தன் கூரிய விரல் நகங்களை, ஓநாய் தனக்கான இரையினைப் பற்ற முயலும் அதே வெறியில் காற்றினில் பிசைந்தாள். அழையாவிருந்தாளியாய் வந்திருக்கும் அவனைக் குதறிக் கண்ணீர் விட வைக்கவேண்டும் என்பதே அவள் நோக்கமாக இருந்தது.
என்னவாகி விட்டது, இப்பொழுது. அப்படியென்ன பாரம் உன்னுடையது. நான் இங்கு எனக்கே எனக்கான உலகில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆம்! எனக்குத் தோதான வழி. உன் புனிதங்களின் தயையை எனனிடம் கொண்டுவராதே! எனக்குத் தெரியும்! என்னுடைய போரட்டத்தை நான் எனக்கே எனக்கான முறையில் என்னுடன் மட்டும் போரிட்டுக் கொள்கிறேன். அதில் உழல்கிறேன், மடிகிறேன். அது என் விருப்பம். நான் உன்னிடமோ, உன் கடவுளர்களிடமோ, இல்லை சாத்தன்களிடமோ, ஏன், இந்த ஆண்மகன்களிடமோக் கூட என்றும் உதவிக் கேட்டதில்லை.
மீட்பதா! எதிலிருந்து, யாரிடமிருந்து? அன்பு நண்பா!
நீ நினைப்பது போல அல்ல, இந்த மண். இது இறைவனால் எனக்கு அளிக்கப்பட்டது. என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் இதனிடமே! இம்மண்ணே என் சாசுவதமும், இரட்சிப்புமாகும்!
இந்த மண்?
ஆம்! புனிதனே! இந்த மண்தான். இதோ, இங்கே நீக்கமுற இருக்கிறதே, இந்த அழுக்கு, அருவருப்பு, வீச்சம், என் உடல், அதன் பல நூறுக் கடித்தடங்கள், உலகத்தின் ஒட்டுமொத்த ஆண்களும் தழுவிய ரேகைகள், வியர்வை, சதை.
நடிக்காதே, ஆண் மகனே! உன் சோகம் படிந்தக் கண்களை எனக்குக் காண்பிக்காதே! விலகிச்செல், கோழையே!
நிற்காதே, போய்விடு. நீ என்னை அருவருப்புக்குள்ளாக்குகிறாய். என்னைத் தொடாதே!
ஒருவனை மறக்க, அதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள, நான் என் உடலை ஆணுடல்களின் பெருக்கினுள் கையளித்து விட்டேன்.
தலைதாழ்த்து நின்றிருந்தான் ஜீசஸ்.
இது என்னுடையப் பிழை! திரும்பவும் தொண்டை இழுபடக் கதறினான். தன் இடுப்புப்பட்டை வாரை உருவி எடுத்தான், அதில் உறைந்த ரத்தமும், சதைப் பிசுக்கும் இன்னும் ஒட்டியிருந்தது. என்னை மன்னித்துவிடு! என்னுடைய தவறுதான். அதற்கானத் தண்டனையை நான் அனுபவித்தேத் தீரவேண்டும்.
வலுத்த ஊளை போலக் கத்திச் சிரித்தாள் அவள். எதற்காக ஒரு ஆட்டினைப் போல பரிதாபகரமாக என் முன்னே நிற்கிறாய்.
என்னுடைய தவறு! என்னுடைய தவறு! என் அருமைச்சகோதரியே!
ச்ச்சீ...! அவனது குரல் போலவேக் கேலி செய்து எக்களித்தாள்.
ஒரு ஆண் மகனைப் போல தலை உயர்த்தி நிமிர்ந்து உன்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை இல்லையா!
உனக்கு என் உடல் வேண்டும். அதைக் கேட்க தைரியமின்றி, என் ஆன்மாவைக் குற்றம் சுமத்தி, மீட்பு! கடவுள்! சொர்க்கம்! என்று பாசாங்கு செய்கிறாய் இழிபிறவியே!
என்ன ஆன்மா! கனவுலகில் உழல்பவனே. ஒரு பெண்ணின் ஆன்மா அவளின் உடல். உனக்குத் தெரியும். உனக்குத் தெரிந்தும் ஒரு ஆண்மகனாய், உன் கைகளால் அதனைத்தழுவிப் பற்றி முத்தமிட உனக்குத் தைரியமில்லை. முத்தமிட்டு எனக்கான மீட்பை உன்னால் தரமுடியுமா!
நான் உனக்காகவே வருந்துகிறேன். உலகிலுள்ள எல்லாவற்றை விடவும் உன்னைத்தான் அதிகம் வெறுக்கிறேன்.
நீ அந்த ஏழு சாத்தான்களால் பீடிக்கப்பட்டிருக்கிறாய் பெண்ணே! ரத்தம் உமிழும் கண்களுடன் இளைஞன் சுவற்றைப் பற்றிக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டிக் கொண்டு அழுதான். உன்னுடைய அதிஷ்டமற்றத்தந்தை சொன்னது சரிதான்.
தலையணைக்கருகில் இருந்த சிவப்பு நாடாவை எடுத்து தலைமுடியைக் கோதி முடிந்து கொண்டவள், சற்றே அலட்சிய பாவத்துடன் நடுங்கிக் கொண்டே அவனைப்பார்த்தாள். எல்லாம் ஸ்தம்பித்து நின்றது. அது ஏழு சாத்தான்கள் அல்ல, மேரியின் மகனே! அது என் ஏழு புண்கள். பெண் ஆழமானப் புண்கள் கொண்டத் தெருநாய். தன் புண்களை நக்கி நக்கி, ஆசுவாசம் தேடும் ஒரு எளியபிறவி. தன்னைத்தானே உண்பதைத் தவிர அவளுக்கு வேறு மகிழ்ச்சிகள் இல்லை!
சிந்தும் கண்ணீரைத் தன் உள்ளங்கைகளால் துடைத்தவள், அவனை வெறிகொள்ளப் பார்த்தாள்.
எதற்காக இங்கு வந்தாய்! என்ன வேண்டும் என்னிடம்?
எதற்காக என் படுக்கையறையில் என் முன்னே இப்படிக் கேவலமாக நிற்கின்றாய்?
போய் விடு! இங்கிருந்துப் போய் விடு!
இன்னும் அருகில் அவளிடம் வந்த இளைஞன், மென்மையானக் குரலில் திரும்பவும் மன்றாடினான்,
மேரி! நாம் குழந்தைகளாக இருந்த நினைவுகளை ஞாபகப்படுத்திப்பார்?
எனக்கு எதுவும் ஞாபகமில்லை! என்ன மாதிரியான ஆள் நீ! திரும்பத் திரும்ப ஏதேதோ என்னிடம் உருட்டிக் கொண்டிருக்கிறாய். நீ வெட்கப்பட வேண்டும். உன் சொந்தக் கால்களில் நிற்கும் தைரியம் உன்னிடமில்லை. ஒன்று நீ உன் அம்மாவைத் துணைக்கழைப்பாய். அவளின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சமாதானம் ஆவாய்! இல்லையென்றால் நான்! இல்லையேல் உன் கடவுள்! இப்படி ஏதாவதொன்றை சாக்கு வைத்துக் கொள்வாய். உன்னுடைய சொந்த ஆன்மாவை, உன் உடலைத் தொட்டுணரும் தைரியம் உனக்குண்டா! உனக்கு எல்லாம் பயம்! எதையும் நேருக்கு நேர்க் கண்டுணர்வது உன்னால் முடியாது. நீ ஒரு தந்திரமானக் கோழை. எல்லாவற்றையும் சிக்கலாக்கிக் கொண்டு உனக்கானப் பொய் உலகை உருவாக்கிக் கொள்கிறாய். நீ சொல்லும், புனையும் கதைகளில் உன்னைப் பலப்படுத்திக் கொள்கிறாய். இன்னும் பலப்பலப் பொய்களில் நீ விரும்பும்படி உன் ஆளுமையை, இருப்பை ஸ்தூலப்படுத்திக் கொள்கிறாய். அதை முழுமையாக நீ என்றே நம்பிக் கொண்டிருக்கிறாய். உனக்குத்தெரியுமா! உன் பொய் உலகு ஒரு தூசுத்துகள். உனக்கு விருப்பமானவர்களிடம், நீ நேசிப்பவர்களிடம் உன் பொய் உலகை உண்மை என நம்ப வைக்கப் பாடுபடுகிறாய். அவர்களும் உன்னை அப்படியே நம்பி விடுகிறார்கள். ஆனால் அது அப்படியல்ல! அவர்கள் உன்னை நம்புவது நீ காட்டிக் கொள்ளும் பொய்களுக்காக அல்ல! உன்னை! உன் உடலை! உன் ஆன்மாவை! உன் அழியாத உண்மையை! அவர்கள் அறிந்ததனால் மட்டுமே உன் பொய்யுலகில் நீ இன்னார் என நம்பிக் கொண்டிருப்பது போலவே, அவர்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். தன் முகத்தில் தானே காறி உமிழ்வதைப் போல நீ உன்னையும், உன் அருகிருப்பவர்களையும் வேதனைக்குள்ளாக்குகிறாய்! அது உனக்குத் தெரியுமோ! தெரியாதோ! என்று கூட எனக்கு சந்தேகமாய் இருக்கிறது. இங்கிருந்து தப்பித்து பாலைவனத்திற்குச் சென்று உன்னைப் புதைத்துக் கொள்வாய். கடவுளின் சொர்க்க ராஜ்ஜியம்! உன் கனவுகள்! லட்சியங்கள் எல்லாம் சாத்தியமாகிவிடும் என்று யாரிடம் உன் புரட்டுகளை விளக்குகிறாய். உனக்கு பயம். உன்னைக் கண்டால், உன் உடலினால் பயம்! அதன் கட்டுப்படுத்த முடியாத தன்மையினை உன்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு பழி! பாவம்! மீட்பு! இரட்சிப்பு! கடவுள்! என்று என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டு மணலிற்குள் முகம் புதைத்துக் கொள்கிறாய்.
நான் உன்னை வெறுக்கிறேன் கோழையே! பாவப்பட்டவனே! உன்னை நினைக்கும் பொழுதெல்லாம் என் உள்ளம் ரெண்டாகப் பிளந்து விடுகிறது. தன்னைத்தானே நேருக்கு நேர் பார்க்க முடியாத ஒருவன் கடவுளிடம் கூட பாசாங்குகளின் சொற்களால் தான் பேசிக் கொள்ள முடியும் எனதருமை நண்பனே!
தாரை தாரையாக இரு கண்களிலும் கண்ணீர் அவள் கன்னங்களைப் படர்ந்து வடிந்து கொண்டிருந்தது. சன்னதம் வந்தது போல அவளின் சொற்கள் அதிர்ந்து கொண்டிருந்தது.
பயம்! கடவுளிடம் இருக்கும் பயத்தை ஒழித்தால் ஒழிய அவனால் எதுவும் செய்யமுடியாது. உண்மையில் அவளின் கண்ணீரைத்துடைத்து, கரங்களைப் பற்றிக்கொண்டு, தன் மடியில் இருத்தி தன் விரல்களால் அவள் தலைக் கோதி ஆறுதல் சொல்லவேண்டும். பின் அவளையும் கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்ல வேண்டும் என்றுதான் அவனும் நினைக்கிறான்.
ஒரு ஆண் மகன் உண்மையில் அதைத்தான் செய்வான். அவளைக் காப்பாற்றுவது என்பது அதுதான். நோன்புகளும், பிரார்த்தனைகளும், மடாலயங்களும் ஒரு பெண்ணுக்கு என்ன செய்துவிட முடியும். அது உண்மையில் அவளை எந்த வகையில் மீட்டுக் காப்பாற்றும். அவளை இங்கிருந்து கூட்டிச்சென்று, மிகத் தொலைவிலான ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு மரப்பட்டறையை அமைத்துக் கொண்டு , எங்களுக்கே எங்களுக்கான கூட்டில் ஒரு கணவனும் மனைவியுமாக வாழ வேண்டும். பிள்ளைகள் பெற்று, பந்தங்களில் உழன்று, பிரிந்து, கூடி, மகிழ்ந்து மனிதப்பிறவிகளாய் உயிர்ப்புடன் இருக்கவேண்டும். அதுதான் பெண்ணைக்காப்பாற்றும், அவளை இரட்சிக்கும் ஆணுக்கான ஒரே வழி!
இருள் இறங்கியிருந்தது. தூர தூரத்தில் இடி முழக்கங்கள். மின்னல் மிணுக்கம் கீறிக் கொண்டு அறையினுள் வெட்டித் தெறித்தது. கொந்தளிப்புகள் இன்னும் அடங்கவில்லை. மேரியின் தளர்வான மூக்குறிஞ்சல்கள். இன்னும் வெகு அருகில் இடிச்சப்தங்கள். கோடையின் முதல் மழையின் முதல் முகிழ்த்தலின் கிளுகிளுப்புகள்., வானின் முதல் முத்தம், பூமியைத் தொடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. திரைச்சீலையின் அலைவுறுதலுக்கைடையே இரு ஸ்தம்பித்த ஓவியங்கள் போல அவர்கள் அசைவற்று நின்று கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக