ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -27

     

    

Author: Nikos Kazantzakis

    மனிதர்கள், விலங்குகள், பறவைகளின் ஒருமித்தக் கூச்சல் வெளியில் கலந்தது. காலைச் சூரியனின் பொன் கிரணங்கள், நீள நீளப் பட்டை தீட்டியக் கூர் வாள்களைப் போல வெண் நீல வானிலிருந்து தரையைக் குத்திட்டது. மலைப்பாதைகளில், வரையாடுகளும், செம்மறிகளும் மந்தை மந்தைகளாய், சாவகாசமாக அசை போட்டுக் கொண்டிருந்தன. மேய்ப்பர்களின் குழலிசை, புலன்களில் காற்றின் பசுமையையும், சில்லிடலையும் ஒருங்கே இசைத்தது. தன் வழக்கமானப் பாதைகளில் உலகம் மறுபடியும் துலங்கி அந்த நாள் சிறிது சிறிதாகத் தொடங்கிக் கொண்டிருந்தது.

     இன்னும் சில தூரத்தில் இருந்த ஒரு ஓங்கி உயர்ந்த நெட்டிலிங்க மரம், காற்றின் இசைதலுக்கேற்ப தன்னை ஒப்புக்க்கொடுத்து அசைந்து கொண்டிருந்தது.  வேகமாக வந்த இளைஞன், அம்மரத்தை அடைந்ததும் சற்று நின்றான். அதன் மேட்டிலிருந்து கீழே கானாவின் நிலம் விரிந்து கிடந்ததைப் பார்த்தான். தன் அன்னையின் சொந்த ஊரான கானாவிற்கு அவன் பலமுறை வந்திருக்கிறான். தன் பால்யத்தின், பதின் வயதின் அழியாத நினைவுகள், குதூகலமான அவ்வூரின் திருவிழா நாட்களில், அன்னையுடன் பலமுறை இங்கு வந்திருக்கிறான். இளமையின் லயிப்பில், பதின்வயதிற்கே உரிய குறுகுறுப்புடன் பெண் பிள்ளைகளைக் காண்பதும், மற்றப் பயல்களுடன் சேர்ந்துகொண்டு அவர்களைக் கவர்வதற்காகச் செய்த, கிறுக்குத்தனங்களையும், சாகசங்களையும் நினைத்து சிரித்துக் கொண்டான். அங்கு பள்ளத்தாக்கில் நிற்கும் ஒரு நீண்டுயர்ந்த, பசுமை பொங்கும் ஒரு நெட்டிலிங்க மரத்தின் அடியில் தானும், தன் நண்பர்களும் இசைக்கேற்ப நடனமிட்டு, ஆசை தீரக் கத்திக் கூட்டத்தில், ஆர்ப்பாட்டம் செய்த பொழுதுகளும் அவனுள் வந்து போயின. தன் இருபதாம் வயதில் ஒரு ரோஜாப் பூவைக் கைகளில் வைத்துக் கொண்டு, கலக்கத்துடனும், இன்னதென்றே சொல்ல முடியாத நடுக்கத்துடனும் ஒருத்திக்காக காத்து நின்றதும் அவனுக்கு ஞாபகம் வந்தது.

    அன்று எதிரே தன்னை நோக்கி வந்துகொண்டிருந்த அவளைப் பார்த்தவன், ஸ்தம்பித்து இமைக்காது நின்று கொண்டிருந்தான். தான் ரகசியமாய்க் காத்து வந்த அவளுக்கேயான முத்தங்களின் பெருக்கு உடைந்துருகி, ஒரு நீரூற்று போல அவளைச்சுற்றிக் கமழ்ந்தது. விம்மித்தெறிக்கும் அவளின் மார்புக்குவைகளில், சூரியனும் சந்திரனும் ஒருசேர எழுந்தருளுகிறார்கள். பகலும், இரவும்-ஒளியும் இருளும் ஜொலிக்க அவள் வருகிறாள். என் கைகளிலிருந்த ரோஜா இதழ்கள் அரும்பி அரும்பி வனமானது. அதன் நறுமணத்தின் சுகந்தத்துளிகள், ஒரு பெரும் மழையாய் அவளைச்சுற்றிப் பொழிந்தது. அவள் உடைகளிலெல்லாம் ரோஜாப்பதியங்கள் முளைத்து ஒரு பூவனம் போலத் தத்தி தத்தி வந்துகொண்டிருந்தாள் அவள்.

என்னை விட்டுவிடு! என்னை விட்டு விடு!

    தன் நெஞ்சினில் கைவத்து அழுது கொண்டிருந்தான் இளைஞன். நான் கடவுளுக்கானவன். இங்கு எனக்கிடமில்லை. என்னுடைய சொந்த வலி  மிக்க வழியில் நான் அவனைக் காணச்செல்கிறேன். சட்டென்று தான் நின்று கொண்டிருந்த மரத்தை விட்டு நகர எத்தனித்தான், தூரதூரே, சின்னச்சின்னதாய் ஒரு நூறுக்குடியிருப்புகளும், உயர்ந்த ஒரு தேவாலாயமும் தெரிந்தது. அங்காங்கே வயல்வெளிகளின் சரியான சதுர, செவ்வக அமைப்பிலான நிலத்துண்டங்களில், கோதுமை நாணல்கள் முற்றிச்சாய்ந்திருந்தது. ஊரைச்சுற்றி நீண்டுயர்ந்த நெட்டிலிங்க மரங்களும், சைப்ரஸ் மரங்களும், ஈச்சங்காடுகளும் நெகிழ்ந்து வளர்ந்து செழித்திருந்தன. அருகே வழிப்பாதைகளில் மக்கள் சென்று கொண்டிருக்கும் அரவம். வீடுகளைச்சுற்றித் திருத்திய தோட்டங்களில், வெறும் புள்ளிகளாய் சிவப்பு மிளகாய்கள் பூத்திருந்தது. நிலங்களில் வெற்றுக் கால்களுடன் பெண்களும் ,ஆண்களும் உழைத்துக் கொண்டிருந்தனர். தன் பார்வைக்குத் தெரியும் அவ்வூரை, ஒரு காகிதத்தைச்சுருட்டி மடிப்பதைப் போல நினைவுகளிலிருந்து மடிக்க முயன்றான் இளைஞன். 

    கண்களைத் தாழ்த்திக் கொண்டு எதையும் பார்க்காதவாறு, எதைப்பற்றியும் நினைக்காமல் விரைந்தான். நகரவிடாத இக்கண்ணிகளிலின் அபாயத்திலிருந்து எப்படியாவது தப்பித்துவிடும் உந்துதலில் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தான். அவனைப் பின்தொடர்ந்து பலத்த இரு காலடிகள் விடாமல் துரத்தி வந்துகொண்டிருந்தன.

    முற்பகல் சூரியன் வானில் நிலைத்துவிட்டது. அதன் வெளிச்சத்தில் உப்பு படிந்த முதுகுகாட்டி நிலத்தில் அறுவடை செய்கின்றனர் ஆண்களும் பெண்களும். கோதுமை நாணல்களின் கொத்துக்கள் கையளவுக் குவியல்களாக உருமாறிக் கொண்டிருந்தது. வழியெங்கும் தானியங்களின் வெந்த வாசனை நாசி நிரப்பியது. கோதுமைக் குன்றங்கள் அங்காங்கு குவிந்துக் கிடந்தது. கதிர் அரிவாள்களின் சலசலப்பு, பெண்களின் ஆண்களின் முணுமுணுப்புகளும் வெளியில் நிரம்பின. அவர்களின் உழைப்பு சொஸ்தமாகட்டும், பை நிறையத் தானியங்கள் நிரம்பி மூடை மூடையாக சாகுபடி நடக்கட்டும் என்று வழியில் கடந்து செல்லும் அவன் தனக்குள் வேண்டிக் கொண்டான்.

    ஆலிவ் மரங்களைத் தாண்டிச்செல்லும் பொழுது கானா நிலம் முற்றிலுமாக மறைந்து விட்டிருந்தது. தலைக்கு மேலே இருந்து, இலைகளின், கிளைகளின் நிழல் கூட்டம். முற்பகல் தாண்டியிருந்தது. ஜீசஸ் ஏதோ ஆட்கொண்டது போலத் தனக்குள் மகிழ்ந்திருந்தான். ஒரு சுனை போல அவனில் பெருகும் வியர்வை, அவனது மகிழ்வை இன்னும் கூட்டியது. கடவுளைத் தவிர வேறெதிலும் அவனது அகம் நிலைக்காது பார்த்துக் கொண்டான். கமகமவென அடுமனையிலிருந்து எடுத்து வைக்கப்படும் சூடான அப்பத்தின் வாசனை அவனின் நாசிகளைத் துளைத்தது. பசி ஒரு இனிய அனுபவமாக மாறியிருந்தது. இத்தனை நாட்களும் இப்படி ஒரு புனித ஏக்கத்தினை அவன் அனுபவித்திருக்கவில்லை. இறைவனுக்கான ரொட்டித்துண்டங்கள் நான்! எனத் தன்னை உருவகித்துக் கொண்டான்.

    வாசனை வரும் பாதையினை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தான் இளைஞன். ஒரு பள்ளத்தினைத் தாண்டிக் குதித்து, திராட்சைத்தோட்டத்தின் வேலியையும் தாண்டி உள்சென்றான். அங்கு ஒரு ஆலிவ் மரத்திற்கு கீழே, சிறியக் குடிசை ஒன்று இருந்தது. அதன் கூரைவழி மூட்டமானப் புகை சுழன்று வெளியேறியது. பின்வாசலில் அமர்ந்து ஒரு மூதாட்டி சமைத்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்துதான் வாசனைக் கிளம்பி நிரம்பிக் கொண்டிருந்த்தது. இமைகளற்ற கண்கள், துருத்திக் கொண்டிருக்கும் வளைந்த மூக்கும், பற்களற்ற பொக்கைவாயுடன் இருந்த அவ்வயதானவளின் அருகில், ஒரு நாய் அசமந்தமாக அமர்ந்திருந்தது. தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு அதனுள் தலை புதைத்திருந்தது அது. கருப்பாகவும் நீண்ட வடிவில்லாத அரைவட்டம் போல மஞ்சள் நிறத் திட்டுக்களும் இருந்த நாய்த் தன் கோரைப்பற்கள் தெரிய முகர்ந்து பார்த்தது. பரிச்சயமற்ற வாடையை முகர்ந்ததும் குரைக்கத் தொடங்கியது. அந்த மூதாட்டி அருகே வந்து கொண்டிருக்கும் இளைஞனை அதிசயமாக மிணுங்கும் கண்களுடன் பார்த்தாள். தன் தன்னந்தனிமையை மட்டுமே போர்த்திக் கொண்டு வரும் இளைஞன் அவளின் அருகில் வந்திருந்தான். தன் வேலையெல்லாம் விட்டு விட்டு அவனை வரவேற்க எத்தனித்தாள்.

    வா! மகனே! பசியுடன் இருக்கிறாய்! உன் முகம் பார்த்தவுடனேயே தெரிந்து விட்டது. இறைவனின் பேரருளால் நீ எங்கிருந்து இங்கு வருகிறாய்?

நாசரேத்திலிருந்து வருகிறேன் அம்மா!

    மிகுந்தப் பசியுடன் இருக்கிறாய்! உன் நாசிகள், சிவந்து உணவைக் கண்ட நாயினைப் போலத் துடிக்கிறதே!

ஆம் அம்மா, மன்னித்து விடுங்கள்! நான் பசியுடன் இருக்கிறேன்! 

    ஆனால் அந்த மூதாட்டியால் அவன் சொல்வதை சரியாகக் கேட்க முடியவில்லை.

என்னப்பா?

அவன் இன்னும் சத்தமாகச் சொன்னான்.

    என்னை மன்னிக்கவும். நான் தாளமுடியாப் பசியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன்.

    உன்னை நான் மன்னிக்க வேண்டுமா! எதற்கப்பா! பசிக்கிறது என்று சொல்வதில் என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கிறது. என் அன்பு மகனே! பசியும்! தாகமும்! அன்பும்! இறைவனின் விளி! அதற்காக எப்பொழுதும் வெட்கப்படாதே!

    வாய் அகலத் திறந்து, கண்கள் பணிக்கச் சிரித்தாள். அவளது பொக்கை வாயில் இன்னும் விழாமல் காத்திருந்த இரு பற்கள் மின்னின.

    இங்கு நீ இந்த மாக்தலேவாவில் இறைவனின் கருணையால், ரொட்டிகளையும், தண்ணீரையும் உனக்கு வேண்டும் வரை உண்ணலாம். சங்கோஜம் கொள்ளாதே குட்டிப்பையா!

    அங்கு வீட்டினுள்ளே காத்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்காக சில அப்பங்களை எடுத்துக்கொண்டவள், இளைஞனைப் பார்த்து, இந்த உணவினை நான் தினமும் சமைகிறேன், வழிப்போக்கர்களுக்காக. அது என்றைக்குமே மிச்சம் ஆனதில்லை. இது உனக்கானது. உனக்காகவேக் காத்திருந்தது. அதனால் சாப்பிடு மகனே!

    அமைதியாக அருகிலிருந்த ஆலிவ் மரத்தின் வேர்மூட்டுகளில் அமர்ந்து ரொட்டித் துண்டினைப் பிய்த்துத் திங்கத் தொடங்கினான். அதன் சுவை, நீரின் குளிர்ச்சி, கூடே வைத்திருந்த ஆலிவ் பழங்களின் சதைப்பற்றான பகுதியைச் சவைத்து மென்றான். புளிப்பும் இனிப்பும் கலந்த அதன் சுவையும் மணமும், தன் உடலும் ஆன்மாவும் இணைந்து அவ்வுணவைப் பங்கிட்டுக் கொண்டிருந்ததைப் போல உணர்ந்தான். பசி எனும் உணர்வின் தெய்வீகத்தையும், புனிதத்தன்மையையும் உள்ளுற அனுபவித்து, திருப்தியாக உண்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக