வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -44

    

Author: Nikos Kazantzakis

    அவரது பார்வை எங்கோ நிலைத்திருந்தது. தன்னிலையில் இல்லாத நோக்கில் வந்து கொண்டிருந்த சிறுவனைப் பார்த்தார்.

    ஜான் அவரை அணுகினான். திரும்பவும் மண்டியிட்டு வணங்கி, அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதிராமல் சொன்னான்.

    தனது சீடர்கள் அவசரகதியில் வந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். பின் அறையின் மத்தியிலிருந்து குறுக்கும் நெடுக்குமாக, மிக மெதுவாகத் தனது நோய்வாய்ப்பட்ட உடலை நகர்த்தினார். தன்னால் இயன்ற அளவு சூழலைச் சகஜப்படுத்த முயன்றார். அருகில் இருந்த நாற்காலியில் மெல்ல அமர்ந்து கொண்டு அவர்களின் வருகையை எதிர் நோக்கினார். மணிக்கட்டுடன் பிணைத்திருந்த யூதர்களுக்கானப் புனிதப்பெட்டகமும், அதில் பதிப்பக்கட்டிருந்த தோராவின் வார்த்தைகளையும் ஒரு முறைக் கண்ணுற்றார். அதன் முடிச்சுகள் அவிழ்கிறது. தன்  நடுங்கும் இன்னொருக் கையால் அதைப் பிடிக்க முயல்கிறார்,  தரையில் நடைபாதையில் விழும்முன் அங்கு பாய்ந்து வந்த சிறுவன் அவர் கைகளோடு அதை பிணைத்து இறுக்கிக் கட்டினான். தனது மேஜையின் அருகில் சாய்த்து வைத்திருந்த, தந்த நிறமான நுனியில் வளைந்தும் செதுக்கு வேலைப்பாடுகளும் கொண்ட மடாதிபதிக்கான கோலை எடுத்து ஊன்றிப் பிடித்துக் கொண்டார். அதைப் பிடித்தவுடன் புது சக்தி கிடைத்தது போல உணர்ந்தார். நிமிர்ந்துக் கண்களை உயர்த்தி எதிரே நின்று கொண்டிருந்த தனது சீடர்களை ஒவ்வொருவராக நோக்கினார்.

    எனதருமைத் துறவிகளே! எனக்கு கடைசியாக சில வார்த்தைகளை உங்களுடன் பகிரவேண்டியிருக்கிறது. யாருக்கேனும் உறக்கம் வந்தால் செல்லலாம். இது மிக முக்கியமானதும், கவனத்துடனும் கேட்க வேண்டிய சொற்கள். அதனால் உங்களின் முழு அர்ப்பணிப்பும் இதற்கு அவசியம். நான் சொல்ல நினைப்பது சற்று சிக்கலானதும் கூட. உங்களின் நம்பிக்கைகளும், பயங்களும் விழித்திருக்கட்டும். நான் சொல்வதை முழுமையாகக் கேட்ட பிறகு அதற்கான பதிலை எனக்கு அளியுங்கள்.

    நாங்கள் கவனமாகக் கேட்கிறோம். சொல்லுங்கள் தந்தையே! குழுவினில் இருந்த மூத்த சீடர் ஹப்பாஹக் தன் நெஞ்சினில் கை வைத்து சொன்னார்.

    இது என்னுடையக் கடைசி வார்த்தைகள். இதனை எளிமையாக உங்களுக்கு உணர்த்த ஒரு வாய் மொழிக்கதையாகச் சொல்கிறேன்.

    நிலத்தை நோக்கிக் கண்களைத் தாழ்த்தி, மெல்லிய குரலில் கதைக்கத் தொடங்கினார்,

"முதலில் சிறகுகளும், பின் தேவதையும் வந்தனர்"

    அவர் நிறுத்தினார். எதிரில் நிற்பவர்கள் ஒவ்வொருவராகப் பார்த்தார். என்ன எல்லோரும் வாய்மூடி நிற்கிறீர்கள், துறவிகளே! ஹப்பாஹக், உனக்கேதும் இதில் மறுப்பு இருக்கிறதா?

    அவர் தன் நெஞ்சினில் இன்னும் வைத்த கைகளை அகற்றவில்லை. "நீங்கள் முதலில் சிறகுகளும் பின் தேவதையும் வந்தனர்" என்றீர். இது போல வாசகம் எதையும் நம் திருமுறைகளில் நான் வாசிக்கவில்லையே, என் புனிதரே! என்றார்.

    ஐயோ! இதை மட்டும் எப்படி சரியாகக் கவனித்தாய், உனது அகம் இன்னும் மங்கலாகத்தான் இருக்கிறது. 

    நீ தீர்க்கதரிசனங்களின் வார்த்தைகளை, அதன் சொற்களில் மட்டும் தேடிக் கொண்டிருக்கிறாய். சொற்கள் ஒரு சிறையின் கம்பிகள் போல. சொற்களுக்குப் பின்னால் ஒரு மனம் சதா அலையிடுகிறது. நமது இறைத்தன்மை அங்குதான் விளங்குகிறது. எப்பொழுது சொற்களுக்கப்பால் உன்னால் செல்ல முடிகிறதோ அங்கு மௌனம் மட்டுமே நிலைக்கும். அதன் புனிதத்தை வரித்துக் கொள்ளப் பிறகும் நாம் சொற்களையே நாட வேண்டியிருக்கிறது. நாம் ஒரு மொழியுயுரி. நம் அகம் மொழியினால் கட்டுவிக்கப்பட்டது. ஆனால் மொழியற்ற சொல்லற்ற ஒன்றை நாம்  அறிவதற்கான வழிப்பாதை அச்சொல்தான். ஆனால் அதிலிருந்துக் கடப்பதன் மூலமே அது சாத்தியம். அதனால் சொற்களைக் கடந்து உணர்வுகளாக்கு. உணர்வுகளைக் கடந்து சூன்யமாக்கு. சூன்யத்தைக் கடந்து சுதந்திரம் ஆகு. நான் அதைப்பற்றித்தான், அப்படிப்பட்ட நம் புனிதத்தைப் பற்றியான என் கடைசி வார்த்தைகளை உங்களிடம் தருவிக்கிறேன், கேள்!

அதனால்,

முதலில் சிறகுகளும், பின் தேவதையும் வந்தன.

    எங்களது அகம் இன்னும் இருளில் இருக்கிறது புனிதரே! அதில் ஒளியேற்றுங்கள்! உங்களின் கதைக்குள் நாங்கள் நுழைய எங்களின் விளக்குகளில் ஒளியேற்றுங்கள் மூத்தவரே!

    "தொடக்கத்தில், அருளாளர் ஹப்பாஹக், சுதந்திரத்திற்காக ஏங்கினார். அவர் தொடர்ச்சியாக கட்டுண்டுக் கிடந்தார். ஆனால் திடீரென அடிமைத்தனத்தின் ஆழத்திலிருந்து, ஒரு ஏக்கம், ஒரு குரல், ஒரு கிளர்வு துளிர்க்கிறது, அது சிறகடிக்கிறது. ஒன்றிலிருந்து ஒன்றாக எல்லாவற்றிலும் முளைக்கிறது. எல்லோருக்கும்! "

கேள்வி கேட்டக் குரல்கள் எல்லாம் ஆர்வாரித்தன,

"ஆம் இஸ்ரவேலத்தின் மக்கள் எல்லோருக்கும்"

    ஆம்! துறவிகளே! இஸ்ரவேலத்தின் மக்களுக்காக! நாம் வலியதும் நடுக்கமுறச் செய்யும் இக்காலத்தின் வழியே கடந்து வந்திருக்கிறோம். விடுதலையின் ஏக்கம் நம்முள் கொழுந்து விட்டு எரிகிறது. நமது சிறகுகள் தளர்வின்றி படபடக்கட்டும். நம் மீட்பன் வந்து கொண்டிருக்கிறான். ஆம்! நண்பர்களே! வெகு அருகில் அவன் வந்து கொண்டிருக்கிறான். ஏனென்றால் நம் தேவதை, சுதந்திரத்தின் தேவதை எதனால் செய்யப்பட்டது என்று நினைக்கிறீர்கள். கடவுளின் பூரண அருளால்! அன்பால்! நீதியால்!. 

    உண்மையில் இல்லை! இத்தேவதை பொறுமை, தன் சுயப் பிடிவாதம், மனிதனின் பிரத்யேகமான போராடும் குணம் இவற்றை ஆயுதங்களாகக் கொண்டு வந்து கொண்டிருக்கிறான்.

    தாள முடியாத பாரத்தையும், மிகப்பெரிய பொறுப்பையும் அவனிடம் வைக்கிறீர்கள். அத்தனை துணிச்சலும், வலுவும் கொண்டவனா? அவன்,  புனிதரே. அவ்வளவு நம்பிக்கையா அவனிடம் உங்களுக்கு? மூத்ததுறவி திரும்பவும் வாதிட்டார்.

        அவரது மறுப்பை மடாதிபதி புறக்கணித்தார். கிழவரின் மனம் மெசியா! மெசியா! என்று சுற்றிச்சுழன்றது. அவன் என் மகன்! நம் மைந்தன்! என்று சொல்லிக் கொண்டே அழுதார். அதனால் தான் நம் புனித நூல்கள் அவனை மனிதகுமாரன் என்கிறது. 

    இஸ்ரவேலத்தின் ஆயிரமாயிரம் ஆண்களும், பெண்களும் உறவு கொள்கின்றனர். அந்த ஆயிரமாயிரம் முத்தங்களின், பிணைப்புகளின், காதல்களின் விளைவாய் ஒருத்தன் வருகிறான். அவனே நம் மெசியா!

    அவர் தன் மணிக்கட்டில் கட்டியிருந்த புனிதப்பெட்டகத்தை ஒரு முறை கண்களில் ஒற்றி முத்திக் கொண்டார். தன் கையிலிருந்த மாட்சிமையின் கோலைத் திரும்பவும் மேஜையில் சாய்த்து வைத்தார்.

துறவிகளைத் திரும்ப ஆதுரமாகப் பார்த்தார்!

    ஒரு வித ஆவேசத்துடன் அவரின் வார்த்தைகள் வெளிவந்தன. துறவிகளே அவன் வருகிறான். பகலிலோ, அந்தியிலோ, இரவிலோ, எந்தத்தருணத்திலும் அவன் நம்மைச் சந்திப்பான். கவனமாக இருங்கள். 

"தனித்திரு, பசித்திரு, விழித்திரு"

ஆம்! உங்களின் மன சஞ்சலங்களிற்குள்ளும், ஆழ் நித்திரையிலும், இல்லை உங்களின் ஆபாசங்களுக்கிடையிலும் கூட அவன் உங்களைக் கண்டறிவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக