ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -52

    

    முதலாளியும், தொழிலாளர்களும் அன்றைய நாளின் உழைப்பிற்கான சிறந்த அறுவடையாகக் கிடைத்த உணவை சந்தோஷமும், திருப்தியுமாகச் சாபிட்டுக் கொண்டே ஏரியின் கரைச்சதுப்பின் நுரையையும், கலங்கலையும் பார்த்தனர். ஒரு தாயைப் போல அதன் நீர்மையின் குளிர்ச்சி அவர்களை அணைத்துக் கொண்டது. அச்சமயம் சரியாக ஜேக்கப் அங்கு வந்து நின்றான். மீனவர் கூட்டம் அவனுக்கு இடம் கொடுத்துச் சற்றேத் தள்ளி அமர்ந்தனர். வெகுதூரம் நடந்து வந்ததில் முட்டி வரை புழுதி அப்பியிருந்தது. தலைமுடியைக் கைகளால் காற்றின் திசைக்கு சரிசெய்து கொண்டே அவன் செபெதீயை அணுகினான். அவர் மகிழ்ச்சியான மனநிலையிலிருந்தார். வா! என் மூத்தவனே! நீ அதிர்ஷ்டக்காரன் தான்! உட்கார்! முதலில் சாப்பிடு! சரி! என்ன விஷயம் சொல்! என்றார்.

     அவன் கீழே அவனது அப்பனைப் பார்த்து அமர்ந்திருந்தான். ஆனால் வெம்மையாய் மீன் மணக்கும் சூப் இருக்கும் சட்டுவத்தை நோக்கி கைகளை நீட்டாமல் அவர்களுக்குள் ஒருத்தனாக வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான்.

    முதிய செபெதீ அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். தலையை இல்லை எனப் பாவனை செய்வது போல இங்கும் அங்கும் அசைத்தார். அவனது அமைதியற்ற வெறிக்கண்கள் அவரை அசௌகரியமாக்கியது. அவருக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். 

    "என்னாயிற்று? உனக்கு பசிக்கவில்லை? ஏன் உன் முகம் இப்படி வெளிறியிருக்கிறது? இந்த நேரத்தில் யாருடன் சண்டை போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்? ஜேக்கப்" என்று கலக்கத்துடன் கேட்டார்.

    "கடவுள், சாத்தான், மனிதர்கள் எல்லோரிடமும்" ஆத்திரத்துடன் பதிலுறைத்தான் அவன். எனக்குப் பசிக்கவில்லை."

    சரிதான்! இவன் சுவையான இந்த சூப்பையும், சூழலையும் கெடுக்கத்தான் வந்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டவர். தன் இயல்பான நகைச்சுவை உணர்வை வலுக்கட்டாயமாகத் தருவிக்க முயன்றார். தன் மகனின் தாடையைப் பிடித்து, கனிவாகப் பேசத்தொடங்கினார். 

    "ஹேய்! போக்கிரிப்பையா! வரும் வழியில் நீ யார் கூடவெல்லாம் பேசிக் கொண்டு பயணப்பட்டாய்? என்று கண்களை சிமிட்டுக் கொண்டே புன்முறுவலுடன் வினவினார்.

"யார் சொன்னார்கள் உனக்கு?

அப்போ! நம்மிடையேயும் உளவாளிகள் உண்டு! அப்படித்தானே!

நான் யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை" என்று மறுத்தான்.

    எழுந்து ஏரியை நோக்கிச் சென்று, கால் கைகளை நன்றாகக் கழுவத் தொடங்கினான். திரும்பத் தன் குழுவினை நோக்கி வந்தான்.

    "எவ்வளவு மகிழ்ச்சியாக இவர்கள் இங்கு உணவு உண்கிறார்கள், ஆனால் அங்கே நாசரேத்தில் உங்களுக்காக நாங்கள் சிலுவையில் அறையப்பட்டுச் சாக வேண்டும்". வெறுப்பும், கோபமும் வரத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுப் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான்.

    அவர்களைப் பார்ப்பதைத் தவிர்த்து, கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். இவர்களின் செய்கைகளை நினைத்து, தனக்குள்ளேயே வாதிட்டுக் கொண்டு ஏதோ காற்றில் செய்கைகள் காண்பித்து முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.

    பின்னாலிருந்து அவன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தார் முதிய செபெதீ. என் மகன்கள் என் உடலில் முளைத்த முட்கள். ஒருத்தன் பக்திமான், மென்மையான உறிஞ்சுகுழல்கள் கொண்டவன். இன்னொருத்தன் முரடன், கூர்மையான ஊசிகள் கொண்டவன். இருவரும் அவர்களுக்கான முறையில் என் ரத்தத்தைக் குடிக்கின்றனர். ஒரு உண்மையான மனிதனாய் அவர்கள் ஆகப் போவதேயில்லை. மென்மையும், கடினமும் இணைந்து, சில நேரம் கருணையுடனும், சில நேரம் ஒரு வேட்டை நாய் போலக் குரைத்துக் கொண்டும். மனிதன் அப்படித்தானே இருக்க வேண்டும் தேவதைத்தன்மையும், மிருகத்தன்மையும் ஒருங்கே கொண்டு. ஆனால் அவனுக்குத் தெரிய வேண்டும், சந்தர்ப்பங்களின் பொருட்டு யாரிடம் எதனை வெளிப்படுத்த வேண்டும் என. ஆனால் எனக்கோ இப்படி வாய்த்துவிட்டது. சரி! அது கிடக்கட்டும்! என்று தனக்குள் சொல்லிக்கொண்டவர், அந்தக் கணத்தின் கசப்பினை வெளியேற்ற ஒரு விளமீன் துண்டைச் சட்டியில் இருந்து எடுத்து முகர்ந்தார்.

    "நல்லது! நமக்கு இந்த மீன்கள் இருக்கின்றன! எங்களை உருவாக்கிய இந்த ஏரிக்கும், இந்த ஏரியை உருவாக்கிய கடவுளுக்கும் எங்கள் நன்றி!" என்று புசிக்கத் தொடங்கினார்.

தன் குழுவினைப் பார்த்தார் கிழவர், 

    "பார்! அங்கே பாறை மேல் அமர்ந்து கொண்டு தன் மகன் ஆன்ட்ரூவை நினைத்து ஜெருசலேமை நோக்கித் தினமும் கண்ணீர் வடிக்கும் ஜோனாவை! அவன் என்ன செய்தான்? பாவம்! அவன் ஒரு உதாரணம் நமக்கு" 

    "அவர்கள் என்ன சொன்னார்கள், நாங்கள் தீர்க்கதரிசையை கண்டறியும் வழியில் செல்கிறோம். அதன் புனிதவழிகளில் எங்களை ஒப்புவிக்கிறோம் என்றனர். வெறும் வெட்டுக்கிளிகளையும், தேனையும் உண்டு உயிர்வாழ்கின்றனர். அங்கே அப்பாவி மக்களைப் பிடித்து அவர்களின் பாவங்களைக் கழுவுகிறேன் என ஜோர்டான் நதியில் முழுக்கிடுகின்றனர்"

"ஆனால் நாம் என்ன சொன்னோம்! பிள்ளைகள் நம் சந்ததிகள். நமக்கான வழித்தோன்றல்கள். நம் செழிப்பினையும் ,உழைப்பினையும் கடத்திச்செல்ல வேண்டியவர்கள். "

"அடேய்! இன்னும் திராட்சை ரசம் முடியவில்லை, அந்த பூசணிக்காய் கூட்டை எடுத்துவை" எனக்குப் பேச இன்னும் கொஞ்சம் வலு வேண்டும்."

    கூழாங்கற்களை ஆழமாக மிதித்து அருகில் வரும் தப்படிகளை அனைவரும் ஒருங்கேக் கேட்டனர். முதிய செபெதீ திரும்பிப் பார்த்தார். மெதுவாக அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தார் ஜோனா. 

    வா! ஜோனா! அவன் ஒரு நல்லவன்! உங்களுக்குத்தெரியுமா! என்று குழுவைப் பார்த்து கைகளை ஆட்டினார். தன் தாடியைத் துடைத்துக்கொண்டு மரியாதையுடன் அவரை அருகில் அமரச்சொன்னார் செபெதீ.

    "என் பிள்ளைகளுடன் இப்போதுதான் விளமீன்களால் செய்த இந்த அருமையான சூப்பை அருந்தத் தொடங்கினேன், வா! வந்து கொஞ்சம் சுவைத்துப்பார்!, வேறு என்ன, உன் மகன் புனித ஆண்ட்ரூவைப் பற்றி செய்திகள் ஏதும் உண்டா?

     குட்டையான, பருமனான தேகம் குலுங்க, வெற்றுக் காலுடன், சூரியனிற்கு கீழே எரிய அவர்களுக்கு முன்னே வந்து நின்றார் அம்முதிய மீனவர். நன்கு பழுத்தப் பூனைக் கண்கள், தலைமுடி மொத்தமும் நரைபூத்து வெளுத்திருந்தது. கைகளில் சுருக்கங்கள் அடர்ந்தும், தாடைச்சதை கழுத்து வரைத் தொங்கியதால், கழுத்தே இல்லாதது போலும் தோன்றியது. வெயிலில் காய்ந்து காய்ந்து மரத்துத் திடமாக இருந்தது தேகம். வந்து நின்றவர் ஒவ்வொருத்தர் முகங்களாகப் பார்த்தார்.

    "யாரைத்தேடுகிறாய்! ஜோனா! இல்லை, நீயும் பேசமுடியாமல் சோர்வடைந்துவிட்டாயா?" என்று கேட்டார் செபெதீ.

செபெதீத் தன்னைக் கவனித்தார். கால்களுக்கடியில் தின்றுப்போட்ட மீன் முட்கள், பாசிகள், எஞ்சிய மீன் சதைத்துணுக்குகள் கிடந்தன. இன்னும் மீனை வாயில் சவைத்துக் குதப்பிக் கொண்டும், சப்பிக் கொண்டும் இருந்தார். அவருக்கு சிரிக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் ஏதோ வேகத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சந்தேகத்துடன் ஜீரவேகத்தில், சற்று பயத்துடனும் எதிரில் நிற்கும் ஜோனாவை வரவேற்கும் வண்ணம் தன் கைகளைக் குவித்து, அவர் தன் அருகில் அமருவதற்காக சற்று விலகி அமர்ந்தார்.

    பேசு! ஒரு தீர்க்கதரிசியைப் போல பேசு! ஜோனா!, இருந்த இடத்திலேயேக் குதித்து வந்து முதிய மீனவரின் முழங்கால்களைப் பிடித்து அமரும் படி செய்கை செய்தார். இத்தனை காலம் எங்களுடன் இருந்தும், நீ உன்னை வெளிக்காட்டியதே இல்லை. நான் உன்னிடம் விரும்பி வேண்டுகிறேன், கடவுளின் பெயரால் தயவுசெய்து பேசு!. நான் ஒரு முறை புனிதர் ஜோனாவின் கதையை நமது மடத்தின் அருளாளர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஒரு முறை ஒரு பெரிய சுறா மீன் புனிதர் ஜோனாவை விழுங்கிவிட்டது. ஆனால் பின்  அந்த சுறா மீன் அதன் வயிற்றிலிருந்து அவரை உயிருடன் வெளித்தள்ளியது. அதனால் கடவுளே எனக்கு உதவும், அந்த அருளாளர் விளக்கிய அந்த ஜோனாவைப் போலத்தான் இவனும் இருக்கிறான். பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவரின் வாயிலிருந்த பாசியைத் துப்பினார். அது எச்சிலுடன் அவர் மார்பில் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு எச்சரிக்கையானத் தந்திரமானப் பார்வை செபெதீயிடம் மிளிர்ந்தது. கிழவரின் தாடிக்குள்ளிருந்த கொடுக்குகள் வெளித்தெரிவது போலத் தோன்றியது அந்த முதிய மீனவருக்கு. அதை அவரின் கண்களைப் பார்த்தே அறிந்து கொண்ட செபெதீ, எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்.

"அது ஒன்றும் பெரிய குற்றமில்லை, ஜோனா! நான் வேண்டுமென்றால் பந்தயம் கட்டுகிறேன், உன் தாடிக்குள்ளும் இதே போல கொடுக்குகள் இருக்கும்" அதனால் பேசு!" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக