திங்கள், 28 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -54

    

    ஜேக்கப் கோபத்துடனும், வெறுப்புடனும் கார்பெர்னம் நோக்கி, முன்னே செல்வதை பார்த்துக்கொண்டிருந்தான் மேரியின் மகன். சரிந்து விழுவதைப் போல நிலத்தில் குத்திட்டு அமர்ந்தான். இன்னும் ஒரு அடி கூட நகர முடியாததை உணர்ந்தான். ஏதோ ஒரு பெரிய மனத்தடை அவனை நிலைத்திருந்தது. நடந்தவை எல்லாவற்றையும் அசை போட்டுக்கொண்டிருந்தது அவனது மனம்.

    ஏன் தன் உள்ளம் நேசிக்கவும், நேசிக்கப்படவும் இப்படி ஏங்குகிறது?  ஏன் என் விழிப்பிலும், உறக்கத்திலும் கூட மனிதர்களின் வெறுப்பினால் அது தளர்வுறுகிறது? இது என் சொந்தத் தவறு. நிச்சயமாக கடவுளுடையது அல்ல. எந்த மனிதர்களாலும் அல்ல, இது நான் மட்டுமே உருவாக்கிக் கொண்டப் பிழை. ஏன் ஒரு கோழையைப் போல நடந்து கொண்டேன்? ஏன் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தும், அதில் தொடர்ந்து இறுதி வரைப் பயணப்படத் தயக்கம் கொள்கிறேன். நான் மனதளவில் ஒரு தோல்வியுற்றவனாய், ஒரு பயந்த விலங்காய் என்னை ஏன் பாவித்துக் கொள்கிறேன். ஏன் மாக்தலேனாவை அங்கிருந்து அழைத்துச் செல்ல, என் மனைவியாக  ஏற்றுக் கொள்ளத் திராணியற்றவனாய் இருக்கிறேன். அவளை இந்த மாபெரும் அவமானத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் செய்யாமல் தவறவிடுகிறேன். எப்பொழுதெல்லாம் கடவுளின் கூர் உகிர்கள் என் மூளைக்குழியினைப் பிளந்து என்னை எழுப்புகிறதோ, அப்பொழுதெல்லாம் மண்ணைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுத் தரையோடுத் தரையாகப் புதைந்து விட வேண்டும் போலக் கிடக்கிறேன். இப்பொழுது எதையும் எதிர்கொள்வதற்குப் பயந்து பாலை நிலத்திற்குச் சென்று என்னை மறைத்துக் கொள்ளப் பார்க்கிறேன். ஏன்? கடவுளால் அங்கும் வந்து என்னைப் பீடித்துக் கொள்ள முடியும் என்பதை நான் சிந்திக்கவில்லையா? அலைக்கழிந்து சிதறிக் கொண்டிருந்தது அவனது எண்ணங்களும், நினைவுகளும். எல்லாவற்றையும் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இன்னும் தனக்கிருப்பதாக ஒரு முறை நினைக்கிறான். ஆனால் மறுமுறைத் தன்னை மீறிய ஒன்றிடம் தான் சதா போராடிக் கொண்டிருக்கிறோம் என்று பதறுகிறான். ஒரு பக்கம் ஒளியும், ஒரு பக்கம் இருளும் அவனை ஆட்கொள்கிறது. அவிழ்க்கவே வாய்ப்பற்ற, தூரத்தொலைவில் கொளுத்தியிடப்பட்டிருக்கும் சங்கிலியின் கண்ணிகள் அவன் கால்களில் நிலையாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதை அவிழ்க்க முனையும் பொழுதெல்லாம் அவன் சிதைந்து போவது ஒன்றுதான் திரும்பத் திரும்ப நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டான். ஆனால் எல்லாவற்றையும் ஏதோ ஒன்றிடம் அவன் கையளிக்க முடியவில்லை. இதற்குத்தான் தான் காரணம் என்று தன்னைக் குற்றப்படுத்திக் கொண்டுத் தன் சுயத்தை வதைக்கிறான். இது ஒரு வகை ஆறுதலாகவும், எரிச்சலாகவும் அவனிடம் வெளிப்பட்டது.

    நண்பகல் சூரியன் சரியாகத் தலைக்கு மேலே எரிந்தது. மிச்ச மீதிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தவர்களும், புலம்பிக்கொண்டிருந்தப் பெண்களும் நிறுத்திக் கொண்டனர். இந்தப் பேரழிவின் பாதிப்புகளால் கவலையுற்று எந்தப் பயனுமில்லை, அதற்காக அழுது புலம்பினாலும் எதுவும் மாறப் போவதில்லை, என்று தங்களைத் திடப்படுத்திக் கொண்டு அமைதியாகினர். ஆயிரம் வருடங்களாய் அவர்கள் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியும் சக்திகளாலும், தெரியாதவைகளாலும் அவர்கள் தூக்கியெறியப்படுகிறார்கள். வரலாறு நெடுகிலும் அநீதி இழைக்கப்பட்டு, பட்டினி கிடந்து மடியவேண்டும் என்பது அவர்களின் என்றைக்கும் அழியாத விதி! அதனால் தங்கள் வாழ்க்கை முழுதும்  அவர்கள் பொறுமையாக, பிரச்சனைகளை எதிர் நோக்கியிருப்பதே வாடிக்கையாகிவிட்டது.

    பச்சோந்தி ஒன்று சாலைக்குக் குறுக்கே, ஒரு பாறையின் மேலே வெயிலைக்குடித்துக்கொண்டும்,  சுற்றும் முற்றும் தன் உருள் கண்களை அங்கும் இங்கும் அலைத்துக் கொண்டும்,  மெல்ல மெல்ல காலடி எடுத்து வைக்கிறது. பின் நின்ற இடத்திலேயே அசைவற்றிருக்கிறது. மனித அரவம் கேட்டதும் கழுத்தை உள்குழித்து, இன்னும் நிலைத்த கண்களுடன் கூர்கிறது. பாறையின் நிறத்திலேயே அதுவும் இருப்பதால் அருகில் வரும் வரை அதை யாரும் கவனிக்க முடியாது. தன்னந்தனியேத் தனக்குமுன் இருக்கும் மனிதனை உற்று நோக்கியது. அதன் செதில்களடர்ந்த தேகத்தின், கால் விரல்களுக்கிடையிலும், கால்கள் உடலுடன் சேரும் பகுதியிலும் சவ்வு போன்று விரிந்து சுருங்கும் மென்மையான வெளுத்தத் தோலைக் கொண்டிருந்தது. கொம்புகள் போன்று, இரு உருளைக் கண்களுக்கும் நேர் மேலே செதில்கள் கூர்மையாய் வளர்ந்திருந்தன. உடல் முழுதும் சிறிதும் பெரிதுமாகத் திரட்சியாய்ச் செதில்கள் இருந்தது. அதன் சவ்வுகள் அது எளிதில் தாவிப் பறப்பதற்க்கு உதவியாக இருந்தது. அதனருகில் தரையில் அமர்ந்திருந்தான் மேரியின் மகன். அவன் அதனை இன்னும் கவனிக்கவில்லை. அதன் அடிப்பாகம் மென்மையாகவும், மேற்பாகம் கடினமானதாகவும் இருந்தது. அவனருகில் சடாரெனக் குதித்த அந்தப் பல்லி அவன் தலையில் பறந்து வந்து அமர்ந்து கொண்டது. ரத்தத் துணுக்குகளாலான குட்டையை முகர்ந்தது. தன் நீண்ட நாக்கினை நீட்டி அந்த ரத்தததை நக்கிப் பார்த்தது. பின் அங்கிருந்து பறந்துக் குதித்துத் தரையில் கால்களை ஊன்றி அசையாமல் நின்றது. இது எல்லாமே கண நேரத்தில், ஜீசஸ் நிதானிக்கும் முன்னமே சட்டென்று நடந்தேறியது. அவன் தலையை உலுக்கிக் கொண்டு குறுக்கே நகர்ந்து செல்லும் அப்பல்லியைப் பார்த்தான். 

    அதற்குள் வேறு ஒரு எண்ணத்தை உருவாக்கியது. அந்தப் பல்லி. அவனுக்கு கடவுளின் இருப்பை அது அறிவித்தது. அவனது செய்தி ஒரு இடிமுழக்கமாகவோ இல்லை கூர்மையான உகிர்களைப் போலவோ எப்போதும் வருவதில்லை. சில நேரங்களில் இந்த ஊர்வன போலக் கூட வந்து ஞாபகப்படுத்திச் செல்லக்கூடும் என்று நினைத்து இன்னும் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தான்.

    குத்திட்டு அமர்ந்திருந்த அவன் கால்களுக்கடியில் ஏதோ ஊறுகிறது. கீழே குனிந்துப் பார்த்தான். திரள் திரளாக கருப்பும், மஞ்சளும் கலந்த நிறங்களிலான கடி எறும்புகளின் வரிசை, அவசர அவசரமாக கீழே அவன் இடம் விட்டிருக்கும் வளைவுகளின் வழியே சென்று கொண்டிருந்தது. இரண்டு அல்லது மூன்று எறும்புகள் ஒரு குழுவாகக் கீழே சிந்திக்கிடக்கும் கோதுமைகளைத் தங்கள் தாடைகளால் முட்டுக் கொடுத்துத் தூக்கி வருகின்றன. ஒரு நீண்ட வரிசையில், ஒன்றன் பின் ஒன்றாக, ஒவ்வொரு தானியங்களாக அவைகள் தங்கள் புற்றினை நோக்கிக் கடத்திச் செல்கின்றன. அவைகள் தங்கள் கடவுளான பெரிய எறும்பிடம் வேண்டிக்கொள்வதெல்லாம், கதிரடிப்புக் களத்தில் தானியங்களெல்லாம் மனிதர்கள் சேமித்து வைக்கும் சமயத்தில் சரியாக நீ வெள்ளத்தினை அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான்.

    அவைகளுக்கு எந்த பாதிப்புமில்லாமல் இருக்கும்படி மேரியின் மகன் சற்றுத் தள்ளி அமர்ந்துகொண்டான். எறும்புகளும் கடவுள் உருவாக்கிய உயிர்தானே! 

    இந்த மனிதர்கள், பல்லியினங்கள், வெட்டுக்கிளிகள், ஆலிவ் மரங்கள், இரவில் ஊளையிடுகிறதே கழுதைப்புலிகள், இந்த வெள்ளம், பசி எல்லாம்....எல்லாமே அவன் உருவாக்கியதுதானே!...

    ஏதோ சப்தம் தன் பின்னால் வருகிறது. நீர்க்குமிழிகள் கொப்பளிப்பதைப் போல அச்சப்தம் பின்னால் ஊடுருவுகிறது. வெகு நேரம் அவனும் கூட மறந்து விட்டான். அவள் அவனை எத்தருணத்திலும் மறக்காமல் சரியாகப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவன் உணர்கிறான், தன் முதுகுக்கு பின்னே ஒளிரும் கூர்க்கண்களை. சம்மணமிட்டு அமர்ந்தவன், மூச்சினைப் பலமாக இழுத்து வெளிவிட்டான்.

    "இந்த சாபமும் கூட கடவுளின் படைப்புத்தான்!" அவன் முணுமுணுத்தான். 

    அவன் தன்னைச்சுற்றி எப்பொழுதும் ஆண்டவனை உணர்ந்திருந்தான். அவரின் சுவாசத்தின் அணுக்கமின்றி அவன் இருந்ததில்லை. அவனைச்சுற்றிக் குழுமும் கடவுளின் இருப்பு சில சமயம் அவனில் கதகதப்பும், கருணையும் கொண்டிருக்கும். சில சமயம் காட்டுமிராண்டித்தனத்துடன் வெறிகொள்ள ரணங்களாய்த் துரத்தும். இந்தப் பல்லிகள், வண்ணத்துப் பூச்சிகள், எறும்புகள், என் சாபங்கள் எல்லாமேக் கடவுளின் செய்கைகள் தான்.

    பொருளற்றக் குரல்களும், மணிச்சப்தங்களும், சாலையைக் கடந்து கொண்டிருந்தது. ஏதோ விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு ஒட்டக மந்தை நிரைப் பாதையில் வருகிறது. ஒரு வயதானக் கழுதை அதனை வழிநடத்துகிறது. இந்த வணிகக் கும்பல் எப்படியும் வெகுதொலைவு பயணப்பட்டிருக்கும். இந்த மதிப்புமிக்கப் பொருட்களின் வியாபாரம்,  நம் மூதாதை ஆப்ரஹாமின் சந்ததிகள் வாழும் பள்ளத்தாக்கு நிலமான நினேவாவிலிருந்தும், பாபிலோனிலிருந்தும் தொடங்கியிருக்கும். அங்கிருந்து பாலைவனங்களைக் கடந்து, பட்டு, யானைத்தந்தங்கள், ஏலக்காய், இலவங்கம், கிராம்பு, பட்டை மற்றும் பலப்பல ஆண், பெண் அடிமைகளையும், ஏற்றுமதி, இறக்குமதி வாணிபம் செய்கின்ற மகாசமுத்திரத்தின் துறைமுகத்தின் வழியேக் கடந்து இங்கே வந்து கொண்டிருக்கிறது. 

    நீண்ட ஊர்வலம் போல அவர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். முடிவடையாது நீண்டு கொண்டே சென்ற ஒட்டகங்களின் நிரை ஒருவழியாக முடிந்தது. கருத்த தாடியும், நீண்ட சிகையும் கொண்ட பருமனான வணிகர்கள் அதன் பின் வந்து கொண்டிருந்தனர். தலையில் பச்சை நிறத் தலைப்பாகையும், காதுகளில் தங்க வளையங்களும், கழுத்தில் முத்து மற்றும் பவளங்களால் செய்த மாலைகளும் அணிந்திருந்தனர். தங்களுக்குள் எதையோ மிகத்தீவரமாக உரையாடிக் கொண்டும், முன்னே செல்லும் மந்தையை, அடிமைகளைக் கவனித்துக் கொண்டும் வந்தனர். அவர்களின் நகைப்பொலிகளும், வெடிச்சிரிப்புகளும், ஒட்டகங்களின் குளம்படிகளும், மணிச்சப்தமும், அவைகள் அசைபோட்டுக்கொண்டே நரநரக்கும் பொருளற்றக் கனைப்பொலியும் இணைந்து சாலையேக் குலுங்கும் வண்ணம் அதிர்ந்து கொண்டிருந்தது. 

    எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மேரியின் மகனின் உடல் நடுங்கியது. இவர்கள் எப்படியும் மாக்தலாவில் ஓய்வெடுக்க நிற்பார்கள். மேரியின் கதவுகள் இரவும் பகலும் மூடுவதே இல்லை. இவர்களும் அங்குக் கண்டிப்பாகச் செல்வார்கள். நான் அவளைக் காப்பாற்ற வேண்டும். என்னால் மட்டும் தான் அது மடியும்! மாக்தலேன்! ஐயோ! நான் இஸ்ரவேலத்தைக் காக்கும் இப்பந்தயத்திலில்லை.என்னை விட்டு விடுங்கள். நான் ஒன்றும் தீர்க்கதரிசியில்லை. நான் வாயைத் திறந்தால், என்ன பேசுவேன் என்று எனக்கே ஒன்றும் தெரியாது. என் உதடுகள் வழியே அனல் தகிக்கும் வார்த்தைகளை அவன் அருளியிருக்கிறானா? இல்லை, ஒரு இடிமுழக்கத்தினை என் உடலினுள் புகுத்தி என் உடல், பொருள் ஆவி அனைத்தையும் எரிய வைத்து என் வெம்மையை இம்மக்களுக்கெல்லாம் பரப்பும் வலுவை எனக்குத் தந்திருக்கிறானா? வெறி கொள்ள இத்தெருவின், இச்சதுக்கத்தின் மையத்தில் நின்று கூச்சல் போட்டு மக்கள் எல்லோரையும் அழைத்து நான் என்னப் பேசப் போகிறேன். அது என் குரல்! ஆனால் அது என் சொற்களாக இருக்கப் போவதில்லை. உண்மையில் என்னிடம் எந்த சொற்களுமில்லை. என் வார்த்தைகள் கடவுளுடையதாய் இருக்கக்கடவது. நான் எதுவும் செய்யப் போவதில்லை. வெறுமனே என் வாயைத் திறந்து அமைதியாகக் காத்திருப்பேன். அவன் என் வழியே பேசிக் கொள்ளட்டும். நான் ஒன்றும் புனிதனல்ல, தீர்க்கதரிசியுமல்ல. ஒரு வெறும் பயல் நான். ஒரு சாதாரண மனிதன் நான். எல்லாவற்றிற்கும் பயந்து பதுங்கிக் கொள்ளும் ஒரு சாமானியன் தான். என்னால் உன்னை இந்த அசிங்கமானப் படுக்கையெனும் படுகுழியிலிருந்து மீட்க முடியாது மாக்தலேன்! எனக்கு இதைத்தவிர வேறு வழியில்லை. நான் இந்தப் பாலைவனத்திற்குத் தான் போகப் போகிறேன். அங்கே அந்த புனித மடத்திற்கு சென்று உனக்காக நான் உளம் உருகிப் பிரார்த்தனை செய்கிறேன். மேரி! பிரார்த்தனைகள் பெரியவைகள்! அவை மனிதனை விட வல்லமை கொண்டவை. நமது மூதாதை மோசஸ் போர்களின் போது கையை உயர்த்தி வானத்தை நோக்கி மன்றாடினார், அவர்கள் வெற்றியடைந்தார்கள். சோர்ந்து தளர்ந்து தன் கைகளை அவர் இறக்கும் பொழுதெல்லாம் தோல்வியுற்றார்கள். நானும் இரவும் பகலும் உனக்காக வேண்டி என் கைகளை சொர்க்கத்தை நோக்கி உயர்த்திக் கொண்டு காலமற்றுப் பிரார்த்திக் கொண்டே இருப்பேன் மேரி! ஆம்! நாம் நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்வோம் மேரி! தனக்குள் புலம்பிக் கொண்டே இருந்தான் ஜீசஸ்.

    அவன் மெல்ல வானத்தைப் பார்த்தான். அந்தி இறங்கும் சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. இருளில் அங்கிருந்து பயணிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டான். அப்பொழுதுதான் தன்னை எந்த மனித உயிரும் கண்டுவிடாது. தானும் கார்பெர்னத்தைக் கடந்து ஏரியின் வழியாக, பாலைவனத்தை அடையலாம் என நினைத்தான். அவனது மனவலிமை முற்றிலுமாக வடிந்திருந்தது. இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விட்டால் போதும். எப்போது நாம் அந்த துறவிகளின் மடாலயத்தை அடைவோம் என்று விசனப்பட்டும், கலக்கமுற்றுமிருந்தான்.

     ஆம்! ஆழம் குறைந்த ஏரியின் பாதை வழியேக் கடந்தால் இன்னும் சீக்கிரம் பாலையை அடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டவன். மூச்சினை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை சமப்படுத்த முயன்றான்.

    சூரிய ஒளியின் துலக்கத்தில், பாறையில் ஒட்டிவைத்தாற் போல இன்னும் வெயில் காய்ந்து கொண்டிருந்தது அந்தப் பச்சோந்தி. வண்ணத்துப்பூச்சிகள் சில எம்பிப் பறந்து மறைந்து விட்டன. எறும்புகள் தங்கள் அறுவடையை வெகு சிறப்பாக நகர்த்திக் கொண்டு போய்ப் புற்றுகளில் இருக்கும் களஞ்சியத்தை நிரப்பிக் கொண்டுத் திரும்பவும் அதே பாதையில் சென்றுத் தானியங்களின் பாரங்களை சுமந்து வருகின்றன. அந்தி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கத் தயாரானது. சூரிய வெளிச்சத்தின் சீறிய செவ்வொளிக் கிளர்ந்து நிலமெங்கும் பரவியது. ஏரி நீர்ப்பரப்பு வண்ணங்களின் கலங்கல்களால் சிதறித் தெறித்தது. சென்னிறம், கருமை, வெண்மை, நீலம், கண்ணாடி நிறம் என அதன் வெவ்வேறான தூரங்களின் அளவைகளில் பிம்பங்களின் வெவ்வேறான நிறங்களை உட்கிரகித்துக் கொண்டு எதிரொளித்தது, ஒட்டு மொத்த ஏரியும் அந்தியைத் தாங்கிக் கொண்டிருந்தது. மேற்கு வானத்தில் ஒரு பெரிய நட்சத்திரம் பொட்டு போல ஒளிர்வு கொண்டது. எந்த வழிப்போக்கற்களும்  இல்லை. பாதை வெட்டையாய்க் கிடந்தது. பறவைகளின் தொடர்ச்சியான கிரீச்சிடல். நீரினுள் இன்னும் முழுக்கிட்டுக் கொண்டிருந்தன நீர்க்கோழிகள். அவைகள் தங்கள் கழுத்தை நீட்டி வானத்தைப் பார்த்துக் குழப்பமடைந்தன. கடற்காகம் ஒன்று சிறகுகளை உலர்த்திக் கொண்டு இன்னும் தன் இரை பிடிப்பினை நிறுத்திக் கொள்ளாமல் நீர்மையின் அலையடிப்பில் வட்டமிட்டது. ஒருமித்து அழுத்தம் நிறைந்த பிற்பகல் காற்றும் தங்கள் மூட்டுகளை விடுவித்து ஆசுவாசமாக வீசத் தொடங்கின. சூழல் ரம்மியமாகவும், அழகாகவும் ஆகியது.

    இன்னும் கொஞ்ச நேரம் தான். இருட்டி விடும். கடவுளின் கரியப் பெண்குழந்தை வந்து விடுவாள். அவளின் துணைவர்களாக எண்ணிலடங்கா விண்மீன்களால் வானம் முற்றும் நிரம்பிவிடும். அவைகள் வரும் முன்னரே மேரியின் மகனின் அகவானத்தில், எல்லா நட்சத்திரக் கூட்டங்களும் துளிர்த்து மிளிர்ந்து கொண்டிருந்தன.

    ஏதோ உலுக்கி விட்டது போல, அவன் பயணத்திற்குத் தயாரானான். ஒரு ஊதுகுழல் சத்தம், யாரோ தன்னை விளிப்பதைப் போல உணர்ந்தான். பின்னாலிருந்து ஒரு வழிப்போக்கன் அவன் பெயரைச் சொல்லிக் கூவி அழைத்துக் கொண்டே வந்தான். தூரத்தில் அந்தி ஒளியில் மங்கலாக ஒரு உருவம் வலுவான ஏதோ ஒரு பாரத்தை, மூட்டையாகத் தூக்கிக் கொண்டு இறக்கத்தில் ஒட்டமும் நடையுமாக அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. யாராக இருக்கும் என்று கேட்டுக் கொண்டவன் அந்த வழிப்போக்கனை சரியாக அடையாளம் கண்டறியப் போராடினான். அந்தக் குள்ள மனிதனை எங்கோ பார்த்திருக்கிறோம். வெளுத்த முகமும், தட்டையான ஒடுங்கியத் தாடையும், கற்றையாய் நாடியில் மட்டும் தொங்கும் தாடியும், சிறிய தலைக்கு சம்பந்தமில்லாத பருத்த உடலும், வளைந்து சிறியத் தண்டுகள் போன்றக் கைகளும் அவனைத் தான் முன்னாடியேப் பார்த்திருக்கிறோம் என்று தன் நினைவுகளினுள் போராடினான்.

    "சரிதான்! கடைசியில் அவன் இங்கேயே சுற்றிச் சுற்றி வந்து விட்டான், தாமஸ்!" என்ற பெயர் அவனுக்கு இறுதியில் ஞாபகத்திற்கு வந்தது.

    ஊரெல்லாம் சுற்றித் திரிந்து வியாபாரம் செய்யும் தாமஸ் மேரியின் மகனை மூச்சிறைக்க அணுகினான். தன் தலையில் இருந்த சம்மாட்டினைத் தரையில் மெதுவாக வைத்தான். நெற்றியிலிருந்து முகம் முழுதும் வழியும் வியர்வையைத் தன் தலைக் குட்டையால் அழுத்தி ஒற்றித் துடைத்தான்.அவனின் தந்திரமான, தெளிவற்றக் கலங்கலான மாறுகண்கள், அவன் உண்மையில் எங்கு யாரைப் பார்க்கிறான் என்ன சொல்ல வருகிறான் என்பதை எப்பொழுதுமே சரியாக யூகிக்க முடியாமல் ரகசியம் போல எதிராளியைக் குழப்பமடையச் செய்யும்.

    ஜீசஸுக்கு அவனை ரொம்பப் பிடிக்கும். எப்பொழுதும் தனது மரப்பட்டறைக்கு அவன் வேலையெல்லாம் முடித்துவருவான். அவன் தன் இடுப்பில் ஒரு ஊதுகுழல் வைத்திருப்பான். வியாபாரத்திற்குச் செல்லும் வழியில் அதை ஊதித்தான் மக்களை அழைப்பான். ஒவ்வொரு நாளும் அந்திப் பொழுதில் அவன் பட்டறைக்கு வந்துத் தன் சாக்குப்பையை எடுத்து இருப்புபலகையில் வீசி விட்டு காலை நீட்டி அமர்வான். அன்று அவன் பார்த்தது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் மேரியின் மகனிடம் சொல்வான். நடந்த சம்பவங்களை, ஆண்களைப் பெண்களை, அவர்களின் அபத்தங்களைப் பரிகாசம் செய்வதும், நையாண்டி செய்வதும் தான் அவனது வாழ்வியல். அவனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. கடவுளோ! சாத்தானோ! மீடபனோ! அற்புதங்களோ! எதிலும் அவனால் நீடித்த நம்பிக்கை வைக்க முடியாது அவனுக்கே உரிய சந்தேகங்களை அவன் எழுப்பிக் கொண்டே இருப்பான். எதிலும் நம்பிக்கையின்மையால் எல்லாவற்றையும் கேலி செய்வான். நம்மை இறைச்சிக்காக வளர்க்கும் குடியானவர் தான் இக்கடவுள் என்பது அவன் சித்தாந்தம். அதனால் அவனைக் குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. கடவுளினை எரித்து நறுமணத் தூபமாக்கி, சத்தமாக துதிப்பாடல்கள் பாடி சந்தோசிக்க வேண்டும் அதுதான் ஒரு நல்லப் பிரார்த்தனை! என்பான். அவன் சொல்லிக் கொண்டிருப்பதை ஜீசஸ் உன்னிப்பாகவும் கவனமாகவும் கேட்பது தான் அவனது உள்ளொடுங்கிய இதயத்தின் ஒரே ஆறுதல். இந்த மாதிரி ஒரு போக்கிரித்தனமான நோக்கினால் அவன் எல்லாவற்றையும் தலைகீழாக்கிவிடுகிறான். தனக்கிருக்கும் ஏழ்மையோ, இந்த அடிமை வாழ்வையோ, இல்லை நம் மாறாதக் கவலைகளையோ அவன் தன் பகடியையும் சிரிப்பையும் கொண்டு மடை மாற்றி விடுகிறான். இந்த வாழ்வே ஒரு பெரும் அபத்தம். அது முழுக்கமுழுக்க சிரிப்பதற்கும் பரிகாசம் செய்வதற்கும் மட்டுமே உகந்தது என்பது அவன் எண்ணம்.

    தாமசுக்கும் மேரியின் மகனை ரொம்பப் பிடிக்கும். அவன் ஜீசசை ஒரு பாவப்பட்ட ஆட்டினைப் போலப் பாவிக்கின்றான். தன் வாதையிலும், வலியிலும், காயங்களின் வழியாகக் கடவுளைத் தேடுவதின் மூலம் தன் சொந்த நிழலை மறைத்துக் கொள்ளும் இளைஞன் என எண்ணிக் கொள்வான்.

    நீ ஒரு ஆடு, மேரியின் மகனே! திரும்பத் திரும்ப அவனைப் பார்க்கும் போதெல்லாம் தாமஸ் சொல்லிக்  கொண்டே இளிப்பான். ஆனால் இந்த ஆடு தன்னுள்ளில் ஒரு ஓநாயைக் கொண்டிருக்கிறது. அது எந்தத் தருணத்திலும் அந்த ஆட்டை அடித்துச் சாப்பிடும் என்று சொல்லிக் கொண்டு, தன் ஆடையினுள் மறைத்து எடுத்துவந்த திருட்டு ஆப்பிள்கள், பேரீச்சைகள், மாதுளைகளை அவனுக்கு அன்பளிப்பாக அளிப்பான்.

    உன்னைப் பார்த்ததில் மகிழ்ச்சி! மேரியின் மகனின் கைகளைக் கனிவாகப்  பிடித்துக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கூறினான்.

    "கடவுள் உன்னை விரும்புவார்" என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தான்.

எங்கே போகிறாய்? 

    மடாலயத்திற்கு, ஏரியினைக் கைத்தூண்டிக் காண்பித்து ஜீசஸ் பதிலுரைத்தான்.

    அப்படியென்றால் உன்னைப் பார்த்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி! கொஞ்சம் இங்கே திரும்பி உன் முகத்தைக் காட்டு! 

"எதற்காகப் போகிறாய்?"

"கடவுள்----"

    எனக்காக ஒரு உதவி செய்வாயா! தாமஸ் வெடிப்பது போல அவனைப் பார்த்து சீறினான். தயவு செய்து கடவுளைப்பற்றி ஆரம்பிக்காதே! எல்லைகளே அற்ற அவனுக்கு எதில் அக்கறை இருக்கப் போகிறது. நீயும் உன் வாழ்நாள் முழுதும் நடக்கிறாய்! இங்கே! பின் அங்கே! தொடர்ச்சியாக அவனைத் தான் தேடிக் கொண்டிருக்கிறாய். ஆனால் அந்த ஆசிர்வதிக்கப்பட்டக் கடவுள் முடிவற்று நழுவிக் கொண்டே இருக்கிறார். அதனால் அவரைப் பற்றியப் பேச்சை மறந்துவிடு. நம்மிடையே உள்ளக் காரியங்களில் அவரைக்கலக்காதே! 

    இங்கு நம்முடைய பேரம், மனிதனுடன். நேர்மையற்ற, ஏழுமடங்கு புத்திசாலியான மனிதனுடன். நீ செல்வதற்கு முன் இதைச் சொல்ல வேண்டும். அந்த செந்தாடிக்காரன் யூதாஸ், அவனிடம் கவனமாக் இரு. நான் நாசரேத்தை விட்டு வெளியேறும் முன் அவனை அங்கே செத்துப்போன புரட்சியாளனின் அன்னையுடன் பார்த்தேன். அவனுடன் இருந்த பராபஸ்ஸும், இன்னும்  சிலர், அவர்களின் சகோதரக்குழுவிலுருந்தவர்களும் உன் பெயரைச் சொல்லி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அதனால் நீ மடாலயத்திற்கு இப்போதைக்கு போகாதே! ஜாக்கிரதையாக இருந்து கொள்!

ஜீசஸின் பார்வை நிலத்தில் குத்திட்டிருந்தது.

    "எல்லா உயிர்ப்பிறப்புகளும் கடவுளின் கைகளில். அதில் யார் உயிர் வாழ வேண்டும்! யார் கொல்லப்பட வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அதனால் நான் செல்லத்தான் போகிறேன். கடவுள் எனக்கு உதவி செய்யட்டும்" என்று எந்த உணர்ச்சியுமற்றுக் கூறினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக