சனி, 26 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -46

     

    அவன் அந்த ஜோனாவிடம் போய் இழுத்து இழுத்துக் கதைப் பேசிக்கொண்டிருக்கட்டும். அவன் அங்குதான் தன் வலையை வீசிக் கொண்டு நிற்கிறான். பையன்களா, நமக்கு வேலை இன்னும் முடிஞ்ச பாடில்லை. இதிலே இவன் வேற! என்று அங்கலாய்த்துக்கொண்டே கயிற்றின் முடிச்சுகளைக் கொண்டு பலம் கொண்டு இழுத்துக் கொண்டிருந்தார்.

அவரின் வேலையாட்கள் எதற்கும் பதிலற்றுத் தங்கள் வலையை இழுத்துக் கொண்டும், பொருளற்ற அப்பாடலை ஒருமித்துப் பாடிக் கொண்டும் முன்னேறி வந்து கொண்டிருந்தனர். இன்னும் நீரினுள் மிதந்து கொண்டிருக்கும் சிவப்புச் சுரைக்காய் மிதவைகளில் தான் அவர்கள் கண்ணும் கருத்தும் இருந்தது. அதுதான் அதன் எடையை யூகிப்பதற்கான வழி.

    வலையின் கருப்பை போன்ற அடிப்பகுதி தெரிய ஆரம்பித்தது. உள்ளே துடித்துக் கொண்டே இருக்கும் மீன்களின் குவியலைப் பார்த்தனர். இன்னும் வேகமெடுத்து அவர்கள் கரையை நோக்கி இழுத்தனர். கரையைத்தாண்டி அழுகுரல்களும், ஓலங்களும் சற்று தொலைவில் இருந்து அவர்களின் காதுகளில் விழுந்தது. முதிய செபெதீ அதைக் கூர்வதைப் போல காதில் கைவைத்துக் கவனித்தார். இதுதான் சமயம் என வேலையாட்கள் கைகளைத் தளர்த்திக் கொண்டு நிறுத்தினர். 

    என்ன ஆச்சு! பையன்களா! அங்கே ஏதோ பெண்களின் ஓப்பாரிச்சத்தம் கேட்கிறதே!  

    யாரோ பெரியவர் செத்துப் போய்ட்டார் போல! கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரட்டும் முதலாளி!

    முதியவர் பாறை மேல் ஏறி அங்கே கொஞ்ச தூரத்தில் இருக்கும் சமவெளி நிலத்தைப் பதற்றத்துடன் பார்த்தார். அங்கே ஆண்களும் பெண்களும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். கீழே விழுந்து எழுந்தும் செல்லும் அவர்களின் கூக்குரல்கள் தான் அங்கு அறையிட்டது போல என்று நினைத்துக் கொண்டார். மழை ஓய்ந்து வெளுத்துக் கிடந்தது வானம். கண்ணுக்குத்தெரிந்தவரை ஓடைகளும், குட்டைகளும், சதுப்புகளும் அங்காங்கேப் புதிதாய் உருவாகியிருந்தது. 

    முழுக்கிராமமும் மேட்டிலிருந்து கீழ் நோக்கி வயல் வெளிகளை நோக்கி சென்று கொண்டிருந்தன. மக்கள் அங்காங்கே குந்தி அமர்ந்திருந்தனர். பெண்கள் தங்கள் தலை முடிகளை விரித்துக் கொண்டு ஓடுவதும் புலம்புவதும் அழுவதுமாய் இருந்தனர். செபெதீக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டும் நினைத்துக் கொண்டார்.

    அவரைக் கடக்கும் ஒருத்தனைக் கூவி அழைத்தார். நிலத்தில் குத்திட்டிருந்தப் பார்வையை உயர்த்தி அவரைப் பார்த்தான்.

    என்னாயிற்று? எங்கே ஓடுகிறீர்கள்? ஏன் பெண்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்? ஏதும் மரணமா? கத்தினார் செபெதீ.

    அவரைக் கண்டு கொள்ளாமல் அவசரகதியில் கதிரடிக்கும் தளத்தை நோக்கி அவன் ஓடிக்கொண்டிருந்தான்.

    ஹேய், யாரப்பா செத்தது? என்று அவருக்கு அருகில் வரும் ஒரு பருமனான மனிதனை நிறுத்திக் கேட்டார்.

"கோதுமை" என்று பதிலளித்தான் அவன்.

    இந்த கேலிப்பேச்செல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக்கொள். நீ செபெதீயுடன் பேசிக் கொண்டிருக்கிறாய். சொல்! யார் செத்துப்போனது?

    கோதுமை! பார்லி! ரொட்டிகள்! அவன் அழுதுகொண்டே பதில் சொன்னான்.

    அப்பொழுதுதான் செபெதீக்கும் விஷயம் புரிந்தது. "வெள்ளம்" என்று முணுமுணுத்தார்.

    அவர்களின் கதிரடிக்கும் தளத்தில் வைத்திருந்த தானியங்கள், முற்றி விளைந்து அறுப்பிற்காக காத்திருந்த அத்தனைப்பயிர்களும் இரவில் பெய்த பெரும் மழையில் அழிந்துவிட்டது என்று புரிந்துகொண்டார். பாவம்! நாம் ஒன்றும் இதில் செய்வதற்கில்லை என்று நினைத்துக் கொண்டார்.

    அழுகுரல்கள் வயல் வெளிகளிலிருந்து கூடிக்கொண்டே இருந்தது. ஒட்டுமொத்த கிராமமும் அங்கு இருந்தது. பெண்கள், கதிரடிப்புதளங்களில் சிந்திக்கிடக்கும் தானியங்களைக் கைகளால் அள்ளினர். மழையில் நசிந்து அழுகிப்போயிருந்த அதனை வாரி வாரி முகர்ந்தனர். கொத்தாகச் சதுப்பாகக் கிடந்த தானிய உருள்களை நிலத்தில் கைகளால் கிளர்த்து கிளர்த்தி மாரில் அறைந்துகொண்டே ஒப்பாரி வைத்தனர். செபெதீ வெறுமனேக் கைகளை உயர்த்தி எல்லாவற்றையும் பார்த்தார். பின்னே கரையில் நின்று கொண்டிருந்த வேலையாட்கள் வலையை இழுப்பதை நிறுத்தி விட்டு தங்களுக்குள் குசுகுசுத்தும், ஏதோ கேலி பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். பாறையிலிருந்துக் கீழே குதித்த செபெதீ விரைவாக அவர்களை நோக்கி வந்தார்.

    ம்ம்! இழுங்கள்! செபெதீயின் குரல் உயர்ந்தது. சீக்கிரம்! இழுங்கள்!.அவரும் கயிற்றினைப் பற்றி இழுக்கத் தொடங்கினார். நாமெல்லாம் மீனவர்கள், கடவுளுக்கே மகிமை! நாம் விவசாயிகள் இல்லை. நல்லகாலம்! நம் மீன்களெல்லாம் நீந்துவதில் வல்லவர்கள். எந்தப் பெருமழையிலும் கூட மூழ்கிவிடாது. இரண்டும் இரண்டும் நான்கு என்று அவர்களைப்பார்த்துக் கண்ணடித்தார்.

    பிலிப் அவனது மந்தையை அப்படியே விட்டு விட்டு ஒவ்வொரு பாறையாககக் குதித்து வந்தான். அவனுக்குப் பேச வேண்டும். ஆவேசத்துடன் அவன் கத்திக் கொண்டே அவர்களிடம் வந்தான். "பிரளயம், இதுப் புதிய பிரளயம், பையன்களா!. 

    நிறுத்துங்கள்! கடவுளின் பெயரால் சொல்கிறேன், நிறுத்துங்கள்,  அழிவிற்கான நேரம் நெருங்கி விட்டது. உலகம் அழியப் போகிறது. இப்பேரரிடர்களே அதற்கு சாட்சியம். ஒரு நாள் முன்பு அவர்கள் நம் நம்பிக்கையினை, நம் புரட்சியாளனை சிலுவையில் அறைந்தனர். நேற்று வானம் இடிந்து பூமியில் விழுந்தது போலக் கொட்டித் தீர்த்தது மழை. நம் பயிர்கள் மொத்தமும் அழிந்துபட்டன. எதுவும் மிச்சமின்றித் துடைத்துப் போய்விட்டது இக்காற்றும் மழையும். கொஞ்ச நாள் முன்பு என் ஆடுகளில் ஒன்று இரட்டைத்தலைக் கன்றினை ஈன்றது. ஆக நாம் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். வேலையை நிறுத்துங்கள்! கடவுளின் அன்பிற்காக நாம் பேசுவோம் என்று அவர்களைப் பார்த்துக் கலக்கத்துடன் கூறினான்.

    தீப்பற்றியது போல இருந்தது, செபெதீக்கு. இன்னும் வலையை முழுதுமாக இழுத்துவந்துவிடவில்லை. நேரம் வேறு சென்று கொண்டிருக்கிறது. இங்கிருந்து போய்த் தொலை! பிலிப். எங்களை வேலை செய்ய விடு! எரிச்சலும் கோபமுமாய்ப் பற்களைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்து சத்தம் போட்டார்.நாங்கள் என்ன சும்மவா நின்று கொண்டிருக்கிறோம்! பேசாமல் போய்விடு!

    நாங்கள் மீனவர்கள்! நீ ஆடு மேய்ப்பவன்! விவசாயிகள் வந்து அவர்களின் கவலைகளைச் சொல்லட்டும். எங்களுக்கென்ன வந்தது! அவனவன் வேலையை அவனவன் பார்க்கட்டும். இப்போது நீ இடத்தைக் காலி பண்ணு!

    உனக்கு கொஞ்சம்கூடப் பரிதாபம் இல்லையா! செபெதீ! விவசாயிகள் அங்கே பசியில் துடித்து சாவார்கள்! அதைப்பற்றி உனக்கென்ன. அவர்கள் இஸ்ரவேலத்தவர்கள், நம் சகோதர்கள், நாமெல்லாம் ஒரே மரத்தில் விளைந்தவர்கள், ஒரு தாய் மக்கள். எல்லாவற்றிற்கும் மேலே அவர்கள் உழவர்கள். அவர்கள் விளைவித்தால் தான் நமக்கும் உணவு. இது எல்லாமிருக்கட்டும், நாம் எல்லோரும் செத்துப் போய்விடுவோம், என்று வைத்துக்கொள், பிறகு மெசியா வந்து யாரைக் காப்பாற்றப் போகிறார். முடிந்தால் இதற்குப் பதில் சொல் செபெதீ! என்று மறுத்துப் பேசினான் பிலிப். 

    செபெதீ இன்னும் கயிற்றினை இறுக்கி இழுத்துக் கொண்டிருந்தார். சின்னதாய் அவரைக் கிள்ளிவிட்டால் போதும் மனிதர் எத்தருணத்திலும் வெடிக்கக் கூடியவர் என்பது பிலிப்புக்கு நன்றாகவே தெரியும். 

"போ! உன் கடவுளையும் அவர் அன்பையும் கருணையும் தூக்கிக் கொண்டு,

    ஏற்கனவேக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய் விட்டது இந்த மெசியாக்களின் கதைகளை. ஒருத்தன் மாற்றி ஒருத்தன் வந்து சிலுவையில் அறையப்பட்டு வதைபடுவார்கள். இன்னுமா உனக்கு இதிலிருந்து புரியவில்லை கடவுளின் செய்தி என்ன என்று. ஆன்ட்ரியூ அவனது அப்பன் ஜோனாவுக்கு என்ன செய்தியைச் சொன்னான்; எங்கே வேண்டுமானாலும் நீ செல், ஆனால் அங்கே வழிகளில் எங்கெல்லாம் நீ நிற்கிறாயோ, அங்கு ஒரு சிலுவையைக் காண்பாய். இங்குப் புதைகுழிகள் மெசியாக்களால் நிரம்பி வழிகின்றன. ஐயோ! போதும்! போதும்! நாம் மெசியாக்கள் இல்லாமலே வாழப் பழகிக் கொள்வோம் . அவர்கள் உண்மையில் நம் கால்களில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் உலோகக் குண்டுகள், தொல்லைகள். போ! போய் எனக்குக் கொஞ்சம் பாலாடைக்கட்டிகள் கொண்டு வா, நான் உனக்கு சட்டி நிறைய மீன்களைத் தருகிறேன். அது தான் நம் மெசியாக்கள்! என்று சொன்னவர், அழுத்தமாகவும், கேலியாகவும் பிலிப்பைப்பார்த்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக