அடக்கமுடியாமல் பெருமூச்சுகளிட்டுக்கொண்டே வந்தான் மேரியின் மகன். அவனால் உண்மையில் தாங்கமுடியவில்லை என்பது அவன் உடல்மொழியைப் பார்த்தாலே புரிந்துவிடும்.
"அவர்கள் பசியால் சாகாமலிருக்கப் பட்டினி கிடந்து சாவதற்கு ஒருவன் தயாராக இருப்பின், அப்படியொரு தீர்வு இதற்கிருக்கக் கூடாதா" அவன் அழுதுகொண்டே விட்டு விட்டு மூச்சிழுத்து சொன்னான்.
ஜேக்கப் தன் ஓரக்கண்களால் அவனை ஏளனமாய்ப் பார்த்தான். உன்னால் ஒரு கோதுமையாக மாற முடிந்தால் உன்னை உண்டு அவர்கள் பசியாற நீ சம்மதிப்பாயா என்ன? என்று அலட்சியமாகக் கேட்டான்.
யார் செய்ய மாட்டார்கள்? என்றான் மேரியின் மகன்.
ஜேக்கப் தன் கூர்மையானக் கண்களை உருட்டி ஜீசஸை உற்றுப் பார்த்தான்.
"நான்", அவன் பதிலளித்தான்.
மேரியின் மகன் எதுவும் சொல்லவில்லை. ஜேக்கப் அவனை புண்படுத்தும் வகையில் தொடர்ந்தான். எதற்காக நான் அழிந்துபோக வேண்டும். கடவுள்தானே இந்தப் பெருவெள்ளத்தை அனுப்பினார். நான் இதில் என்னத் தவறு செய்தேன். கோபமாக வானத்தைப் பார்த்தான். எதற்கு கடவுள் இதைச்செய்தார்? அவரின் நோக்கம் தான் என்ன? இந்த மக்கள் தான் என்ன பாவம் செய்து விட்டனே? எனக்கு ஒன்றும் புரியவில்லை. உனக்கு? மேரியின் மகனைப் பார்த்து ஜேக்கப் சீறினான்.
எதையும் கேட்காதே? என் சகோதரா! அது பாவம்.
சில நாட்களுக்கு முன்பு நானும் இப்படித்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுது எனக்கு புரிகிறது. எப்படி அந்த நாகம் முதன் முதலாக, ஒரு மனிதஉயிரைப் பிளவு படுத்திக் கடவுளின் கோபத்திற்கு ஆளாக்கி, காலாகாலத்திற்கும் பூமியில் சதா கேள்விகளுடன் உழல விட்டதோ, அதேதான்.
அதனால் என்னிடம் கேள்விகளில்லை! என்றான் மேரியின் மகன்.
"அப்படியென்றால்? எனக்குப்புரியவில்லை"
"கேள்விகள் கேட்பது"
"எனக்கு ஒன்றும் புரியவில்லை, என்று சொல்லிக் கொண்டு விரைவாக செல்லத்தொடங்கினான் செபெதீயின் மகன்.
அவன் சிலுவை செய்பவனின் துணையை விரும்பவில்லை. அவனது சொற்களின் பாரம் அவனுக்கு தாங்கவொன்னாததாக இருந்தது. அவனின் அமைதியோ அதைவிட அதிகமாக அவனை சித்ரவதை செய்தது.
ஒரு மேட்டுப் பகுதியைக் கடந்து அவர்கள் நோக்கினர். சிறிது தூரத்தில் நீல வெளியாய் ஜென்னசரேட் அலையிடுகிறது. வானத்தின் கதிர்கள் அதில் முட்டி மோதி நீர்மையின் மினுக்கம் சிமிட்டுகிறது. படகுகள் நடு ஏரியில் நிலையிட்டிருந்தன. மீன்பிடிப்பு ஏற்கனவேத் தொடங்கிவிட்ட்டது. அவர்களின் நிலைத்த பெரிய வலைகளின் மிதவைகளின், சென்னிறங்கள் அங்காங்கே நீர்க்குமிழிகள் போலத் தென்படுகின்றன. பாறைகளில் பறவைகளின் கிரீச்சிடல். அதன் ஓரத்தில் சூரிய ஒளியின் செம்மஞ்சள் ஒளியில், கிராமத்தின் பெரிய சந்தைப்பகுதி தெளிவாகத் தெரிந்தது.
ஜேக்கப் தங்களின் படகுகளை அடையாளம் கண்டுகொண்டான். அவன் மனது முழுதும் மீன்கள் தங்கு தடையின்றி நிரம்பின. அவன் தாங்கமுடியாத துணையாக அருகில் நின்று கொண்டிருந்த மேரியின் மகனைப் பார்த்தான்.
"எங்கே நீ போகிறாய், ஜீசஸ், அதோ அங்கு கார்பெர்னம் நகரத்தின் சந்தைப்பகுதி தெரிகிறது" என்றான்.
அவன் தலைதாழ்த்தி ஜேக்கப்பிடம் விடைபெறத் தயாரானான். தான் மடாலயத்திற்கு சென்று துறவியாகப் போகிறேன் என்று அவனிடம் சொல்ல ஜீசஸிற்கு குறைச்சலாக இருந்தது.
ஜேக்கப் வெறுமனே தலையை அசைத்துக் கொண்டான். அதைக் கேட்காமல் அவனால் இருக்க முடியவில்லை.
"நீ எப்படியும் சொல்ல மாட்டாய். ஏதோ ரகசியத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாய். ம்ம்! போ! போ!" என்றவன் ஜீசஸின் கைகளை வலுவாக அழுத்திப் பிடித்தான்.
"சொல்!, யார் உன்னை அனுப்பியது" என்று கடுமையான குரலில் அதற்றினான்.
மேரியின் மகன் மூச்சிறைத்தான். "எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியாது" ஒரு வேளை அது கடவுளாக இருக்கலாம், இல்லை...
அவன் தயங்கினான். உண்மையில் பயமாகவும் இருந்தது. "ஒருவேளை சாத்தானினால் அனுப்பப்பட்டவனாகத் தான் இருந்தால்" என்று நினைத்தவன், எதுவும் சொல்லாமல் கைகளை உதறினான்.
ஆம்! அதேதான்! இவன் அந்த ரோமானியப் படைத்தலைவன் அனுப்பிவைத்த உளவாளியாகத்தான் இருக்க வேண்டும். புதிதாகக் கிளர்ச்சியாளர்கள் மலைகளிலிருந்தும், பாலைவனத்திலிருந்தும் கிராமங்களுக்குள் இறங்கியிருப்பதை அறிந்துகொண்டு, இவன் மக்களோடு மக்களாகப் பழகி, அவர்களிடம் சுதந்திரம், புரட்சி என்று மழுப்பலாகப் பேசி உண்மைகளைக் கறந்து விடுகிறான். எங்களின் திட்டங்களைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் , அந்த ரத்தம் உறிஞ்சும் ரோமப் பிசாசுகளின் கைப்பாவையாக இவன் இங்கு நகரங்களிலும், கிராமங்களிலும் சந்தேகம் வராத வகையில் நடமாடுகிறான். இந்த யூதப் பிறப்பு, சிலுவை செய்யும் இழிமகன் நிச்சயமாக அவர்களின் உளவாளிகளில் ஒருவன் தான். என்று தன்னுள் உறுதிப்படுத்திக் கொண்டான் ஜேக்கப்.
ஜேக்கப்பின் நெற்றிச்சுருக்கங்கள் முடிச்சிட்டன. இமைகளை உயர்த்தி ஜீசசை ஏறிட்டு நோக்கினான்.
"கேள்! தச்சனின் மகனே, இங்கே நாம் பிரிந்துக் கொள்வோம், உனக்கு ஒரு வேளை தெரியாமல் இருக்கலாம் எதனுள் நீ தலை விட்டிருக்கிறாய் என்று. ஆனால் எனக்குத்தெரியும். இப்போது நீ போ! ஆனால் இது நிச்சயமாக நமது கடைசி சந்திப்பாக இருக்காது. நம் பாதைகளில் எப்படியும் நீ என்னைக் காண்பாய். இதுவரை நீ என்னுடன் துணைக்கு வந்தாய். அது விஷயமில்லை. நான் உன்னைப் பின் தொடர்ந்தேன். எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் பாதிப்பு என்னவோ உனக்குத்தான் நேரப்போகிறது. அதைத்தான் நான் சொல்லவந்தேன். நீ தேர்ந்தெடுத்திருக்கும் இப்பாதை அபாயகரமானது. எப்படியும் நீ உயிரோடு மீளப்போவதில்லை. என்று சொன்னவன் சிறிதும் தாமதியாமல், திரும்பிக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து ஏரியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்.
செபெதீயின் தத்துப்பிள்ளைகள், ஒரு அகன்ற செம்புப் பாத்திரத்தில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். சூப் தயாராகியிருந்தது. சுற்றி வட்டம்போட்டு உட்கார்ந்திருந்தவர்களில், முதிய மீனவன் தன் கரண்டியைப் பாத்திரத்தில் துழாவி இருப்பதிலேயே பெரிய மீனை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். சட்டென்று நிறுத்தியவனுக்குத் தான் பிரார்த்தனை செய்ய மறந்துவிட்டோம் என்ற நியாபகம் அப்பொழுதுதான் வந்தது.
உணவைச் சவைத்துக் கொண்டிருந்த முதிய செபெதீ, தன் மரக்கரண்டியை உயர்த்திப் பிடித்து இஸ்ரவேலத்தின் கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். மீன்களையும், தானியங்களையும், திராட்சை மதுவினையும், என்ணெயையும் குறைவின்றி இந்த எபிரேயச் சந்ததிகளுக்கு அளித்துக்கொண்டே இருக்கும் கருணையின் தேவனே உனக்கு நன்றி! எங்களின் மீட்பனின் வருகையின் நாள் வரைத் தாங்குவதற்கும், உழைப்பதற்குமான வலுவினை அளித்து, எங்களை பசியின்றி வாழவைக்கும் கடவுளே உனக்கு நன்றி!. நம் மெசியாவின் வருகையால் நம் எதிரிகள் அனைவரும் தவிடு பொடியாவார்கள். உலகமே இஸ்ரவேலத்தின் காலடியில் வீழும். எல்லாக் கடவுளர்களும் இஸ்ரவேலத்தின் ஒரே தெய்வத்திடம் மண்டியிட்டு வணங்கும். ஆம்! அதற்காகத்தான் நாம் உண்கிறோம். அதற்காகத்தான் நாம் திருமணம் செய்து பிள்ளைகள் பெறுகிறோம். அதற்காகத்தான் நாம் உயிர்வாழ்கிறோம். எல்லாம் உன் கருணையும் மாட்சிமையும் இறைவா! சொல்லி முடித்து ஒரு முழு மீனை அப்படியே விழுங்கினார் முதியவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக