அந்த மூதாட்டி அவன் முகத்தைப் பார்க்கும் படி உட்கார்ந்தாள்.
சரியானப் பசியில் வந்திருக்கிறாய். சாப்பிடு. இப்போது சாப்பிட்டால் தான் உடம்பில் நிற்கும். இன்னும் நீ செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது, மேலும் அங்குப் பிரச்சனைகளுக்கும் பஞ்சமிருக்காது. அனைத்தையும் தாங்கும் வலு வேண்டும் உனக்கு. அதனால் நன்றாக சாப்பிடு. உணவிடம் மட்டும் வஞ்சனையேக் காட்டக்கூடாது.
தன்னிடமிருந்து ஒன்னொரு ரொட்டித்துண்டினையும் அவனிடம் நீட்டினாள். ம்ம்! இதையும் சாப்பிடு. இந்தா! இந்த ஆலிவ் பழங்களைக் கூட வைத்துச் சாப்பிடு என்றுக் குனிந்தவளின் தலைக்குட்டை அவிழ்ந்து மயிரற்ற முன்னந்தலை வெளித்தெரிந்தது. சட்டென்று துணியால் மறைத்துக் கொண்டவள் சிரித்துக் கொண்டே இளைஞனைப் பார்த்தாள்.
கடவுளின் கருணையால் நீ எங்கு விரைந்து கொண்டிருக்கிறாய்? அவள் கேட்டாள்.
பாலைவனத்தை நோக்கி!
எங்கு? சற்று சத்தமாகச்சொல்!
பாலைவனத்திற்கு அம்மா!
தன் பொக்கை வாயைச் சுழித்துக் கொண்டு கடுமையாகப் பார்த்தாள் மூதாட்டி. எங்கு, அந்த மடாலயத்திற்கா?
எதற்கு? உனக்கங்கு என்ன வேலை? நாணமில்லையா உனக்கு!
அவன் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தான். கண்கள் வெறிக்கத் தலையை ஆட்டிக் கொண்டே சீறுவது போல அந்த மூதாட்டி சத்தம் போட்டாள்.
"உனக்கு கடவுளை அறிய வேண்டும், இல்லையா! அலட்சியமான நகைப்புடன் இளைஞனைக் கேட்டாள்.
ஆம், அம்மா! மிக மெல்லியக் குரலில் பதிலளித்தான்.
கோபாவேசத்தில் அருகிலிருந்த நாயினை மிதித்தாள். அது செல்ல முணங்கல்களுடன் வளைந்து பின் அதே போல தலையைத் தன் முன்னங்கால்களில் வைத்துப் படுத்துக் கொண்டது.
ஓ! துரதிஷ்டவசமானப் பையா! கடவுள் மடாலயங்களில் எப்பொழுதுமே இருந்ததில்லை. நீ மனிதனின் கூடாரங்களில் அல்லவா அவனைத் தேடியிருக்க வேண்டும். எங்கெல்லாம் நீ ஒரு கணவனையும், மனைவியையும் காண்கின்றாயோ அங்கெல்லாம் இறைவன் நீக்கமுற நிறைந்திருப்பான். எங்கெல்லாம் சிறுபிள்ளைகளின் அனந்தத்தை, ஆணுக்கும் பெண்ணுக்குமான அணுக்கங்களை அறிகிறாயோ அங்குதான் அவன் வீற்றிருக்கிறான். உன் அண்ணன்மார்கள் இம்மடாலயத்தில் முட்டாள்தனங்களைச் செய்வதோடல்லாமல் இப்படி பாவப்பட்ட இளைஞர்களையும் திசைதிருப்பி விட்டுவிடுகிறார்கள். நான் என் அனுபவத்தின் பாடத்தில் உனக்குச்சொல்கிறேன்! அப்பா! இங்கே இம்மனிதர்களிடையேக் காண முடியாத இறையை உன்னால் எந்த மாபெரும் மடங்களுக்குச் சென்றாலும் காண முடியாது. பாலைவனத்தில் தனித்துழலும் இந்த முட்டாள்களையும், சோம்பேறிகளையும் உன் வழியிலிருந்து ஒதுக்கிவிடு! என்று காட்டமான குரலில் வாதிட்டாள்.
பேசப் பேசத் தீப்பொழிந்தது போல இருந்தது. ஏதோ பழி வாங்கிடும் தொனியில் இருந்தன அவளது வசைகள். ஆற்றுப்படுத்த முடியாமல், நோக்கியவள் வாஞ்சையுடன் அவனை முத்தமிட்டு சற்று அமைதியானாள். ஆனால் கண்களில் இன்னும் தனது விலையுயர்ந்தப் பொக்கிஷம் ஒன்றினைக் களைந்து விடுவோமோ என்ற பயமும் நடுக்கமும் இருப்பது போல இருந்தது.
உனக்குத் தெரியுமா அன்பே! உன்னைப் போலவே எனக்கொரு மகன் இருந்தான். ஒரு நாள் அவன் இங்கில்லை. இரவைக் கடந்து அவன் இந்த மடாலயத்திற்குச் சென்றான். ஏதோ நோய்களையெல்லாம் குணமாக்கும் ஆற்றல் பெறச்சென்றானாம்! முட்டாள்! இதுவரை அவர்களால் எந்த நோயாளியையும் குணமாக்க முடியவில்லை. எல்லாம் பொய் பிதற்றல்கள். நான் அவனை இழந்துவிட்டேன். ஒரு அழுகியப் பழம் போல என் வாழ்வு, இன்று நான் இங்கே அமர்ந்து திரும்பத் திரும்ப என் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்குமாக காலமற்று சமைத்து சமைத்துக் காலியாக்கிக் கொண்டிருக்கிறேன் என்னை!
சட்டென நிறுத்தியவள், கண்களைத் துடைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்,
வெகுகாலம் இக்கடவுளை நோக்கி நான் மன்றாடினேன். எனக்கிருந்த ஒரே மகனையும் நீ எடுத்துக் கொண்டாய். பின் நான் எதற்காகப் பிறப்பெடுத்து வாழ்கிறேன். கேவலும் அழுகையுமாக, எத்தனையோ தினங்கள் என் பிரார்த்தனைகளில் உழன்றிருக்கிறேன். ஆனால் அதற்கு செவி சாய்க்க யாருளர்!
ஒரே ஒரு முறை, நான் நம் தீர்க்கதரிசி எலிஜாவின் மலைக்குன்றில் நித்தியமானப் பிரார்த்தனையில் அமர்ந்திருக்கும் பொழுது அக்குரல் ஒரு இடியின் முழக்கமாய் என்னுள் இறங்கியது.
"உன் தொண்டை உடையும் வரைக் கத்து! எனக்கு பிடித்தமானவர்களை நான் அப்படித்தான் அழைக்கிறேன்"
பின் முற்றிலுமான இருள். அதுவே கடைசியாக நான் கடவுளிடம் வேண்டியது.
இளைஞன், அவள் கைகளுக்குள் இருந்த தன் கைகளை விலக்கிக் கொண்டு விடைபெறும் தொனியில் தலை அசைத்தான். அவள் திரும்பவும் கண்கள் விரியக் கோபத்துடன் அவனை ஏறிட்டாள்.
நீ அங்குதான் போகப்போகிறாய்! அப்படித்தானே! இந்த மண்ணில் பசியின்மையுடன் வாழக் கற்றுக் கொள்ளப்போகிறாய்! ஆனால் நீ எங்கு பார்க்கிறாய்! எனதருமை மகனே! உனக்கு இந்தத் திராட்சைத் தோட்டங்களும், நீண்டு வியாபித்துக் கிடக்கும் நிலமும், சூரியனும், பெண்களும் தெரியவில்லையா? போ! மாக்தலாவிற்கு போ! அதுதான் நீ செல்ல வேண்டிய இடம். நீ வேதங்களைப் படித்திருக்கிறாய் இல்லையா! அதில் உன் ஒளி பொருந்தியக் கடவுள் என்ன சொல்கிறார்,
"எனக்கு உங்கள் விரதங்களும் பிரார்த்தனைகளும் தேவையில்லை
எனக்கு ஊன் வேண்டும்"
ஆம்! நீ உன் பிள்ளைகளைப் பெற்று சந்ததிகளைப் பெறுக்கவேண்டும் என்பதுதானே அவனுடைய கட்டளையாகவும் இருக்கிறது.
நான் விடைபெறுகிறேன் அம்மா! கடவுளின் பெயரால் நான் உங்களிடம் நன்றியுடன் இருக்கிறேன். எனக்களித்த அன்பும், பரிவும் உங்களுக்கு ரெட்டிப்பாக வேண்டுகிறேன், என்றான்.
அந்தக் கடவுளும் உனக்கு நன்றியுடன் இருக்கட்டும். குழந்தாய்! இது நாள் வரை கிழவர்கள் மட்டுமே வந்து கொண்டிருந்த என் பாழ் பீடித்த இல்லத்திற்கு முதல் முறை நீ வந்தாய். நீ எனக்குத்தந்த அந்தக் கண நேர மகிழ்ச்சிக்காக, நான் கடவுளிடம் உனக்கு நல்லவழியைக் காட்ட வேண்டுகிறேன் என்று ஆசி வழங்குவது போலச் சொல்லிக் கொண்டாள்.
வந்த வழியிலேயே வேலியைத் தாண்டிக் குதித்துச் சென்று பொதுப்பாதையை அடைந்தான்.
என்னால் மனிதர்களின் பார்வையில் உண்மையில் நிற்கமுடியவில்லை. என் வழியில் எந்த மானுடனையும் காண விருப்பமில்லை. அவர்கள் தரும் ரொட்டித்துண்டங்கள் கூட விஷம் வாய்ந்தவை. ஒரே ஒருப் பாதையே கடவுளுடையது. அது இன்று நான் தேர்ந்தெடுத்தப் பாதை. நான் மனிதர்களுக்கு அப்பால் செல்ல விளைகிறேன். எப்பொழுது அங்கு நான் போய்ச்சேர்வேன்!
அவன் தனக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அந்த வெறிச்சிரிப்பை தன் பின்னே மிக அருகில் கேட்டான். ஒரு பொருளற்றப் பித்துப்பிடித்த நகைப்பு. பயமுறுத்தும், அச்சுறுத்தல் போன்ற சிரிப்பு ஒன்றிலிருந்து பலவாய், பலப்பல அதிர்வுகளுடன் அவனைச் சுற்றி வளைத்தது.
கடவுளே! கடவுளே! இளைஞன் குழறலாய்த் தொண்டை கிழியக் கத்தினான். குமிழ் குமிழாய்க் கொப்பளிக்கும் காற்றின் ஊர்தலின் நெழிவு ஒரு சர்ப்பத்தின் சீறுதல் போல இருந்தது. வெறித்து உற்று நோக்கும் பல்லாயிரம் கண்களைப் பார்ப்பதைப் போல வெலவெலத்தான். ஓட எத்தனித்து, கொஞ்ச தூரம் சென்றவனைத் தொடர்ந்து வலுவான அதே காலடிச்சப்தங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக