புதன், 23 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -35

    

Author: Nikos Kazantzakis

     இளமையும், உன்னதமும் கொண்ட இந்திய இளைஞனின் கண்கள் அரை மயக்கத்திலிருந்தது. சம்மணமிட்டு உட்கார்ந்த இடத்திலிருந்து முன்னும் பின்னும் உடல், மணியின் நாக்கு போல அசைந்து கொண்டிருந்தது. ஏதோ தியானத்தில் மந்திரங்கள் சொல்வது போல உதடுகள் அசைகின்றன. பிரார்த்தனைகளின் லயம் கூடியது போல மோனம் ஆட்கொண்டிருந்தது. சுவர்க்கலோகத்தினுள் செல்வதற்கு முன்னமே, பேரின்பத்தின் களிப்பினுள் சென்றது போல இருந்தன, அவனின் அங்க அசைவுகள். அகத்தே கூண்டினுள்ளிருந்து வரும் ஆண்பறவையின் குழறல், கட்டிலின் கிரீச்சிடல், முணகல்கள், குமிழிகளாய் பொட்டித் தெறிக்கும் உணர்வுகளின் தீராத் தாபங்களின் கொப்பளிப்புகள், புறத்தே உயிருள்ள நண்டுகள், வாளியினுள்ளிருந்து வெளித்தாவப் போராடுகின்றன. செத்த நண்டுகள் கனலும் நெருப்பில் சுடச்சுட வேகுகின்றன. வெம்மணம் அகம் புறமெங்கும் ஒருங்கேப் பரவுகிறது.

    அவன் மிகமிக மெதுவாகத் தன் மூச்சினை உள்ளிழுத்து விடுத்தான். ஒரு ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற பாவனை. சட்டென விழித்தவன், கூட்டத்தினரைப் பார்த்து அன்புடன் தலையசைத்தான்.  என்னுள் நிகழ்கிறதே இது தான் சொர்க்கம். தளர்ச்சியாக உடலை நெட்டி முறித்துக் கொண்டே சொன்னான், நாங்கள் வாழ்வை ஆழ்த்துயில் என்கிறோம். அதில் வரும் கனவுகளே சொர்க்கம். இவ்வுடலை விடுத்து வேறெந்த சொர்க்கமும் மனிதனுக்கு வாய்க்கப்படவில்லை. இதுவே போதுமானது.

    இன்னும் என்னவெல்லாம் சொர்க்கத்தைப் பற்றி உங்கள் கடவுளர்கள் சொல்கிறார்கள்? இந்திய இளவரசே! பெரிய பச்சை நிறத்தலைப்பாகை அணிந்த ஒருவன் முழங்காலால் முன்னே இருந்தவனின் புட்டத்தை மிதித்துக் கொண்டே எள்ளலாக வினவினான்.

என்னவென்றால்! ஒன்றுமில்லை!

    ஓன்றுமில்லையா! உன் முன் இருக்கும் இந்த ஆண்கள், பெண்கள், நண்டுகள் இன்னும் உள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் அன்பு! எல்லாம் ஒன்றுமில்லையா!

அது எல்லாம் மாயை! கனவு!

    துணிச்சலான இளைஞனே! நல்லது! அப்படியென்றால் ஒன்று செய்! நல்ல கொளகொளப்பான சூடான மலைத் தேன் மெழுகினை அப்பி உன் கண்களைத் திறக்கவே முடியாத வண்ணம் அடைத்து விடு. பின் உன் தியானத்தில், அகத்தில், கனவுகளில் உனக்கே உனக்கான சொர்க்க உலகில் நித்தியனாகு! முதியவர் சற்று நகைப்புடனும், கண்களில் காட்டமாகவும் பதிலளித்தார்.

    முன்னே, சிறிய வாயிலைத் திறந்து அந்த முதிய நாடோடி வெளியே வந்தார். கண்கள் வீங்கிக் கலங்கியிருந்தது. மேலங்கி அவிழ்ந்து, மயிரடர்ந்த உடல் தெரிந்தது. இடுப்புவாரினை இறுக்கிக் கொண்டே நகர்ந்து வந்தவர், முற்றத்தில் இருந்த மண்தரையில் காறி உமிழ்ந்து விட்டு திண்டில் காற்றின் திசைக்கு முகம் காட்டி அமர்ந்தார். வரிசையில் முதலில் காத்திருந்த கிழட்டு வியாபாரி, முதுகைப் பிடித்துக் கொண்டே மெல்ல எழுந்து, கால் மூட்டுக்களின் சொடுக்குகளை அவிழ்த்து நிதானித்து திறந்திருந்த கதவு வழியே உள்ளே செல்ல எத்தனித்தார். போய் வாருங்கள்! கிழவனாரே! போன வேகத்தில் சீக்கிரம் முடித்து விட்டு வாரும். உமக்கடுத்து நாங்கள் மூவர் இருக்கிறோம். பின்னால் அமர்ந்திருந்த இருபது வயது இளைஞன் களிப்புடன் சொன்னான்.

    அவர் ஏற்கனவே இடுப்பு வாரினைக் கழற்றி விட்டு,  கச்சையைக் கைகளால் பிடித்துக் கொண்டிருந்தார்,  பின் உள்ளே சென்றவர் கதவை இறுக்கிச்சாத்தினார். 

    அனைவரது கண்களும் பொறாமையாக அந்த நாடோடியைப் பார்த்துகொண்டிருந்தது. யாருக்கும் பேசத் தைரியமில்லை. ஏதோ ஆழ்க்கிணற்றின், நீரினுள் முழுவதும் முங்காமலும், ஒவ்வொரு அலைவிற்கும் சிறுகச் சிறுக நீரினைக் குடித்துக் கொண்டும் அதனுள்ளேயே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் வாளியினைப் போல, தூர தூரத் தொலைவுகளுக்கு பெருங்கடலினில் சென்றும், தன் முன்னே முடிவில்லாமல் பெருகி வியாபிக்கும் மாபெரும் கடல் பெருக்கினை, அதன் நீர்மையின் ஓயாத அலைச்சலை உணராமல் சிதைந்துப் போகும் உயிரற்றக் கப்பல் போல அவர் அவர்களுக்குத் தோன்றினார். 

    அங்கிருந்து எழுந்து வெளியை நோக்கிச் சென்றவர், சிக்கலானப் பாதைகள் வழி உருவற்றுப் பின் புள்ளிகளாய் மறைந்தார். ஏதோ புதிர் முடிச்சுகள் அவிழ்ந்தது போலவும், புதியப் புதிய முடிச்சுகள் மேலும் முடிந்தது போலவும் அனைவருள்ளும் மயக்கு. சூழலைத் திருப்ப, கடல்களையும், வானத்தையும், சிங்கங்களையும், பவளப்பாறைகளையும் இன்னும் பலப்பலக் கதைகளையும் கதைக்கத் தொடங்கினான், பச்சை நிறத் தலைப்பாகை அணிந்திருந்த பருத்தமனிதன்.

    நத்தையைப் போல காலமும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. பேச்சொலிகள் அடங்கி கனைப்புகளும், செருமல்களும். மூட்டுகள் அவிழ்க்கும் ஓசைகளும் எழுந்தன. இவர்களைத் தவிர்த்து அவ்வறையில் இருந்த உயிருள்ள விலங்குகளான ஓணானும், கௌதாரியும் கூட சோர்வுற்று அயர்ந்திருந்தது. அவர்களின் தனித்தனியான எண்ணங்களின், நினைவுகளின், வெளிவராத வார்த்தைகளின், சொற்களின் கூட்டம் பெருகிப் பெருகி அறைமுழுதும் குழுமியது. தனித்தனிச்சொற்கள் தங்களுக்குள் உசாவி ஒன்றாயின, விட்டுப் பிரிந்தன. மனிதனின் சொற்களும் மனிதனைப் போலவே சிறிதளவுச் சீறி அடங்கி புகைப் போல காணாமலாகின்றன. எல்லோருடையக் கண்களும் அந்த சிறியக் கதவினில் குத்திட்டிருந்தது. உள்ளே சென்ற முதியவர் தாமதாக்கிக் கொண்டே இருந்தார்.

    சட்டென எழுந்து நின்ற இளம் இந்தியன், தன் வலது உள்ளங்கையை நெஞ்சினில் வைத்து அமைதியாக் நின்றான். அவனைப்பார்த்து திகைத்துப் பின் அவர்கள், தங்களுக்குள் சமிஞ்சைகள் செய்தனர். அவன் போகப் போகிறானா? எதற்காக எழுந்தான்?

    ஜீவன் பொங்கும் முகம் ஒளியின் பிரகாசத்தில் மிளிர்ந்தது. வேண்டியதை அடைந்ததைப் போன்ற மலர்ச்சி அதரங்களில் அமிழ்ந்தன. தன் தோள்களில் இருந்த காஷ்மீரத்துச் சால்வையை இன்னும் இறுக்கிப் போர்த்திக் கொண்டு, தாமதிக்காமல் வெளியைப் பார்த்து நகர்ந்தான்.அவனது நீண்ட நிழல் பூதாகரமாய் பின் தொடர்ந்து சென்றது.

    கடைசியில் அவன் உண்மையிலேயே விழித்து விட்டான், கணுக்கால்களில் தங்க வளையங்கள் பதித்த இளைஞன், மற்றவர்களைப் பார்த்து கூறி சிரிக்க முயன்றான். ஆனால் ஏதோ இதுவரை அங்கேப் பதுங்கியிருந்த ஒரு ஊறும் ஜந்து ஒவ்வொருவரின் உடல்களையும் தீண்டித் தீண்டிக் கடப்பதைப் போல, அவர்கள் தங்களுக்குள் வம்பளக்காது ஒதுங்க முயன்றனர். உள்ளூரப் பயந்த இளைஞன், நிசப்தமானச் சூழலை  முறிக்கும் வண்ணம், வியாபார லாப நட்டக் கணக்குகளை, சந்தையில் அடிமைகளின் சமீபத்திய விலைகளை, அலெக்சான்ட்ரியா மற்றும் டமாஸ்கஸ் நகரில் விற்கப்படும் அடிமைகளின் கூடுதல் விலை நிர்ணயத்தைப் பற்றியக் கவலையை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். 

    அவன் நினைத்தது போலவே, எப்படியோ பேச்சுக்கள், பெண்களைப்பற்றியும், சிறுவர்களைப் பற்றியும் தடம் மாறியது. ஜாதிக்காய்களை அதக்கிக்கொண்டும், உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டும் அவர்கள் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

    தனித்து விடப்பட்ட ஜீசஸை அங்கு யாருமே சட்டை செய்யவில்லை. உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தான்.

    "கடவுளே! எங்கே என்னை விட்டெறிந்திருக்கிறாய்? என்ன மாதிரியான ஆண்களின் கூட்டத்தினுள் என்னை அமர்த்தியிருக்கிறாய்? நான் என்ன செய்வேன்? அய்யோ! கீழ்மைகளினுள் நானும் தாழ்ச்சியுறுகிறேன். கடவுளே! எனக்குத் தாங்கும் வலுவைத் தா! என்னால் அவளிடம் மண்டியிடாமல் இவ்விடத்தை விட்டுச் செல்ல முடியாது.

    பயணிகள் நால்வருமே பசியிலிருந்தனர். கத்தி அழைத்ததும் வாசலில் இருந்த மூதாட்டி, ரொட்டிகளையும், நண்டுக்கறியையும், நன்கு  பொறிந்த இறைச்சித் துண்டங்களையும், சாடி நிறைய பேரீச்சை மதுவையும் கொண்டு வந்தாள். உணவைக் கண்டதும் அவர்கள் சுற்றி அமர்ந்து கொண்டனர், குவளைகளில் மதுவை நிரப்பி அனைவரும் கையுயர்த்தி உறிஞ்சினர். பின் ரொட்டியைப் பிய்த்துத் துண்டங்களாக்கி, கறியினைச் சேர்த்து விழுங்கத் தொடங்கினர். உணவும் மதுவும் உள்ளே செல்லச் செல்ல அவர்கள் களிப்பும் , அமைதியும் அடைந்தனர். இதற்கு சற்றும் பொருந்தாமல் தன் முழங்கால்களுக்கிடையில் தலை புதைத்து நிலத்தில் தெரியும் இருளைக் குடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் மேரியின் மகன். என்னுடைய முறை வரும் வரை என்னை அமைதியுடனும், சீற்றமின்றியும் இருத்து! என்ற இறைஞ்சலை மட்டுமே அவன் கடவுளிடம் வைத்திருந்தான்

    தாடியில் நறுமணத் தைலம் தடவிய முதியவர், அவனிடம் வருத்தம் தெரிவித்தார்.

    ஹேய்! பையா! இங்கு வா! வந்து எங்களுடன் உணவருந்து. நிச்சயமாக நீ பசியுடனும், தாகத்துடனும் போராடிக் கொண்டிருக்கிறாய், நண்பா!

    ஆம்! பரிதாபத்துக்குரிய நண்பா! வந்து கொஞ்சம் சாப்பிட்டு வலுவாக இரு. உன் முறை வரும்பொழுது நீ உள்ளே செல். அது வரை பொறுமை! நீ இந்த ஆண் மகன்களை சங்கடப்படுத்தமாட்டாய் என்று நம்புகிறேன். பச்சைத் தலைப்பாகை அணிந்திருந்தவன் கேலி செய்தான். அவனது பருத்த உடலின் சின்னத் தலை தனியாக ஆடிக் கொண்டிருந்தது.

    ஜீசஸின் முகம் நாணிச் சிவந்திருந்தது. எதுவும் பதில் கூறாமல், திரும்பவும் தலைப்புதைந்து மண்ணை நோக்கினான்.

    இன்னொரு கனவுலகவாதி!  தலையை ஆட்டிக் கொண்டே அந்த முதியவர் நண்டு ஓட்டினைக் கடித்து அதக்கிச்சவைத்தார். அதன் உள்ளிருந்து வழியும் மிருதுவான சாறு தாடியை நனைத்து. 

"ஆமாம்! புனித சாத்தான்களின் அதிபதியின் பெயரால் சொல்கிறேன். அவன் கனவு காண்கிறான். ம்ம்! வேண்டுமென்றால் பார்! இவனும் அவர்களைப் போலவே எழுந்து ஓடிவிடுவான்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக