புதன், 23 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -36

     

    பலிக்காக காத்திருக்கும் விலங்கினைப் போல  அண்ணாந்து அவர்களைப் பார்த்தான் மேரியின் மகன். நிதானிக்கக் கூட வாய்ப்பு கொடுக்காமல் சிரிப்புச்சத்தங்கள், அவனில் மோதி வெடித்துச்சிதறின. தன் முன்னே நிற்கும் மனிதர்கள், மாதுளை மரம், கூண்டுப்பறவை, ஓணான், நண்டுகள், கனன்று கொண்டிருக்கும் அடுப்பு, அறையினுள் நசுநசுக்கும் பிசுக்கலான மனித நெடி எல்லாமே ஒரு கனவு போல அவனுக்குத் தோன்றியது. 

    தான் இன்னும் அந்தத் தேவதாரு மரத்தின் நிழலின் கனவினுள் போராடிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது அவனுக்கு.

    தனக்கு யாரேனும் உதவ மாட்டார்களா? என்ற தவிப்புடன் வாசலைப் பார்த்தவன். அங்கு அவனுக்காகக் கழுகுத்தலைப் பெண், வாதிலின் வலப்பக்கம் இருந்த ஆண் சைப்ரஸ் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்தாள். வெளிவந்ததும் உடனே பற்றிக் கொள்ளும் வகையில் அவனைப் பார்க்கிறாள், சென்னிறக் கண்கள் மின்னுகின்றன, கூர் அலகினுள் பற்கள் நரநரக்கின்றன. வெண்கலக் கவசத்தினுள்ளிருந்தும் அம்மனிதப் பெண்ணுடலின் அங்கங்கள் அவனைக் கவர்கின்றன. அவள் அங்கு நிற்பதே அவனை அமைதிப்படுத்தியது. விடுபட்டது போல உணர்ந்தான்.

    மூச்சிறைக்கப் பெரியவர் வெளியே வந்ததும், தலைப்பாகை அணிந்தப் பருத்த மனிதன் உள்ளே சென்றான். அவனுக்குப் பின் கால்களில் வளையங்கள் அணிந்த இளைஞன், பின் தாடியில் தைலம் பூசியிருந்த வயதானவர், கடைசியாக ஜீசஸ்.

    அந்தி இறங்கிக் கொண்டிருந்தது. நீல வானில் மொத்தையாக இரு மேகங்கள் மிதக்கின்றன. அவை சூரியனின் செங்கதிர்களைக் கோணிப்பை வடிவில் பிடித்து வைத்திருக்கிறது. அதன் ஊடும் பாவுமானத் துளைகளின் வழியே கூர் தீட்டியப் பட்டைகள் போல ஒளி, பலப்பல நீண்ட உருளைக்கம்பிகளாய்ப் பூமியைத் தொட்டு விரிகின்றன. அதனுள் இளம்பனி, பொன்னிறப் பூச்சு போல மரங்கள், மனிதர்கள் மற்றும் நிலத்தின் முகங்களில் பூசத் தொடங்கின. 

    உள்ளே சென்ற, அவனுக்கு முன்னே இருந்த முதியவரும் உடல் முழுதும் வியர்வையுடன் வெளியே வந்தார். சாய்ந்த செம்மஞ்சள் ஒளி, வாதிலின் வடிவத்தில் அறையினுள் படர்ந்திருந்தது. வெளியே கடந்து செல்லும் இயக்கங்களின் நிழலுருக்கள் அதனுள்ளும் கடக்கின்றன. முதியவரின் இருதோள்களிலிருந்து, உயிரற்ற மிருகங்கள்  போலக் கைகள் அசைவற்றுத் தொங்கின. உடைகளைச் சரிசெய்து கொண்டு ஒரு முறைத் திரும்பிப் பார்த்தவர், பின் ஓட்டமும் நடையுமாக, உள்ளே படரும் வெளிச்சத்தை மிதித்து, தெருவை அணுகிச் சென்று மறைந்தார்.

    எழுந்த இளைஞன், தன்னைத் தவிர யாருமற்றக் கூடத்தையும், வாதிலில் இருந்த ஆண்சைப்ரஸ் மரத்தினருகில் காத்துக் கொண்டிருந்தத் தன் துணையையும், அது தன்னைப் பின்தொடர்வதற்குத் தயாராக நின்று கொண்டிருப்பதையும் பார்த்தான். தான் மட்டும் தனியனாக உள்ளே செல்லவேண்டும், நீ அங்கேயே காத்திரு, நான் எங்கும் ஓடி விடமாட்டேன் என்று அவளிடம் சொல்ல முயன்றவன், எந்தச் சொல்லும் பேசாது அமைதியாக நின்றான். என்ன செய்வது நான் எப்படி அவளிடம் மன்றாடினாலும் ஒன்றும் நிகழாது என்று சலித்துக் கொண்டு, தன் இடுப்புவாரினை, நன்றாக இறுக்கிக் கொண்டான். அதன் முள் தேகங்கள் லேசாக விரல்களில் சிராய்த்தன. ஒரு விதத் தயக்கம் இன்னும் அவனை நகரவிடாமல் தடுத்தது, "வேறு யாரும் இருக்கிறீர்களா! உள்ளே வாருங்கள்" உள்ளிருந்து கரகரப்பானப் பலத்தபெண் குரல் எழுந்து அவனைத் தீண்டியது. தன் உடல்முழுவதையும், ஏதோ கனத்தப் பாரத்தைத் தூக்குவது போல அடி எடுத்து வைத்து பாதி திறந்திருந்த அவ்வறையினுள் நடுக்கத்துடன் நுழைந்தான்.

    மாக்தலேன் சுவரைப் பார்த்து அம்மணமாகப் படுத்திருந்தாள். ஒருக்கழித்து கைகளைத் தலைக்கு வைத்துக் கொண்டிருந்தவளின், கன்னங்கரியச் சுருள்த் தலைமுடி, ஈச்சங்கிளைப் போல விரிந்து தலையணையில் கிடந்தது. நாள் முழுதும் ஆண்களுடன் போராடித் தளர்ந்து, வியர்வையில் நனைந்திருந்த உடலில், கழுத்து, கைகள், உதடுகள், முலைகள் எங்கும் பற்பல வடிவங்களில் கடித்தடங்கள் கன்றியிருந்தது. ஆண்களின் விந்து நெடியும், வீச்சமான வியர்வை வாடையும் இன்னும் அச்சின்ன அறையை விட்டு அகலவில்லை. மூலையில் வைத்திருந்த நறுமணப் புகையும் கலந்து ஒருவிதக் கலங்கல் போல நறுமணங்களும், மனித வாடைகளும் பிசைந்திருந்தன. பிசுபிசுப்பாக இருந்தக் கால்களை அகட்டியும் தேய்த்தும் அமைதியற்றுக் கிடந்தாள் அவள்.

    கண்களைத் தாழ்த்திக் கொண்டு உள்ளே சென்றவன், அறையின் மத்தியிலேயே, நகரமாட்டாமல் நின்று கொண்டிருந்தான். இன்னும் சுவரைப்பார்த்துக் கிடந்த அவள், அறையினுள் எந்த ஆண் நடமாட்டமும், தன் பின்னே யாரும் உடைகளைக் கழற்றுவதையோ, சீரற்ற மூச்சுக்களோ எதையுமே உணராததால், பயத்தில் படக்கென்று திரும்பிப்பார்த்தாள். ஆவேசத்துடன் அனிச்சையாகப் போர்வையினைக் கொண்டுத் தன் அம்மண உடலைச் சுற்றிக் கொண்டாள். அவனைப் பார்த்ததும் அடித்தொண்டையில் கேவலுடன் ஒரு சிறுமியைப் போலத் தெவிங்கித் தெவிங்கி அழத் தொடங்கினாள்.

நீயா! நீயா!

    உள்ளங்கைகளினுள் முகம் புதைத்துக் கொண்டு இன்னும் கேவிக் கொண்டிருந்தாள்.

என்னை மன்னித்துவிடு! மேரி! அவன் தாழ்ந்தக்குரலில் சொன்னான்.

    அழுகை வெறித்து கோரமான சிரிப்பானது. உடலின் ஒவ்வொரு அணுக்களும் பூதாகரம் ஆனது போல அந்த அறை அதிர, நெஞ்சினுள்ளிருந்து பிளந்துக் கதறியது,  அவளின் வெறி நகைப்பு.

மேரி! என்னை மன்னித்துவிடு!  அவன் திரும்பவும் சொன்னான்.

    கட்டிலிலிருந்து இறங்கித் தரையில் கால்வைத்துப் போர்வையை மார்புக்குவைகள் வழிச் சரியாக இறுக்கிக் கொண்டவள் திரும்ப இளைஞனை நோக்கினாள். 

இதற்காகத்தான் என் கூடத்தினுள் வந்தாயா?

    இதற்காகத்தான் என் காதலர்களில் ஒருவனாக இக்கூட்டத்தில் கலந்து காத்திருந்தாயா?

    கைகளை உயர்த்தி ஒரு வித அவசர பாவனையில், காற்றில் எதையோ வரைந்துக் கொண்டிருப்பதைப் போல உடலெங்கும் அதிரக் கேட்டாள்.

    என்னுடைய வீட்டைத் தேடிக் கண்டுபிடித்து, என் சூடான படுக்கையினடியில், உன் உன்னதமானக் கடவுள் என்றப் பூச்சாண்டியை மறைத்து வைக்க வந்திருக்கிறாய் என்ன! நல்லது! ஆனால் நீ மிகவும் தாமதமாக வந்திருக்கிறாய் என் அன்பே! எனக்கு உன் கடவுள் வேண்டாம்! அவன் ஏற்கனவே என் இதயத்தை சுக்கு நூறாக உடைத்துவிட்டான். 

    அழுகையும் கோபமும் அவள் குரலைத் தழுதழுக்க வைத்தது. கைகளை அசைத்து அசைத்து அவள் கதறுகையில், போர்வையினுள் மார்புக்குவைகள் ஏறி இறங்கின.

    நீண்ட இமைகளில் கண்ணீர்த்துளிகள் சொட்டின. என் இதயம் முறிந்து விட்டது. அவன் இந்த அனாதரவானப் பறவையின் சிறகுகளை இரக்கமின்றி முறித்துவிட்டான். என் முறிந்த சிறகுகளை வைத்துக் கொண்டு என் சொந்தப் புண்களுடன் நான் காத்திருக்கிறேன். திக்கலும் பிதற்றலுமாக சொற்களை அவன் முன்னே உமிழ்ந்தாள்.

    அது கடவுளல்ல! அவனை அவதூறு செய்ய வேண்டாம். இது முழுக்க முழுக்க என் பிழை. நானே தண்டிக்கப்படவேண்டியன். அதனாலேயே இங்கு வந்தேன். உன்னிடம்  மண்டியிட்டு பிச்சை கேட்கிறேன். என்னை மன்னித்து விடு!

    அவள் வெடித்துச் சிதறுவதைப் போல இருந்தாள். நீயும், உன் கடவுளும். இருவரும் ஒரே மாதிரியானக் கள்வர்கள் தான். என்னை அதிகம் பேச வைக்காதே! அவனைப் பற்றி நான் இரவுகளின் தனிமையில் நினைக்கும் பொழுதெல்லாம், அவன் உன் முகத்தை அப்பிக் கொண்டு இருளினுள் இருந்து எழுந்து வருகிறான். சாபங்களின் நொடிப்பொழுதுகள்! உன்னை நான் பார்க்க ஆதுரத்துடன் தெருக்களில் சுற்றும் பொழுதெல்லாம், கடவுளே! அவன் தான்! அந்தக் கடவுள் என்பவன் தான் என்னைத் தேடிக் கொண்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் இருவரும் இரட்டை! ஒன்று ஒன்றின் பிம்பங்கள் போல இந்தப் பாவப்பட்டப் பெண்ணை நாலா புறமும் சிதறடித்து விட்டீர்கள். நான் இன்று என் சொந்த நம்பிக்கைகளுடன் வாழ்க் கற்றுக் கொண்டேன். உன் கடவுளையும், வெற்றுப் பிதற்றல்களையும் தூக்கிக் கொண்டு ஓடி விடு. ஏற்கனவே உங்களைக் கண்டால் கொல்லும் ஆத்திரத்துடன் இருக்கிறேன். என் கண்ணில் பட்டுவிடாதே! தயவு செய்து உன்னுடைய உறுதிப்பாடுகளை வேறு யாருடனாவது பேசு! நான் அயர்ந்து விட்டேன். என் உடல் தவிர என்னிடம் ஒன்றுமில்லை. கடவுள் என்பதும் சொர்க்கம் என்பதும் எனக்கு என் உடல் மட்டுமே.  அதைக் கொண்டே என்னை நான் கடைத்தேற்றுகிறேன். உன் பாவமான இந்த மூஞ்சைக் கொண்டு என்னைப் பார்க்காதே, நான் கந்தல் கந்தலாகக் கிழிவதைப் போல, என் உடலெங்கும் கூர்வாளால் குறுக்கு வாக்கில் கீறிக் கொள்வதைப் போல உணர்கிறேன். 

    கடவுளை அடகு வைத்து என்னைத் தொந்தரவு செய்யாதே! கைகளை உயர்த்திக் கத்தினாள். இங்கிருந்து போய்விடு. நான் உன்னைத் திரும்பப் பார்க்க விரும்பவில்லை. எனக்கான அடைக்கலமும் ஆறுதலும் இந்த மண்தான். எனக்கான வழிபாட்டினை நான் இந்த மண்ணில் நிகழ்த்துகிறேன். என் பிரார்த்தனைகளும், என் சொஸ்தப்படுதலும் இம்மண்ணிடமே!

    அதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன் மேரி! நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்! விரக்தியடையாதே! இம்மண்ணிலிருந்து உன்னை வெளியெடுக்கவே நான் வந்திருக்கிறேன். நான் பாவங்களில் உழல்கிறேன். அதற்கு பரிகாரமாக, மடத்திற்கு சென்று துறவியாகப் போகிறேன். ஆனால் உன்னுடைய இக்கீழ்மை நிலைக்கு முழுக்க முழுக்க நான் மட்டுமேக் காரணம். அது என் தலைச்சம்மாட்டில் தாங்க முடியாத பாரமாக அழுந்துகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக