சனி, 19 பிப்ரவரி, 2022

கிறிஸ்துவின் கடைசி சபலம் -23

 


    இடிச்சப்தம்! வானினுள்ளிருந்துப் பொழிந்த அக்குரல்! வானம் இரு ராட்சச் சிறகுகள் கொண்டப் பறவையைப் போல உருமாறியிருந்தது. அதன் படபடத்தலின் சப்தமே இடி முழக்கமாய் ஒலித்தது.

    இடி முழக்கத்தின் ஊடேக் கடவுளின் குரல்! மின்னல் வெட்டு! முப்பது வருடங்களுக்குப் பிறகும்  இன்னும் அவிழ்க்க முடியாத சிக்கலாய் என் காட்சிப்புலனில் அந்த நாள் நிலைத்திருக்கிறது. 

    மன்னியுங்கள்! நான் என்ன செய்தும் அக்குரலை மட்டும் தான் உணர முடிகிறது. என்னால் தேவனின் வார்த்தைகளை மீள் செய்ய இயலவில்லை.

    கண்களை மூடி இருந்தவளின் கைகளினுள் வெம்மையான இதயத்துடிப்புகள். மிருதுவான அதன் தேகத்தினுள் இருந்த ஏதோ ஒன்று, அவள் திடுக்கிட்டாள். சீரான இருதயத்துடிப்புகள் ஏன் இடிமுழக்கத்தை நினைவு படுத்துகின்றன. ஏன் இந்த பரிசுத்ததின் நிழல் பூதாகரமாய் உருப்பெறுகின்றன. தன் உள்ளங்கைகளினுள் மிணுக் மிணுக் என சீழ்க்கையொலி. அகவல் சப்தம், நீர்த்திவலைகள் போல ஒன்றிலிருந்து ஒன்றாய் சுழன்று, மாபெரும் சுழலாய் அவள் நினைவு வட்டங்களில் சுழலத் தொடங்கியது. சந்தேகமேயில்லை! ஆம்! இரண்டும் ஒன்றுதான். ஒரு ஆடி போல அதன் பிம்பங்கள். கடவுளின் குரல்! பெரும் முழக்கம்! 

"இது என் கடவுளின் அழுகுரல் அல்லவா!"

"தாங்கிக் கொள்! மேரி!"

"என்னைத் தாங்கிக் கொள்! மேரி!"

    பதற்றத்தின், விசும்பல்களின் துளிகள், ஒன்றாய் பலதாய் பல்லாயிரம் விளிகளாய் விசும்பினைத் துளைத்து அவளிடம் மன்றாடியது.

    கண்ணீருடன் திரும்பிப் பார்த்தவள். சுவரைப் பிடித்துக்கொண்டு உந்தி ஏதோ சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் தன் கணவனை நோக்கி வந்தவளின் உள்ளம், தன் மகனைத்தான் முதலில் தேடியது. மலையிலிருந்து இறங்கும் பொழுது, மரணித்தவனின் ரத்தம் தோய்ந்த தலைக்குட்டையைத் தன் தலையில் கட்டிக் கொண்டு நெடுந்தொலைவில் சென்று கொண்டிருந்த அவனின் காலடிச்சுவடுகளைத்தான் அவள் பார்த்தாள். ஏன் இன்னும் அவன் வரவில்லை. எங்கே சென்று விட்டான்? ஒரு வேளை விடியும் வரை அவ்வெற்று நிலத்தைச்சுற்றி கால் போன போக்கில் அலைந்து கொண்டிருப்பானோ? என்று தனக்குள் தானே பரிதவித்தாள்.

    வாசலுக்கு வந்தவள், அண்மையில் முதியத்துறவி வந்துகொண்டிருப்பதைப் பார்த்தாள். மூச்சிழைக்க, கூன் முதுகுடன் நிலத்தைப்பார்த்துக் கொண்டே, மெல்ல மெல்ல நடுங்கும் அசைவுகளுடன் அவளை நோக்கி வந்தவர், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கார்மல் மலைக்குன்றின் குளிர்ச்சியான இரவின், அலை அலையானக் காற்றில் அவரின் வெளுத்த நரை முடிகள் சில்லித்து அலைந்து கொண்டிருந்தது.

    படிகளில் இறங்கி அவரைத் தன் கைகளால் தாங்கிக் கொண்டு மேரி உள்ளே அழைத்துச் சென்றாள். இருவரும் அருகருகே உட்கார்ந்திருந்தனர். ஆனால் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே காலம் நகர்ந்தது. மேரியின் கண்களை உற்று நோக்கியவரின் அகம், ஏதோ கரியப் பாழ்குழியினுள் முழுக்கிட்டு அமிழ்ந்து கொண்டே இருப்பதைப் போல உணர்ந்து, தொண்டையை செருமிக் கொண்டு சூழலை இலகுவாக்க முயன்றார்.

    உன் கண்களின் ஒளி! என்னை சாந்த்தப்படுத்துகிறது மேரி!

    அருளாளரே! நான் கண்டுகொண்டேன்! அடக்கமுடியாமல் கதறினாள்  மேரி!

எதனை? கடவுளின் பெயரால் அதை எனக்குச் சொல்?

    இடிமுழக்கங்களுக்கும், மின்னல் பிழம்புகளுக்கும் பின்னால் ஒலித்த அச்சன்னமானக் குரலை!

    சரியாக இதற்காகவே, இத்தருணத்திற்காகவே நான் இங்கே வருவிக்கப்பட்டிருக்கிறேனா! தன் கைகளை உயர்த்தி ஆதுரத்துடன் மேரியைப் பார்த்தார். திரும்பவும் உன்னிடம் இதைக் கேட்கவே வந்தேன். இன்னும் எத்தனை உயிர்கள். இன்று நமக்கிருந்த ஒரே நம்பிக்கையும் சிலுவையில் தொங்கிவிட்டது. தாங்கமுடியாத மனக்குமுறலுடன் நான் உன்னிடம்வந்தேன்.

    திரும்பத் திரும்ப மேரி! பித்து பிடித்தவள் போல சொல்லிக் கொண்டே இருந்தாள். நான் அந்த மின்னல் பிழம்பை இன்று நினைவு படுத்தும் பொழுது, என்னுள்ளே அதன் முழக்கத்தை மிக அணுக்கமாக உணர்ந்தேன்.  அமைதியான அக்குரல் என்னிடம் மருகியது. 

"தாங்கிக் கொள்! மேரி!"

    அதைக் கேட்டதும், துறவி சற்றே சரிந்து இருப்புப்பலகையிலிருந்து கீழே விழப்பார்த்தார். சமனித்துத் தன் நீண்டக் கற்றையான முடியைக் கோதி விட்டுக் கொண்டே நெற்றி முடிச்சுகளில் அழுத்தித் தேய்த்தார். தன்னுள் புதைந்திருந்த அகத்தின் பாடுகளைத் தோண்டி எடுப்பது போலத் தரையை வெறித்தார். பின் தலைதூக்கிக் கனிவுடன் மேரியைப் நோக்கினார்,

    சரிதான் மேரி! உன் ஆழுள்ளத்தின் வழியேக் கடவுளின் சொல்லைத் தீண்டியிருக்கிறாய். அதுவே சத்தியத்தின் சொல்! கடவுளின் நியதியும், இஸ்ரவேலத்தின் விதியும் அதுவாகவே இருக்கட்டும்! 

    துறவியின் சொற்களால் அடித்து சுழிக்கப்பட்ட மேரியின் உணர்வுகள், தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கியது. கண்கள் நிலைக்க உள்முகமாய்த் திரும்பவும் துழாவினாள். அச்சொல், நீரினுள் அமிழ்ந்து, நீர்க்கோழி போல தலை நீட்டிப் பார்த்தது.

    இல்லை! இல்லை! அவர் அதன் பின்னும் என்னிடம் பேசினார். என்னால் அவரது சொற்களை ஞாபகப்படுத்த முடியவில்லை! நடுநடுங்கும் மேரியின் குரல் அறையினுள் ஒரு தனித்த உயிர் போலக் குழுமியது.

தன் கைகளை அன்புடன் அவளின் தலையில் வைத்து அமைதிபடுத்தியத் துறவி, அவளின் நீண்டப் பெரிய விழிகளைக் கலக்கத்துடன் நோக்கினார்.

நோன்பிரு, பிரார்த்தனை செய். உலகியலிலிருந்தும், தினப்பணிகளிலிருந்தும் விடுவித்து கடவுளின் சொல்லைத் தியானி. நான் நிச்சயமாக உணர்கிறேன்! உன்னுள் ஜொலிக்கும் தீர்க்கத்தின் ஒளி. அது கடவுளின் அருகாமையில் உன்னுடனான அனைத்தும் பாசாங்கற்றத் தன்மையினால் மிளிர்கிறது. என்னால் உனக்கு சரியாக பதில் சொல்ல முடியவில்லை, ஆனால் எனக்குத் தெரிந்த வழி இது. அமைதியுறு. முழு அர்ப்பணிப்புடன் பிரார்த்தனை செய். 

"ஆம்! தாங்கிக் கொள் மேரி!

அதனைத் தொடர்ந்த கடவுளின் சொல்லைத் தேடிச்செல்!

    தன்னுள் இங்கும் அங்கும் உருளும் எண்ணங்களை மறைத்துக் கொண்டு, அறையினுள் இருந்து குடிக்கத் தண்ணீரும், பேரீச்சைகளையும் எடுத்து வந்தாள் மேரி!

    எனக்கு பசியோ தாகமோ இல்லை! எனதருமை சகோதரியே! நீ வந்து என் முன்னால் உட்கார்! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.

    மேரி ஒரு கட்டையான பலகையில், அவர் காலடிகளில் அமர்ந்து அண்ணாந்து அவரைப் பார்த்தாள்.

    துறவியால் எதையுமே உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. அச்சொல்லை தன்னில் உருப்போட்டுக் கொண்டிருந்தவர். அதிலிருந்த அபத்தத்தையும், சிலந்தி வலை போல பின்னிக் கொண்டிருக்கும் அதன் சிக்கலையும் தான் கண்ணுற்றார். அவரிடம் பதில்களில்லை. உறுதியான எந்த நம்பிக்கைகளும் உருவாகவில்லை. ஆனால் தன் பதற்றம் மேரிக்குத் தெரியாத வண்ணம், கண்கள் தாழ்த்தி குரலற்று அமர்ந்திருந்தார்.

    ஸ்தம்பித்த நொடியினை, ஒரு கனத்த பாறைத்துண்டினை நகர்த்துவதைப் போல மெல்லியக் குரலில் விசும்பினார், மேரி! உன்னால் உணர முடிகிறதா! நீ எல்லாப் பெண்களையும் போல அல்ல! உண்மையில் நீ தனித்தன்மையானவள். 

    சூழலின் அமைதி, சதா நகர்ந்து கொண்டிருக்கும் பாலையின் அனிச்சக் குரல், ஒரு மர்மத்தன்மையை அவ்வீட்டினைச்சுற்றி நிகழ்த்தியது.

    இல்லை துறவியே! நான் சாதாரணமானவள். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும். சமைக்கவும், துவைக்கவும், வீட்டைப் பேணிக் கொள்ளவும், அருகில் இருப்பவர்களுடன் ஊர்ப்பாடுகளைப் பேசவும், அந்தி இறங்கியதும் வாசலில் அமர்ந்து கொண்டு வழிப்போக்கர்களை வெறிக்கவும், என் கணவன், என் பிள்ளை என் உலகம் என்று ஒரு மிகச்சாதாரணமான ஏக்கங்களே என்னுள் இருக்கின்றன. 

ஆனால்! என் இருதயம் முழுதும் வலி மட்டுமே என்றென்றைக்குமாக நிரம்பியிருக்கிறது!

    நீ சாதாரணமவள் அல்ல மேரி! நீ அருளப்பட்டவள்! மிகுந்த உறுதியுடன் கைகளை உயர்த்தி அவளை மறுதலிக்கும்படி துறவி கூறினார்.

உன் மகனும் கூட!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக