வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -43

   


     எழுந்து நின்றவரின் கால்கள் இன்னும் தொய்வுற்றிருந்தது. சன்னலின் வழியே வெளியைப் பார்த்தவர், கிராதியில் கைகளால் உந்தினார். தன்னை உந்தி உந்தி நின்ற இடத்திலேயே அசைந்து கொண்டிருந்தார். சிறுவன் அவரைத் தாங்கிப் பிடிப்பதற்காக விரைந்து அருகில் சென்றான். பார்வையினாலேயே அவனை விலக்கி இன்னும் கோபத்துடன தன்னை உந்தினார். தன் முழு சக்தியையும் இழுத்து இருளை நோக்கினார். கீழும் மேலும் இருள் மட்டும் நிறைந்திருந்தது. வானில் மின்னல் பொசுங்கிக் கீச்சியது. அதன் ஒளிச்சிமிட்டல்கள் மடாலயத்தின் பக்கவாட்டில் விழுந்து, இடி முழக்கங்களாய் உருமாறின. வானம் இன்னும் சொட்டி அடங்கவில்லை. அடங்காத காற்றில் பேய்க்கற்றாழைகள் ஒடிந்து சரிந்து கிடக்கின்றன. தூரத்தில் இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்திருக்கும் கள்ளிச்செடிகள் பார்ப்பதற்கு வானத்தை நோக்கி கை உயர்த்தி நிற்கும் தொழு நோய்க்காரனின் மொன்னையானக் கைகளைப் போல இருந்தது.

    அழுத்தம் கூடிக்கொண்டே செல்கிறது. கிழவரின் ஆன்மாவும், உடலும் காற்றின் பதற்றத்தில், கிடுகிடுக்கிற்து. ஏதோ வலுத்த ஊளை வெகுதூரத்தில் இருந்து காற்றின் பாதையில் அவருக்குக் கேட்கிறது. தொலைவில் ஊன் மிருகங்கள் பயத்திலும், பசியிலும் கதறுகின்றன. பாலைமணல் புரளும் முடிவடையாக் கூச்சல் அதனுடன் இணைந்து அது அந்த பாலைவனமே ஒரு பசியில் வாடி நிற்கும் மிருகம் போல உருமாறுகிறது. காற்றின் தோலினை உடலாகக் கொண்டு, தழலாடும் மயிரிழைகள் சிலிர்க்க தூர தூரத்திலிருந்து மணல் கும்பாரங்களாய்க் குதித்துக் குதித்து மடாலயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது அம்மிருகம். திரும்ப அக்குரல்களைக் கவனமாகக் கூர்கிறார். ஏதோ பலமாகத் தன்னுள் மோதியதைப் போல உணர்ந்து கைகளால் நெஞ்சைப் பொத்திக் கொள்ள முயன்று தடுமாறுகிறார். ஏதோ கண்ணுக்குத் தெரியாத உரு அங்கே நுழைகிறது. மேஜையில், ஏழு மெழுகுவர்த்திகளும் ஒருங்கே எரிகின்றன. மஞ்சள் ஒளி நடுமையத்தில் குத்திடுகிறது. அறையினுள் காற்றின் வெறிக் கிரீச்சிடல். அதன் விரல்கள் வலதுபுறம் இருந்த யாழின் நரம்புகளைத் தழுவுகிறது. புரிந்து கொள்ள முடியாத, பிதற்றலின் சங்கீதம், பாலையின் சங்கீதம் இசைகிறது. அனைத்தும் ஏதோ மாயக்கரங்களால் கட்டுப்பாடின்றி அங்கே நிகழ்கிறது. தன்னிலையின்றிக் கிழவர் மூர்ச்சையுற்றுக் கீழே விழுந்தார்.

    சுற்றி முற்றிப் பார்த்தார்! ஜான்! என்னருகே வா! விசனத்துடன் அழைத்தார்.

மூலையிலிருந்து விரைந்து அவரை அணுகினான் அவன்.

    "கட்டளையிடுங்கள் தந்தையே!" அவரது காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான்.

    போ! எல்லாத் துறவிகளையும் அழைத்துவா! இங்கிருந்து செல்வதற்கு முன் எனக்கு சொல்ல வேண்டியது சில இருக்கிறது. ம்ம்...! சீக்கிரம்!

இங்கிருந்து செல்வதா? என்ன சொல்கிறீர்கள் தந்தையே!

    ஜானால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வெளிச்சத்தின் நுனிகளில், கீழே விழுந்து கிடந்த அவரின் உடலின் புறத்தே இரு கரிய சிறகுகள் படபடப்பதைக் கண்டான். நிழலாய்த் தரையில் படர்ந்து துடிதுடிக்கிறது அது.

    நான் போகப்போகிறேன்! அவரது குரல் எங்கோ பாதைகளுக்கு அப்பால் நின்று ஒலித்தது. நீ அதனைப் பார்த்தாய் அல்லவா! விளக்கின் ஏழு ஒளிர்வுகளும் பூதாகரமாய் நிரம்பியது, கண்ணுக்குத் தெரியாத கரங்களால் யாழின் நரம்புகள் அதிர்ந்து சங்கீதம் பெருகியதை. நான் போகப்போகிறேன் ஜான்! சீக்கிரம் செல், சென்று அவர்களைஅழைத்து வா! என் இறுதி வார்த்தைகளை நான் தெரிவிக்க வேண்டும்.

    சிறுவன் அவர் பாதங்களில் மண்டியிட்டு வணங்கி வேகமாக வெளியில் விரைந்தான். எழுந்து நின்ற மடாதிபதி அறைக்கு மத்தியில், ஏழு விளக்கொளிகளும் ஒருங்கேத் தெரியும் இடத்தில் அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றார். இறுதியாக அவர் கடவுளுடன் அங்கு தனித்து விடப்பட்டார். தன் அகத்தினை இத்தருணத்தில் பயமின்றி  வெளிக்கிடலாம், யாரும் கேட்கப்போவதில்லை. தலையை நிமிர்த்தி, உடலை சமப்படுத்தி அசையாமல் நின்று கொண்டார். அவருக்குத்தெரியும் எதிரேக் கடவுள் தனக்காகக் காத்திருக்கிறார் என்று.

    "நான் வருகிறேன், நான் வருகிறேன்," அவர் அவனிடம் சொன்னார். எதற்காக என்னறையில் நீ நுழைந்தாய். எதற்காக உன் மந்திரவித்தைகளை என் முன்னேக் காண்பித்தாய். இவ்விளக்குகளைக் கொளுத்தி, நரம்புகளை மீட்டி இசைத்து, எதற்காக? எப்படியும் நான் வருகிறேன். உனக்காக அல்ல. என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் நான் உன்னிடம் வருகிறேன். அதோ அந்த மேஜை மேல் என் மக்களின் நாட்பட்ட வேதனைகளின், வலிகளின், வதைகளின் புகார்கள் நிரம்ப என்னிடமிருக்கின்றன. நான் உன்னிடம் வந்து அப்புகார்களைக் கூறுவேன். எப்படியும் உனக்கு அது கேட்காது. கேட்காதது போல நீ பாவனை செய்வாய். அது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நான் நீ திறக்கும் வரை உன் கதவுகளைத் தட்டிக் கொண்டே இருப்பேன். (நான் பேசுவதை யாரும் கேட்கப்போவதில்லை, அதனால் எனக்குக் கவலையுமில்லை). கேள்! நீ உன் கதவுகளைத் திறக்கவில்லை எனில், நான் அதை உடைத்துத் திறப்பேன். நீயே ஒரு முரடன் தான். அதனால் என்னைப் போலமுரட்டுத்தனங்கள் செய்யும் போக்கிரிகளை உனக்குப் பிடிக்கும். உன் மைந்தர்கள் பிறகு எப்படி இருப்பார்கள் உன்னைப் போல அல்லாமல். நாங்கள் பணிந்து மண்டியிட்டு எங்கள் தரை நெற்றியில் வீழ எத்தனை தினங்கள், எங்களின் பிரார்த்தனைகளை உன்னிடம் மன்றாடியிருப்போம்,  போதும் இந்த அழுகைகளும், கேவல்களும். எங்களால் இதற்கு மேலும் பொறுமையாக் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. இன்னும் எத்தனைக் காலம் நாங்கள் தாங்கிக் கொண்டிருக்க வேண்டும். போதும். நீ ஒரு முரடன். நாங்களும் முரடர்கள். அதனால் எங்களின் முரட்டு வழியில் என்ன நேர்ந்தாலும், எங்களின் பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படவேண்டும். இப்பொழுதே!

    கிழவர் காதுகளைக் கூர்ந்து கவனித்தார். எப்படியும் பதிலிருக்க வேண்டும். காற்றின் ஊடுவழிகளை இன்னும் இன்னும் எனத் தனக்குள் உருவகித்தார். தூரத்தில் இடிமுழக்கம் கேட்கிறது. மழையின் பல்லாயிரம் அறைதல்களின் ஒழுங்கற்ற அலறல். சுழன்று சுழன்று செல்லும் காற்றின் நிச்சலனமான இருப்பு. பாலையின் பொருளற்ற குழைவுகளும், கூச்சல்களும். அசைவற்று அவரை உற்று நோக்குகிறது ஏழு விளக்கொளிகள். அதைத்தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

    நிசப்தம்! கிழவர் காத்திருந்தார். விளக்கொளிகளின் ஜ்வாலைகள் நடமிடுகிறதா, நரம்புகளின் தந்திகள் அதிர்கிறதா! இல்லை! எதுவுமில்லை! மானிட உடல் சபிக்கப்பட்டது. இல்லை! இல்லை! என்று தலையை அசைத்துக் கொண்டே இருந்தார். ஆன்மாவின் வழிகளில் தடைக்கல்லாய் இந்த உடல்தான் இருக்கிறது. எப்பொழுதெல்லாம் இறைத்துவத்தின் அருகாமையில் செல்கிறேனோ அதன் ஊடுவழிகள் என் புலன்களால் முற்றிலுமாக அடைக்கப்பட்டு விடுகிறது. பின் கண்ணுக்குத்தெரியாத அக்குரலை. ஸ்பரிசத்தை, அழைப்பை எங்கிருந்து தெரிந்து கொள்ள! கடவுளே! என்னைக் கொல்! என் உடலை விடுத்து தூய ஆன்மாவாக உன்னிடம் வருகிறேன். அதுதான் எனக்கிருக்கும் ஒரே வழி! என் சதையை உரித்து வருகிறேன், அப்பொழுதேனும் நீ பேசுவதை நான் கேட்க முடியுமா! விரக்தியும், கோபமும் அவரைச் சூழ்ந்திருந்தது. கால்கள் தரையில் அறைபட நட்டமாக அறையின் நடுவே ஜ்வாலைகளை விழுங்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக