திங்கள், 14 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 13

    


    கூட்டத்தில் இருந்த வயதான ஒருத்தி மேரியைக் கண்டதும் கோபத்துடன் சபித்தாள். அருகே நின்று கொண்டிருந்த அவளின் உறவினர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு காறி உமிழ்ந்து சென்றனர். சிலுவையை செய்தவனின் தாயைத் தொடுவதும் கூடப் பாவம் எனத் தன் பாவடையை ஒதுக்கிப் பிடித்துக் கொண்டு சென்றாள் புதிதாய்த் திருமணமான பெண்ஒருத்தி. நிற்க முடியாது நடுங்கிக் கொண்டிருந்த மேரி என்ன செய்வதென்றறியாது விதிர்விதிர்த்தாள். தன் ஊதாநிறக் கைக்குட்டையினால் முடிந்த வரை முகத்தை மறைத்துக் கொண்டாள். அவளுடைய பாதாம் போன்றக் குழிந்த கண்கள் மட்டுமே வெளித் தெரியும் அளவுக்கு தன்னை மறைத்திருந்தாள். 

    எப்படியாவது இந்தக் கூட்டத்தினை விட்டு மறைந்து விட வேண்டும் என்ற அவசரத்தில் ஓட்டமும் நடையுமாக, குத்துப்பாறைகளையும், சரளைக்கற்களையும் மிதித்துத் தடுமாறி நகர்ந்தாள். கூட்டத்தினர் அவளைப்பார்த்த நொடி தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்ததை கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டே சென்றாள். அடக்க முடியாது கைக் கட்டையைக் கடித்துக் கொண்டே எங்காவது மறைவான இடத்திற்கு சென்றுவிட எத்தனித்தாள். உள்ளம் விம்மி விம்மித் தன் மகனுக்காக ஏங்கியது. தன் மகனின் நிலையைக் காண சகியாது இருந்தும் வேறு வழியுமின்றி, எப்படியாவது அவனைத் தடுத்து விடும் ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா என்று நினைத்தவள், அங்கும் இங்கும் அலை பாய அவன் எங்கிருப்பான் என்று பதைபதைத்தாள்.

    அங்கிருந்து நகர்ந்தவள் ஆண்கள் இருந்த கூட்டத்தின் பின் பக்கமாய் மறைந்து நின்று கொண்டாள். உள்ளங்கையால் வாயைப் பொத்திக் கொண்டவளின் பழுப்பு நிறக் கண்கள் மட்டுமே தெரிந்தது. அவளின் உறவினர்களால் எப்படியும் தன்னைக் கண்டறிய முடியாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள் மெல்ல அமைதியாகி அங்கேயே கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தாள்.

    படைகள் வேகமாக வந்து கொண்டிருந்தன. பிடிபட்ட கலகக்காரனுக்கானத் தண்டனையை நிறைவேற்றும் நிமித்தம் கூட்டத்தினைத் தள்ளி நகர்ந்து முன் சென்று கொண்டிருந்தனர். மேரி தன்னை முழுதுமாக மறைத்துக் கொண்டு அவர்களின் அருகில் நின்று கொண்டிருந்தாள். ஆறாத காயத்தினுள் மீண்டும் மீண்டும் அடிபட்டுக் கொண்டே இருக்கும் உணர்வுடன் முகத்தினைக் கோணலாகவும் பற்களைக் கடித்துக் கொண்டும் கூட்டத்தை நோக்கி அந்தத் துறவிக் கத்திப் பேசத்தொடங்கினார். மேரி கூர்ந்து அவரின் சொல்லைக் கவனித்தாள்.

    "என் குழந்தைகளே பயப்படாதீர்கள். நம்பிக்கை கொள்ளுங்கள் இஸ்ரவேலின் மக்களே! ரோமில் கங்குகள் கனலத் தொடங்கிவிட்டன. கடவுள் அதை எரித்து சாம்பலாக்குவார். நினைவு கொள்ளுங்கள்! நம் மக்காபியர்கள் எங்கனம் க்ரீக் ராஜ்ஜியத்தை ஓட விட்டர்கள். இவர்களும் அது போலவே நம்மை விட்டுப் பயந்து தெறித்து ஓடுவார்கள். நம் படைகளுக்கு ஒரே தலைவனே! அவனே நம் தெய்வம்."

    முதிய துறவி தன்னிலையை முற்றிலுமாக இழந்திருந்தார். கனத்த அந்த பெரிய மனிதனின் தோள்களில் சன்னதம் வந்தது போல அசைந்து ஆடிக் கொண்டும், துள்ளிக் கொண்டும் இருந்தார். நாட்பட்ட பட்டினி நோன்புகளினால் முற்றிலுமாகவே நசிந்திருந்த அவரது உடல் மாபெரும் நம்பிக்கைகளினாலேயே இன்னும் அழியாமல் இருந்தது. எந்த வலுவுமற்ற அவருக்கு மாறாக மிகுந்த வலுவுடன் இருந்த அம்மனிதனின் தோள்களில் ஒரு பதாகை போல அவர் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தார்.

   சுற்றி நின்றவர்கள் அவனைப்பார்த்து, பராபஸ்! அவர் கீழே விழப் போகிறார் என்று கத்தினர்.

    பராபஸ் எந்தத் தயக்கமுமின்றி ஒரு குழந்தையைத் தூக்கிப் போட்டு விளையாடும் தொணியில் அவரைத் தன் தோள்களில் குலுக்கிக் கொண்டிருந்தான்.

    கூட்டம் முழுதும் காட்டுத்தீ பற்றுவது போல அவரின் முழக்கம் பற்றிக் கொண்டிருந்தது. அவர்கள் அனைவரின் வேட்கையிலும் இருந்த தெய்வத்தின் சொல் அங்கு ஒன்றாகிப்படர்ந்தது. வானுக்கும் பூமிக்குமாக அவர்களின் ஏக்கங்களின் குரல்கள் வழிந்துருகியது. ஒட்டுமொத்த உலகமும் பாம்பு தோலுரிப்பதைப் போல தன்னைத்தானே உரித்துக் கொண்டு புத்தப்புதியதாய் உருவாகி விடும். தேவதைகளின், மாட்சிமையின் அழிவற்ற ஒளியின் பிழம்புகளால் அனைத்தும் நிறைந்து ததும்பும்.

    இன்றே! நாளையல்ல! யூதாஸின் சொல் மந்திரம் போல அவர்களினுள் முழங்கியது. பராபஸின் தோள்களிலிருந்த அம்முதியத் துறவியைப் பற்றி இழுத்து கீழே தள்ளி மறுபடியும் அச்சொல்லை ஒரு தீக்கணல் போலவே முழங்கினான். முதியவர் தன்னைத் தானே கொளுத்திக் கொள்வதைப் போல சுழன்றார். வெற்றியின் பாடலை அவர்களின் ஒட்டுமொத்த முழக்கத்தையும் தாண்டும் வகையில் சத்தமாகப் பாடத் தொடங்கினார். 

"எங்கள் கடவுளின் பெயரால் சிதறடிக்கிறேன், எங்களின் தேசத்தைப் பீடித்துக் கொண்டிருப்பவர்களை 

எங்கள் கடவுளின் பெயரால் சிதறடிக்கிறேன், எங்களின் தேசத்தை அச்சுறுத்தி சுற்றி வளைத்துக் கொண்டிருப்பவர்களை

எங்கள் கடவுளின் பெயரால் சிதறடிக்கிறேன், குளவிகளைப்போல எங்களைச் சூழ்ந்து கொட்டிக் கொண்டிருப்பவர்களை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக