ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -26

 

Author: Nikos Kazantzakis

    எனக்குத்தெரியும்! வேகமாக வந்ததால் சற்று இளைப்பிருந்தது. நடுங்கும் குரலில் மறுபடியும் சொன்னான். எனக்குத்தெரியும் யாரென்று!

    நெஞ்சு படபடக்க அவள் மறையும் முன், பிடித்துவிட எண்ணித் திரும்பினான். ஆனால் அங்கு யாருமேயில்லை.

    கிழக்கு சென்னிறம் கொண்டது. வயலில் கோதுமை, முற்றி அறுவடைக்குத் தயாராக சாய்ந்துக் கிடந்தது. அறுப்பினை எக்கணத்திலும் எதிர் நோக்கி இருக்கும் அதன் வளைந்து மெலிந்தத் தண்டுகள், காற்றின் திசையில் அசைந்தாடிக் கொண்டிருந்தது. யாருமேயற்ற வெளி! பின் நோக்கியப் பாதையில் நாசரேத் மட்டுமே தெரிந்தது. காலைப் பனியில், புகை மண்டலமாய் அதன் இருப்பினுள், பெண்கள் ஏற்கனவே முழித்துவிட்டது வியர்த்தமானது.

    சட்டென உறுதி கொண்டவனாய் அங்கிருந்து ஓடத் தொடங்கினான். எவ்வளவு சீக்கிரம் இம்மலையைக் கடக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் அவளிடமிருந்து தப்பித்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டான்.

    வழியே இருபுறமும், வெட்டித்திருத்திய வயல் வெளிகளில் கோதுமைக் குன்றுகள், ஒரு ஆள் உயரத்திற்கு குவிந்துக் கிடந்தது. கலீலியின் சமநிலத்திற்கு அவன் வந்திருந்தான். நீண்டு கொண்டே சென்ற குவியல்களின் பாதையில், ஒரு மாட்டு வண்டிக் கிரீச்சிட்டுக் கடந்தது. கழுதை விட்டைகளின் வீச்சம். நிலத்தை முகர்ந்து கொண்டும், பூச்சிகளை விரட்ட வாலை சிலிர்த்துக் கொண்டும், புற்களைத் தின்று அசை போட்டுக்கொண்டிருந்தன. தூரத்தில் சிரிப்பொலிகளும், வம்பளத்தல்களும் ஒலித்தன. கதிர் அருவாள்களின் மிணுக்கம் வெகுதொலைவிலும் அவனுக்குத் தெரிந்தது. சூரியனின் மஞ்சள்ப்பார்வை மெல்ல இறங்கி வந்து அவர்களின் முகங்களில், உடல்களில் ஒளிர்ந்தது.

    ஜீசஸைப் பார்த்ததும் அவர்கள் முதலில் அடக்க முடியாமல் நகைத்தனர். பின் அவர்கள் திரும்பவும் இவனைஅழைத்தார்களா? இல்லை யாரை விரட்டிக் கொண்டு இவன் இப்படி ஒடுகிறான். என்று அங்கலாய்த்தனர்.

    அவன் பார்வைக்கு அருகில் வந்ததும், அவர்கள் தங்கள் பேச்சுக்களை நிறுத்திக் கொண்டு, கோபமாக அவனைப் பார்த்தனர். அவர்களுக்கு அவனின் உருவம் இப்போதுத் தெளிவாகத் தெரிந்தது.

    அவன் சிலுவை செய்பவன்! நேற்று நான் அவனைப் பார்த்தேன். நம் தெய்வத்தின் சாபம் அவனிடம் நிழலாடுகின்றன, அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

    பார்! அவன் தலையில், மரணித்தவனின் ரத்தம் தோய்ந்தத் துணி. கொன்றதற்குச் சம்பளமாக இவன் இதைத்தான் பெற்றுக் கொண்டான் போல. அந்தப்புனிதனின் ரத்தத்தின் பாவத்தினை இவன் சுமக்கப் போகிறான்.

     ஜீரவேகத்தில் ஜீசஸ்அவர்களை எந்தவகையிலும் பொருட்படுத்தாதுக் கடந்தான். அவர்கள் தங்கள், நகைப்புகள், வசைகளை எல்லாம் வெளிவராது தொண்டைக்குழியினுள் அடைத்துக் கொண்டனர்.

    அவர்களை,  வயல் வெளிகளின் சம நிலத்தை முற்றிலுமாகக் கடந்து மலை அடிவாரத்தை அடைந்தான். அங்கிருந்த திராட்சைத் தோட்டத்தையும் தாண்டி வந்து ஒரு முதிய அத்திமரத்தினடியில் அயர்வுற்று நின்றான். பின் அதன் பசிய இலைகளை நுகர்ந்து, பிய்த்தெடுத்துக் கைகளில் அதக்கிப் பிழிந்துச் சாற்றினை விழுங்கினான். தன் சிறுவயதில் இருந்தே இதன் நறுமணமும், சுவையும் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். ஓடி வந்ததில் வியர்வையினால் நனைந்திருந்தது உடல். தலையில் இருந்த துணியிலிருந்த ரத்தம் கசிந்து அவன் நெற்றியில் வடிந்தது. தீப்பற்றியது போல உலுக்கி, தன் மேலங்கியினால் அதனைத் துடைத்தவன், திரும்பவும் அந்த ஆழக் காலடிகளைக் கூர்ந்தான். கைகளை இங்குமங்கும் வீசி எதையோத் தடுக்க நினைப்பதைப் போல, இல்லை எதோ பாரத்தை தாங்க உந்துவதைப் போல அலைந்தான். ஆனால் அங்கு அவனின் தனிமையைத் தவிர்த்து எதுவுமே இல்லை. காலடி நிலம் இன்னும் ஈரமாகவே இருந்தது. காலைப் பனியின் குவடுகள் நிறைந்து இலைகளின் நுனிகளில் சொட்டிக் கொண்டிருந்தது. மரக்கிளையின் இடைவெளியில் ஒரு வண்ணத்துப்பூச்சி இறகுகளை மெல்ல மெல்ல நிமிர்த்த முயன்றது. இவன் மெல்ல அருகமர்ந்து அது பறந்து செல்ல உந்தினான். அது கிளைகளையெல்லாம் தாண்டி வான் நோக்கிப் பறந்தது.

    நான் கத்தப் போகிறேன்! தனக்குத் தானே பித்துக்குரலில் தர்கித்தான்.

எப்பொழுதெல்லாம் அவன் தனித்துவிடப்படுகிறானோ! அப்பொழுதெல்லாம் அவனால் உணரமுடிந்தது, ஒரு மகிழ்ச்சியா! வலியின் முதல் உந்துதலா! இல்லை பயமா! அவனால் சரியாக விளக்க முடியவில்லை. மலைக்குன்றுகளில் பலசமயம் பகல் நேரங்களில் அவன் தனித்திருக்கையில், அக்குரல்! கடவுளின்  பெருங்குரல்! ஒரு கனத்த அழுகை! அது அவன் செவிப்பறைகளில் அறையும் பொழுது, எப்படியாவது தப்பித்துவிடும் முனைப்பு மட்டும்தான் அவனிடம் இருந்தது. அச்சமயங்களில், அனாதரவற்றப் பொழுதுகளில் அவன் ஒரு செந்நாயைப் போலப் பலத்த ஊளையிடுவான், ஒரு சேவலை போலக் கூவுவான், ஒரு அடிபட்ட நாயினைப் போல, அடித்தொண்டை செருமக் குழைந்து அழுவான். ஆனால் இன்று உண்மையில் உடைந்தழ வேண்டும் போல அவனுக்கிருந்தது. அண்ணாந்து  உயரப் பறக்கும், அப்பட்டாம் பூச்சியின், மஞ்சள் நிறச்சிறகுகளைக் கண்டான்,  வான் நோக்கிக் கரங்கள் நீட்டிப் பிரார்த்திக்கும் மரங்களைக் கண்டான். சூரியனின் தளராத வெம்மையின் சுவை அவனது உதடுகளில் மிளிர்ந்தது.

    ஒரு வாஞ்சையுடன் சுற்றி சுற்றி நோக்கினான். என் சகோதரியே! என்று கூவி அழைத்தான். ஆனால் அங்கு அவனைத் தவிர எந்த மனித நடமாட்டமுமில்லை.

    தன்னை திடப்படுத்திக் கொண்டு,  அருகிலிருந்த அடிமரத்தைப் பற்றிக் கொண்டு மறுபடியும் வெளியைக் கூர்ந்தான். ஈரமண்ணில் அழுத்தி மிதிக்கும் இரு காலடிகள் இப்போது, அவனுக்குப் பின்னே ஒரு சில தப்படிகளில் தெளிவாகவேக் கேட்டது. அவன் நாசரேத் நகரை விட்டு வரும் பொழுதுக் கேட்ட நடுங்கும் காலடிகள், இப்பொழுது மிகுந்த தைரியத்துடன் கனத்துக் கனத்து அவனை அணுகியது. தன் சக்தியெல்லாம் இழந்தது போல உணர்ந்த இளைஞன், மொத்தத்தையும் திரட்டி வானை நோக்கிக் குமுறினான். அவள் என்னைப் பிடித்து விடுவதற்குமுன் நான் எப்படியாவது மடாலயத்தை அடைந்து விட வேண்டும் என இன்னும் வேகமாக ஓடத் தொடங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக