தனது பெற்றோர்களுடன் இவன் இந்த மடாலயத்திற்கு வரும்பொழுது ஒரு பதினாறு வயதிருக்கும். சிறுவனை இங்கு விட்டுசெல்வதால் ஒரு சிறிய விடைபெறல் நிகழ்வாக அதை நிகழ்த்தினர் அவர்கள். மடாதிபதி, அவனுடைய தூரத்துச் சொந்தம்தான். அவர் அவனை மகிழ்ச்சியுடன் அரவணைத்துத் தன்னுடைய இருக்கையிலேயே அமர வைத்தார். ஜான் தலை குனிந்து உணவருந்தும் பொழுது, மடாதிபதியின் பார்வை அவனது உச்சந்தலையில் இருந்தது. அது அவனது மண்டை ஓட்டினைத்துளைத்து மூளையில் தையல் இடுவதைப் போல கூர்முனைகளால் ஊடுருகியது. வலிதாங்க முடியாமல் விதிர்விதிர்க்க அண்ணாந்து அவரது கண்களை நோக்கினான் சிறுவன். பரந்து விரிந்து கிடந்த ஏரியில் தனித்த படகில் தன் தந்தையுடன் அமர்ந்திருக்கிறான். வலையின் கண்ணிகள் இழுபடுகின்றன. இரவு குமிழியிடுகிறது. நீர்க்கோழிகள் கழுத்து நீட்டிப் பார்த்துவிட்டு முழுக்கிடுகின்றன. சுழல் சுழல்களாய் அலைகளின் பெருக்கு, படகினைச்சுற்றிக் குழுமுகிறது. சிறுவனின் கண்கள் தூர தூரத்தை வெறிக்கிறது. பார்வைக்கப்பால் ஆன பாதைகளைப் பற்றிய தேடுதல் அது. வானத்தினை, வானங்களை, அண்டங்களை, முடிவில்லாப் பால் வெளியை எனக் கடந்து கொண்டே பயணிக்கிறது. நிலவின் பால் ஒளி, ஏரி நிரம்பி அவனுள்ளும் நிறைக்கிறது. தான் மொத்தமும் கால்களுக்கடியில் இருக்கும் நீர்மத்துளிகளாய், அதில் நொடிக்கொருதரம் பொட்டித்தெறிக்கும் குமிழிகளாய் உருமாறுவதாய் நினைத்துக் கொண்டான். அசைவற்று அமர்ந்திருந்த பையனைப் பார்த்த முதிய செபெதீ, அவனை உலுக்கி எழுப்பினார். அவனது கனவுக்கண்கள் இன்னும் கலையவில்லை. தனக்கிருக்கும் இரண்டு பிள்ளைகளில் ஒருத்தன் கடவுளின் பாதையில் செல்கின்றவன். அவன் அவனுக்கானத் தனித்த வழியைத் தேர்ந்தெடுக்கட்டும். அவனை மடத்திற்கு அனுப்பிவிடலாம் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார். சாப்பாட்டு மேஜையில் நொடிக்கணம் மடாதிபதியின் கண்கள் உன்னித்துப் பையனின் கண்களிற்குள் புகுந்து விலகிக் கொண்டது.
மடாதிபதி, ஜானைப் பார்த்தார். கைகளில் டேனியலின் சொற்களுடன் அவன் இன்னும் அமைதியற்று அமர்ந்திருக்கிறான். உண்மையில் அவனைக் கண்டிக்க நினைத்தவர், சற்றும் எதிர்பாரா அத்தருணத்தால் கலங்கடிக்கப்பட்டார். பின் புன்முறுவலுடன் நிதானித்துக் கொண்டு அவனை அணுகினார். ஏன் நிறுத்தி விட்டாய், அன்பனே! உன்னுடையக் கனவுவெளியின் இடையில் கைவிடப்பட்டதைப் போல உணர்கிறேன்.
"அவன் ஒரு தீர்க்கதரிசி! அதனால் அவன் மதிப்பிற்குரியச் சொற்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவை. சாசுவதமானவை. அதனைத் தாமதியாது சொல்வது உன் கடமை"
தனது அழுந்திச்சிவந்த கண்கள் வழியே ஜான் கனவின் பாதைகளில் திரும்பவும் சொல்லத் தொடங்கினான். மாறாத சொற்களின், மந்திரங்களின் முணுமுணுப்பு.
"இரவின் கூடுகைக்குள் பலப்பலப்பாதைகள். அப்பாதைகள் இணைந்து நான்கு பாதைகள் ஆயின. கணுக்களாய் விரிந்தும் பெயர்ந்தும் அகோரமாய் இருந்தது இருள். அதனுள் எனக்கே எனக்கானப் பார்வைப்புலன் மட்டும் விழித்திருந்தது. அச்சுறுத்தும் குரல்கள், கேவல்கள், அழுகைகள், கதறல்கள், கூச்சல்கள், காற்றின் உறை சில்லிப்பு. அங்கே தன் முன்னே இருந்த நான்காவது பாதையில் அது நின்று கொண்டிருந்தது. பயங்கரமானக் கர்ஜனையுடன் பற்கள் நரநரக்க, வாயிலிருந்து கோழையாய் எச்சில் வடிய என்னை வெறிக்கிறது. அதன் உறைபனிக்கண்களில் வட்டக்கோளங்கள் சுழல்கின்றன. அது இதுவரை வெளிவந்த மற்ற எந்த ஒரு மிருக ஜந்துவினைப் போலவும் இல்லை. அதற்குப் பத்துக் கொம்புகளும், இரும்பினால் ஆன கோரைப்பற்களும் இருந்தன. என்று ஒருவித ஆவேசத்துடன் வாசித்துக்கொண்டிருந்தான்"
நிறுத்து! போதும்! போதும்! மடாதிபதி சத்தம் போட்டார்.
அவரின் அழுகுரல், ஜானைப் பயமுறுத்தியது. கைகளில் வைத்திருந்த புனிதச்சொற்களின் பிரதியை, எடுத்து ஆழ முகத்தில் பதித்து முத்தங்களிட்டான். பின் திரும்பிச்சென்று அறையின் மூலையில் அமைதியாக நிற்க முனைந்தான். அவனது கால்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. முதியவர் அழுதுகொண்டிருந்தார். விரல் நகங்களால் நாற்காலியின் மரப்பிசிறுகளைச் சுரண்டினார்.
"டேனியல், உன்னுடைய தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவுற்று விட்டன. கழுகுச்சிறகுள்ள சிங்கம் வெளிவந்து எங்களைக் கிழித்து விட்டுப் போனது. எபிரேயர்களின் சதையைச் சவைத்து விழுங்கி விட்டது அந்த கரியமுடிகள் அடர்ந்தக் கரடி. நான்கு தலை கொண்ட சிறுத்தை, எம்மக்களைக் கடித்துக் குதறி நாலா புறமும் சிதறடித்து விட்டது. இன்னும் இந்தப் பத்துதலை மிருகம் இன்றுதான் எங்கள் தலைக்கு மேலேக் காத்திருக்கிறது. அதுவும் எப்படியும் செய்ய வேண்டியதைக் கனகச்சிதமாக செய்து முடித்துவிடும். நீ சொன்னவை எல்லாம் சரிவர நடந்தேறி விட்டது. என்னவெல்லாம் எங்களுக்களித்தாயோ, கடவுளே! அவை யாவற்றுக்கும் நன்றி!. ஆனால் உன் சொற்களில் நல்லவைகளும் இருக்கின்றன. அதை மட்டும் ஏன் விடுவிக்காமல் இன்னும் கைகளுக்குள் இறுக்கப் பற்றியிருக்கிறாய். உன்னுடையத் தீய்மைகளை உலவ விடுவதில் எந்தக் கரிசனமும் காட்டவில்லை. அதன் பேரழிவுகளில் நாங்கள் காலங்காலமாக வதைப்பட்டோம். இப்பொழுது உன்னுடைய நற்கரங்களை நீட்ட வேண்டியத் தருணம். சொல்! எங்களுக்கு வாக்களித்த உனது மனித குமாரனின் வருகை எங்கே!..
"ஜான், ம்ம்! மீண்டும் வாசி!
மூலையில் நின்று கொண்டிருந்தவன் விளக்கினருகில் வந்து, திரும்பவும் டேனியலின் தீர்க்கதரிசனக் கையேட்டை எடுத்து விரித்தான். ஆனால் அவனது குரல் தனது குருவினைப் போலவே சற்றுக் கடுமையானதாக இருந்தது.
"நான் திரும்பவும் இரவின் இருளினுள் ஊடுருவுகிறேன், இதோ, மனிதகுமாரன், மேகங்களுக்கிடையில் இருந்து இறங்கி வந்து எங்களை அணுகுகிறான். முன்பு எங்கோ பார்த்த அதேப் பழைய முகம். எங்களுக்கு பரிட்சயமான அதே மனிதன் அவன். பூமியின் அரசாட்சியும், மாட்சிமை பொருந்திய அதன் மகிமையும் அவனுக்கு வழங்கப்பட்டது. எல்லா மக்களும், வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்த ஆண்களும், பெண்களும், பெரியவர்களும், குழந்தைகளும் தலை தாழ்த்தி மண்டியிட்டு அவனை வணங்கினர். அழியாத, அழிக்கவும் முடியாத, ராஜ்ஜியம். தேவனின் காலாதீதமான சொர்க்க ராஜ்ஜியம் பூமியில் பிரஸ்தாபிக்கப்பட்டது."
மடாதிபதியால் தாங்க முடியவில்லை. பலக் காலங்களாய் நிகழ்வுகளை அசை போட்டு அது ஒரு நிதர்சனமான உண்மை நிகழ்வு போலவே அவர் முன் அலையிட்டது. நடுங்கிக் கொண்டே எழுந்து முன்னே வந்தவர் நிலைகுலைந்து சரிந்தார், பின் கைகளால் நிலத்தில் ஊன்றி கீழே விரிப்பில் வைக்கப்பட்டிருந்த டேனியலின் தீர்க்கதரிசனப் பிரதியை, எண்ணங்களின்று முத்தமிட்டார்.
நீ! எங்களுக்கு சத்தியமளித்த மனிதகுமாரன் எங்கே! உன் வாக்கினைக் காப்பாற்றூவாயா! இல்லை எல்லாம் பொய்ப்பிதற்றலா! அது உன்னால் முடியாது. உன் வாக்கின் சொற்களின் சாசுவதம் அழியாதது. நிச்சயமாக! என்று அப்பிரதியை கைகளில் எடுத்து வானத்தை நோக்கி ஆட்டி மகிழ்ந்தார். அவரது அனாயசமனக் குரலின் பிரவாகம் அரங்கினுள் எதிரொலித்தது.
"அவனே எங்களை ஆள்பவன், எங்களின் அரசாட்சி, மாட்சிமை, பொறுப்பு அனைத்தையும் அவனே ஆள்பவன். அவனது ராஜ்ஜியம், தேவனின் ராஜ்ஜியம், சொர்க்கத்தின் ராஜ்ஜியம். அழிவே அடையாத நித்தியமானக் கடவுளின் ராஜ்ஜியம்."
திறந்து வைத்திருந்த அதன் பக்கங்கள் காற்றில் படபடக்கின்றன. அசைவே அற்று முதியவர் ஜன்னல் வழியே இருளின் துணுக்குகளை அலசுகிறார். அவரது விழிக்கோளங்கள் அதனுள் எதையோத் தேடுவது போலச் சுழல்கின்றன.
நல்லது! எங்கே அந்த மனிதகுமாரன்! அவர் திரும்பவும் வெளியைப் பார்த்துக் கதறினார். ஒரு கூகையின் குழறல் தவிர்த்து எந்த எதிரொலிப்புமில்லை.
அவன் உனக்கானவல்ல! எப்பொழுதும் எங்களுக்கானவன்! எங்களின் அரசன்! ஏன் இன்னும் உனது அரசாட்சியை, ராஜ்ஜியத்தின் பொறுப்பை அவனுக்கு அளிக்காமல் இருக்கிறாய். நாங்கள் இஸ்ரவேலத்தின் மக்கள் இம்மொத்த பிரபஞ்சத்தையும் ஆளப் பிறந்தவர்கள். நாங்கள் தலைஉயர்த்தி வானத்தை அண்ணாந்து உற்று நோக்குகிறோம். எங்கும் வருகையின் சிறு நிமித்தம் கூட இல்லையே!
எப்பொழுது? எப்பொழுது?
அங்கே நீ ஓய்வெடுக்கிறாயா? உன் யாழினை மீட்டிக் கொண்டு நித்திரையில் அமிழ்கிறாயா? எனக்குத் தெரியும் மனிதனின் ஒரு நொடி, உனக்கு ஒரு வருடம். ஆனால் நீ மனிதனின் காலத்தை அல்லவா அளந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும். ஒரு கடவுளாக உன் நியதி அதுவாகத்தானே இருக்கவேண்டும். ஆனால் எதுவும் நிகழவில்லை. மேகங்களற்ற வானத்தில் எந்த அணக்கமுமில்லை. கிழவர் புலம்பிக் கொண்டே இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக