என்று? என்று? கூட்டத்தினுள்ளிருந்து ஒரு தளர்ந்த குரல். ஒட்டு மொத்தத் திரளும் அந்தக் குள்ளமான மெலிந்தக் கிழவரைப் பார்த்தது. அதிர்ந்து கொண்டே இருந்த அந்த மனிதர். தன் மொத்த சக்தியினாலும் சதுக்கம் அதிரக் கத்தினார்.
கோபத்துடன் தன் கையிலிருந்த தீர்க்கதரிசன நூலைச் சுருட்டி வைத்தார், முதிய துறவி.
சொல்லுங்கள்! அருளாளரே!
நீங்கள் அத்தனை அவசரத்தில் உள்ளீர்களா? போதகர் திரும்பக் கேட்டார்.
பின் அவர் ஆலயத்தின் உள் சுவற்றில் வரைந்திருந்த இசக்கியேலின் ஓவியத்தை சுட்டிக் காட்டினார். பள்ளத்தாக்கினுள், எலும்புகளினுள்ளினுள்ளிலிருந்து ரத்தமும் சதையுமாக பிறப்பெடுத்த இஸ்ரவேலின் மனிதனைக் காண்பித்தார். தேவனே! என் பிள்ளைகளைப் பெலப்படுத்தும்!
மானசெஸ், நீ தேவனுக்கு அருகில் இருக்கிறாய். உன் மரணத்திலிருந்தும் அவர் உன்னை உயிர்த்தெழுப்புவார்!
நான் தளர்ந்து விட்டேன். ஒரு குருட்டு முதியவன் வேறு என்ன எதிர்ப்பார்க்க! மரணத்தைத் தவிர!
நிலவின் வெளிச்சம் பாவிய மென் இரவு, ஜென்னசரேட் ஏரியினுள் தன் தன்னந்தனிமையுடன் வலையிட்டிருந்தான் பீட்டர். எழுவதும் அடங்குவதுமாய் துள்ளிக் கொண்டிருந்த திலாப்பியா மீன்கள் கொத்து கொத்தாக வலையினுள் நிரம்புகின்றன, நினைவுகளில் தோய்ந்திருந்த பீட்டர் சட்டென்று இடைவெட்டி , துறவியை எதிர் நோக்கினான். தேவனின் வாதிலில் எங்களை சமாதானப் படுத்தும் ரகசியத்தின் சொல்லைத் தெரிவியும்! நாங்கள் சோர்வுறுகிறோம்! என்று மட்டும் சொல்லி விட்டு தரையை வெறித்தான்.
சதுக்கம் முற்றான அமைதியில் சலனித்திருந்தது. அனைவரும் முதிய துறவியைக் கூர்ந்திருந்தனர். வெக்கையும், வியர்வையும் கலந்த நெடி உள்ளறையில் வீச்சத்துடன் வீசியது. தேவதாருவின் நறுமணத் தைலத்தைத் தெளித்து சூழலை சுமூகமாக்கினான் கோவிலின் பணியாள்.
தன்னை ஆசுவாசப்படுத்தி, பீடத்தில் நின்று சமப்படுத்திக் கொண்டார் முதியவர்.
என் குழந்தைகளே! நம் இருதயங்கள் சிலுவைகளால் நிரம்பியிருக்கின்றன! பாரம் ஏறிக்கொண்டே இருக்கிறது. மரணத்தின் சொல் நம் அனைவரின் நாவுகளிலும் ஜெபிக்கப்படுகிறது. தன் கட்டைவிரலால் நெற்றி வியர்வையை வழித்தெறிந்தார். ஆம்! இஸ்ரவேலின் மக்களே! என் இளமை! கருத்த எனது தலைமுடி இப்பொழுது நரை கூடி வெளுத்திருக்கிறது. இந்த மனிதனைப் போலவே நானும் வெகுகாலம் அழுதிருக்கிறேன். என் தெய்வமே! இன்னும் எத்தனை காலம்! எங்களின் மீட்பனைப் பார்க்காமலேயே என்னுயிர் போய்விடுமோ! திரும்பத் திரும்ப சுவற்றில் முட்டிக் கொள்வதைப் போல சொற்களின் உலகில் தன்னந்தனியே உழன்றிருக்கிறேன். ஆனால் நம்புங்கள்! அதிசயம் நிகழ்ந்தது! உண்மையில் அது ஒரு அதிசயம் கூட இல்லை. நம் அனைவரின் உள்ளும் சதா நிகழ்ந்து கொண்டே இருப்பது. கடவுளின் சொல்! அவரது காருண்யமிக்க குரலை நான் கேட்டேன். எனக்காக காலமற்றுக் காத்துக் கொண்டிருந்த அக்குரல்! ஆம்! நாம் யாருமே அதற்கு செவி சாய்ப்பதில்லை! நம் தேகம்! அதைத்தாண்டியப் புலனை நாம் அறிந்திருக்கவில்லை, ஆனால் கடவுளின் அற்புதங்கள் அப்புலனின் வழியே தான் நமக்குத் தருவிக்கப்படுகிறது. அந்த முடிவடையா இரவு! அதன் பின் அவனது சொல்லிலிருந்து நான் வழுவுவதே இல்லை!
என்ன சொன்னார்? என்ன நிகழ்ந்தது? நீங்கள் அச்சொல்லிலிருந்து எதனை அறிந்து கொண்டீர்கள். பீட்டர் மெல்லக் காலடியெடுத்து வந்து முன்னே கைகூப்பி நின்றான்.
பீட்டர், உனக்கத்தெரியுமா! கடவுளும் உன்னைப் போல ஒரு மீனவன் தான். அன்றிரவு முழு நிலவின் ஒளிச்சம்! வட்டப்பால் நிற ஒளி! தயையும், கருணையும் ஒருங்கே கொண்ட குளிர்ச்சியான ஒளி, இருள் வானத்தில் தோணி போல அலங்கிக் கொண்டிருந்தது. என் தலைக்கு மேலும் கீழும் நீர்மையன்றி வேறல்ல. அதன் அசைதலுக்கேற்ப என் கால்களுக்கடியிலான நிலம் அமிழ்ந்தது. இன்றும் நினைவிருக்கிறது, நான் இமைக்கவேயில்லை. நிசப்தம், ஒரு இலை விழும் ஒலி கூடத் துல்லியமாய்க் கேட்கும் முற்றிலுமான அமைதி. என்னை வழி நடத்திச்செல்லும் இந்நிலவு ஒரு உயிர். ஒரு மனித உயிர். அதன் ஆழமான கண்களை, நாடியை, கன்னங்களை என்னால் தொட்டுணர முடிகிற தொலைவில் தான் இருந்தது. நீண்டு கிடக்கும் ஒளியின் பாதையின் ஊடே நாசரேத்திலிருந்து ஜெருசலேம் நோக்கி என்னை அது வழி நடத்தியது. அதன் மூச்சின் விவரிக்க முடியா சுகந்தம் காற்றில் அலையாடியது. நான் சென்று கொண்டிருக்கிறேன் கிழக்கிலிருந்து மேற்காக, தாபர் மலையைக் கடக்கிறேன், கில்போவா, கார்மல் மலைகளை ஆட்பட்டது போல விரைவாகக் கடந்து கொண்டிருக்கிறேன். ஆனால் நான் தளர்ச்சியடையவில்லை. ஆம்! இறைவனின் இருள் முகம்! அது ஒரு முடிவடையா இரவு! ஜெருசலேமின் இரவு! அதன் அளவிடமுடியா ஒளிக்குன்றுகள்!
நானொரு கிழவன்! என் உயிர் விளக்கொளி போல காற்றினில் அலைக்கழிகிறது. விம்மிக் கொண்டு மூச்சு முட்ட ஒரு முறை இருமினார். நான் எங்களின் மெசியாவைப் பார்க்காமலேயே மரணித்துவிடுவேனோ!
முதியவரின் எண்ணங்கள் பெண்டுலம் போல இங்குமங்கும் அலைந்தது.
ஒளியின் பாதையின் வழி தன்னிலையிழந்து ஓடிக்கொண்டிருந்தேன். உரிந்த என் உடைகளைத் தூக்கி எறிந்துகடவுளின் கண்களுக்கு முன்னால் என்னை முழுக்க நிர்வாணமாக்கினேன். ஒரு காய்ந்த சருகினைப் போல, நொய்ந்து, போன என் உடலை அவன் காணட்டும். கருணாமூர்த்தியான என் கடவுள் என் நலிந்த நிலையினால் வருத்தப்படட்டும்.
அப்பட்டமாக நானும் என் உடலும் மட்டுமேயாகக் கடவுளின் முன் நிற்கும் விதமாய்த் தலைதெறிக்க ஓடினேன். நிலவின் ஒளி ஒரு கூரிய வாளினைப்போல என்னுடலில் இறங்கியது. நான் என்னவானேன்! என்னால் அறுதியிட்டு உணர முடியாத ஒளியினுள் நானும் ஒரு அணுவானேன்! நானே பலதுமாய்! அனைத்திலும் நானேயாக! மாறி மாறிக் காட்சிப்புலம் சரிந்து விரைந்தது. அங்கு நானும் கடவுளும் மட்டுமே இருந்திருப்போம். அக்குரலை என்னால் கேட்க முடிந்தது. செவிப்பறைகளினுள் பறையறைவதை போல, என் பெயர் விளித்தது! சிமியோன்! சிமியோன்! உன்னை மரணிக்க விடமாட்டேன்! கேள்! தேவனின் மகன்! வருகிறான்! மெசியா! இஸ்ரவேலின் மீட்பன்! அவனைக்காணாது உன்னுயிர் போகாது! நீயே உன் சொந்தக்கரங்களால் அவனை முதலில் தழுவி அறிவாய்! ஒரு உலுக்கல் போல அக்குரல் என்னுள் ஒலிந்து கொண்டது. திரும்பத் திரும்ப அவ்விளி என்னுள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது
"உன் சொந்தக்கரங்களால் நீயே அவனை முதலில் தழுவி அறிவாய்"
நான் என்னவாகிக் கொண்டிருந்தேன்! என்னால் இப்பொழுதும் நம்பமுடியவில்லை. ஒரு பூவினைப் போல மனிதனும் இவ்வானிற்கு கீழே விரிந்து மலர முடியுமா! நிலை கொள்ளாது என்னுள் பீறிடும் மகிழ்வை, அடக்க முடியவில்லை. ஒரு நொடியோ! யுகமோ! நான் நடனமிட்டுக் கொண்டிருந்தேன். வெண்ணிலவிற்கு கீழே இறைவனின் நடனம் என்னுள் இருந்து ஆடிக் கொண்டிருந்தது. ஆயிரம் வருட அடைப்புகள் உடைந்து பாய்வது போல அகமும் புறமும் நுரை பொங்கக் கிளர்ந்தது. சற்று நிதானித்து என் உடைகளை எடுத்து அணிந்து கொண்டேன். வானத்தின் அரும்புகள் மொக்கவிழ்ந்தன என்னைப் போலவே! அதற்கு கீழே பூமியும் அதனை உள்வாங்கிக் கொண்டு நிலமெங்கும் மகரந்தங்களைத் தெளித்தன. இருளும் ஒளியுமற்றப் பொழுதில், வானம் தன் பிரதேயேக வெளிச்சத்தின் நுன் விரல்களைப் பதித்து, அனைத்து ஸ்தூல இருப்பையும் நீர்மமாக்கியது. அதன் கலங்கலில் உட்குழிந்து, உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் ஒன்றில் ஒன்றாகப் பிசைந்து மாயரூபம் கொண்டது. சேவலின் கூவல் கேட்கும் பொழுது நாசரேத்தின் பாதைக்கு சரியாக வந்து விட்டிருந்தேன். வழிப்பாதையில் என்னை எதிர் கொண்ட ஒரு படைத்தலைவன், இன்னும் பிரகாசம் அழியாத என் கண்களைக் கண்டுக் குசுகுசுப்பது போல சொன்னான்! நீ ஒரு எரியும் விளக்கு! உன் ஒளியால் இந்த நாசரேத் நகரை தீக்கிரையாக்கி விடாதே! சற்றே நமட்டு சிரிப்புடன் சொல்லிக் கொண்டு நகர்ந்தான். நான் எதையுமே நிதானிக்கும் நிலையில் இல்லை. அவன் சொன்னதை வெறுமனேக் கேட்டு, அமைதியாக என் பழைய வீட்டை நோக்கி நடந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக