கடவுளின் சொல்! வருடங்கள் செல்லச் செல்ல என்னுள் விதைந்துத் துளிர்த்து விருட்சமாகி விட்டிருந்தது. உவகை கொள்ள எனக்குள் அந்த ரகசியத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்கிறேன். எனக்கு மட்டுமே அருளப்பட்ட அச்சொல்லை ஒரு பிறந்தகுழந்தையைப் பேணுவது போல பத்திரமாக வைத்திருந்தேன், ஆனால் காத்திருப்புகளின் நிலைத்த மௌனம், மீள மீள நடுக்கம் கொள்ள வைக்கிறது. இன்று நம் இதயங்களில் மறுபடியும் ஆணிகள் வெகு ஆழமாக அறையப்பட்டன. என்னால் தாங்க முடியவில்லை. இனிமேலும் எதன் பொருட்டு இஸ்ரவேலத்தின் பிள்ளைகள் நிரந்தரமானத் துக்கத்தில் விழுந்து மரிக்க வேண்டும். ஆனால் நம்பிக்கை! அதன் ஆழமான வேர்களைப் பற்றிக் கொள்வதே நமக்கு சாத்தியமான வழி. அவன் வருகின்ற தொலைவான வழியில் சற்றே இளைப்பாற, தாகம் தீர ஏதோ ஒரு கிணற்றில் நீர் அருந்திக் கொண்டிருக்கிறானா! இல்லை! நம் பசிக்கான புனித அப்பங்களைச் செய்வதில் காலங்கடந்து விட்டதா! ஆனால் அவன் எங்கிருந்தாலும் சரி! சர்வ நிச்சயமாக நம் தேவகுமாரன், நம்மை மீட்க வந்து கொண்டிருக்கிறான். நம் தந்தையின் சொல்லின் மந்திரக்குரல் என்னுள் அதிர்கிறது,
"கேள்! கண்டிப்பாக உன் மெசியாவைக் காணாது உனக்கு மரணமில்லை, உன் சொந்தக்கைகளால் அவனை முதன்முறையாக நீயே தழுவி அணைத்துக் கொள்வாய்! சிமியோன், உன்னிடமிருந்தே அவனின் முகிழ்ச்சி அரும்புகிறது"
ஆனால் எனக்கு வயதாகி விட்டது. நான் வலுவிழக்கிறேன்! என் தெய்வமே! இன்னும் எத்தனை காலம்! எங்கள் மீட்பனின் வருகைக்காக உயிருள்ள பிணங்களாய் நாங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும். என் புலன்கள் செயலிழந்து விட்டன. என் நம்பிக்கைகளில் நாள்பட்ட அழுகல் மணம். நான் வானிற்கும் பூமிக்கும் இடையில் வீசியெறியப்பட்டிருக்கிறேன். உன் சொல் எனும் ஒற்றைத் தோணியைக் கொண்டு, இம்மாபெரும் கடலிற்கு என்னை ஒப்புவித்திருக்கிறேன். என் புலம்பல்களைக் கேட்கிறாயா! தாழ்ச்சியுறுகிறேன்! என்னால் தாங்க முடியாத பாரம் அழுந்துகிறது.
திடீரெனக் கூட்டத்திலிருந்து ஒருவன் முன்னே வந்தான், குள்ளமாகவும், மாறுகண் கொண்டிருந்த அவனின் தலை முடி முழுதும் உதிர்ந்து வழுக்கையாக இருந்தது. தந்திரமான அவனின் பார்வை எங்கு பார்க்கிறான் என்பதை எதிராளிக்குத் தெரிவிப்பதில்லை.
அருட்தந்தையே! ஒரு வேளை நீங்கள் ஆயிரம் வருடங்கள் உயிர் வாழ்ந்தால், எனோச்சையும், எலிஜாவையும் போல உங்களுக்கும் மரணம் என்பதே இல்லாமல் இருந்தால், நாங்கள் என்ன செய்ய முடியும். சற்றே விசனத்துடனிருந்த அவனது கீச்சுக் குரல் கூட்டத்தில் சலசலப்பை உண்டாக்கியது.
அவனைப் பொருட்படுத்தாதது போல நின்று கொண்டிருந்தார் முதியவர். ஆனால் அவனின் சொல் கூர்மையாக அவருள் இறங்கியது. இன்னும் சலனம் அடங்காத முகத்துடன், மக்கள் திரளைப் பார்த்து கட்டளையிட்டார். அனைவரும் செல்லலாம். நான் தனிமையில் இருக்க வேண்டும். என் மன்றாட்டுதல்களை இறைவனிடம் உரைக்க வேண்டும். எல்லோரும் உடனடியாக செல்லுங்கள்.
அனைவரும் சென்ற பின்னான காலி சதுக்கத்தைக் கண்ணுற்றார். வாதிலை இறுக்க சாத்திய பின், தன் வலப்புறச்சுவரில் வரையப்பட்டிருந்த இசக்கியேலின் ஓவியத்தை ஒருவித பரிதவிப்புடன் கூர்ந்தார். கடவுள்! சர்வ வல்லமை பொருந்திய அவனது விருப்பம் அதுவாயின், இந்த வீணன் தாமஸ் சொல்வது ஒருவகையில் சரிதான். இது என்னுடைய விதி! இன்னும் ஆயிரம் வருடங்கள் நான் மரணிக்காமல் இருந்தால், நம் மீட்பர்! நமக்கு கையளிக்கப்பட்ட நிலம்! எல்லாம் கனவாகி விடாதா! நம்பிக்கையின் விதையான தேவனின் சொல்! ஓராயிரம் வருடங்களாக, அன்னைத் தன் கருவினைப் பேணுவதைப் போல ஆப்ரஹாமின் சந்ததிகளால் பொதிந்து பாதுகாக்கப்படுகிறது. இதுவே பெற்றெடுப்பதற்கான இறுதித் தருணமா! நம்பிக்கைகளையன்றி வேறெந்தத் தயவும் எங்களுக்கு அழிக்கப்படவில்லையே! உன் குமாரனின் வருகையின் நிமித்தம் மட்டுமே எங்கள் விலங்குகள் அவிழ்வதற்கான ஒரே வழிப்பாதை. எங்களை விடுவி! எங்களைசொஸ்தப்படுத்து! இஸ்ரவேலத்தின் தெய்வமே! வலியின் நீள் கொடுக்குகள் காலாதீதமாக எங்களைத் தீண்டுகின்றன!
"நீயே பெரியவன்! அனைத்தையும் அறிந்தவன், தயை கூறு"
கூப்பிய கைகளுடன் மண்டியிட்டு அழுது கொண்டிருந்தார் அவர்.
எழுந்தவர், தாக்கியதைப் போல வேகமாக ஆலயத்தை விட்டு வெளியே செல்ல எத்தனித்தார். அந்த நாளும் தேய்ந்து ஓய்ந்தது. ஆலயத்தினுள் நீண்ட பட்டையான நிழல், ஒரு தாவர உண்ணியைப் போல மெல்ல மெல்ல இசக்கியேலின் ஓவியத்தை சவைத்துக் கொண்டிருந்தது. தனக்கு பின்புறமாக தன் உயர்ந்து அகன்றக் கரிய நிழல் உருவில், உடைகள் காற்றில் அசைவதை வெறுமனே பார்த்தார், அது ஒரு கடல்வாழ் உயிரினம் போல அசைந்தது, அது தன் எண்ணற்றத் தூவிகள் போன்றக் கால்களை விரித்து ஆடுகிறது. திடூமென அவரது நினைவுகள் கடந்தகாலத்தில் தோய ஆரம்பித்தது. வெம்மையில் நெழியும் எலும்பற்ற உயிர் நான். எத்தனை முறைகள்! என் பிரார்த்தனைகள்! என் வேண்டுதல்கள்! என் மன்றாட்டுகள்! அழுகைகள்! கதறல்கள்! கலீலியிலிருந்து ஜெருசலேமிற்கும் பின் அங்கிருந்து பாலையின் பாழ் வெளிக்கும் என என் மெசியாவை! மீட்பனைத் தேடி நான் அலைந்து கொண்டே இருந்தேன். ஆனால எல்லா முறையும் சிலுவைகள் மட்டுமே எனக்குக் கிடைத்தன. என் மக்களின் பிணங்களை மட்டுமே உண்டு வாழ்பவன் நான்.
இல்லை! இல்லை! இது சாத்தியமில்லை!
பலமாகத் தலையை உலுக்கிப், புடைத்த நெற்றியை அழுத்தித் தேய்த்துக் கொண்டார்,
தலையில் பறையறைவதைப் போல அழுத்தம் கூடிக் கொண்டு வந்தது. பலப்பல பகலிரவுகளாய் அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ராட்சசக் உகிர்கள். பித்துப்பிடித்தது போல பொருளற்றப் புலம்பல். ஆனால் இது முதல்முறையல்ல. இரவுகளின் காரிருளினுள் தன் மண்டையோட்டினைத் துளைத்து மூளை நரம்புகளைக் குதறும் அதிர்வுகளாய் அக்கூர் உகிர்களை அவர் அனுபவித்திருக்கிறார். ஆனால் இன்று வெறிக்கும் பகல் வெளிச்சத்தில் அது அவரை ஆட்கொண்டது. கட்டுப்படுத்த வழியின்றி பிதற்றிக் கொண்டே இருந்தார். ஸ்தம்பித்த நொடி தலைசுற்றிக் கீழே விழிந்தார்.
ஒரு கனவினைப் போல அவனது உரு, அவரின் இருப்பினைத் துளைத்து அலையாடியது. இன்னும் இன்னும் அருகில் அவனைப் பார்த்தார். அந்த ஒருவன் இவன் தானா! தனக்குள்ளேயே உடலதிரக் கேட்டுக் கொண்டார்.
சற்றே நிதானித்தவர், அருகிலிருந்த சுவரைப் பற்றி உட்கார்ந்தார். கண்களை மூடித் திரும்பவும் தியானித்தார். தன் முன்னே அந்த இளைஞன் கடந்து செல்வதை, சிலுவையின் பாரம் தாளாது நடுங்கும் கால்களை, ஒளி பொருந்தியக் கண்களை, அவனது நலிந்த உடலை, இன்னும் இன்னும் அனுமானிக்க முடியாத, மர்மம் பொதிந்த உருவை, தேவதைகளின் அருட்கரங்களால் அவன் மிதப்பதைப் போலவும் அவருக்கு தோன்றியது. அவன் தானா? இறைவா! என்னை ஏன் வாதைக்குள்ளாக்குகிறாய்! இன்னும் ஏன் பதில் கூற மறுக்கிறாய்! முற்றிலுமான நிசப்தம் ஒரு போர்வையினைப் போல அவரை முழுக்கியது.
தீர்க்க்தரிசனங்களின் பக்கங்கள் அலைமோதுகின்றன, ஒளியின் நொடி சொடுக்கல், மின்னல் போல அக்கணம் சிமிழ்கிறது. ஒரே சமயம் ஒளியாலும் இருளாலும் சூழப்பட்டது போல பிரம்மை. தன்னைடைய நம்பிக்கைகள் விழல் போலக் காய்ந்து கொண்டிருக்கிறது. சதா அதிர்ந்து கொண்டே இருக்கும் தனது உள்ளறைகளில், மூதாதையர்களின் சொல் ஒருக் கனல் போலப் பற்றுகிறது. முடிவடையாப் பாதையில் தன் காயங்களுடனும், தழும்புகளுடனும் அது செல்கிறது. மோசஸ் அதனைமுன் நோக்கி வழி நடத்துகிறார். வளைந்த கொம்புகளைக் கொண்ட அந்த ஆட்டுக்கிடா, பெரும்சுமையை பாரமாக ஏற்றிக் கொண்டு, ஆப்ரஹாமின் சந்ததிகளான அடிமைகளின் நிலமான கானானிற்கும், பின் அங்கிருந்து எதிர்கால ஜெருசலேமிற்குமாக பயணிக்கிறது. ஆனால் அதை வழி நடத்துவது மோசஸ் இல்லை. இது யார்? தோள்களில் சிலுவையைத் தாங்கிக் கொண்டு அமைதியாக சென்று கொண்டிருக்கிறான் ஒரு இளைஞன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக