ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -50

     

Author: Nikos Kazantzakis

    உலர்த்திக்கிடந்த வலைகளை மீனவர்கள் தங்கள் தோள்களில் ஏற்றியதும், காலைப்பொழுது ஏரியில் இறங்கி முழுக்கிடுவதும் சரியாக இருந்தது. பகல் வெளிச்சம் மங்கிக் கொண்டு வருகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் காத்துக்கொண்டிருக்கும் அந்தியின் கரங்களை உசாவிக்கொள்ளத் தயாராவது போல, சூரியனின் கதிர்கள் சாய்ந்து வீழ்கின்றன. மேரியின் மகன் ஜேக்கப்புடன் பயணம் செய்கிறான். அவர்கள் மாக்தலாவைக் கடந்து வந்து கொண்டிருந்தார்கள். வழியில் பெண்கள் வயல்வெளிகளில் நிலத்தில் சிதறிக் கிடக்கும் எஞ்சியத் தானியங்களைப் பொறுக்க அவர்களும் நின்று உதவி செய்தும், பின் அங்கிருந்து தொடர்ந்து பயணித்தும்  வந்து கொண்டிருந்தனர். மூடுபனியின் குளிரில் விரைத்த ஜேக்கப்பின்  உடல் அப்போதுதான் சகஜ நிலைமைக்கு மாறியிருந்தது. அவன் மாக்தலேவாவில் ஒரு நண்பனின் வீட்டில் முந்தைய இரவுத் தங்கியிருந்து விடியற்காலையிலேயே பயணத்தைத் தொடங்கியிருந்தான்.

    தள்ளாடித் தள்ளாடித் தரையைத் தேய்த்து மெதுவாக நடந்துவந்தவன், எப்படியாவது ஜென்னசரேட்டை அடைந்து விட வேண்டும் என்றக் கவலையுடன் பயணித்துக் கொண்டிருந்தான். முந்தைய நாள் நாசரேத்தில் நிகழ்ந்த அனைத்தும் அவனைக் கடந்திருந்தது. அதன் கசப்பை விழுங்கித்துப்பியும் விட்டான். ஒரு பழைய ஞாபகமாக வெகு சீக்கிரமே மாண்ட புரட்சியாளன் மாறிப்போனான். திரும்பவும் தன் சாதாரண தினசரி வாழ்க்கைக்குள் மூழ்கி விட நினைத்தான். தந்தை செபெதீயும்  அவர் படகுகளும், மீனவ அடிமைகளும் அவன் நினைவில் வந்து போயினர். மழையில் ஆங்காங்கே உருவாகியிருந்த குழிகளைப் பாதி இருட்டில் கவனமாகத் தாண்டி வந்து கொண்டிருந்தான். மரங்களின் கிளைகள் காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தன. தலைக்கு மேலே வானத்தின் சிறகடிப்புகள். தூய நீல வானம் பொலிந்து வியாபிக்கத் தொடங்கியது. காற்றின் திசைகளில் ஏரியை நோக்கி பறவைகள் வலசை சென்று கொண்டிருந்தன. மொத்தத்தில் நிதானமான அமைதியான நாளாக இன்றிருக்கும் என வேண்டிக் கொண்டான். ஆனால் வெளிச்சம் ஏற ஏற, இரவில் மழை வெள்ளம் எப்படி நிலமெங்கும் சேதப்படுத்தியிருக்கிறது என்பது அவனுக்கு விளங்கியது. கொத்து கொத்தாக அறுவடைக்காக காத்திருந்த பயிர்கள் அழிந்து சாலைகளிலும், குட்டைகளிலும், சேற்றுப்பரப்பிலும் சிதைந்து கிடக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டே வந்தான். விவசாயிகளின், அவர்களின் மனைவிகளின் புலம்பல்கள் தான் முதலில் அவன் காதில் விழுந்தன. தூரத்தில் உழவு நிலத்தில், சதுப்பில் அவர்களுடன் குனிந்து எஞ்சியிருக்கும் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் மேரியின் மகனை அதிர்ச்சியுடன் பார்த்தான் ஜேக்கப். 

    அவன் கைகளில் இருந்த கவைக்கோலை இறுக்கமாகப் பிடித்து அடிக்கும் பாங்கில் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். நாசரேத் திரும்பவும் அவன் எண்ணங்களில் சுழலிட்டது. சிலுவை, புரட்சியாளன், அவன் வலியின் முணகல்கள், ரத்தம் எல்லாம் சேர்ந்து அவனைக் கிறக்கியது. எதிரில் சிலுவைசெய்பவன் நிற்கிறான். எந்த பாவமுமற்று மக்களோடு மக்களாக அவன் உழவு நிலத்தில் நிற்பது எதுவுமே பொருந்தா வண்ணம் இருந்தது. கோபமும் வெறுப்பும் அப்பிக் கொண்டது. அருவருக்கத்தக்க, அடித்துக் கொல்ல வேண்டிய ஒருத்தன் அமைதியாக இங்கு என்ன செய்து கொண்டிருக்கான். பாவிப்பயல்! என்ன தைரியம் அவனுக்கு! இங்கு வந்துத் தன் பாவங்களைக் கழுவிக் கொள்ள இடம் தேடுகிறானா என்று அங்கலாய்த்தான். தன் தந்தையின் அத்தனைக் குணங்களும் ஒரு சேர அவனில் திரண்டன. அவன் தாய் சலோமி ஒரு புனிதவதி. அவ்ளைப் போலவோ இல்லை தன் தம்பி ஜானைப் போலவோ எந்தப் பொறுமையும், இரக்கமும் அவனிடமில்லை. வேகமாக கம்பை நீட்டிக் கொண்டு அவனை அடிப்பதற்காக வயல் நிலத்தில் பாய்ந்தான் ஜேக்கப்.

    சரியாக அதே தருணத்தில் இன்னும் கன்னங்கள் வழியே வடியும் கண்ணீருடன் மேரியின் மகன் தன் பயணத்தைத் தொடரும் வகையில் திரும்பிச் சாலையை நோக்கி வந்து கொண்டிருந்தான். இரு முதியபெண்கள் அவனைப் பிடித்துக் கொண்டு, கைகளில் ஆழமாக முத்தமிட்டனர். ஒரு வழிப்போக்கனாக அவர்களுக்கு ஆறுதல் சொல்ல அவனிடம் எந்த வார்த்தைகளுமில்லை, தன் கண்ணீரைத் தவிர. அவர்கள் முத்தமிடும் பொழுதுகூடத் தன்னைக் குறுக்கிக் கொள்ளத்தான் முடிந்தது அவனால். ஒரு அருவருக்கத்தக்க ஜந்துவைக் கூட இவர்கள் ஒதுக்கி விடாமல் இத்தனை அன்பைத் தருகிறார்களே என்று அதிர்ச்சிதான் அடைந்தானே தவிர, அவனது செய்கைகளுக்கு அவன் எவ்வகையிலும் பெருமை கொண்டிருக்கவில்லை. 

"அழாதீர்கள், அழாதீர்கள்! நான் நிச்சயம் திரும்ப வருவேன்! என்று சொல்லிக்கொண்டே தன் கைகளை அம்முதிய உள்ளங்கைகளிலிருந்து விடுவித்தான்.

    உண்மையில் ஜேக்கப்பிற்கு ஆச்சர்யமும் திகைப்புமாக இருந்தது. அவன் வரும் வழியிலேயே நின்று கொண்டு பார்த்தான். சிலுவை செய்பவன் ஒருவித ஒளிர்வில் இருப்பதைப் போல இருந்தது. அவனது பொலிவுறும் முகத்தில் கலங்கியக் கண்கள் மிளிர்ந்தன. வானிற்கும் பூமிக்கும் சொந்தமானவன் போல இருந்தது அவனது மிதக்கும் நடை. வயலில் இன்னும் குடியானவர்கள் குனிந்து நிலத்தில் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

    இவன் தானா அந்த சிலுவை செய்பவன்! தச்சன் மகன்! ஆனால் இவனின் தோற்றமும், ஒளிர்வும் பார்ப்பதற்கு தீர்க்கதரிசி எலிஜாவினைப் போல இருக்கிறான். ஜேக்கப் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    மேரியின் மகன் வயலின் வரப்பைத் தாண்டிக் குதித்து வந்தான். எதிரே ஜேக்கப்பை அடையாளம் கண்டுகொண்டவன், தன் நெஞ்சில் கைவைத்து, கண்களை ஒரு கணம் மூடி அவனுக்கு வணக்கங்களைத் தெரிவித்தான்.

    எங்கே செல்கிறாய், மேரியின் மகனே! ஜேக்கப் வினவினான். பதிலை எதிர்பார்க்காமல், நாம் சேர்ந்து செல்வோம். பாதையோ நீண்டது, பயணமோ துணை ஒன்றை எதிர்பார்க்கிறது"

    சேர்ந்தே செல்வோம் என்று சொல்லிக் கொண்டே இருவரும் இணைந்து கார்பெர்னம் நோக்கி செல்லும் பிராதானப் பாதையில் நடையிடத் தொடங்கினர்.

    அவர்கள் தங்களுக்குள் எதுவும் பேசாமல் போய்க்கொண்டிருந்தனர். வழியெல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாக, வயல் வெளியெங்கும் தானியங்களைப் பொறுக்குவதும், புலம்புவதும், பிலாக்கணம் செய்வதும், தங்களுக்குள் வாதிட்டு கூச்சலிட்டுக் கொள்வதுமாய் இருந்தனர். அவர்களின் ஒரு வருட உழைப்பும் மண்ணோடு மண்ணாகப் போன துக்கம் அவர்களைத் திரும்பத் திரும்ப எரிச்சலூட்டியது. யாரை சபிக்க! யாரிடம் மன்றாட! என்று எதுவும் அறியாமல் தங்கள் நிலங்களில் புரள்வது மட்டுமே அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக