புதன், 16 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -16

    


    மாடுமேய்ப்பவர்கள் பாதையை விட்டு விலகி நின்றனர். கற்களைக் கைகளில் வைத்திருந்தவர்களில் சிலர் அதை கீழே எறிந்தனர். சிலர் அந்த இளைஞனைக் குறி வைத்து எறியத் தொடங்கினர். கவண்களுடன் தயாராக இருந்த சிறுவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். சிலக் கற்கள் அவன் மேலே பட்டாலும் காயம் ஏதும் உண்டாகவில்லை. ஆனால் இளைஞன் சற்றே தடுமாறினான். கயிற்றினால் முதுகில் இறுக்கியிருந்த சிலுவை வழுக்கி விடாமல் இன்னும் இறுக்கமாக தன் இரு கைகளால் கெட்டியாகப் பிடித்து கயிற்றை வயிற்றில் தன் உடம்பைச்சுற்றி வளையம் போல இறுக்கிக் கொண்டான். அவனது நெற்றி வியர்வை, நாசியிலும், கண்களிலும் வழிந்து எரிச்சலடைய வைத்தது. சிவந்துக் கன்றியிருந்த வலது உள்ளங்கையினால் முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டான். மலை முகட்டில் பசியுடன் வெறிக்கும் நாயின் குரைப்பொலி. தூரத்தில் ஆலிவ் மரங்களின் இலைகளை பல நூறு வெட்டுக்கிளிகள், நரநரவென்று கடிக்கும் சப்தம் மக்களின் சலசலப்பிற்குள்ளும் கேட்டது. அம்மனிதக் கூட்டத்தில் ஒருத்தி மட்டும், தன் ஊதா நிறத் தலைக்குட்டையினால் வாயைப் பொத்திக் கொண்டு, ஒரு சரிவுப்பாதையில் இருக்கும் பாறைக்குன்றில் அமர்ந்து வெம்பி அழுது கொண்டிருந்தாள்.

    இவனை எனக்குத் தெரியும். மேரியின் மகன். இமைக்க மறந்து, திறந்த வாய் மூடாது அந்த இளைஞனைக் கண்டார் பீட்டர். கானாவில் பீட்டரின் வீட்டிற்கு எதிரில் தான் மேரியின் குடும்பமும் இருந்தது. அவளது பெற்றோர்களான ஜோயாச்சிம்மும், அன்னாவும், பீட்டரின் பெற்றோருடன் நீண்ட கால நட்பில் இருந்தனர். யாரிடமும் அதிர்ந்து பேசாத, அணுதினமும் பிரார்த்தித்தும், இறைவனைத் தவிர வேறு எந்த எண்ணங்களுமற்ற அந்த முதியப்புனிதத் தம்பதிகளின் வீட்டிற்கு ஒரு நாள் அந்தக்கடவுளே ஒரு பிச்சைக்காரனைப் போல வந்தார். அக்கம்பக்கத்திலிருந்த அனைவருமே அதனை அறிந்திருந்தனர். பூமியே அதிரும் வண்ணம் அந்த நாள் நிகழ்ந்தது. அன்றிலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து, தன்னுடைய அறுபது வயதில் அந்த மூதாட்டி ஒரு அழகான மகவாக மேரியைப் பெற்றெடுத்தாள்.

    அப்பொழுது பீட்டருக்கு சரியாக ஒரு ஐந்து வயதிருக்கலாம். மொத்தக் கிராமமும் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். ஆண்களும் பெண்களுமாய் அக்குழந்தையின் இனிய வருகையை வரவேற்றுக் களித்தனர். பாலும், மாவும், பேரிச்சையும், தேனும், சிறுபிள்ளைக்கான உடைகளும் என எல்லோரும் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர். பீட்டரின் தாய் தான் அவளின் முதல் தாதியாக, மேரியைக் கையில் ஏந்தி, வெதுவெதுப்பான தண்ணீரில் உப்பிட்டுக் குளிப்பாட்டி, தைலமிட்டுக் கவனித்துக் கொண்டாள். இன்னும் தன் கண்களை விட்டு அகலாத அந்த நாளின் குழந்தை மேரி. அவளின் மகன் இதோ என் முன் பாவத்தின் சிலுவையைச் சுமந்து கொண்டு செல்கின்றானே என்று புலம்பினார். கடந்து செல்லும் ஒவ்வொருவரும் காறி உமிழ்வதையும், கற்களை எறிந்து அவனை விரட்டுவதையும் பார்க்க பார்க்க, பீட்டரால் தாங்க முடியவில்லை.

ஏன்! இப்படி ஒரு துரதிஷ்டமான விதி அவனுக்கு! என்று நொந்து கொள்ள மட்டும்தான் முடிந்தது.

    இஸ்ரவேலின் இறைவன் அவனைத் தான் தேர்ந்தெடுக்கிறான். மேரியின் புதல்வன். அவன் செய்கின்ற சிலுவைகளில் தீர்க்கதரிசிகள் அறையப்பட்டு சாக வேண்டும் என்பது தான் அவனுக்கிட்ட கடைத்தேற்றல் போல. சர்வவல்லமை பொருந்தியவனே! என்னை விடுத்து அவனைத் தேர்ந்தெடுத்தாய்! இல்லையேல் பாவத்தின் கனத்த சுமையினை என் தோள்களில் பதித்துக் கொண்டு நானல்லவா சென்றிருக்கவேண்டும். ஒரு வித நன்றியுணர்வுடனும், தளர்ச்சியுடனும் சென்று கொண்டிருக்கும் இளைஞனைப் பார்த்தான் பீட்டர்.

    சலசலப்புகளுப்பு மத்தியில், மூச்சிறைக்க தச்சன் மகன் சற்று நேரம் நின்று கொண்டிருந்தான்.

    என்னால் முடியவில்லை. நான் சோர்கிறேன். இளைஞன் வாய்க்குள்ளேயே முனுமுனுத்தான். சற்றே சாய்ந்துத் தன்னை சமப்படுத்திக் கொள்ள ஏதாவது பாறையையோ, இல்லை யாரோ முன்னால் இருப்பார்கள் என நினைத்து தலையைத் தூக்கிப்பார்த்தான். ஆனால் தங்கள் முஷ்டிகளை உயர்த்தி கற்களை எறிய நிற்கும் வெறித்த திரளைத்தான் அவனால் காணமுடிந்தது. தனது இருதயம் மட்டுமே அணுக்கித்துக் கேட்கும் சிறகடிப்புகளை நினைத்து பிரயாசைப்பட்டுக் கொண்டான். ஒரு வேளை இப்பொழுதாவது அக்கடவுள் என்னை நினைத்து வருந்தி தன் தேவதைகளின் பரிவாரத்தை பூமியை நோக்கி அனுப்பிவிட்டாரோ என்று கூட மயக்கு தோன்றியது. சற்றே தலை நிமிர்ந்து வானைப் பார்த்தான். கரிய சிறகுகளின் படபடப்பு. காகங்களின் கரைதல் தூரத்து விளியாய் அவன் செவிப்பறைகளில் அறைந்தது.  கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டு, பெருமூச்சு விட்டான். பின் கால்களை சரிப்படுத்திக் கொண்டு முன் நோக்கி செல்ல எத்தனிக்கும் தொனியில் கூர்மையான கற்களை மிதித்தான். நிலை தடுமாறி சரிந்து விடும் கணத்தில் பீட்டர் அவனருகே ஓடிச்சென்று அவன் தோள்களைத் தாங்கினான். முதுகுக்குப் பின்னே கனத்துக் கொண்டிருந்த சிலுவையினைத் தன் சொந்தக் கைகளால் தாங்கி அவனை நிமிர்த்தினான்.

    நான் உதவுகிறேன். நீ முற்றிலுமாக வலுவிழ்ந்து விட்டாய். அமைதியுறு. பீட்டர் இளைஞனை வாஞ்சையோடு நோக்கி, சிலுவையைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டான்.

    இளைஞன் இறைக்கும் மூச்சினை சமன் செய்ய முயற்சித்துக் கொண்டே வெறுமனே அந்த மீனவனை நோக்கினான். ஆனால் அவனால் அச்சூழலையோ, முகங்களையோ அறிந்து கொள்ள முடியவில்லை. திடீரென பாரங்கள் இறங்கி விட்டது போலத் தான் மட்டும் தனித்து விட்டப் பாதையில், தனக்கேயான உலகின் கனவுகளின் ஊடாகத் தான் மிதப்பதைப் போலவும், தன் முதுகுக்குப் பின்னே ஒரு ஜோடி சிறகுகளின் அனாயசப் படபடத்தலால் விண்ணிற்கு பறந்து செல்வதைப் போலவும் நினைத்தான். முகத்தில் படிந்திருந்த வியர்வையையும், ரத்தத்தையும் அழுத்தித் துடைத்துவிட்டு, தீர்க்கமான தன் காலடிகளை வைத்து பீட்டரைத் தொடர்ந்து முன் ஏகினான். 

    தீப்பிடித்தது போல அனல்காற்று சூழலை நிரப்பியிருந்தது. மலை உச்சியில், கற்களும் பாறைகளும் கனலும் வெளியில், சிலுவை நாட்டுவதற்கான குழியைத் தோண்டிக் கொண்டிருந்தனர் அடிமைகள். அவர்களின் நாய்கள் பசியுடன் வெக்கையில் துவண்டு நின்று கொண்டிருந்தது. வியர்வை வடிந்து உடல் முழுதும் தொப்பலாக நனைய, அவ்வடிமைகள் எல்லைகள் வகுத்து கச்சிதமாக ஒரு பள்ளத்தை உருவாக்கிக் கொண்டிருந்தனர். குத்துப்பாறைகளில் கடப்பாறைகள்  அறைந்து விழுவது,  அக்குன்றில், கரியத்தணலினுள் சதா புகைந்து கொண்டே இருக்கும் மர்மத்தின் ஒலியை எழுப்பியது. சற்று திகைத்த நொடி எல்லாம் தலைகீழாக்கமாகி, அவர்களின் புலன்கள் தடுமாற்றமடைந்தன. கடவுள்-மனிதன், உண்மை-பொய், சிலுவை-சிறகுகள், நல்லத்தன்மை-முட்டாள்தனம் என்று இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் உருவாகிய புகை மூட்டத்திற்கு மேலே மேகங்களற்ற நீலம் வியாபிக்கும் வானத்தில் கருஞ்சாம்பல் நிறத் திட்டுகளாய் அங்காங்கே இருள் மண்டியிருந்தது.

    மேரியைப் பார்த்ததும் சில நல்லிதயம் படைத்த பெண்கள் பரிதாபப்பட்டு அழுதனர். முன்னே வெற்றுக்காலுடன், மேலாடை எதுவும் அணியாது செல்லும் தன் மகனை, நாள்பட்ட வேதனையால் மெலிந்த அவன் உடலை, கன்ன எலும்புகள் துருத்திய, தீர்க்கமான அவன் முகத்தைக் கண்டாள். மலை உச்சிக்கு வெகு அருகில் அவர்கள் வந்து விட்டனர். அவனருகே சிலுவையைச்சுமந்து வரும் பீட்டரையும் அடையாளம் கண்டாள். அக்கடைசி தருணத்திலும் ஏதாவது வழி இருக்கும் என்றும், அவர்களைத் தடுத்து விடலாம் என்றும் பதைபதைக்க ஓடினாள். ஆனால் காலம் கடந்து விட்டது. ரோமின் படை முழக்கம், பறையறைந்து கொண்டே வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.  சற்று உயரமான ஒரு மலைக் குன்றில் ஏறி மலை உச்சியை நோக்கினாள். அங்கு தண்டனைக்குரிய எல்லா ஆயத்தங்களும் ஒருங்கு பெற்றுத் தயாராக இருப்பதைக் கண்ணுற்றாள். கவசங்களால் தங்கள் உடல் முழுதும் மறைத்திருக்கும் வீரர்கள், நல்ல திடகாத்திரமான அவர்களின் குதிரைகள். அதன் காலடியில் மண்டியிட்டுக் கதறும் யூத நிலம்.

    தண்டனைக்குரிய அந்தப் புரட்சியாளன் முன்னே வந்து கொண்டிருந்தான். அவனின் இரு கைகளின் மணிக்கட்டுகள் பின்புறமாக இறுக்கி கட்டப்பட்டிருந்தது. அணிந்திருந்த உடை கந்தலாய்க் கிழிந்தும், குருதி தோய்ந்து கருஞ்சிவப்பாகவும் இருந்தது. தோள் வரைப் புரண்டிருந்த செஞ்சாம்பல் நிறக்கேசத்தில் தூசும், மண்ணும் அப்பியிருந்தது.  எந்த அசைவற்று இமைக்காமல் தன் எதிரே நிற்கும் இளைஞனை வெறித்தான்.

    அவனைக் கண்டதும் ஊர் மக்கள் அனைவரும் பெருங்கூச்சலிட்டனர். ஆனால் அவர்களால் அவனை அனுமானிக்கவோ இல்லை அணுகவோ தைரியம் வரவில்லை. மூர்க்கம் நிறைந்த அவனது பார்வையும், அழுந்திப்பதிந்துத் திறவாது சுருக்கங்கள் மேவிய வாயினையும் பார்த்து, அவனுள் என்ன மறைந்திருக்கிறது. ஏதோ பயங்கரமான, ஒப்புமை அற்ற மர்மம் பொதிந்த ஒன்று அவன் அகத்துள் சதா அலைக்கழிப்பதாக உணர்ந்தனர். அது புனிதத்தன்மையா இல்லை சாத்தானா! யார் அறிவார்? அவனைத் தைரியப்படுத்துவதற்காக, வெற்றியின், போரின் பாடலைப் பாட முயற்சித்தார் முதிய போதகர். ஆனால் எந்தச் சொல்லும் அவரிடமிருந்து  எழவில்லை. அதுவொன்றும் அவனுக்குத் தேவைப்படவுமில்லை. தைரியத்தின் நிலையினைக் கூட கடந்துவிட்ட அவனின் எந்தக்கலக்கமுமின்றி எது வந்தாலும் எதிர்கொள்ளும் வகையில் நிமிர்ந்து நின்று கொண்டிருந்த தோற்றம், கட்டுப்படுதலற்ற முழுமையான சுதந்திரத்தைத் தன் கட்டுப்போட்ட கைகளுனுள் பத்திரமாக வைத்திருப்பதைப் போல இருந்தது. சுற்றிக் குழுமியிருந்தவர்கள் எந்த அசைவுமற்று அமைதியாக நின்றனர்.

    அவனைத் தன்  குதிரையின் சேணத்தின் வார்ப்பட்டையில் கட்டி இழுத்துவந்தான் அப்படைத்தலைவன். கிழக்குச்சூரியனின் கூர்மையான வெம்மைக்கதிர்கள் பட்டுப்பட்டு அவனது தோல் கடினப்பட்டிருந்தது. தனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் அவன் யூதர்களை வெறுத்துக் கொண்டிருக்கிறான். பத்து வருடங்களில் எத்தனை யூதர்களை சிலுவையில் அறைந்து கொன்றிருக்கிறான். அடுத்த பத்து வருடங்களில் தண்டனையாளர்களின் வாயினுள் கற்களையும், மண்ணையும் திணித்து அடக்கி ஒடுக்கியிருப்பான். ஆனால் அனைத்தும் வீண். ஒருவனைக் கழுவேற்றினால் வரிசையாகத் தங்களைப் பலி கொடுக்க இவர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். ரோமர்களின் ஏதோ பழங்கால அரசனின் மாட்சிமை பொருந்திய பாடலை அச்சமயம் முனுமுனுத்தான். அவர்களுக்கு பயமில்லை. எதைக்கண்டும், மரணத்தைக் கண்டும் அவர்கள் எப்பொழுதும் பயப்பதில்லை.  மனிதக் குருதியைக் குடிக்கும் அவர்களின் தெய்வங்களின் ஆசி அவர்களின் ஆண் குழந்தைகளின் ரத்தத்தில் உரைந்திருக்கிறது. மனித ஊனைத் திங்கும் பத்துகொம்புள்ள மிருகங்கள் அவர்கள். அவர்களுக்கேயான நீதியின் படி அவர்கள் அனைத்தையும் நிகழ்த்தினர். அப்படித்தான் இப்படைகள் இச்சனங்களை அடிபணிய வைத்தன. மரணத்திற்கு அஞ்சாமை என்பது சாவைக் கடப்பது. சாவற்றவனை யார் தான் வெல்ல முடியும்.

    கடிவாளத்தை இறுக்கிக் குதிரையை நிறுத்தி, சுற்றிக் கும்பலாக நின்ற ஜனங்களை அலட்சிய பாவத்துடன் பார்த்தான். ஒளியிழந்த நொய்ந்த முகங்களும், வீக்கமடைந்து பீளை படிந்த கண்களும், அழுக்குத் தாடிகளும், தூசி படிந்த சாம்பல் நிறத் தலைகளும். வெறுப்பு மேலிடக் காறி உமிழ்ந்தான். இங்கிருந்து  ரோமிற்கு போக முடிந்தால், எப்படி இருக்கும்! இந்த தூசு படிந்த நிலத்தை விட்டு அகல முடிந்தால், அங்கு உடல் முழுக்க நனைத்து திருப்தியான நறுமணக் குளியலையும், அழகான தூயப் பெண்களையும், அரங்குகளையும், கேளிக்கை சதுக்கங்களையும் தவற விடுகிறேனே! இந்த நாற்றம் பீடித்த கிழக்கின் நிலம்! இந்த அவமானகரமான யூதர்கள்!

    ரோமானிய அடிமைகள், சிலுவையை நாட்டிப்பார்த்து குழியின் அளவு சரியாக இருக்கிறதா என்று கவனித்தனர். குழியின் ஓரத்தில் இருக்கும் மணல் பரப்பை இன்னும் ஆழமாக வெட்டித்திருத்தினர். மேரியின் மைந்தன் ஒரு சிறியப் பாறையில் அமர்ந்து அதனைப் பார்த்தான். பின் தான் செய்த சிலுவையினைப் பார்த்தான். இது போன்ற சிலுவைகளில் எத்தனை உயிர்கள் எடுக்கப்படிருக்கும். உயிரற்ற எத்தனைஉடல்கள் வலி என்ற ஒன்றை மட்டும் இறுதிமூச்சாக விட்டு மாண்டிருக்கும். ஒரு இருண்டக் குகையினுள் செல்வதைப் போல அவனது எண்ணங்கள் தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. அலைகள் ததும்புவது போல இளிக்கும் மானுடர்களின் மண்டை ஓடுகளின் பெருங்கடல் அவன் முன்னே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மீட்க முடியா அதன் அலைச்சுவடுகள் அவனது பாதங்களைப் பற்றிக் கொள்ள விழையும் தொனியில் உள் வெளித்தது. அருகிலிருந்த பீட்டர் அவனை இரு முறை விளித்தார். ஆனால் அவனின் பிரஞ்சையில் கரு நீல அலைகடலின் ஓலங்கள், கூக்குரல்களின் மறுதலிக்க முடியாத அலைக்கழிப்புகள்.

    படைத்தலைவன் தலை அசைத்ததும், புரட்சியாளனின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டது. கந்தல் உடையும் உடலிலிருந்து  உறிஞ்சப்பட்டு அம்மணமாக நின்றிருந்த அவனை நோக்கி ஆதுரத்துடன் கைகள் நீட்டி மாக்தலேனா ஓடி வந்தாள். பதைக்கும் அவளது விழிகளை நோக்கி அவன் கையசைத்துத் தடுத்தான். ஒரு நிமிடம், கால்கள் தளர்வுற்று நின்ற இடத்திலேயே மூச்சிரைக்க உட்கார்ந்து கொண்டாள். ஒரு முதிய பெண்மணி, திடூமென அழுந்தி வெளித்தள்ளிய காற்று வெளியில் உந்தி அவன் முன் வந்தாள். தன் கைகளிலே அவனைத் தாங்கிக் கொண்டு கலங்கிய விழிகளுடன் அவன் கேசத்தை வருடி நீண்ட நேரம் அவனது கைகளில் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். தன் நெஞ்சுக்குழியினுள் அவனைப் புதைத்து மன்றாடுவதைப் போல வெளுத்த வானை உற்றுப்பார்த்தாள். எந்த மாற்றமுமில்லை. எழுந்து திரும்பிப் பாராமல் அவள் முன்னர் எங்கு நின்றாளோ, அதே இடத்தில் அசைவின்றி அமைதியாகச் சென்று வெறுமனே அவனைப் பார்த்தாள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக