மீனவர் வெடித்துச் சிரித்தார். அவர் சிரிப்பது எதற்கென்று புரியாதது போல செபெதீ, தன் தந்திரக் கண்களால் பார்த்தார்.
"பேசு! மனிதக் கடவுளே! நீ அந்தத் தீர்க்கதரிசி ஜோனா அல்லவா!
முதிய ஜோனாத் தன் தலையை வெறுமனேக் குலுக்கினார். அவருக்குத் தெரிந்து நினைவு கொள்ளும்படியாக அப்படி ஒரு நிகழ்வு ஏதும் நடக்கவில்லை. எந்த ஒரு மீனும் தன்னை இதுவரை விழுங்கவில்லை. ஒரு வேளை பலகாலங்கள் மீன்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தால் அதற்கு சாத்தியமிருந்திருக்கலாம். நியாபங்களின் எண்ண ஓட்டங்களில், நினைக்கும்படியாக என்ன இருக்குறது என்று தன்னுள் துழாவிக் கொண்டிருந்தார்.
ஆம்! இது அவர்தான்! அவர்தான்! செபெதீ கூட்டத்தைப்பார்த்து அங்குமிங்கும் கண்களை உருட்டிக் கத்தினார். "
வினோதமானச் செய்கைகளைக் கொண்ட இந்தத் தீர்க்கதரிசிகளை உண்மையில் நம்பமுடியாது. அவர்கள் காற்றினில், கடலினில், தீயினுள் மறைந்து காணாமல் போய்விட்டார்களோ என்று நினைக்கும் பொழுது, சடாரென்று கண்முன்னே வந்து நிற்பார்கள். எப்படி நமது புனிதர் எலிஜா சொர்க்கத்திலிருந்து ஒரு ஒளிமழையாய்ப் பூமியில் இறங்கினார். இன்றும் நித்தியனாக நம்மை ஆட்சி செய்கிறார். எந்தப் புனித மலையின் உச்சிக்குச் சென்று அவரை அழைத்தாலும் சரி!, நம் முன்னே அவர் காட்சியளிப்பார், அதே ஒளி ரூபனாக, காற்றாக, மழையாக அவரை நாம் உணர முடியும். அது போலத் தான் எனோச்சும். அவர்கள் அழிவடையாதவர்கள், இறப்பற்றவர்கள். நமது புனிதர் ஜோனாவும் அவர்களைப் போல ஒரு தீர்க்கதரிசிதான் .
ஆனால் ஜோனாவோ எதுவும் விளங்காதது போலப் பாவனை செய்கிறார். ஒரு சாதாரண மீனவன் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். தான் ஒரு தகப்பன் மட்டுமே என்கிறார். தம் பிள்ளைகளுக்காக வருந்துகிறார். ஆனால் இந்தத் தீர்க்கதரிசிகளை மரியாதையுடனும், கனிவுடன் நடத்தவேண்டும். இல்லையேல் அவர்கள் தங்கள் எதேச்சதிகாரத்தாலும், பிடிவாதக்குணத்தாலும், தங்களைக் கவனிக்காதவர்களுக்கு தக்கப் பாடம் புகுத்திவிடுவார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார் செபெதீ.
"அன்புக்குரிய ஜோனா, நீ யாரைத்தேடுகிறாய் என்று தெரியும். ஜேக்கப்பத்தானே! அவன் வெகுதூரம் பயணப்பட்டக் களைப்பில் வீட்டிற்கு சென்று விட்டான். உன் மகனைப் பற்றி உனக்குத் தெரிய வேண்டுமில்லையா? பீட்டர் அங்கு நலமாக இருக்கிறான் என்று அவன் சொன்னான். ஒன்றும் பயப்படத்தேவையில்லை. கூடிய விரைவில் அவன் இங்கு வந்துவிடுவான். நீங்கள் கவலை கொள்ளாமல் நிம்மதியாக இருக்கும்படியும் சொல்லியிருக்கிறான். நீ நான் சொல்வதைக் கேட்கிறாயா? என்று ஆதுரத்துடன் வினவினார் செபெதீ. அசைவற்று எதிரில் நின்று கொண்டிருந்தார் ஜோனாஹ்.
"யாருக்குத்தெரியும், ஒரு வேளை எதிரில் நிற்கும் இம்மனிதன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கக் கூடும்! அதனால் அவனை சிறப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்" என்று தன் திடமானத் தோள்களைக் குலுக்கிக் கொண்டு புன்முறுவலுடன் ஜோனாவை அணுகினார் செபெதீ!
முதிய ஜோனா, குனிந்து சட்டியிலிருந்த சிறிய சிங்கிறால் துண்டை முழுதாக எடுத்து வாயினுள் திணித்தார். கற முற என்று அதை நொறித்துச் சவைத்து விழுங்கிக் கொண்டார்.
சரி! நான் செல்கிறேன்! என்று அனைவரின் முகங்களைப் பார்த்து சொல்லிக் கொண்டே கண்களைச் சுருக்கி, அவர்களுக்கு முதுகுகாட்டிக் கொண்டு நடந்து சென்றார் மீனவக்கிழவர். திரும்பவும் கூழாங்கற்களில் அவரது அழுத்தம் திருத்தமான காலடிகளின் சப்தம் கேட்டது. ஒரு கடற்காகம் அவர் தலைக்கு மேலே வட்டமிட்டுப் பறந்தது. அவர் தலைமுடிக்குள் எதுவும் இரை மறைந்திருக்கிறதோ என்று நோட்டமிட்டது. அதைக் கவனித்த கிழவர் அண்ணாந்து பார்த்தார். சிறகுகளைப் பட படவென்று அடித்துக் கொண்டு, ஒருக் கம்மலானக் கூவலை விளித்து அங்கிருந்து ஏரியினை நோக்கி வீறிட்டது பறவை.
பார்த்தீர்களா! என் உள்ளுணர்விலிருந்து சொல்கிறேன் நிச்சயமாக இவன் ஒரு தீர்க்கதரிசி தான். பீட்டர் வேறு அவனுக்குத் துணையில்லை. உங்களில் இருவர் அவனுக்கு உதவி செய்யுங்கள். இல்லையேல் நமக்கு என்ன வேண்டுமானாலும் நடந்துவிடலாம். என்று செபெதீ அவர்களுக்கு கட்டளையிட்டார்.
அவர்களில் இருந்த இரு திடமான வாலிபர்கள், எழுந்து ஜோனா போகும் திசை நோக்கிச் செல்ல எத்தனித்தனர். அவர்களுக்கு பயமும் கிண்டலும் ஒரு சேரத் தோன்றியது.
"முதலாளி! உங்களுக்கேத் தெரியும், இந்தத் தீர்க்கதரிசிகளெல்லாம் காட்டுவிலங்குகள் போல. நீண்டு கிடக்கும் நீல வெளியிலிருந்து தங்கள் அகன்ற வாயினைத் திறந்து எங்களை உயிருடன் விழுங்கி விடவும் வாய்ப்புகள் உண்டு. அதனால் என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு. சரி வா! நாம் போகலாம்!"
"போய் வருகிறோம் முதலாளி" என்று சொல்லிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
செபெதீ சம்மணமிட்டிருந்தக் கால்களைத் தளர்த்தித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். எப்படியோ இந்த ஜோனாவை சமாளித்து விட்டோம் என்று உள்ளூர நகைத்தவர், தன் எஞ்சியத் தத்துப்பிள்ளைகளைப் பார்த்து வேலைகளைச் செய்ய உத்தரவிட்டார்.
"ம்ம்! குவிந்து கிடக்கும் மீன்களைக் கூடையில் நிரப்புங்கள். நேரம் ஏற்கனவேக் கடந்து விட்டது. சீக்கிரம்! விரைவாக! என் ஆண் பிள்ளைகளா! கிராமத்திற்கு செல்லும் பொழுது, மிகக்கவனம்! இந்த விவசாயிகள், நாம்! மீனவர்களைப் போல நல்லவர்கள் கிடையாது. தந்திரமாக ஏதாவது சொல்லிக் காரியம் சாதித்துவிடுவார்கள். கவனமாக இருக்கவேண்டும் தெரிந்ததா! எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக மீன்களைக் கொடுத்து, எவ்வளவு பேரம் பேசமுடியுமோப் பேசி அவர்களிடமிருந்து நல்ல அளவாகக் கோதுமை, எண்ணெய், திராட்சை ரசம், கோழிகள், முயல்கள் ஆகியவற்றை வாங்கி வரவேண்டும். மிச்சம் இருக்கும் மீன்களையும் பத்திரமாக்த் திரும்பக் கொண்டு வரவேண்டும். என்னப் புரிந்ததா? எதிலும் எந்தக் குறைவுமிருக்கக் கூடாது? என்ன? இரண்டும் இரண்டும் நான்கு!" என்று கள்ளத்தனமாகக் கண் சிமிட்டிக் கொண்டார்.
அவர்களும் விரைவாகக் கூடைகளில் மீன்களை நிரப்பத் தொடங்கினர்.
தூரத்தில் ஒட்டகத்தின் குளம்படிச்சத்தம் கேட்டது. ஒரு இளைஞன் அதில் வேக வேகமாக வந்து கொண்டிருந்தான். முதிய செபெதீ கைகளை நெற்றியில் நிழலாக வைத்துக் கொண்டு கண்கள் கூர்ந்துப் பார்த்தார்.
வருவது நம் ஜானைப் போல இருக்கிறதே! அவன் தானா! பதைபதைப்புடன் கேட்ட அவர் கண்கள் கலங்கின.
அவன் அவர்களுக்கு அருகில் வந்து கொண்டிருந்தான்.
அது அவனே தான்! ஆமாம்! அவனே தான்! மீனவர்களும் கத்தினர். உங்கள் இளையமகன் ஜான் தான் வந்து கொண்டிருக்கிறான்.
ஒட்டகத்தில் அமர்ந்திருந்தவன் மிக அருகில் வந்து அவர்களை வணங்கும் வகையில் நெஞ்சில் கைவைத்தான். பின் மீனவர்களைப் பார்த்து நெற்றியில் விரல்களைக் குவித்து வாழ்த்தினான்.
ஜான்! வார்த்தைகள் வராமல் தடுமாறினக் கிழவருக்கு!
"எங்கு இப்படி அவசரமாகப் போகிறாய்! கொஞ்சம் நில் உன்னை சரியாகப் பார்த்துக் கொள்கிறேன் மகனே! என்று நடுக்கத்துடன் கூறினார்.
"மடாதிபதி இறந்து கொண்டிருக்கிறார், நான் சீக்கிரம் போக வேண்டும், நேரமில்லை"
என்னாயிற்று அவருக்கு?
அவர் உணவுண்ணாமல் பட்டினி கிடக்கிறார். சாக விரும்புகிறார்?
ஏன்? எதற்காக?
ஜான் நிற்காமல் சென்றதால், அவனது வார்த்தைகள் காற்றின் அலைச்சலில் குழறிக் குழறிக் கேட்டது.
ஓடி வந்த முதிய செபெதீ சற்று இறைத்துப் பின் இருமினார். கடவுள் தான், தனது புனிதத்துவத்தால் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி விரக்தியாக உதடுகளைச் சுழித்துக் கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக