வானம் இன்னும் முகிழ்திருக்கவில்லை. நீலமும் வெண்மையும் கலந்த பிரகாசம் அங்கங்கு திட்டுத்திட்டாய்ப் படிந்திருந்தது. நாசரேத் நகரம் ஆழ்த்துயிலின் கனவினுள் அமிழ்ந்திருந்தது. துருவ நட்சத்திரத்தின் மிணுக்கும் ஒளி. எலுமிச்சை மற்றும் பேரீச்சை மரங்களைப் படர்ந்து இன்னும் அகலாத இருளின், குளிர்ச்சியின் கனத்தப் படலம். எந்த அணக்கமுமில்லை. ஆனால் இன்னும் விடியாத நிலம் தன் மௌனத்திற்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தது. முதல் பறவையின் கிரீச்சிடல். மெல்ல மெல்லத் தொற்றிக் கொண்டு பல்லாயிரம் நாவுகளின் கூவல். ஊர்வனவற்றின் மொலுமொலுத்தல் போல காற்றின் வெட்டி வெட்டிச் செல்லும் ஒலி. கூகையின் நீள் வட்டக் குழறல். ஜீசஸ் தன் திடமான கால்களுடன் கதவினைத் திறந்து முற்றத்தின் காற்றைத் தன் உடல் முழுதும் சுவாசித்தான். வீட்டை விட்டு வெளியே வந்தவன் தெருவை நோக்கி நடக்கத் தொடங்கினான், திறந்த கதவு மூடப்படவில்லை. வெகு நாட்களின் தூக்கமின்மை கண்களைச் சுற்றிக் கருவளையமாய்ப் படிந்திருந்தது. சிலத் தப்படிகள் சென்று நின்றவன், பின் திரும்பிப் பாராது விரைவாக நடக்கத் தொடங்கினான். ரத்தம் உறைந்த தலைக்குட்டை அவனது தலையில் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. இனித் திரும்ப வரவே போவதில்லை என்பதைப் போல சற்று உலுக்கலுடன் நடந்தான். அவனது காலடித் தடங்களின் இறைஞ்சல், அவனது அன்னையை, முடங்கிக் கிடக்கும் தந்தையை, பாழாய்ப் போனத் தன் விதியைக்குடித்துக் கொண்டு, ஊறும் காற்றின் புழுதியில் தேய்ந்தழிந்தது. அவனைத் துரத்துவது போல ஒரு எடைமிக்க காலடிச் சப்தத்தைக் கூர்ந்தான். ஆனால் அங்கு அவனைத் தவிர யாருமில்லை. ஒரு நாய் இவனின் ஓட்டமும் நடையையும் பார்த்துக் குரைத்தது. பழத் தோட்டங்களையும், புதர்மண்டிய பிரதேசங்களையும் தாண்டி அவன் சென்று கொண்டிருந்தான். தோட்டத்தின் மூலையில் இருந்தக் கிணற்றில் ஒரு கிழவன் நீர் இறைக்கும் ஒலி மட்டுமே வெளியில் நிறைந்தது. நாள் கொஞ்ச கொஞ்சமாகக் கண்களைத் திறந்து மெல்ல மெல்லத் துளிர்த்தது.
பணப்பையோ, ஊன்றுகோலோ, செருப்புகளோ ஏதுமில்லை அவனிடம். நீண்டு கிடக்கும் பாதையில் தன் உடையுடன், ரத்தம் தோய்ந்த துணியுடன் அவன் மட்டுமே தனித்துப் பயணப்பட்டான். அவன் பாலையினுள் இருக்கும் மடாலயத்தைப் பற்றி அறிந்திருந்தான். கானா, டைபரீஸ், மாக்தேலா, காப்பெர்னம் மற்றும் வட்ட வடிவ ஏரியான ஜென்னசரேட்டையும் தாண்டி நீள்கிறது அதன் பாதை. அங்கு துறவிகளாக ஞானம் அடைந்தவர்கள் வெள்ளை அங்கிகள் உடுத்திக் கொண்டு, கடவுளடனான பிரார்த்தனைகளில் தன் வாழ் நாளை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். எந்த ஊன் உணவும் எடுத்துக்கொள்ளாமல், மது அருந்தாமல், பெண்களைப் பற்றி நினையாமல் தானும் கடவுளும் மட்டுமேயாகத் தனித்திருந்தனர். அவர்கள் மூலிகைகளினால் மனிதனின் நோய்களைக் குணப்படுத்த, தங்களின் வல்லமையால், அழியா ஆன்மாவைத் திடப்படுத்தி, சாத்தானின் அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றும் ஞானம் பெற்றிருந்தார்கள். எத்தனை முறை தனது மாமா சிமியோன் அந்தப்புனித மடாலயத்தைப் பற்றி சொல்லியிருப்பார். அவர் தனது வாழ்வின் பதினோரு வருடங்களை அங்குதான் கழித்தார். ஒரு துறவியாக இறைவனின் பாதையில் நின்று, மனிதனின் நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலை கற்றுத் தேர்ந்திருந்தார். ஆனால் அவரும் இறைவனின் சோதனையிலிருந்து தப்ப முடியவில்லை. ஆம்! ஒரு அழகான பெண்ணால் காதல் வயப்பட்டு, தன் துறவு வாழ்க்கையை விடுத்து, மாக்தலேனின் தந்தையுமானார். தன் ஒழுங்கான சேவைக்கு இன்று கடவுள், சரியான வெகுமதியை அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
அங்குதான் நான் சென்று கொண்டிருக்கிறேன். அங்கு அவனது வெம்மையான சிறகுகளுக்குள் என்னை ஒளித்துக் கொள்வேன். தனக்குள்ளேயே பிளவு பட்ட இன்னொருவனிடம் சொல்வது போலச் சொல்லிக் கொண்டான்.
அவனது பன்னிரெண்டாவது பிறந்த நாளில் தான் முதல்முறையாக இம்மடாலயத்தைப் பற்றி அவனது மாமா சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தான். இன்று தன் கடந்த காலத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு, தன் அன்னையின் அறிவுரைகள், தந்தையின் தேம்பல்களை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, தனக்கேயான வழியில், ஒரு மனிதன் கால், கைகளில் அப்பியிருக்கும் தூசினையும், புழுதியினையும் உதறித் தள்ளுவது போலப் புத்தம் புதியதாய் தனது ஒரே நம்பிக்கையும் அடைக்கலமுமாகப் பாலை நிலத்திற்குச் செல்கிறான். மீள முடியாத பற்சக்கரங்களுக்குள் அகப்பட்டிருக்கும் மனிதனின் உலகிலிருந்து, தனது உடல், பொருள் , ஆன்மா அனைத்தையும் பற்றிக் கொண்டு தேவனின் நித்தியத்துவத்திற்குள் புக ஆயத்தமாகிறான். ஆம்! அவன் பிழைத்துக்கொள்வான்.
அவனது வெளிர்ந்து சோர்ந்த முகம் ஒளிர்ந்தது. இத்தனை காலங்களாய்க் கடவுளின் கூர் உகிர்கள் என்னை மட்டுமே தேர்ந்தெடுத்தது இதற்காகத்தானா? தன்னிச்சையாக நான் கடவுளின் பாதங்களில் சரணடைய, வலி, வாதைகளிலிருந்து என்னை அர்த்தப்படுத்திக் கொள்ள இறைவன் எனக்குத் தந்த வழி இதுதான் போலும். இதைவிடவும் உயர்ந்ததும் கடினமானதுமானப் பணி வேறெதுவுமில்லை. இதைவிடவும் மகிழ்வானதும், அறுதியானதுமான வாழ்வுமில்லை என்று கண்கள் பணியத் தனக்குள் சொல்லிக் கொண்டான்.
உண்மையில் அவன் எதிலிருந்தோ விடுவிக்கப்பட்டது போல உணர்ந்தான். எந்தச்ண்டைகளும், வலிகளும் தனக்கு இல்லை. இனிமேல் நான் வாதைகளிலிருந்து முழுதுமாகத் தப்பித்துவிடுவேன். இந்த விடிகாலையில் ஒரு உயிர்நண்பனைப் போலக் கடவுள் என்னை அழைத்தார், வா! போகலாம் என்று. என்னைச்சுற்றிக் குழுமியக் குளிர் காற்றின் சுகந்தம், மகிழ்ச்சியும் திளைப்பும் ஓரு ஊற்றினைப் போல என்னுள் பெருகிற்று. இறைவா! என்னால் தாங்கவொண்ணாக் கருணையை அல்லவா எனக்களிக்கிறாய்! வானிற்கு கீழே பூமியின் விதிகள் பொத்து வெளிவருவது போலே இரட்சிப்பின் சங்கீதததை, ஞானத்திற்கான வழியில் நான் பாடுகிறேன்.
"நீயே அனைத்தும்!
என் உண்மையும், சத்தியமும்
அழிக்கமுடியாப் பேருவகையும்
கன்றின் சுவை நரம்புகள் அன்னையின் மடியில் இருப்பதைப் போல
காலமற்று நான் உன் அருட்கொடையினில் அடைக்கலமாகுகிறேன்
ஏற்றுக்கொள்! என் தேவா!"
அவனது அன்பும், மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்தது. விடியலின் தூய ஒளியினில் அவன் இறங்கிச்செல்கிறான். சுற்றிலும் மகரந்தம் சொரியும் நறுமணங்கள். ஓங்கி உயர்ந்த தேவதாருக்களும், ஆலிவ் மரங்களும், கோதுமை வயல்களும், திராட்சைத் தோட்டங்களும் அவனது பாடலை எதிரொலித்து வரவேற்றன. வானத்தை அண்ணாந்து நோக்கிப் பாடலை இன்னும் உரக்கக் கத்தியவன், திடூமென நின்றான். இரு கனத்தக் காலடிகள் தன்னை இத்தனை தூரம் தொடர்ந்து வருவதை அப்பொழுதுதான் உணர்ந்தான். இன்னும் கவனமாக, மெதுவாக அடுத்த அடியை வைக்கவும் அதனைக் கூர்மையாகக் கேட்டான். அவன் நின்றவுடன் அதுவும் நின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக