணவு தயாராகிக் கொண்டிருந்தது, ரொட்டி வாட்டும் புளிப்பு கலந்த ஈஸ்ட் மணம்  காற்றில் வீசியது. வீடுகளின் கூரைகளிலிருந்து புகை மேலெழும்பி, தனித்தனி புகைக்குழாம்கள் உயரே இன்றுடன் ஒன்று பிணைந்து, ஒரு மாபெரும் புகைக்குடை போல அவ்வூரின் மேலே படர்ந்திருந்தது.

    அவன் பசியிலும் தாகத்திலும் இருந்தான். வேலையாட்கள் நாள் முழுதும் கடினமாக வேலைசெய்து சோர்ந்த உடலுடனும், பசியுடனும் உணவு மட்டுமேயான நினைப்பில் தங்கள் குடில்களை நோக்கி சென்று கொண்டிருப்பதைப் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்காக, அங்கே மனைவி, பிள்ளைகள் அன்றைய உணவுடன் காத்திருக்கிறார்கள். காத்திருப்பு! என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

    தன்னுள் மிக மிகத் தனிமையாக உணர்ந்தான். விலங்குகளுக்கு கூட அவைகள் அண்டிக் கொள்ளும் உயிர்கள் இருக்கின்றன. ஒரு நரியோ! ஆந்தையோக் கூட இப்படித் தனிமையை உணர்ந்திருக்காது. அவைகளுக்கென கூடோ, குகையோ, அங்கு அவைகளுக்காக இதே போலக் காத்திருக்கும் உயிர்களோ இருக்கும். ஆனால் நான் யாருமற்றவனாகி விட்டேனே! எனக்காக இருந்த என் அன்னையைக் கூட நான் ஒதுக்கி விட்டேன். தன் வெற்றுக்கால்களால் அடியில் இருக்கும் வேரினை ஏதோ உந்தியதைப் போலத் திரும்பத் திரும்ப மிதித்துக் கொண்டே பிதற்றினான். 

இறைவா! இது எனக்கானத் தனிமை! பசி! குளிர்!

எனக்கு நீ தருவித்த அனைத்துக்கும் நன்றி!.

இங்கு எனக்கு எந்தக் குறைவுமில்லை!

    அவனது நடுங்கும் குரல், குளிர்க்காற்றில் பொருளற்ற சொற்களாகக் கிளம்பிக் திசையற்றுத் தெறித்தது.

    கருணை வடிவானவன், தனக்கிழைத்திருக்கும் அநீதிக்காகத் தான் இந்த நன்றி! சற்றுக் கோணலாகச் சிரித்துக் கொண்டான். கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். பாதைத் தவறி, கண்ணிகளில் அகப்பட்டுக்கொண்ட ஒரு மூர்க்கமான விலங்கினைப் போலத் தன்னை உருவகித்துக் கொண்டான். தலை அதிர்ந்து கொண்டிருந்தது. தூர தூரமாய்க் கடந்து வந்த இருள்ப்பாதையை திரும்பிப்பார்த்தான். இன்னும் அக்காலடிகளின் அனிச்சம் மறைந்திருக்கவில்லை. வேர் முண்டுகளிலிருந்து எழுந்து இடுப்புக்கச்சையை நன்றாக இறுக்கிக் கொண்டான். தரையில் சிதறிக்கிடந்தன பாளங்களும், சரளைக் கற்களும். எப்படியோ அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து, மலையுச்சி வரை வந்து விட்டனர் என்பதை உணர்ந்தது போலக் கத்தத் தொடங்கினான்.

    "என்னருகில் வா! எல்லாம் இருண்டு விட்டது. உன்னை யாரும் பார்த்து விட மாட்டார்கள், வா! வந்து உன்னைக் காட்டு என்னிடம்!"

அழுவது போல விதிர்விதிர்த்தான் இளைஞன்.

மூச்சு கூட  விடாமல் உற்றுப்பார்த்தான்.

    எந்தப் பதிலுமில்லை. ஆனால் இரவின் குரல் சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. அதன் இருள் துணுக்குகளின் அமைதியில், இடைபடும் காற்று, வெட்டுக்கிளிகள், சுவர்க்கோழிகள், சில்வண்டுகளின் ஒலி, முடிச்சுகள் அவிழ்ப்பது போல ஒன்றிலிருந்து ஒன்றாய்க் கிளம்புகின்றன. ஓநாயின் வலுத்த ஊளை. வெகுதொலைவில் நாய்களின் குரைப்புகள். அதன் எதிரொலிப்புகளில்,  இருள், ஸ்தூல இருப்புகளையெல்லாம் புகையாக்கி விடுகிறது. எல்லைகள் அழிந்த பொருட்களின் அரூப வடிவங்கள் அலையாடுகையில் எல்லாமே தெரிந்தது போலவும் தெரியாதது போலவும் மாயத்தோற்றம் கொள்கிறது. அருகிலிருந்த தேவதாரு மரத்தின் அடியில் யாரோ, எதுவோ நிற்பதைப் போல உணர்ந்தவன், வேகமாக அதனை நோக்கிச் சென்றான். 

    பெண்ணே! பெண்ணே! நில். தீர்க்கமாகவும், வாஞ்சையுடன் கவர்ந்திழுப்பது போலவும் மெல்லியக் குரலில் அவன் கூப்பிட்டான். பின் தான் நின்ற இடத்திலேயே நகராமல் காத்திருந்தான். நெற்றியிலும், அக்குள்களிலும் வியர்வை வழிய அசைவின்றி நின்று கொண்டிருந்தான்.

    இன்னும் கவனமாக வெறித்து உற்று நோக்கியவனுக்கு, ஒரு சிரிப்புக் குரல், ஆளரவமற்ற பகுதிகளிலிருந்து ஒரு பிரம்மை போலத் துளிர்த்தது. அவன் அசையவில்லை. காற்றும் புழுதியுமடிக்கச் சுழல்கிறது. மெதுமெதுவாக கரியச்சுழல் உருக் கொள்கிறது. உடலெடுக்கிறது. ஆனால் அது முழுமையற்றுக் கரித்துகள்களாகச் சிதறித் தெறித்தது.

    அக்கருஞ்சுழலை எதிரிட்டு எதிரிட்டு அயர்ந்து விட்டான். தன் அகத்தில், என்ன நோண்டினாலும் அந்த உருவத்தைப் பரிட்சயப்படுத்த முடியவில்லை. இப்பொழுது அவனிடம் எந்த நடுக்கமும், தேம்பலும் இல்லை. தலைக்கச்சையை நன்கு இறுக்கிக் கொண்டு அந்த தேவதாரு மரத்தின் அடியில் கூர்ந்து நின்றிருந்தான்.

    சரளைக் கற்களின் சிலக் கூர் நுனிகள் அவன் பாதங்களில் காயமாக்கியிருந்தன. அவன் சற்றுத் திரும்பி அடிமரத்தைப்பற்றித் தன்னை சமநிலைப் படுத்திக் கொண்டான். தன்னை ஒரு புள்ளியில் குவித்து சாந்தமாகக் கண்களை மூடினான், இப்பொழுது அவளைத் தன் இருள்வெளிகளில் கண்ணுற்றான். ஆனால் அவன் நினைத்தது போல அல்லாமல் அவள் அவனின் அன்னையைப் போல இருந்தாள். அவனுடைய பழிக்குத் தான் ஆளாகி விட்டது போல துக்கித்து அழுது வெலவெலக்க ஓடி வரும் அவளது கைகள் தலையில் இருந்தது. கண நொடியில் அவ்வுருவம் கலைந்தது. கண்களைத் திறக்கையில் சகிக்க முடியாத ஒளி வெள்ளத்தில், ஒரு காட்டுமிருகம் போன்றப் பெண் உடல், ஆனால் அதன் தலை மனிதத்தலை அல்ல. அதில் ஒரு கூர் அலகு கொண்ட கழுகின் தலை இருந்தது. அதன் உடல் முழுக்க வலுவான கவசங்களால் மறைக்கப்பட்டிருந்தது. மஞ்சள் நிறக் கடுமையான விழிகளும், கூர்மையான அலகில் ரத்தம் சொட்ட மனித இறைச்சியும் தொங்கிக்கொண்டிருந்தது. எந்தக் கருணையுமற்ற வெறிகொள் பார்வையுடன் அது    ஜீசஸை ஏறிட்டது.

நான் எதிர்பார்த்தது நீ போல வரவில்லை, ஒரு அன்னையைப் போல...ஆம்! பரிதாபமாக என்னிடம் பேச!

நீ யார்?

திரும்பத் திரும்பக் கேட்டான். எந்த அசைவுமில்லை. அதன் கடுமையான மஞ்சள் நிற உருளைக் கண்கள் ஒளியிலிருந்து இருளை நோக்கி வெறித்துக் கொண்டிருந்தது.

திடுக்கென மேரியின் மகன் அதைப் புரிந்து கொண்டான்.

"சாபம்", 

அழத்தொடங்கியவன், தலைகுப்புறத் தரையில் ஒரு நிழல் போல வீழ்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக