ஒரு வித படபடப்படனும் வேகத்துடனும் அவன் சிலுவையை செதுக்கிக் கொண்டிருந்தான். அவனின் தோற்றத்தைக் கண்ட அவனது அன்னை என்ன செய்வதென்றறியாது தன் வெளுத்த கன்னங்களில் கை விரல் நகங்கள் பதிய வெறித்து நோக்கினாள்.
திரும்பத் திரும்பத் தன் பிரஞ்சையில் மகனின் நினைவுகள் அலைவுறுவதை நினைத்தாள். ஊன் உறக்கமின்றி வெறுமனே பல தினங்கள் இந்த வானைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். கனவுகளில் சதா அலைக்கழிந்து கொண்டும், இரவும் பகலும் அனாதரவின்றி கிடக்கும் இந்த வெற்று மணற்பரப்பில் கால்கள் ஓய ஓய அலைந்து கொண்டும் இருக்கிறான். எங்கோ எதனுடையதோ கைகளினுள் அகப்பட்டுக்கொண்டு மீள்வதற்காக தத்தளித்துக் கொண்டே இருக்கும் உறக்கமற்ற அந்தக் கண்களைத் திரும்பவும் நினைவு கூர்ந்தாள்.
என்று இந்த சிலுவையைச் செய்வதற்கான உத்தரவு வந்ததோ, ஒளியுமிழும் அவனது தீர்க்கக் கண்களில் பித்து பற்றிக் கொண்டது. ஒரு கிறுக்கன் போலத் தன் உடலும் ஆன்மாவும் தோய அதை உருவாக்குவதில் முற்றிலுமாக அவன் உழன்றிருந்தான்.
கானா நிலத்திற்குள் திரும்பவும் செல்வதற்கோ, திருவிழாக்கள் இல்லை கூடுகைகளுக்கோ போக அவன் விரும்பவில்லை. பிரார்த்தனைக்காகக் கூட ஆலயத்திற்கு அவன் சென்று வெகு நாட்கள் ஆகியிருந்தது. அறையினுள் தனக்குள் தானே பிதற்றும், வெறிக்கூச்சலிடும், சண்டையிடும் அவனது குரலைக் கேட்கும் அவனின் தாய், தன் மகன் ஏதோ பிசாசின் பிடியிலோ இல்லை சாத்தானின் கைகளிலோ அகப்பட்டுக் கொண்டிருப்பானோ என்று அஞ்சினாள்.
"யாரையெல்லாமோ காப்பாற்றினீர்கள். என் பிள்ளையை மட்டும் ஏன் கை விட்டீர்" என்று தனது சகோதரன் அந்த முதியத்துறவியின் கால்களைப் பிடித்து மன்றாடினாள் அவள்.
மேரி!
இந்த வேதனைகளும், வதைகளும் பிசாசினாலோ சாத்தானினாலோ அல்ல. இது கடவுள். நான் இதில் செய்ய ஒன்றுமில்லை என்றார்.
அப்படியென்றால் என்னதான் வழி?
நிராதரவற்ற அந்தத் தாயின் கலங்கிய கண்களில் தீர்க்கம் ஒளிர்ந்தது.
எதற்காக அவனைக் கடவுள் இப்படி வதைக்க வேண்டும்?
முதியவர் எதுவும் சொல்ல முடியாது வெறுமனே பெருமூச்சு விட்டார்.
எதற்காக? திரும்பத் திரும்ப அவள் பிதற்றினாள்.
ஏனென்றால் உனது மகன் கடவுளுக்கானவன்.
மேரி அமைதியின்றி விசனத்துடன் முதியவரை நோக்கினாள்.
இது கடவுளின் நியதி! என்ற அவரது சிடுக்கான நெற்றியில் முடிச்சுகளிட்டன. கண்களைத் திறக்காமல் அவளை போகச் சொல்லும் நோக்குடன் தலையை அசைத்தார்.
எதுவுமே செய்ய இயலாது காலம் மட்டும் நகர்ந்து கொண்டிருந்தது. நகர்த்தவே முடியாத பாறை போல சோர்வு அவளது கால்களில் கொழுத்தியிடப்பட்டிருந்தது.
அவனது அறைக்கதவின் அருகே சென்ற அவள் திகைத்து அசைவற்று நின்றாள். அவனின் முன் நெற்றியிலிருந்து குருதிக்குமிழ் வழிந்து கொண்டிருந்தது.
திரும்பத் திரும்ப விம்மி அடங்கிய மூச்சு, அவளது நெஞ்சுக் கூட்டினுள் குமைந்து பீறிட வழி தேடியது. யாருக்காகவுமின்றி தனக்காகவே. விதியின் கூர் நகங்களினால் செதில் செதிலாய்க் கிழிந்து கிடக்கும், தன் கணவனையும், மகனையும் நினைத்துக் கண்ணீர் துளிகள் பெருகி வழிந்தன. அடித்தொண்டையிலிருந்து கேவல் ஒலி முணகி முணகி ஒரு குழறலாய் ஒலித்தது.
ஒரு தாயாக, மனைவியாக எந்த இன்பத்தையும், பெருமையையும் அவள் அறிந்திருக்கவில்லை. தன் திருமணத்திற்கு முன்பே விதவையானவள். குழந்தை பெற்றுக் கொள்ளாமலேயே தாயுமானவள். இப்பொழுது நரை கூடி முதுமையும் அடைந்து விட்டாள்.
அதிகாலையின் காற்று மெல்ல மெல்ல அறைகளினுள் நுழைந்து அனைத்தையும் தொட்டு முகர்ந்து வெளியேறியது. கடவுளுக்கு வேண்டிய மொத்தக் கண்ணீரையும் அவள் வடித்து உலர்ந்திருந்தாள். இன்னும் எஞ்சியிருந்த விம்மலும் ஒரு நீர்க்குமிழ் போல உடைந்து வெளியேறியது. மகனுக்காகவோ, கணவனுக்காகவோ அன்றி தொலைந்து போன தன் வாழ்வினை நினைத்தே திரும்பத் திரும்பத் தவித்து அழுதாள்.
சட்டென எழுந்த இளைஞன் தனது தாயை வெறுப்புடன் நோக்கினான். தனது உடுதுணியின் ஓரத்தினால் காயத்தை ஒற்றிக் கொண்டும், அவளின் பார்வையில் இருந்த என்றைக்குமே மன்னிக்க முடியாத தன்மையினைப் பார்த்துக் கொண்டும் கசப்பு மேலிட உதடுகளைச் சுழித்து காறி உமிழ்ந்தான்.
எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாது நலிந்திருக்கும் அவளின் நாள்பட்ட கெஞ்சல்கள் தான் அவனது காதுகளில் மீண்டும் ஒலித்தது.
ஒழுங்காக சாப்பிடு! வேலை செய்! கல்யாணம் செய்து கொள்!
"ஜீசஸ், இந்த அதிகாலை நேரத்தில் இங்கு யாருடன் திரும்பவும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறாய்" என்று சிறிது கண்டிப்புடன் கேட்டாள்.
எதுவும் பேசாது உதடுகளைக் கடித்துக் கொண்டான். பாலையின் ஒளியும், வெக்கையும், தூசு நிரம்பிய காற்றும் அறையினுள் குழுமியது. வியர்வையுடன் ரத்தத்தை வழித்து எறிந்தான். தோள்களைத் திரும்பவும் சரிசெய்து கொண்டு சிலுவையை நாட்ட எத்தனித்தான்.
தோள்பட்டை வரை நீண்டிருந்த தன் கூந்தலை அள்ளி முடிச்சிட்டு தலைக்குட்டையினுள் பொதித்தாள். மெல்ல அறையினுள் நுழைந்தாள். சிறிது வெளிச்சத்தில் தன் மகனை நடுக்கமுறப் பார்த்தாள்.
எப்படி? இடைவிடாது இவன் மாறிக் கொண்டே இருக்கிறான். தண்ணீரைப் போல. ஒவ்வொரு நாளும் புதியவனாகி விடுகிறான். அறுதியிட முடியாத ஒளிர்வு அவனது முகத்திலிருந்தது. அவனின் முகம், கண்கள், வாய், சிறிதே வளர்ந்திருக்கும் தாடி. ஏன் விழுங்கத்துடிக்கும் இந்த மாயப் பொலிவு?
எந்த வித சலனமுமின்றி அமைதியாக நின்று கொண்டிருந்தான். தீப்பற்றிக் கொள்ளும் ஜ்வாலைக் கண்கள். உண்மையில் நீ யார்? என் மகனா? என்றே கேட்க நினைத்தாள். வெளிவராது அவளினுள் துடித்துக் கொண்டிருந்தது அந்தக் கேள்வி. ஜீசஸ்! என்று மட்டுமே விளிக்க முடிந்தது.
அவன் எதையுமே பொருட்படுத்தாது, சிலுவையை முதுகில் ஏற்றிக் கொண்டு கதவைத் திறந்து வெளியேறினான்.
மலைச்சரிவைத் தொடும் வரைத் தன் மகனையே வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கு சிறகுகள் உந்தி உந்தி வான் நோக்கிப் பறக்கத் துடிக்கும் ஒரு தனித்த பறவையைத் தான் அவள் கண்டாள்.
நான் என்ன செய்வேன் கடவுளே! உண்மையில் யாரிவன்? யாரின் புதல்வன்! கணத்திற்கு கணம் மாறிக் கொண்டே இருக்கும் இவன், யாரைப் போலவுமில்லை. ஆனால் நிச்சயமாக சொல்வேன், அவன் ஒருவனல்ல. பலப்பல முகங்களாய் தன்னுள் திரளும் அவனை வாழ்நாள் முழுதுமாய்ப் பீடித்திருக்கும் கொடுக்குகள் எப்பொழுதும் விலகாதிருப்பதை நினைத்துத் தன்னையே நொந்து கொண்டாள்.
அந்தக் கனவின் நாளை அவள் திரும்பவும் நினைக்கும் பொழுது அது முற்றுப் பெறாமலேயே இருந்தது. பிராகாசமான அந்த ஒளிர் நட்சத்திரம். கிணற்றருகே இருந்த முற்றத்தில் அமர்ந்து தன் பிள்ளையை மார்போடு அணைத்துக் கொண்டு சற்றே அயர்ந்திருந்தாள். ஒரு துளியோ! கணமோ! நொடிப்பொழுதோ! தெரியவில்லை. அந்த ஒளியினைக் கண்டாள். பல்லாயிரம் சிறகுகள் கொண்ட தேவதையின் கைகளிலிருந்து பால் நிற ஒளி மெல்ல மெல்லக் கனன்று பூமியெங்கும் வியாபிக்கத் தொடங்கியது.
இருளடைந்த பாதைகளின் வளைவுகளுக்குள் நெழிந்து ஊர்ந்து வந்த அது அவளது பாதங்களைத் தழுவியது.
இவ்வொளி எங்கிருந்து தொடங்கியது. எதற்காக இத்தனை தூரம் கடந்து வந்து என் பாதங்களுக்கடியில் இறைஞ்சுகிறது. ஒரு விதத் தயக்கத்துடன் விதிர்த்தாள். எதிரில் பொன் மஞ்சள் ஒளிச்சுடர் வழி அம்மூன்று குதிரை வீரர்களும் வந்து கொண்டிருந்தனர்.
அவளுக்கு எதிரே நின்ற அவர்கள் வானை நோக்கினர். பால் நிற ஒளியுடன் நட்சத்திரம் இன்னும் வானில் நிலைத்திருந்தது. அவர்கள் தத்தமது குதிரைகளை முன் நோக்கி முடுக்கினர். இப்பொழுது அவர்களது முகங்களை அவள் தெளிவாகப் பார்த்தாள். நடுவே நின்றவன் வெண்ணிறமாகவும், மூவரில் மிக இளையவனாகவும் இருந்தான். நாடியில் தூவல் போல மயிர் அரும்பியிருந்தது. வலப்புறம் நின்றவன் மஞ்சள் நிறமாகவும், கருத்த சரியாக வெட்டித்திருத்திய தாடியுடனும், சற்றே சாய்வானப் பார்வையும் கொண்டிருந்தான். இடப்புறம் நின்றவன் கருப்பாகவும், வெளுத்த தலைமுடியும், காதுகளில் வளையங்களும் அணிந்திருந்தான். தன் வெள்ளைப்பற்கள் தெரிய அவன் அவளைப் பார்த்தான்.
இவர்களைப் பார்த்ததும் திகைத்துப் போன அவள், குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படா வண்ணம் தன் உடுதுணியால் அவனை மூடி மறைத்துக் கொண்டாள். குதிரை வீரர்கள் ஒவ்வொருவராக மெதுவாக இறங்கி அவள் முன் மண்டியிட்டனர்.
முதலில் அணுகிய வெண்ணிற வீரனைக் கண்டதும், குழந்தை தாயின் மடியிலிருந்து இறங்கி அவளின் கால்களில் தன் பிஞ்சுப்பாதங்களை மெல்ல ஊன்றி நின்றது. வீரன் தன் மணி முடியைக் கழற்றி அதன் பாதங்களில் பணிவன்புடன் வைத்தான். பின் வந்த கருப்பு வீரன், தன் கை நிறைய வைத்திருந்த வைர, வைடூரியங்களை, மரகதங்களை, மாணிக்கங்களை குழந்தையின் தலைக்கு மேலே பக்தியுடன் பொழிந்தான். கடைசியாக வந்த மஞ்சள் நிற வீரன், தன் கையில் வைத்திருந்த மயில் தோகைக் கற்றையை விளையாடுவதற்காகக் குழந்தையின் காலடியில் சமர்ப்பித்தான்.
குழந்தையோ அவர்கள் மூவரையும் பார்த்து கண்கள் விரியக் கோழை வடிய சிரித்ததே தவிர அவர்கள் அளித்ததைத் தொடக் கூட இல்லை.
வீரர்கள் திடீரென அங்கிருந்து மறைந்தனர். பின் ஒரு இளம் மேய்ப்பன் அவளிடம் வந்தான். செம்மறித்தோல் ஆடை உடுத்தியிருந்த அவன் கைகளில் கிண்ணம் நிறையப் பால் இருந்தது. பாலைக் கண்டதும் குழந்தை வீறிட்டது. தலை குனிந்து அந்தக் கிண்ணத்தை முகர்ந்து பாலினைப் பருகத்தொடங்கியது. எங்கே திடூமென அவன்ன் சென்று விடுவானோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் வேகமாக உறிஞ்சியது.
கனவின் நினைவுகளிலிருந்து மீண்ட அவள் நீண்டு கிடந்த பாதையைத் தன் வீட்டின் வாசலிலிருந்து பார்த்தாள். எத்தனை நம்பிக்கைகளில் என் பிள்ளையை இவர்கள் உழலவைத்தனர். என்னென்ன தரிசனங்களைக் கூறிக் கொண்டு எங்களைச்சுற்றித் திரிந்தனர் இந்தத் துறவிகள். வேதங்களையும், நூல்களையும், தரவுகளையும் புரட்டி, என் குழந்தையின் உடலெங்கும் அந்த அடையாளங்களைத் தேடினர்.
ஆனால் எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகக் கருகி விட்டன. என் மகன் நரகத்தின் பாதையை அல்லவாத் தேர்ந்தெடுத்து விட்டான். மீள மீள மனிதன் மாத்திரமே செல்ல முடிந்த வழியல்லவா அவன் கடப்பது.
தன் தலை முக்காட்டை சரிப்படுத்திக் கொண்டு, அவளும் தன் மகனின் காலடித் தடத்தைத் தொடர்ந்து மலைப்பாதையை நோக்கி சென்றாள். அங்கு சிலுவையில் அறையப் போகும் வதைப்படலத்தை காண்பது மட்டுமே அவளது ஒரே வழியாக இருந்தது.
வேகமாக நடந்து எப்படியாவது முன்னே செல்லும் கூட்டத்தினுள் சென்று விட முயன்றாள். முன்னே பெண்களின் பேச்சுகளும், மூச்சிரைப்புகளையும் கேட்டாள். தன்னைக் கடந்து வெறுங்காலுடன் செல்லும் ஆண்களை, அவர்களின் அழுக்கு உடையினுள் மறைத்து வைத்திருக்கும் கத்தியினை, தூரத்தில் மெதுவாக வரும் முதிய கிழவனை, ஊனமுற்றவர்களை, குருடர்களையும் கண்டாள்.
மலைப்பாதையின் சரளைக்கற்களின் நரநரப்பில் மிதிபட்டு மிதிபட்டு காற்றில் அப்பிய தூசியையும், ஏதோ ஊகிக்க முடியாத துர்நாற்றத்தையும் உணர்ந்தாள். சூரியனுக்கு கீழே எல்லாமே எரிந்து வெந்து கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக