வியாழன், 17 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -17

   


 ரகசியத்தின் மர்மம் பொதிந்த காற்றின் அதீத சிலுசிலுப்பு அக்குரலில் இருந்தது. உடைந்தழுவது போல அம்முதியவளின் கைகள் நடுங்கின. நீ எனது பிரார்த்தனை. என் ஜீவன் முழுவதுற்மான ஆசி, என்று அவனின் அம்மண உடலைப் பார்க்க சகியாது ஒரு பாறையினைப்பற்றி சாய்வாகத் திரும்பி நின்று கொண்டாள்.

    வெளிச்சத்தில் அடிமைகளின், வேட்டை நாய்களின் பசியேறிய நிழலின் கருமை, ஒரு சிறுத்த உருவமாக நிலத்தில் ஆவி எரியக் கிளர்ந்தது.

    நூற்றுவர் தலைவனான, அந்தப் படைவீரன் தன் திடமான கால்களை ஊன்றி, கைகளிலிருந்த சவுக்கினால் மக்கள் திரளை நோக்கித் தரையில் அறைந்தான். தூசும் மண்ணும் கலந்தப் புழுதி ஒரு பழுப்புப் படலமாக வெளியைக் கலக்கியது. கட்டளை பிறப்பிக்கும் தொனியில் எபிரேயக் குடிகளைப் பார்த்து முழங்கினான், ஒரு தற்காலிக மௌனம் அனைவரையும் உடனடியாகத் தொற்றிக் கொண்டது.

    வானிற்கு கீழே தன் சொந்த உடலன்றி ஏதுமற்று நின்று கொண்டிருந்தான் தண்டனைக்குரியவன்.

    இவன், ரோமப்பேரரசிற்கு எதிராக கை உயர்த்தியவன். மாட்சிமை பொருந்திய சின்னமான அதன் கழுகு இலட்சினையை உடைத்த கும்பலுக்கு தலைமை வகுத்தவன். பின் மலைக்குன்றுகளுக்குள் பதுங்கிக் கொண்டவன். தவறான நம்பிக்கைகளை மக்களிடம் பரப்பியவன். அரசிற்கு எதிரான கலகப் புரட்சிக்காக மக்களைத் தூண்டியவன். வேறென்ன! தங்களின் ஒரே மீட்பன் உதித்தெழுந்து ரோம் ராஜ்ஜியத்தின் ஏகாதிபத்தியத்தின் குடல்களை உருவி மாலையாக்குவான் என்று பொய்யான சூளுரைகளால் மக்களைத் திசை திருப்பியவன். எனதருமை எபிரேயக் குடிகளே! அரசத்துரோகம், கொலை, கிளர்ச்சி இக்குற்றங்களுக்காக இவனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம். நீங்களே கூறுங்கள்!

    மக்கள் திரள் தங்களுக்குள் குமுறினர். நாட்பட்ட புண்ணில் திரும்பத் திரும்ப கூர் நுனிகளால் கிளறுவதைப் போல அதிர்ந்தன அவர்களது உடல்கள். படைவீரன் நிற்கும் மேட்டு நிலத்தை நோக்கி ஆவேசத்துடன் முன் ஏகியும், தளர்ந்து பின் நோக்கியும் அவர்கள் அலைந்தது, அளவிட முடியாத கடல் அலைகளின், மீட்கவே இயலாத மன்றாட்டுகள் போல கரை பற்றுவதும் பின் உள்வாங்குவதுமாய் இருந்தது.

    வெறிக்கூச்சலுடன் அவ்வீரன் திரளைநோக்கித் தன் குதிரையை முடுக்கினான்.

    உங்களிடம் தான் கேட்கிறேன், முட்டாள் ஜனங்களே! என்ன தண்டனை! கிளர்ச்சி, கொலை, துரோகம்!

    தன்னுள் அடக்கமுடியாமல் கை உயர்த்தி, ஒரு கானகமிருகம் போலக் கதற முயன்றது ஒரு குரல். அதற்குள் பராபஸ், செந்தாடிக்காரனின் வாயைப் பொத்தி அமிழ்த்தினான்.

    வெளிவராத அச்சொல், உலோகக் குமிழ்கள் அமிழ்வது போல அவனது நெஞ்சுக்கூட்டிற்குள் அதிர்ந்து கொண்டே இருந்தது.

"அழிக்கமுடியா சுதந்திரம்"

    ஆழ்கடலின் நிசப்தம். வெகுநேரம் குறிப்பிட்ட ஒலிகளற்ற சலசலப்பும், பெருமூச்சுக்களும். திடீரென ஒரு உரத்தக்குரல் எழும்பியது. நிசப்தத்தில் ஒரு பேரலைப் போல. முதியதுறவி, கொல்லனின் தோள்களில் அமர்ந்து கொண்டு தன் குச்சி போன்ற  நடுங்கும் கைகளை உயர்த்திக் கதறினார். தன் உடலின் உறுப்புகளைத் தன் கைகளாலேயே வெட்டிக் கொள்ள எத்தனிக்கும் பாவம் அவரது நடுக்கத்தில். ஒரு மன்றாட்டும்! சாபமும்! .

"ஆம்! தண்டனை!

அறிவியுங்கள்! மேதமை பொருந்திய அரசே! அறிவியுங்கள்!" 

    என்ன சொன்னாய்? ஒழுங்காகக் கவனிக்காத படைத்தலைவன் திரும்பவும் தன் சேணையை முடுக்கி முன்னே வந்து காதுகளைக் கூர்ந்து கேட்டான்.

கூட்டம் சலசலத்து அடங்கியது. அனைவரும் மூர்க்கித்து நிற்பது போல பிரமை. 

"மேதமை பொருந்திய அரசே!" தான் எரிந்தடங்குவது போல தன் இரு கைகளையும் வானிற்கு நீட்டி, அக்காற்று வெளியில் தான் தான் சிலுவையில் அறையைப் படப்போகிறோம் எனும் அதீத உவகையில், தன் தெய்வத்தின் சொல்லாக, தன் ஜனங்களின் சொல்லாக திரும்பத் திரும்ப காற்றின் திசையை நோக்கி உரக்கக் கூவிக் கொண்டே இருந்தார் முதியவர்.

    குதிரையை விட்டு மெல்ல இறங்கிய படைத்தலைவன் கையிலிருந்த , சேணைக்கொம்பினை அதன் வார்ப்பட்டையில் பொருத்திக் கொண்டு சவுக்கைக் கைகளில் சுருட்டி முறுக்கிக் கொண்டு, கனத்த காலடிகளுடன் மக்கள் திரளை நோக்கி வந்து கொண்டிருந்தான். கைகளில் இரு கற்களை உரசி விளையாடும் லாவகத்தில் அவன் வருவது ஏதோ ஒரு பசித்த வன்மிருகம், இரைக்காகப் பதுங்கிக் கொண்டு மெல்ல மெல்ல அடி வைப்பதைப் போல இருந்தது. கூட்டம் ஒருமித்து மூச்சு விடக்கூடப் பயந்து ஸ்தம்பித்து நின்றது. நிசப்தத்தில் கீறுவதைப்போல, வெட்டுக்கிளிகளின் நரநரப்பும், அமைதியற்ற காக்கைகளின் கரைதலும் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

    இன்னும் இரு தப்படிகள் நடந்து வந்து நின்றான் அவன். வியர்வை வழியக் கன்றிப் போன முகங்களை, துவைக்காத அவர்களின் கந்தல் உடுதுணிகளை, துர்நாற்றம் பிடித்த உடல்களைக் கடக்கும் பொழுது தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான். ஆஹ்! யூதர்கள்!. கொல்லனின் தோள்களின் மேலே அமர்ந்து கீழே நிற்கும் படைத்தலைவனை ஏறிட்டார் முதியவர். தனக்குள் உண்மையில் மகிழ்ச்சி மேலிட மென் நகை புரிந்தார். இத்தருணம், இதற்காகத்தானே நான் என் வாழ்நாள் முழுதும் காத்திருந்தேன். ஒரு தீர்க்கதரிசியைப் போல நான் கொல்லப்படவேண்டும் என்பதே என் ஒரே லட்சியமாக இருந்தது என்று நினைத்து கண்ணீர் உகித்தார்.

    அலட்சியமாக, நமட்டுச்சிரிப்புடன் முதியவரை அணுகிய அந்த வீரன், முடிந்த அளவுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். இந்தக்கிழவனைக் கொல்ல ஒரு கணம் போதும், உயர்ந்த முஷ்டியை அடக்கிக் கொண்டு பற்களைக் கடித்துக் கொண்டான். ஆனால் அதுவல்ல ரோம் அரசின் நோக்கம். இந்த கிழட்டு ஜந்துவைக் கொல்வது மறுபடியும் ஒரு கொரில்லா யுத்தத்திற்குத்தான் வழி வகுக்கும். எதற்கும் வளைந்து கொடுக்காத இந்த முட்டாள் யூத ஜனங்களைப் பின் கையாள்வது மிகவும் கடினமாகிவிடும். ஆத்திரம் பொங்கத் தன் கைகளில் இருந்த சாட்டையை முறுக்கித் தரையில் அறைந்தான்.

    துறவியே! உன் முகத்தில் தெரியும் இந்த பயம். இது என்னால், எங்களின் ரோம் ஆட்சியால் தானே வந்தது. கவலைப்படாதே! உனக்கு கசையடிகள் கொடுக்கும் நோக்கம் எனக்கில்லை. நீ உணர்வதை, சொன்னதை நான் தெளிவாகக் கேட்டேன். அதையே கட்டளை இடுகிறேன்!

    அவன்  சிலுவையின் இருபுறமும் தயாராக நின்று கொண்டிருந்த அடிமைகளை நோக்கி கை உயர்த்தி உரக்கக் கத்தினான். 

"ம்ம்ம்! அறையுங்கள்! அந்தத் துரோகியை சிலுவையில் அறையுங்கள்!"

    ஆம்! நானும் அறிவித்து விட்டேன்! முதியவர் நடுங்கும் குரலில் அவனிடம் சொன்னார். ஆனால் இன்னும் ஒருவருடைய சொல் இருக்கிறது. அவருடைய ஆணை இன்றி எதுவும் நிகழாது.

யார்? அரசனா?

இல்லை. கடவுள்!

    மூர்க்கமாக இளித்துக் கொண்ட அவன், என் சொல்லே இந்நகரை ஆளும் அரசனின் சொல். அரசனின் சொல்லே தெய்வத்தின் வாக்கு. ஆம்! ரோமானியத்தெய்வங்களின் கட்டளை முற்றிலுமாக பிறப்பிக்கப்பட்டு விட்டது.

    சவுக்கினை முஷ்டிகளில் முறுக்கி,  பாதைகளில் கிடந்த கற்களையும், முட்பூண்டுகளையும் கால்களால் எத்தி எத்தி, உயிருள்ள ஒன்றை சாகும் மட்டும் மிதிப்பது போல அறைந்து கொண்டே நிலம் அதிர நடந்தான்.

    கூட்டத்தில் இருந்த ஒரு கிழவனார், மேகங்களற்ற வானத்தை நோக்கி கைகளை உயர்த்திக் கதறினார். கொடூரனே, உனக்கும் உன் சந்ததிகளுக்குமாக சேர்த்து அழியாத பாவத்தின் சுமையினை ஏற்றிக் கொண்டு விட்டாய்! நரகத்தின் பாழ்க்குழியில் வெளிவர வழியே இல்லாது நீ துடிதுடித்துக் நொதிப்பாய்! என்று சாபமிட்டு நிலத்தில் காறி உமிழ்ந்தார். 

    குதிரைவீரர்கள் சிலுவையினைச் சுற்றி வளைத்து நின்றனர். கைகளில் பிடித்திருந்த குத்தீட்டிகளிலால் நிலமதிர அறைந்தனர். அதிர அதிரப் புழுதியேறி அச்சூழலே ஒரு செம்பழுப்புப்படலமாக உருமாறியது. என்ன நிகழப் போகிறதோ என்கிற பதற்றத்தில் ஆண்களும், பெண்களும் தங்கள் குதிகால்களை உயர்த்தி, சதுக்கம் போல இருந்த மேட்டு நிலத்தைப் பார்த்தனர். நடுங்கும் கரங்களைக் கூப்பி முகத்தை பொத்திக் கொண்டு வேதனையுடன் முணகினர். எந்த சமிஞ்சைகளும் இல்லாத வெளிறிய வானத்தை அண்ணாந்து நோக்கினர். அற்புதங்கள் நிகழ வேண்டியத் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பேரிளம் பெண், தன் கரங்களை முகத்தில் கவசம் போல மூடிக் கொண்டுக் கதறினாள், பல்லாயிரம் வண்ண சிறகடிப்புகளின் எதிரொலிகளைக் கேட்டு விட்டது போல சன்னதம் வந்துக் கூவினாள். ஏதோ ராட்சசமிருகத்தின் இறுதி ஓலம் போல அமுங்கி அமுங்கி எகிறியது அவளது கேவல். குதிரைகளின் பொறுமையற்ற குளம்படிகள், வீரர்களின் அலைவுறுதலுக்கிடையில் நொடிக்கணம் முதியதுறவி அவனைப் பார்த்தார். அது காலாதீதமானக் காட்சி, அவர் தன் வாழ்நாளில் மீள மீளக் கண்டு கொண்டேயிருப்பது. நிர்கதியற்ற அவனின் அம்மண உடலை காலங்கள் கடந்து அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு உடல் அல்ல. அவன் ஒருவனல்ல. கடவுளின் சொல்லுக்கு எந்தப் பயனுமில்லை. வக்கற்ற அவனது உதவிகள் வானத்தினுள்ளேயே கருகி அழியட்டும். தலைமுறை தலைமுறையாக நாங்கள் கழுவில் அறையப்பட்டுக் கொண்டே இருப்போம். வானமும் பூமியுமற்ற வாழ்வு எங்களுடையது. கால்களுக்கடியில் இருந்த நிலம் பிளந்து ஆதியந்தமற்ற கரிய இருள் வெளியினுள் நாங்கள் காரணங்களேயற்று புதைந்து விட வேண்டும் என்பதை மட்டுமே எங்கள் இறைவனும் விரும்புகிறான். ஐயோ! இஸ்ரவேலின் ஒரே கடவுளே! இன்னும் உன் செயலற்றத் தன்மையினால் எத்தனை உயிர்களைக் காவு வாங்கப் போகிறாய். இரக்கமற்ற உன் பலி பீடத்தில் எங்களின் எத்தனை உடல்களின் குருதியினால் நனைக்க வேண்டும். தாழ்ச்சியுறுகிறேன்! என்னால் சகிக்க முடியவில்லை! நான் எதையுமே பார்க்க விரும்பவில்லை!

மூர்ச்சையுற்ற முதியவரின் முகம் கோணிச் சுழித்து சாபமிடுவதனைப் போல ஏதுமற்ற அத்துவான வெளியை நோக்கி இறைஞ்சியது.

    மேரியின் மைந்தன், எதிரில் அதே பாறையில் தன் தலையை நிலத்தில் புதைத்து, கைகளால் காதுகளை இறுக்கிக் கொண்டு மேலும் மேலும் அங்கு நிகழ்வதிலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் உடலால் தன்னைத் தானேக் கட்டிக் கொண்டான். இரு ரோமன் அடிமைகள் புரட்சியாளனை பிடித்திழுத்து வந்தனர். பாதுகாவலர்கள் அவனை முன்னும் பின்னும் உலுக்கி சிரித்துக் கொண்டே, வசைகளைப் பொழிந்தனர். ஒருவன் வன்மத்துடன் அவன் முகத்தில் காறி உமிழ்ந்தான். நிலத்தில் மீனைப் போலத் துடித்துக் கொண்டிருந்தவனை, சிலுவையில் கட்டுவதற்கு அவர்கள் போராடிக் கொண்டிருந்தனர். வேட்டை நாய்கள் இந்தக் களேபரத்தினுள்ளும் ரத்தம் தோய்ந்த அவனது கால்களை முகர்ந்து நக்கின.

    "தைரியம் கொள் என் மகனே" அந்த முதிய அன்னை விதிர்விதிர்த்துக் கதறினாள். வெட்கப்படாதே! இறைவனின் ஆணை அதுவெனில் நிறைவேறட்டும்!. என்று சொல்லி அடங்கியவள், வேரோடு மரம் காற்றில் இளகி சாய்வதைப் போல நின்ற இடத்திலேயே சரிந்து விழுந்தாள்.

உன்னதமான அம்முதியவள், கிளர்ச்சியாளனின் அன்னை! மக்காபீஸ் குலத்தின் வழித்தோன்றல். கிழவர் முணுமுணுத்தார்.

    அவனது அக்குள் வழியே உருண்ட பருமனான இரு கயிறுகளைக் கைகளுடன் இறுக்கி, முழு பாரமும் அவனது தோள்களில் சமன் செய்யும் வகையில் மெதுவாக இழுத்து சிலுவையுடன் கட்ட முயன்றனர். அவனது எடை தாங்காது அது அங்கும் இங்கும் ஆடியது. குழியினுள் சரியாகப் பொருந்தாததால் விழுந்து விடவும் வாய்ப்பிருந்தது.

அசைவற்று உட்காந்திருந்த மேரியின் மைந்தனை எட்டி உதைத்தான் படைத் தலைவன். சற்றும் எதிர்பாராது நிலைகுலைந்த இளைஞன், தன்னை சமப்படுத்திக் கொண்டு, எதுவும் யோசிக்காது எழுந்து சென்று  மண் வெட்டியால் குழியை சமப்படுத்தி, சில சரளைக்கற்களால் நிரப்பி சிலுவையை நிலைப்படுத்தினான்.

    அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மேரித் தன் உடல் அணுக்களாய் வெடித்துச் சிதறவதாய் உணர்ந்தாள். என் மகன்! என் மகன்! என்று கூவியவள். அவனைத் தடுக்க குதிரைப்படையினரைத் தாண்டிச் செல்ல முயன்றாள். அருகில் நின்று கொண்டிருந்த பீட்டர் அவளை நேருக்கு நேராக பார்த்தும் தன்னைத் தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை. ஜீரவேகத்தில் தன்னைக் கடக்கும் மேரியைப் பிடித்து நிறுத்தி  எங்கு போகிறாய்! போகாதே! வேண்டாம்! அவர்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று சத்தமிட்டாள். அவளின் உறவுப் பெண் ஒருத்தி, 

    என் மகனை எப்படியாவது அங்கிருந்து இழுத்து வந்து விடவேண்டும். உடைந்து நொறுங்குவது போல அழுதாள்.

    அழாதே! அந்த முதியவளையும் பார்! எந்த வித அசைவுமின்றி தன் பிள்ளைக் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாளே!

    நான் அவளுக்கும் சேர்த்துதான் அழுகிறேன்.

    அந்த முதியவள் தன் இத்தனைக்கால வாழ்வில் எந்த இன்பத்தையும் கண்டிருக்கப் போவதில்லை. கொல்பவனின் தாயாக இருப்பதை விட ஒரு பலியாட்டின் தாயாக இருப்பது மேல். அவள் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

    யார் சொல்வதையும் கேட்பதற்கு அவளுக்கு மனமில்லை. மலை உச்சியை நோக்கித் தன் மகனைத் தேடி ஓடினாள், அவளது விம்மலின் எதிரொலி முழு உலகிற்கும் எதிரொலித்தது. புழுதி படிந்து மங்கலாகத் தெரிந்த பாதையின் வழியே குதிரைகளையும், கவசமிட்ட வீரர்களையும் கடந்தவள், சற்று தொலைவில் குத்திட்டு நின்ற புத்தம்புதிய சிலுவையினைக் கண்டாள். அதன் ஒளி பொருந்திய முகடு வானிற்கும் பூமிக்குமாக பாலமிட்டிருந்தது.

    பாதுகாவலர்களில் ஒருவன் அவளைக்கவனித்து விட்டான். தன் ஈட்டியை உயர்த்தி அவளை இங்கிருந்து போ! என்பது போல அங்குமிங்கும் அசைத்தான். நின்றவள் எதிரே குனிந்து, எதிரே நின்றிருந்த குதிரையின் கால்களுக்கிடையிலான துவாரம் வழியேத் தன் மகனைப் பார்த்தாள். கைகளில் மண் வெட்டியுடன் கற்களை சமப்படுத்தி சிலுவை அசையாமலிருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான் அவன்.

தன் ஊனும் உயிரும் பிளந்து சிதறுவதைப் போல அமானுடக் குரலில் கத்தினாள், மகனே! ஜீசஸ்!

அங்கு நிகழ்ந்த அத்தனைக் கூச்சல்களையும் கிழித்துக் கொண்டு அக்குரல் வெளித்தது. அவன் எந்த சலனமுமின்றித் தன் தாயைப் பார்த்த அவனது முகம் இருளடைந்திருந்தது, இன்னும் வேகமாகவும் அழுத்தமாகவும் மண்வெட்டியை நிலத்தில் அறைந்தான்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக