சனி, 26 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -47

 

    சிரித்துக்கொண்டே தான் தத்தெடுத்த பிள்ளைகளைப் பார்த்தார். "உயிர்ப்புடன், பெருமையாக கால்களை முன்வைத்து உழையுங்கள் என் பிள்ளைகளே! அப்பொழுதுதான் திருப்தியாக நாம் நம் உணவை உண்ண முடியும். பார்! சூரியன் மேலெழும்பி வானை நிறைத்துவிட்டான். இன்னும் நாம் எதையும் முடிக்கவில்லை.

    பிலிப் அங்கிருந்து நகர்ந்து தன் மந்தைகளை நோக்கி விரைந்தான். ஒரு கழுதையின் கனைப்பொலி அவன் காதில் விழுந்தது. ஏரியின் கரையைத் தொட்டு இணையாகச் செல்லும் நேர்ச்சாலையில் ஒரு கழுதை பொதிசுமந்து கொண்டு பையப்பைய வருகிறது. அதன் பின்னே ஒரு தடியன் தன் மேலங்கியைக் காற்றில் பறக்கவிட்டு, ஒரு குச்சியால் அதை விரட்டிக் கொண்டே அவசர அவசரமாக வெற்றுக்காலுடன் ஓட்டமும் நடையுமாக வருகிறான்.

    பார்! அவன் தான் அந்த சாத்தான் மண்டையன், யூதாஸ் இஸ்காரியெட் வந்துவிட்டான். பிலிப் உரக்கக் கூவினான். தன் துரட்டிக் கம்பைத் தரையில் ஊன்றிக் கொண்டு அவன் வருகையை எதிர் நோக்கினான். கிராமம் முழுதும் அலைந்து திரிந்து, லாடம், வெட்டுக்கத்தி என்று வேண்டியவற்றை நம் ஜனங்களுக்கு செய்து கொடுப்பது அவன் தொழில். ஆனால் முரட்டுப்பயல். முடிந்தவரை, மக்கள் மண்டையைக் கழுவிவிடுவான். உண்மையில் சுற்றுவட்டாரத்தில் அவனைப் போலத் திறமையானக் கொல்லன் கிடையாது. அவனது முரட்டுத்தனமும், எதிலும் உடன் போகாதப் பிடிவாதக்குணமும்தான் ஒருவித பயத்தையும், வசீகரத்தையும் அவனிடம் உண்டாக்குகிறது. பாம்பினைப் பார்ப்பதைப் போல. என்று நினைத்துக்கொண்டவன். வரட்டும்  என்ன சொல்வதற்காக இன்று வருகிறானோ என்று மனதிற்குள் ஆரவாரித்தான்.

    ஒரு கொள்ளை நோய் போல வருகிறான், அவனது தாடியைப்பார். அது எனக்குப் பிடிப்பதேயில்லை. அது அவனது முதுபாட்டன் காயினை எனக்கு நினைவுபடுத்துகிறது. முதிய செபெதீ, தன் சுருங்கியக் கண்களால் அவனைப் பார்த்தார்.

    இந்த அதிஷ்டமற்ற முரட்டுப்பயல் இதுமியாவின் பாலை நிலத்தில் பிறந்தான். இன்னும் சிங்கங்கள் உலாவும் பிரதேசம் அது. அதனால் அவனிடம் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளக்கூடாது. பொத்திக்கொண்டு நிற்போம் என்ற பிலிப், அவனை நோக்கி விசில் அடித்தான்.

    வா! யூதாஸ்! உன்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி. இங்கே அருகில் வா! உன்னை சரியாகப் பார்த்துக் கொள்கிறேன்.

    யூதாஸ் அவர்களைக் கண்டதும், நிலத்தில் காறி உமிழ்ந்து விட்டு, வெறுப்பானப் பார்வையுடன் அருகில் வந்தான். அவனுக்கு அந்த இருவருமையேப் பிடிக்காது. ஒட்டுண்ணிப்பயல்கள் என்று நினைத்துக்கொண்டான். இருந்தும் தான் ஒருக் கொல்லன், எனவே எதாவது தேவையிருக்கும் என்று எண்ணிக்கொண்டே அவர்களை அணுகினான்.

    என்னாயிற்று, நம் வயல் வெளிகளில், கிராமங்களில் என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று அவனிடம் வினவினான் பிலிப்.

    தன் கழுதையின் வாலைப்பிடித்து நிறுத்தியவன். அவர்களைப் பார்த்து வெறுமனே நகைத்தான். ஒன்றுமில்லை. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இறைவனின் திருநாமத்தின் பெயரால், எல்லாம் வெகுசிறப்பு. நம் கடவுள் தான் எத்துணைக் கருணையுடன் நம்மிடம் நடந்து கொள்கிறார்.

    நாசரேத்தில் நம் தீர்க்கதரிசிகளைச் கிலுவையில் அறையவிட்டுக் காவு கொடுப்பார். இங்கே கிராமங்களில் வெள்ளத்தைத் தருவித்து, நம் ஜனங்களின் அடிமடியில் கைவைப்பார். அவர்கள் பசித்து சாக ஆசிர்வாதங்களை அருள்வார். உனக்குக் கேட்கவில்லையா, அவர்களின் அலறல்களும், புலம்பல்களும். பெண்கள் நிலத்தில், அதன் சதுப்புகளில் சிதறிக்கிடக்கும் எஞ்சியத் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். தன் பிள்ளைகளுக்கு ஒரு அப்பன் இதை விட என்ன செய்துவிடமுடியும்.

    கடவுள் எதைச் செய்தாலும் நன்மைக்கே, செபெதீ அவனை மறுதலித்தார். இப்பேச்சுகள் எரிச்சலூட்டுகிறது.  நாம் செய்ய வேண்டிய வேலைகளைத் தடுத்து நம்மை முடமாக்குகிறது. எனக்கு அவர் மேல் முழு நம்பிக்கை உண்டு, என்ன நிகழ்ந்தாலும். உலகில் உள்ள எல்லோருமே மூழ்கி நான் மட்டும் பிழைத்தாலும், இல்லை நான் மட்டும் மூழ்கி உலகில் உள்ள எல்லோரும் பிழைத்தாலும் எனக்கு ஒன்றுதான். கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார் என்றுதான் நான் நினைப்பேன். இரண்டும் இரண்டும் நான்கு என்ன!

    அவரது ஜாலங்களைக் கேட்டுக்கொண்டிருந்த செந்தாடிக்காரன், தான் வாய்க்கும் வயிற்றிற்கும் பிழைக்கும் தொழிலாளியாக இருந்ததை இக்கிழவன் எப்படி மறந்தான் என்று நினைத்துக் கொண்டான். இன்று இம்மக்களை நம்பியே இவன் பிழைப்பு. அவர்களின் உழைப்பை இவன் கூலியாக்கி வாழ்கிறான். இதில் இந்த பம்மாத்து உத்திகள் வேறு, இந்த மனநிலை தான் இவர்களின் ஆகப்பெரிய சுமை. அதைத்தான் முதலில் ஒழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான். 

    உனக்கு நம்பிக்கை இருக்கும், செபெதீ! ஏனென்றால் எல்லாம் வல்ல இறைவன் நீயும், உன் குடும்பமும் படுப்பதற்கு சொகுசான படுக்கைகளை அளித்திருக்கிறான். உனது வழிபாடு உனது ஐந்துப் படகுகளுடன் தான். அதைவைத்துத்தான் நீ இறைவனின் செயற்கரிய செயல்களைச் செய்கிறாய். நீ எப்படியும் ஐம்பது அடிமைகளை வைத்திருப்பாய். அவர்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு உணவிட்டு போஷித்து வளர்ப்பாய். அப்பொழுதுதானே அவர்களும் வலுவுடன் உனக்காக உழைப்பார்கள். இல்லையென்றால் பசியில் அவர்கள் இறக்கவேண்டியதுதான். அவர்களின் உழைப்பின் மிகுதியால், உனது எஜமானன் தனது கருவூலத்தில், பொருட்களையும், பணத்தையும் மிகுதியாக நிறைத்து உன்னை மகிழ்விப்பான். அதனால் நீ சொல்லலாம்! "கடவுள் மகிமையானவர்! எனக்கு நம்பிக்கையுண்டு", இந்த உலகம் மகிழ்ச்சிகரமானது, நான் நம்புகிறேன் இது எப்பொழுதும் மாறாது" என்று. 

    நம்மை விடுவிப்பதற்காக, மற்ற நாளில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டானே! நம் புரட்சியாளன், அவன் எதற்காகத் தன் உயிரை விட வேண்டும். நம் விவசாயிகள் வருடம் முழுதும், ராவும் பகலும் கண்ணும் கருத்துமாய்ப் பேணிய அத்தனை உழைப்பும் ஒரு நாள் இரவில் நாசமாகப் போய்விட்டது. ஜனம், தரையில் உருண்டும் புரண்டும் கொண்டிருக்கின்றனர். மிச்ச மீதி தானியங்களையாவதுக் காப்பாற்றிக் கொள்ள. அவர்களுடமெல்லாம் உனக்கு எந்தக் கேள்விகளுமில்லை. அவர்களின் கோபங்கள், வதைகள், வலிகள், வருத்தங்கள், ஆற்றாமைகள் அதைப்பற்றியெல்லாம் உனக்கு எந்தக் கவலையுமில்லை. உனக்கு உன் உலகம், உன் தொழில், உன் உழைப்பு. அது பாதிக்காத வரை உனக்குப் பிரச்ச்னையில்லை. உன் கடவுளிடம் நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்வாய்! ஆனால்! ஆனால்!...

    இல்லையென்றால் என்னிடம் கேள்! நான் இந்தக் கிராமம் முழுதும் அலைந்து திரிந்து இங்கு வந்திருக்கிறேன். இஸ்ரவேலத்தின் அழுகுரல்கள் தான் எங்கும் ஒலிக்கின்றன. எதற்காக நாம் இத்தனை வாதைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உனக்கு நீயே என்றாவது கேட்டிருப்பாயா?, செபெதீ!

    உண்மையில் எனக்கு இந்த சிவப்புத்தாடிக் காரர்களிடம் நம்பிக்கையில்லை, முதியவர் பதில் சொன்னார். நீங்களெல்லாம் காயினின் வழிவந்தவர்கள். சொந்தச் சகோதரனையேக் கொன்றவனின் சந்ததி. சாத்தானிடம் போய் சொல், உன் பிரசங்கங்களை. உன்னைப்போன்ற ஒருத்தனிடம் பேசுவதற்கு எனக்கு விருப்பமில்லை.

சொல்லிக் கொண்டு திரும்பியவர் அங்கிருந்து விலகினார்.

    தனது கையில் வைத்திருந்த முள்கம்பால் கழுதையின் முதுகில் ஓங்கி ஒரு அடி கொடுத்தான் செந்தாடிக்காரன். அது தலையைத் திருப்பித் தன் எஜமானனைப் பார்த்தது, பின் நுகத்தினுள் சரியாகப் பொருந்திக்கொண்டு, முன்நோக்கிப் போக உந்துகிறான் என்பதைப் புரிந்து கொண்டு ஓடுவதற்குத் தயாரானது.

    பயப்படாதே, ஒட்டுண்ணிப்பிறவியே! மெசியா வருவார். வந்து எல்லாவற்றையும் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவார். யூதாஸ் கத்திக் கொண்டே ஓடினான்.

    பாறைகளைக் கடந்தவன் திரும்பி பார்த்தான், நமக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இதைப்பற்றி உரையாடுவோம் செபெதீ. எப்படியும் ஒரு நாள் நம் மெசியா வந்துவிடுவார். நிச்சயமாக நுகத்தடியுடன் தான். எல்லாத் திருட்டுப்பயல்களையும் அதற்கதற்கான வழியில் ஒழுங்குபடுத்துவார். உனக்கு மட்டுமில்லை! எனக்கும் நம்பிக்கையிருக்கிறது. திரும்பவும் சந்திப்போம்! நமது தீர்ப்பு நாளில். யூதாஸ் அச்சூழலை விட்டு விலக எத்தனித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக