வார்த்தைகளின்றி தடுமாறியத் துறவி, வானத்தை நோக்கினார். பறவைகள் கூடடைகின்றன. இருள் சூழ்ந்து நிழலுருக்களாய், மனிதர்களின் காலடியிலிருந்து இரவு தொடங்கிக் கொண்டிருந்தது. தேங்கிக் கிடந்த அந்த நாளும் மெது மெதுவாய் முடிந்துக் கொண்டிருந்தது. தன்னால் விவரிக்க முடியாத ஒன்றிடம் மண்டியிடுவது ஒன்றுதான் அவருக்கு வாய்த்திருந்தது.
அனல் கொதிப்பது போல அவரின் அகம் கொப்பளித்தது. நாட்கள் கடந்தன. காலங்கள் கழிந்தன. எத்தனை சூரியன்கள், அந்திகள், இரவுகள். நிலவொளியின் காலமற்ற நீள்ப் பாதைகளில் முடிவேயில்லாத அலைச்சல்கள். குழந்தைகள் பெரியவர்கள் ஆனார்கள். நரை கூடி கிழடு தட்டி இறந்தார்கள். மலைகள் பொடிந்து வெற்று நிலங்களானன. கடல் வற்றிப் மணல் மேடுகளானது. ஆனால் எதுவுமே நிகழவில்லை. இன்னும் நம் காத்திருப்புகளின் சீழ் வடிந்து கொண்டிருக்கிறது. ஆறாத காயத்தினைப் பத்திரப்படுத்திக் கொண்டு இரவும் பகலுமாய், வெயில் குடித்துக் கொண்டிருக்கும் இந்நிலத்தின் வழியற்ற மேடுகளில் ஒரு ஓணானைப் போல அலைந்து கொண்டிருக்கிறது நம் நம்பிக்கைகள்.
என் மகன்! உடைந்த குரலில் மேரி பிதற்றினாள்! தந்தையே! என் மகன்!
அவன் ஒருத்தனல்ல. மற்ற பிள்ளைகளைப் போல அல்ல உன் மகன்!
சற்று அழுத்ததுடன் அதையே திரும்பச் சொன்னார் முதியவர். சில சமயங்களில் யாருமற்ற தனிமையில் அவன் அமர்ந்திருக்கும் பொழுது இருளிலிருந்து ஒளியை நோக்கிய அவனது முகத்தை நான் பார்த்திருக்கிறேன். நான் அவனை அணுதினமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். உண்மையில் அவனை உளவு பார்த்தேன். கடவுள் என்னை மன்னிகட்டும். ஆனால் என்னால் எதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை. இன்னும் இன்னும் குழப்பத்திற்குள்ளானேன். எந்த வரையறைக்குள்ளுமில்லாத அவனது செயல்கள். அவனது ஆட்படுதல்கள். வெளிறிப் போயிருக்கும் அவனது முகம், நோன்பினாலோ, பிரார்த்தனைகளாலோ அல்ல. ஒரு ஒளி! அதனைத்தான் திரும்பத் திரும்ப என்னால் சொல்ல முடிகிறது. அந்த ஒளியினுள் உட்கிரகிக்கப்பட்டு மூழ்கிக்கொண்டிருக்கும் தீட்சண்யமான முகம். ஆம்! அவன் மூழ்கடிக்கப்படுகிறான். உருகியோடும் அவனது ஆகிருதி! அவனது இருப்பென்பது ஒரு நீர்மம் போல அலையாடிக் கொண்டிருக்கிறது. அலைகள் காலமேயற்று நிலத்தைப் பற்றிக் கொள்ளுமே! அது போல அவனை இருள் வெளியிலிருந்து ஒளி, தன் பல்லாயிரம் கரங்களால் பற்றிக் கொண்டிருக்கிறது. ஒரு சமயம், ஏதோ கைதவறிக் கடலினுள் விழுந்து விட்டப் பொருள் போல, ஒவ்வொரு அலைதலுக்கும் வந்து வந்து போகும் அவனது அகம், மறுசமயம் தலைகீழாக அப்பொருளைத் துடிக்கத் துடிக்கக் கரையில் விடுவதும் உட்கொள்வதுமாய் போக்கு காட்டிக் கொண்டிருந்தது.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மேரி! தன் மகனைத் தேடினாள். அவனது நொய்ந்த உடலை, கன்னங்களைத் திரும்பத் திரும்ப முத்தமிட விரும்பினாள். ஐயோ! வாழ்நாள் முழுவதற்குமான துன்பத்தின் சம்மாட்டையல்லவா! அவன் ஏந்தத் துடிக்கிறான் என்று தனக்குள் வாதிட்டாள்.
குனிந்து மேரியின் காதுகளில் முணுமுணுத்தார், முதியவர்.
தாங்கிக் கொள்! மேரி!
இறைவனே மிகப்பெரியவன். அவனது வழிப்பாதைகள் கடினமானவை. அது உன் மகனாகவும் இருக்கக்கூடும்.
ஆனால் அந்த துரதிஷ்டவசமான அன்னைக்கு உடைந்து அழுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. என் மகனிடம் சிறிதளவேனும் கருணை காட்டக் கூடாதா! உங்கள் தயை பொருந்தியக் கடவுள். எல்லோரையும் போல என் மகனும் ஒரு சாதாரணனாக இருக்கக்கூடாதா. ஒரு தச்சனின் பிள்ளையாக, மரச்சாமான்கள் செய்து கொடுக்கும் எளிய வேலையை அவன் செய்யக் கூடாதா. எல்லா ஆண் மகன்களைப் போல என் பிள்ளையும் ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணை மணந்து பிள்ளைகள் பெற்று ஒரு எளிய வாழ்வினை வாழ்ந்து விடக்கூடாதா! நான், என் பிள்ளை, என் பேரப்பிள்ளைகள் என அனைவரது வாழ்விலும் நிகழும் ஒரு இயல்பான பிறவியைத் தானே நானும் வேண்டுகிறேன். ஏன்! என் பிள்ளையை மட்டும் நான் இக்கடவுளுக்கு, என் சொந்தக்கைகளாலேயே பலியிடும் ஒரு அவல நிலையை எனக்களித்தார், மாட்சிமை பொருந்திய இத்தூயக் கடவுள்! ஒரு அருவி போலப் பொழிந்தாள் அவ்வன்னை!
கடவுளைப் பழிக்காதே! உலகிலுள்ள எல்லா அன்னையர்களின் வேண்டுதல்களுக்கு செவி சாய்ப்பதென்றால் கடவுளின் திண்மம் என்னவாக வேண்டும். தனித்து நாம் விவாதித்துக் கொண்டதை மறுபடியும் நினைத்துப்பார். சகோதரி!
தன் சகோதரனிடம் விடைபெற எண்ணியவள், அருகில் உள்ள அறையில் சுவற்றைப் பற்றிக் கொண்டு நிற்கும் ஜோசப்பைப் பார்த்தாள். கலங்கியக் கண்களுடன் ஏதோ சொல்ல நினைத்து வெறித்தவரின் வாயிலிருந்து சொற்கள் முறிந்து திக்கி நின்றன.
அவரது அருகில் சென்ற மேரி தலையைக் குலுக்கிக் கொண்டே, ஒரு துணியால் எச்சில் வடியும் வாயைத் துடைத்தாள். காலையிலிருந்து போரடிக் கொண்டிருந்த சொல், இன்னும் அவரது வாயிலிருந்து வராமல் தழுதழுத்தது.
வெளியே செல்ல எத்தனித்து வாயில் கதவைத் திறந்தார் முதியவர், முற்றத்தில் ஜீசஸ். தலையில் ரத்தம் தோய்ந்த துணியுடன், சோர்ந்த பித்துக் கண்களுடன் நின்று கொண்டிருந்தான். இருளின் துணுக்குகளுக்குள் அவனது முகம், அகோரமாய்த் தெரிந்தது. வெகு நேரம் அழுது சிவந்து வீங்கியிருந்தனக் கண்கள். தோள்களில் ரத்தம் கன்றியிருந்தது. முழங்கால் வரைப் புழுதி படிந்திருந்தது. ரத்ததின் கணுக்கள் அவனது உடலெல்லாம் முளைத்திருப்பதைப் போல தன்னை உதறிக் கொண்டே இருந்தான். புழுதிப்படலம் அவனது உடைகளிலிருந்து இருளைத் தெளித்துக் கொண்டிருந்தது.
ஆழ ஊன்றி உள்ளே நுழைந்தவன் தன் அன்னையையும், துறவியையும், உள்ளே மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் தன் தந்தையின் சோபையான கலங்கல் கண்களையும் ஒருங்கே கண்டான்.
விளக்கை ஏற்றி விட்டு மேரி, அவனை ஏறிட்டாள். அவளை செய்கையால் தடுத்து, முதியத்துறவி ஆழ்ந்த சன்னமான குரலில் அவனிடம் கேட்டார்.
ஜீசஸ்! என் அன்புக் குழந்தையே! இன்னும் எத்தனை நாட்கள் நீ அவரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கப் போகிறாய்.
"நான் சாகும் வரை" ஜீசஸ் அந்த வீடே அதிரும்படி ஓங்கிக் கத்தினான்.
தன் முழு சக்தியையும் இழந்தது போல வாசலின் அருகிலேயேத் தளர்ந்து விழுந்தான். முதியவர் அவனிடம் தொடர்ந்து பேச விளைந்தார். ஆனால் அவனை அணுகியதும் நடுக்கம் கொண்டவர் போலப் பின்வாங்கினார். கனன்று கொண்டிருக்கும் ஜ்வாலை! இது கடவுள்! அவனைச்சுற்றி தீப்பொறிகள் நிழலாடுகின்றன. அவரைத் தவிர யாரும் அவனை அணுகமுடியாது. நான் செல்வதே உகந்தது என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து வீதியை நோக்கி நகர்ந்தார்.
கதவை அடைத்து விட்டவள், விளக்கைத் தூண்டித் தன் மகனின் தளர்ந்து கிடக்கும் உடலைப் பார்த்தாள். ஆனால் கொதித்துக் கொண்டிருக்கும் ஒரு ஊன் மிருகத்தின் நெடி! அவனுள் முணகும் அதன் மூச்சு! நடுவீட்டில் அடிபட்டு அயர்ந்து கிடக்கும் அந்த ராட்சச விலங்கு தனக்குள்ளேயே பொருளற்ற விசும்பல்களாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தது. தன் கணவனின் இருமல் ஒலி, இன்னும் அவர் சொல்லத் துடிக்கும் வார்த்தைகளின் தத்தல்கள். ஏதோ ஒன்றினால் ஆட்பட்டுக் கொண்டிருக்கும் தன் மகன்? அந்த ஒன்று யார்? எது?.
தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு புலம்பினாள். ஒரு தாயாக என்னிடம் கூட உன்னால் கருணை காட்ட முடியவில்லை அல்லவா! கடவுளே! என்றுக் கதறினாள். ஆனால் பதில்களேதுமற்று, சுவர்க்கோழிகளின் நீட்சியடைந்த அகவல்கள் மட்டும் நிறைந்து கேட்டுக் கொண்டிருந்தது.
தன் ஒவ்வொரு நரம்புகளும் துடித்துக் கொண்டிருப்பதைத் தன் காதுகளாலேயே அவளால் கேட்க முடிந்தது. நிலைவேயற்ற ஒரு சன்னதம் போல அவள் இழுத்துக் கொண்டிருந்தாள். அழுகையும் விம்மலும் நிறைந்து, விளக்கொளியில் பாளம் பாளமாய்த் துளிர்த்தது. அந்த மனிதர் தன் முழு உடலும் அதிரும்படி, இழுத்து இழுத்து அச்சொல்லை உமிழ்ந்தார்! தெய்வமே!. பின் தலைக்குப்பற ஒரு உயிரற்றப் பொருள் போல சாய்ந்து விழுந்து அப்படியே உறங்கிப் போனார்.
பாம்பு தோலுரிப்பதைப்போல, அனைத்தையும் உரித்துக் கொண்டு, அடுக்களைக்கு சென்ற மேரி, விளக்கினைத்துளிர்த்து, அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் பானையில் இருக்கும் உணவில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக