சனி, 26 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -45

    

Author: Nikos Kazantzakis

    துறவிகள் ஒருவரை ஒருவர் விசனத்துடன் பார்த்துக் கொண்டனர். தங்கள் குருவை இந்நிலையில்  நேரில் காணும் தைரியம் அவர்கள் யாரிடமும் இல்லை. அவர்கள் தலைக்கு மேலும் கால்களுக்குக் கீழும் நெருப்புக்குளம்புகளின் ராட்சசத் தப்படிகளை உணர்ந்தனர். காலம் ஸ்தம்பித்து நின்றது.

    மடாதிபதி மெல்லத் தன் நலிந்த நோயுற்ற உடலை நகர்த்தி அதிர்வுற நாற்காலியில் அமர்ந்தார். அவரைச் சுற்றி எல்லாத் துறவிகளும் இன்னும் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். அவரது மேஜையில் இருந்தப் பொருட்களை ஒவ்வொன்றாகத் தொட்டுப்பார்த்தார். தனது புனிதக்கோலின் வளைந்த பகுதியை அழுத்தித் தடவினார். பெருமூச்சுகளுடன் திரும்பவும் சொன்னார், துறவிகளே! நம்பிக்கையின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்! அதுவொன்றே நமக்கு வழி! என் காலம் கடந்து கொண்டிருக்கிறது. 

    அவரது தவிப்புகளின் குரல் அடங்குகியது, தன் சிறகுகளே அவரைப் பிணைக்கும் சங்கிலிகளாக உருமாறுவதைப் போல உடலை மேலும் மேலும் குறுக்கிக் கொண்டார். இன்னும் உதடுகளில் சொற்களின் மிச்சம் இருந்தது. அதை உதிர்க்க பலம் கொள்ளும் மட்டும் தொண்டையைக் கமுறினார். விழிப்பாக இருங்கள்! இரவும் பகலும் உங்கள் ஆன்மாவிற்கு ஒளியான எண்ணங்களில் மிகக் கவனமாக இருங்கள். நிலைத்திருங்கள்! பிடிவாதமாக, உங்களுக்கான சிறகுகளை உருவாக்கிடும் வரை!. நான் அவசரத்தில் இருக்கிறேன். நான் கடவுளிடம் சண்டையிட நிறைய விஷயங்களை வைத்திருக்கிறேன். 

"நிலைத்திருங்கள், உங்களுக்கான சிறகுகளை உருவாக்கிடும்வரை"

    இதுவே என் கடைசிச் சொல்! என்று சொன்னவர் மூச்சிறைத்தார். பின் சட்டென கண்கள் விரிந்து சிமிட்டினார். மூச்சின் வேகம் குறைந்துக் குறைந்து குறைந்து நின்றது. கண்கள் மூடியிருந்தன. கழுத்து அசைந்து தொங்கியது. அதன் எடை தாளாமல் உடலே முறிந்து விழுவது போல, நேராகக் குத்திடுச் சரிந்தது. சட்டென எடை கூடியது போல, நாற்காலி நகர்ந்து தரையில் குப்புற விழுந்தார். கைகளில் வைத்திருந்த புனிதக்கோல் சரிந்து அவரது வலதுபுறம் விழுந்தது. அருகிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். நிதானிக்கும் முன்னே எல்லாம் நிகழ்ந்துவிட்டது. ஹிப்பாக்குக்கும், இன்னொரு துறவியுமாக அவரைத் தூக்கி மெல்ல நாற்காலியில் அமர்த்தினர். முகம் கோணியிருந்தது. கீழே தலைகுப்புற விழுந்ததில் நாடி கிழிந்து ரத்தம் வழிந்தது. அதை ஒரு துணியால் ஒரு துறவி துடைத்தார்.  நொய்ந்த அவ்வுடல் ஒரு பை போல இருப்பதாகத் தோன்றியது. உள்ளே எலும்புகளற்ற சதைப்பிண்டம் போலவும் இருந்தது. ஆனால் கைகளால் மெல்ல அவருடலை நிமிர்த்தி, சாய்த்து வைத்ததும் எல்லாம் சரியாக இருந்தது. அவர் உடுத்தியிருந்த வெள்ளை அங்கி, திறந்து மேல் உடம்பு தெரிந்தது. குழிந்த மார்பும், விலா எலும்புகளும், உள்ளொடுங்கிய வயிறும் வெளித்தெரிந்தது. ஆனால் துறவியர் அனைவரது கண்களும் அதில் ஆறாத தழும்புகளாக இருந்த கசையடிகளின் சுவடுகளைப் பார்த்து வெறித்தன. தனது குருவை அப்படி ஒரு கோலத்தில் பார்த்ததும், ஜானால் தாங்க முடியாமல் நரம்புகள் அதிரக் கழுத்திழுபட அழுதான். ஆனால் எல்லோரிடமும் அவர்கள் எதிர்பார்த்த ஒன்றே நிகழ்ந்தது என்பதினால் பெரிய அதிர்ச்சிகளில்லை. பின் சடங்குகளின் மூலம் அவரை சொஸ்தப்படுத்தி நித்தியத்துவத்தில் இருத்திவிடலாம் என்பதால் அவருடலை எப்படிக் கையாள்வது என்பது மட்டுமே அவர்களின் கவலையாக அப்போதைக்கு இருந்தது.

    அருட்தந்தை ஹிப்பாக்குக், அவரது நெஞ்சினில் கை வைத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்.

    அவரது அழைப்பு வந்து விட்டது, சென்று விட்டார், என்று சொன்னார் மற்றுமொரு துறவி.

    இரு நெருங்கிய நண்பர்கள் பிரிகிறார்கள். உடல் மண்ணுக்கும், உயிர் கடவுளுக்கும் செல்கின்றன. 

    அவர்களில் சிலர் உள்ளே சென்று வெந்நீர் எடுத்து வந்தனர். மெல்லியப் பஞ்சு போன்றத் துணியை எடுத்து அவரை அணுகினர். சட்டென அவரின் கண்கள் திறந்தன. கலங்கலான விழிகள் எந்த நோக்குமற்றுப் பார்த்தது. சுற்றி நின்ற அனைவரும் பயந்து சடாரென்று விலகினர். ஹிப்பாக்குக் மறுபடியும் அவரது நெஞ்சில் கைவைத்துப் பார்த்தார். இதயம் துடிக்கிறது. சாகவில்லை. அவர் தன் நீண்ட குச்சியானக் கை விரல்களை ஆட்டுகிறார். அனைவரின் முகமும் திகிலடைந்திருக்கிறது. அவர்கள் அத்தருணத்தை எதிர்பார்க்கவில்லை.

    ஹிப்பாக்குக், புதியவனை நோக்கினார். அவன் வேகவேகமாக முதியவரின் கால்களில் மண்டியிட்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

    ஜான், நீ வேகமாகச் செல்லும் ஒரு ஒட்டகத்தை எடுத்துக் கொண்டு சீக்கிரம் நாசரேத்திற்குச் செல். அந்த முதியத்துறவியை இங்கு அழைத்துவா. அவரால் இவரைக் குணப்படுத்தமுடியும். காப்பாற்ற முடியும்.ம்ம்...சீக்கிரம்!  மழை நின்று விட்டது, இன்னும் வெளிச்சம் இருக்கிறது.

    மேகங்கள் முற்றிலுமாக மறைந்து வானம் நீல வெளியாய் ஒளிர்ந்தது. பூமியின் எல்லா இண்டு இடுக்குகளும் கழுவி விட்டது போல பளீரென்று காட்சியளித்த்து. பசுமையின் துளிர்ப்புகள் அங்காங்கே புதர்களுக்குள் இருந்து எட்டிப்பார்க்கின்றன. இரு கிளிகள் மடாலயத்தைச் சுற்றி வட்டமிட்டுப் பறக்கின்றன. பின் ஒரு பாறையில் அமர்ந்து சிறகுகளை அலகுகளால் நீவி விடுகின்றன.

    கண்களைத் துடைத்துகொண்ட ஜான், தன்னை நிலைப்படுத்த முயன்றான். ஆனால் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது அவன் தேகம். ஒருவாறு தன்னை உதறிக் கொண்டு சகஜ நிலைக்குத் திரும்பியவன். படிகளில் கீழே இறங்கி நேராக மடாலயத்தின் பின்புறம் இருக்கும் ஓட்டக மந்தைக்கு சென்றான். இடப்புறம் இருந்த இருப்பதிலேயே இளமையும், வேகமும் கொண்ட ஒரு பெண் ஒட்டகத்தில் சேணம் பூட்டுவதற்காக அதை அதற்றும் வகையில் குரல் எழுப்பினான். குந்தி அமர்ந்த அவளின் முதுகில் சேணத்தைக் கட்டி இறுக்கினான். சற்று அசைந்து கொடுத்த அதன் கழுத்துப்பகுதியைத் தொட்டுத் தடவி மெல்ல அமர்ந்து கொண்டான். அது தன் திடமானக் கால்களை ஊன்றி, நாசரேத் நகரை நோக்கி விரையத் தொடங்கியது.

    ஜென்னசரேட் ஏரி, இரவு முழுதும் பெய்த மழையின் நீர்மையினால் பொலிந்திருந்து. காலை ஒளியின் மினுக்கம். கரைகளில் படிந்திருந்த சேற்றுக்குழைவுகளை மழை நீர் ஓடைகள் மொத்தமாய்த் துடைத்திருந்தது. சாம்பலும் கருப்பும் கலந்த சதுப்புப் பகுதிகளில், நீர்ச்செடிகளின் பசுமை. சூரிய ஒளியில் வியாபித்திருக்கும் ஏரியின் திரவமிணுக்கம். நிறங்கள் ஒன்றுடன் ஒன்று முயங்கிக் கொண்டிருந்தன. கரையில் பச்சையுமாய்த் தெரியும் அதே நீர் தூரத்தில் நீலமாகவும் இன்னும் வெகுதூரத்தில் கருமையாகவும் தெரிந்தது. சில மீனவர்கள் தங்கள் படகுகளைச் சற்று சரிவானக் கரையிலிருந்து ஏரியினுள் தள்ளிச்செல்கின்றனர். சிலர் ஏற்கனவே ஏரியினுள் படகோட்டிக் கொண்டே அதன் வெவ்வேறான திசைகளை நோக்கிப் போயினர்.  அவர்கள் தங்களின் வலைகளை நீரினுள் விரித்துக் காத்துக் கொண்டிருந்தனர்.

    மேற்புறம் மென் சிவப்பும், அடிப்புறம் வெள்ளையும் கலந்த உப்புக்கொத்திப் பறவைகள் கூதூகலத்துடன் நீரின் மேற்பரப்பில் சிறகடிக்கின்றன. கரிய நிற நீர்க்காகம் ஒன்று பாறையில் அமர்ந்து சிறகுலர்த்துகிறது.  அது தண்ணீரின் சுழிவுகளையே தன் உருளைக் கண்களால் பார்க்கிறது. மேற்பரப்பிற்கு வரும் மீனைப் பிடிக்கும் லாவகத்துடன் கழுத்தையும், கால்களையும் குறுக்கித் தயாராக அமர்ந்திருக்கிறது. நீரலைகள் பாறைகளில் மோதி நுரை ததும்புகிறது. ஏரியின் கரையைத் தாண்டியவுடன் கார்பெர்னாம் தொடங்குகிறது. பெரும் நீர்வெளியைத் தாண்டி தூரத்தில் நிலம் தெரிகிறது. விடியலில், ஒரு நீர்க்கோழியைப் போல அக்கிராமம் கழுத்து நீட்டிப் பார்க்கிறது. பறவைச்சிறகடிப்புகள், கழுதைகளின் கனைப்புகள், கன்றுகளின் விளிகள் என்று கலவையான சப்தங்களின், பொருளற்ற சலசலப்புகளின் ஊடே ஆண்களின், பெண்களின் குரல்களும், சம்பாஷைனகளும் காற்றில் குழுமுகின்றன.

    ஏரிக்குள், சற்று மேடாய் இருந்த திட்டைத்தாண்டி, பத்து பேர் கொண்ட மீனவர்க்குழு படகுகளை இழுத்து வந்து கொண்டிருக்கிறது. மீனவர்களுக்கான சங்கீதப் பாடலைப் பாடிக் கொண்டே கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கும் பாதையின் வழியே, எடை கொண்ட வலைகளை லாவகமாக இழுத்துக் கொண்டு கரையை நோக்கி வருகின்றனர். கரையில் நின்று கொண்டு சத்தமாக கட்டளைகளிட்டுக் கொண்டிருந்தார் முதிய செபெதீ. நாகரீகமான முறையில் தந்திரமாகச் செயல்படும் அவர்களின் முதலாளி. எப்படியென்றால், அவர் தன் வேலையாட்களைத் தன் மகனைப் போல நடத்துவார். அது அவர்கள் மேல் அன்பும் , பாசமும் கொண்டவர் போலத் தெரியும். ஆனால் அவர்களை ஒரு நொடி கூட ஓய்வெடுக்க விடாமல் வேலை வாங்குவார். இரவு விடாத மழையிலும் அடாது உழைத்த அவர்கள் தங்கள் நாளுக்கான அதிகப்படியான வேலையைச் செய்துவிட்டனர். ஆனால் முதியவர் அவ்வாறு அவர்களை எளிதாக விடுவதில்லை.

    வெள்ளாடுகளும், செம்மறிகளும் மந்தைகளாகக் கடந்து செல்லும், மணிகள் கிலுங்கும் ஓசைக் கேட்கிறது. சுற்றி நாய்களின் குரைப்புகள். யாரோ விசிலடிக்கிறார்கள். மீனவர்கள் விசில் வந்தத் திசை நோக்கிப் பார்க்கின்றனர். முதிய செபெதீ, அங்கே முன்னே விரைகிறார். பிலிப்பும், அவனது உறவினர்களும் தங்கள் மந்தைகளை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அப்பொழுதுதான் வேலை துவங்குகிறது. சற்று அவசரத்துடன் செபெதீ ஓட்டமும் நடையுமாக மேலே சென்று கயிற்றினைப் பிடித்து இழுத்துத் தன் வேலையாட்களுக்கு உதவ முயல்கிறார்.

    மீனவர் கூட்டம் கிராமத்திலிருந்து வந்து கொண்டே இருக்கிறது. அவர்களின் சிக்கலெடுத்து உலர்த்திய வலைகளைப் படகுகளில் வைக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து வரும் அவர்களின் மனைவிகள் அன்றைக்கான அறுவடை பற்றிய நோக்கத்துடன் நெற்றி மேல் கைகளை வைத்து, சூரிய வெளிச்சத்தில் ஏரியை உற்றுப் பார்க்கின்றனர். சிறியதும் பெரியதுமான படகுகளில், வெவ்வேறு  மீனவர் குழுக்கள் அவர்களின் துடுப்புகளை இழுத்து ஏரிக்குள் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு இரண்டு மூன்று அடிகளுக்கும் தங்கள் கைகளில் வைத்திருந்த வறுத்த ரொட்டியைக் கடித்துக் கொண்டும், உப்பு வீச்சத்தை சுவாசித்துக் கொண்டும், வேகமெடுகின்றனர். ஒரு பாறையில் ஏறி செபெதீயைப் பார்த்துத் திரும்பவும் விசிலடித்தான் பிலிப். அவன் அவருடன் பேசுவதற்காக நின்று கொண்டிருந்தான். ஆனால் அவனின் வருகை உண்மையில் செபெதீக்கு எரிச்சலைக் கிளப்பியது. 

"தலைக்கு மேலே வேலை இருக்கிறது, பிலீப்! வேறு எங்காவது போ!" என்று தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டு வாயைப் பொத்தி அவனை விரட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக