செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -15

    


கூட்டத்தின் கவனத்தைக் கலைக்கும் வண்ணம், முதியதுறவி திரும்பவும் கத்தினார். அனைவரும் அவளை விடுத்து துறவியின் சொற்களைக் கூர்ந்தனர். கடவுள் மட்டும் அவளைப் பார்க்கட்டும். அது ஒன்றே போதும். அவர் மட்டுமே அவளை முற்றிலுமாக அறிந்தவராக இருப்பார் என்று முதியவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

    கண்களைத் திறங்கள் குழந்தைகளே! சொர்க்கத்தின் ஊடுவழிகள் தென்படுகின்றன. அதன் வாசல் திறக்கும் சப்தத்தை நான் உணர்கிறேன்.  பாருங்கள்! நம் காவல் தேவதைகளை, வானெங்கும் சிவப்பும், நீலமுமாக படபடக்கும் பல்லாயிரம் சிறகடிப்புகளின் வழியே அவர்கள் நம்மை அணுகுகின்றனர். தயாராகுங்கள்! செந்தாடிக்காரனின் தோள்களில் கழுத்திழுபடக் கதறினார் முதியவர்.

    வானம் சென்னிறமாக ஒளிர்ந்தது. சூரியக் கதிர்களின்  சதகோடிக் கரங்களின் வீச்சில் அவர்கள் அண்ணாந்து நோக்கிக் கொண்டிருந்தனர். பராபஸ் தன் கோடாரியைத் தலைக்கு மேல் உயர்த்தி கோஷமிட்டான். இன்று! இன்று! நாளையல்ல!. கூட்டம் முழுதும் அச்சொல் மந்திரம் போலத் தொற்றிக் கொண்டது. அனைவரும் ஒரு சேரக் கத்திக் கொண்டே இரும்புக்கதவுகளை அணுகினர். உள்ளிருந்து கதவினைத் திறந்தனர் இரு குதிரை வீரர்கள். அவர்கள் முழுக்கவசமிட்டிருந்தனர். கவச நெற்றியில் ரோம் பேரரசின் கழுகு, சூரிய ஒளியில் ஒளிர்ந்தது. குதிரைகளின் பலத்த காலடிச்சத்தம் அதிர நிலத்தில் தங்களது குத்தீட்டிகளால் அறைந்து கொண்டே அவர்கள் முன் நோக்கி சென்றனர். தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆணையுடன் கற்கள் சிதறிய மலைப்பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தனர்.

    அந்த வெற்றுமலைக்குன்றுகளில் கற்களைத் தவிர எதுவுமே முளைப்பதில்லை. அங்கங்கு சில குத்துச்செடிகளும், முட்புதர்களும் மண்டிக் கிடக்கிரது. சிதறிப் பாளம் பாளமாய்க் கிடக்கும் இக்கற்குவியல்களில், ஏதேனும் ஒரு கல்லை நம் கைகளில் எடுக்கும் பொழுதும் அழியாது அதில் உறைந்திருக்கும்  ரத்தத்தின் வீச்சத்தை நுகர முடியும். எபிரேயர்கள் காலங்காலமாக இந்த ரோமானியர்களை எதிர்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். எத்தனையோ புரட்சியாளர்களின் உடல்கள் எந்த நம்பிக்கைகளுமின்றி  வலி! வலி! என்று கதறிக் கொண்டே மரணத்தை எதிர்நோக்கியிருந்திருக்கிறது. இரவில் பிணத்தின் கால்களைக் கவ்விக் கொண்டு சண்டையிடும் நரிகளும், அடுத்த நாளின் பகல் பொழுதுகளில் காகங்களும், வல்லூறுகளும் செதில் செதிலாய் அவ்வுடலை, கண்களைப் பிய்த்து திங்கும் கோரமும் ஒரு சங்கிலித்தொடர் போல நடந்து கொண்டேதான் இருக்கிறது. 

    மக்கள் கூட்டம் மலைஅடிவாரத்தில் நின்று கொண்டிருந்தது. நடந்து வந்த இளைப்பில் அவர்கள் சற்று ஆசுவாசப்பட்டனர். இன்னும் சிலுவை அங்கு வந்து சேரவில்லை. மலை முகடில் இரு ரோமானியர்கள் சுத்தியல் மற்றும் ஆணிகளுடன் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். படை வீரர்கள் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தனர். கிராமத்து நாய்கள் சில, அன்றைய இரை கிடைக்காது, அலைந்தும் முகர்ந்தும் கற்குன்றுகளுக்கிடையே தனது சிவந்தநாக்கில் எச்சில் வழிய வெறித்துக் கொண்டிருந்தது. நண்பகல் வெளிச்சமும் வெக்கையும் அவர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. பெண்கள் தங்கள் அக்குள் வியர்வையை தலை முக்காட்டால் துடைத்துக் கொண்டனர். ஆண்கள் கழுத்தையும் தாடியையும் கைகளாலும், தங்கள் உடுதுணிகளாலும் துடைத்து விட்டனர். வானத்திற்கு கீழே மொத்த மலையும் வெந்து உருகிக் கொண்டிருந்தது.

    ஜென்னேசரெட் ஏரிக்கரையிலிருந்து வந்திருந்த மீனவக்குழு, ஒரு வித ஆர்வத்துடன் கண்கள் விரிய, அங்கு நிகழ்வதைக் கண்டு கொண்டிருந்தனர். நீதியற்ற இந்த பாகன்களின் அரசால், புரட்சியாளன் சிலுவையில் அறையப்படும் பொழுது, நிச்சயமாக அற்புதம் நிகழும் என்று அவர்கள் உண்மையிலேயே நம்பினர். அவன் தன் கந்தலாகிப்போன உடையினை எறிந்து வான் ஏகுவான். தேவதைகளின் கனத்த சிறகுகளினுள் ஒரு குழந்தையைப் போல அவன் பாதுகாப்பாக அமர்ந்து கொள்வான். கோபம் கொள்ளும் அத்தேவதைகள், ரோமானியர்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் என்று தங்களுக்குள் கிசுகிசுத்தும், சலம்பிக் கொண்டுமிருந்தனர். முந்தைய இரவு, கொண்டு வந்திருந்த அத்தனை மீன்களும் விற்றுத் தீர்ந்ததினால், இரவு முழுக்க மகிழ்ச்சியாகக் குடித்து கும்மாளமிட்டனர். விடிந்து பகலின் கூரிய வெளிச்சத்தை உணர்ந்த பின் தான் தேவனின் சொல்லை அவர்கள் நினைவு கூர்ந்தனர். பாதி உறக்கத்திலும், விழிப்புலுமாக அவசர அவசரமாக அங்கு நிகழப் போகும் அற்புதத்தைக் கண்டு விடும் பதைபதைப்பில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    வெகுநேரம் காத்திருந்து அவர்கள் சோர்வடைந்திருந்தனர். படைகளின் ஈட்டிகள் மண்ணில் அதிரும் சப்தத்தை மட்டுமே இப்பொழுது வேண்டி, அதன் வருகையை எதிர்நோக்கி தங்களுக்குள் புலம்பினர்.

    அமைதியற்றிருந்த மீனவர் கூட்டத்தில் இருந்த சற்றே வயதான ஒருவர் இளையவர்களைப் பார்த்து திரும்பிச்செல்லும் தொனியில் கைகளை அசைத்தார். எப்படியும் ஐம்பதிற்கு மேல் வயதிருக்கும். சுருங்கிய பூனைக்கண்களும், சுருள் சுருளாய் செம்பட்டைத்தாடியும், சிப்பியோடு போல விரிந்து ஒடுங்கிய முகமும் கொண்ட அவர் தன்னிச்சையாக முன்னே நின்று கொண்டிருக்கும் பெருங்கூட்டத்தைப் பார்த்தார். பின் செபெதேயின் மகனை நோக்கி, 

"புரட்சியாளன் அமைதியாக சாகட்டும். எந்த அதிசயமும் இங்கு நிகழப் போவதில்லை. குறித்துக் கொள்! சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப் போவதில்லை. நம் கடவுளின் கோபம் என்றென்றும் அடங்காதிருக்கிறது. ஆம்! மனிதன் தனக்கிட்ட நீதியிலிருந்து வழுவிப் பாவத்தின் கீழான வழிகளில் அல்லவா சென்று கொண்டிருக்கிறான்" என்றார்.

    உன்னுடைய முட்டாள் தனத்திற்கு முடிவே இல்லையா பீட்டர்!  சற்றே பெரிய வெறிக்கும் கண்களுடன் இளித்துக் கொண்டே கேட்டான் அவரது அருகில் நின்றிருந்தவன். அவனது நீண்டு ஒடுங்கிய முகத்தின் நாடியில் முட்கள் போல சாம்பல் தாடியும், கொடுக்கு போன்ற மூக்கும், உள் நோக்கிக் குவிந்திருந்த உதடுகள் ஒரு கோடிழுத்தது போல இருந்தது. 

"மன்னித்துக் கொள் நண்பா! உன் நரை முடிகளின் எண்ணிகைக்குத் தோதான அறிவைக் கடவுள் உனக்குத் தரவில்லை போல. பொறி துளிர்ப்பது போல கணத்தில் எரிந்தடங்கி விடுகிறாய். நீதானே! எங்கள் ஒவ்வொருத்தராய் முதலில் அணுகி, ஒரு பைத்தியக்காரன் போல இச்செய்தியைச் கொன்னாய்? அற்புதங்கள் என்பது மனித வாழ்வில் எப்போதாவது ஒரு முறை தான் நிகழும். அதை நாம் தவற விட்டுவிடக் கூடாது என்று. நாம் நாசரேத் நகருக்கு செல்வோம். உடனே! உடனே! என்றுக் கூவி கூவி எங்களை முடுக்கினாய். இப்பொழுது எல்லாம் தலைகீழாகி விட்டது இல்லையா! நாங்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்ன? நீ இப்படி விரைவு கொள்ள வேண்டிய அவசியமில்லை நண்பா! சற்றுப் பொறு."

    இதனைக் கேட்டுக் கொண்டிருந்த இரு மீனவர்கள் பற்கள் தெரிய சிரித்தனர். அருகே இருந்த ஆடு மேய்ப்பவன் தன் துரட்டிக்கோலைத் தூக்கி சற்றுக் கடுமையுடன் சொன்னான், ஜேக்கப் அவனை விட்டுவிடு. ஏன்? இந்தக் கூட்டத்தில் சிறந்தவனும் அவனை விட சரியான திசையைக்காட்டுபவனும் வேறு யாரேனும் உண்டா? 

    சரிதான் பிலிப். அனைவரும் ஒருமித்துக் கூவினர். நல்லுள்ளம் கொண்டவன் அவன். ஆத்திரத்தில் விடைத்துக் கொண்டிருந்த பீட்டர், சற்று சமாதானமானார். அவர்கள் தாங்கள் என்ன விரும்புகிறார்களோ சொல்லிக் கொள்ளட்டும். ஆம்! நான் ஒரு திசைகாட்டியாகவே என் வாழ் நாள் முழுதும் இருந்திருக்கிறேன். திசையற்ற பாதைகளில் என்னுடைய பிரார்த்தனைகளின் வழியே முடிவற்றதாக என் உள்ளம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அச்சத்தினால் அல்ல, என்னுடைய தேடலின் மன்றாட்டு எப்பொழுதும் சரியான வழியை நாடுவது மட்டுமேயானதாக இருக்கிறது என்று கைகளைத் தன் நெஞ்சில் குவித்து அழுத்திக் கொண்டார்.

    அழுது விடுவது போன்ற பாவத்துடன் நின்று கொண்டிருந்த பீட்டரைப் பார்த்ததும் ஜேக்கப், சூழலை மடைமாற்றும் விதமாக அவனது சகோதரன் ஆண்ட்ரூவைப் பற்றிக் கேட்டான். இன்னும் அவன் ஜோர்டானின் பாலை நிலத்தில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறானா? என்று.

    ஆம்! அங்கு தான் இருக்கிறான். துறவியாக ஞானஸ்நானம் செய்து கொண்டான். அவனது குருவைப் போல, பாலையின் வெட்டுக்கிளிகளையும், காட்டுத்தேனையும் மட்டும் தான் உணவாகக் கொள்கிறான். ஒருவேளை நான் ஒரு பொய்யனா! கடவுளுக்குத்தான் தெரியும். ஆனால் நான் பந்தயம் செய்கிறேன், வேண்டுமென்றால் பார், சீக்கிரமே அவன் நம் கிராமங்களிற்குள் வந்து நம் பாவப்பட்ட ஜனங்களை அணுகி, தன் மார்க்கத்தை போதிக்கும் விதமாய் அலறுவான்! ஜெபம் செய்! ஜெபம் செய்! சொர்க்கத்தின் ராஜ்ஜியம் வெகு தொலைவில் இல்லை! என்று மற்றவர்கள் என்ன இதுவரை செய்து கொண்டிருந்தார்களோ அதே நம்பிக்கையை இவனும் விதைப்பான்.

என்ன மாதிரியான சொர்க்கம், என்ன மாதிரியான ராஜ்ஜியத்தில் நாம் உழல்கிறோம். சத்தியமாக எனக்குத் தெரியவில்லை. கீழ்மைகளினுள் புழுக்கள் போல நெழியும் நம்மிடம் இந்த நம்பிக்கைகளை வைத்து யாரை ஏமாற்றுகிறார்கள்?

ஜேக்கப் நான் உன்னிடம் தான் கேட்கிறேன்!

    ஜேக்கப், ஒரு வித அலட்சியமான புன்னகையுடன் தன் தலையை அசைத்துக் கொண்டான். சுருங்கிய நெற்றியின் அடர்ந்த புருவத்தில் முடிச்சுகளிட்டன. 

    என் சகோதரன் ஜானுக்கும், அதே தானே நிகழ்ந்தது. ஏதோ அவன் ஒரு மீனவப் பிறப்பே இல்லை என்பது போல ஜென்னசரேட்டில் இருக்கும் மடாலயத்த்திற்கு சென்று துறவியாகி விட்டான். நான் என் கிழட்டுத்தனிமையைக் குடித்துக் கொண்டும் அவன் விட்டுச்சென்ற படகுகளைப் பாதுகாத்துக் கொண்டும் வாழ விதிக்கபட்டிருக்கிறேன்.

    என்ன குறையாகிவிட்டது. இவர்களுக்கு? 

    எதை இழந்தனர் ஆசிர்வதிக்கப்பட்டவர்களான இவர்கள்?

     பூத்துக்குலுங்கும் இளமையின் ஒளிர்வில் இறைவன் அவர்களுக்கு அனைத்தையுமே அளித்திருந்தானே? 

    ஆனால் உள்ளூறக் குறுகுறுப்புடனும், அறிந்து கொள்ளும் ஆவலுடனும் இதனைக் கேட்டான் அந்த ஆட்டிடையன் பிலிப்.

    இளமை! உடல் அதற்கே உண்டான வழிகளைத் தானே கையாளும். இரவு முழுதும் புரண்டு கொண்டே இருக்கும் அவனைப் பார்க்கும் பொழுது என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்றான் ஜேக்கப்.

பிலிப், ஏன் அவன் ஒரு பெண்ணை மணக்கவில்லை? நிச்சயமாக உங்கள் சொந்ததிலேயே மணமாகாத இளம்பெண்கள் இருக்கிறார்களே! என்றான்.

அவன் எந்தப் பெண்ணையும் மணக்கப்போவதில்லையாம்.

பிறகு,

இறைவனின் சொர்க்க ராஜ்ஜியம்! -ஆம்! ஆண்ட்ரூவினைப் போலவே!

    அவர்கள் அடக்க முடியாமால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தனர்.

    அதுவும் சரிதானே! அதன் பிறகு வாழ்நாள் முழுதும் அவன் கவலையில்லாமல் சந்தோஷமாக வாழலாமே! விஷமத்தனமாக தன் கைகளை ஒருமாதிரியாக பிணைத்துக் கொண்டு அங்கலாய்த்தார் ஒரு முதிய மீனவர்.

    பீட்டர் ஏதோ சொல்ல நினைத்து நிதானித்து வாயை மூடிக் கொண்டான். தூரத்தில் அழுகுகுரல்களின் மெல்லிய இரைச்சல் காற்றில் அலையாடியது. 

    சிலுவை செய்பவன்! சிலுவை செய்பவன்! அவன் வருகிறான் பார்!

    குழப்பத்துடன் தூரத்தை வெறித்த அவர்களின் பார்வையில், தூசு அப்பிய மணல் படலத்தின் ஊடாக, எடை தாங்காது தடுமாறும் கால்களை சீராக்க முனைந்து, தீர்க்கமான அழுத்தத்துடன், மூச்சிரைக்க ஒவ்வொரு அடியாக மேலேறி வந்து கொண்டிருந்தான தச்சன் மகன்.

    சிலுவை செய்பவன்! சிலுவை செய்பவன்! துரோகி! மொத்த மக்கள் திரளும் வெறிக் கூச்சலிட்டது.

    மலையுச்சியில் நின்று இதனைக் கவனித்த ரோமானியர்கள். குழி தோண்டுவதற்கு ஆயத்தமானார்கள். கடப்பாறை, மண்வெட்டி சகிதம் மூன்று பேர் அளவைகள் மாறாமல் நிலத்தைக் குதறினர். அருகிலிருந்த சிறியப்பாறையின் மேல் கூர்மையான உலோக ஆணிகள், உச்சிப்பகல் வெளிச்சத்தில் மின்னியது. நன்றாக பட்டை தீட்டப்பட்ட அந்த ஆணியின் கூர் நுனிகள் சரியாக இறங்கும் வண்ணம், வளைவுகளின்றியும், நீளமாகவும் இருந்தது.

    ஆண்களும் பெண்களும் தங்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு மனிதச்சங்கிலி போல நின்றனர். எப்படியாவது அவனை நிறுத்த வேண்டும் எனும் முனைப்புடனும், அவசரத்துடனும் அவர்கள் அவனது வழியை அடைக்க உந்தினர். மாக்தலேனா கூட்டத்தை முறித்துக் கொண்டு வழிப்பாதையில் நின்று அவனை, மேரியின் புதல்வனை நோக்கினாள். தாங்கவொண்ணாது தனது நெஞ்சில் கைவைத்துக் கொண்டு விம்மினாள். தாங்கள் குழந்தைகளாக இருந்த பால்யத்தின் அழியா நினைவுகளால் ஆட்பட்டு, அவர்களின் எந்தக் கவலைகளுமில்லாத விளையாட்டுப் பொழுதுகளை அசை போட்டாள். முதல் முறையாக தங்களின் உடல்களை, அதன் ஆழ்ந்த கசப்பான உண்மையை உணர்ந்தாள். ஆண் என்றும் பெண் என்றும். ஆனால் முழுக்க முழுக்க எப்பொழுதும் ஓருடலாய்த் தான் அவர்கள் இருந்தனர், இருக்கின்றனர். இன்று இரக்கமேயற்ற காலத்தினால் துண்டங்களாய் ஆகிவிட்டது போல உணரும் அவர்களின் அகம் திரும்பவும் இணைந்து ஒன்றாகி விடும் ஏக்கத்துடன் துடிதுடித்தது.

    ஒன்றை ஒன்று நிறைத்துக் கொள்ளும் பேருவகையினைத் தான் அவனை அந்த திருவிழா நாளில் கனாவில் காணும் பொழுது அறிந்தேன். என்னுடைய வெற்றிடங்களுக்குள் நிரம்பி வழியும் ஆண் மகன். காலங்காலமாக நாங்கள் எப்பொழுதுமே பிரியாதிருந்தோம் என்று அந்த கணத்தில் நம்பினேன். சிவந்த தளிர் ரோஜாவினை ஏந்திக் கொண்டு எனக்காக நின்று கொண்டிருந்த அவனது ஆதுரம் மிகுந்த தேவதைக் கண்களை இன்றும் நினைக்கையில் சின்னஞ்சிறு பொறிகளாக நெஞ்சினுள் அவன் பொழிகிறான். அகோரப்பசியுடன் ஒன்றை ஒன்று திங்கத் துடிக்கும் இரு காட்டுமிருகத்தினைப் போலத்தான் நாங்கள் இருந்தோமா! 

    ஆனால் நாங்கள் பிரிந்தோம். திரும்பிக் கூட பார்க்க முடியாத தொலைவிற்கு. யாருடைய விதி! எதனுடைய கைகள்! இரக்கமற்ற கடவுளின் அத்துவான வெளியில் இரு உயிர்களுக்கு மட்டும் முடிவேயுறாத தண்டனைகளின் விலங்குகள் பதிக்கப்பட்டுவிட்டன.

    அவன் மாக்தலேனைக் கடக்கும் கணத்தில் அவளது சுருள் கேசத்தின் சின்னஞ்சிறிய அலை சிவந்து வீங்கிய அவனது  தோள்களைத் தழுவியது. கலங்கியக் கண்களுடன் வெறியேறக் கத்தத் தொடங்கினாள். சிலுவை-செய்பவன்! சிலுவை-செய்பவன்! துரோகி!. தொண்டை இழுபட, கழுத்து நரம்புகள் புடைக்க திரும்பத் திரும்பத் தன் குரலை உயர்த்தி அவ்வெற்று மலைக்குன்றுகள் முழுக்க சிதறித் தூளாகும் படிக் கதறினாள்.

    தலை குனிந்து சென்று கொண்டிருந்த அந்த இளைஞன், அசைவற்று நிற்கும் காலத்தின், துளியின், மீச்சிறு கணத்தில் அவளை ஏறிட்டான். வலிப்பு வந்தவன் போல, உதடுகளைச் சுழித்துக் கொண்டான். கசந்த அடிநாக்கின் எச்சிலை விழுங்கிக் கொண்டு, திரும்பவும் நிலத்தைப் பார்த்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர முயன்றான்.

    என்னவென்று அறுதியிட முடியாத ஒரு தவிப்புடன், மாக்தலேன் ஸ்தம்பித்து நின்றாள். அவனின் அச்சுழிப்பு மெல்ல மெல்ல வலியாக! பயமாக! காலாதீதமான ஒரு நிறைவற்ற  அணுக்கப்புன்னகையாக அவளுள் நிறைந்தது.

    இன்னும் இளைஞனின் அருகில் நின்றிருந்த அவள், தழுதழுக்கும் குரலில், அவனிடம் வேண்டினாள்.

    நாணமில்லையா உனக்கு! ஏன்! இப்படித் தாழ்ந்து கீழ்மையின் குழியினுள் வீழ்கின்றாய்?

    அவனது உதடுகள் பிரிந்து அவளை ஆதுரத்துடனும், தப்பிக்கும் பாவத்துடனும் நோக்கியது. 

    அவள் கத்தினாள்! பைத்தியக்காரா! இது நிச்சயம் கடவுள் இல்லை! சாத்தான்! சாத்தான்!

    மக்கள் கூட்டம் வழியெங்கும் சூழ்ந்து அவனது பாதையைத் தடுத்து அரணிட்டது. ஒரு முதியவர் தனது ஊன்று கோலினால் அவனை அடிக்கப் பாய்ந்தார். தாபோர் மலையிலிருந்து வந்திருந்த இரு மாடு மேய்ப்பவர்கள், அற்புதங்கள் நிகழப்போகும் கணத்தில் கடவுளின் முன் இம்மனிதன் எப்படி வீழப்போகிறான் பார்! என்று தங்களுக்குள் அங்கலாய்த்துக் கொண்டனர். பராபஸ் தன் வெட்டுக் கோடாரியை கைகளுக்குள் சுழற்றிக் கொண்டே அங்கும் இங்கும் அலைந்தான். செந்தாடிக்காரனின் தோள்களின் மேல் நின்று இது அத்தனையையும் கவனித்துக் கண்டிருந்த முதியபோதகர் அப்பொழுதுதான் வரப் போகும் அபாயத்தை உணர்ந்து கீழிறங்கி தன் மருமகனைக் காக்கும் பொருட்டு அவனை நோக்கி ஓடினார்.

    நிறுத்துங்கள்! அவர் கூட்டத்தைப் பார்த்து தன் அதீதக் குரலில் கத்தத் தொடங்கினார். தெய்வத்தின் வழியில் தடையிடாதீர்கள். எது நிகழவேண்டுமோ அது நிகழந்தே தீரும். பாவச்செயலில் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள் என் பிள்ளைகளே!. தண்டனைக்கான கூர் ஆணிகளை எடுத்துக் கொண்டு அவர்கள் தயாராகட்டும். தேவதூதனின் வருகையை அறிவிக்கப்பண்ணட்டும். பயக்காதீர்கள்! நம்பிக்கைக் கொள்ளுங்கள்! கடவுளின் நியதி அது! நம் எலும்புகளின் மஜ்ஜைகளின் ஆழம் வரை இதன் கூர் ஆயுதங்கள் பதியாமல் அது நிகழாது. ஆம்! இறுதி எல்லை வரை, ஆழ் பள்ளத்தின் விளிம்பு வரை மனிதன் செல்லாது அவனுக்கு மீட்சியேது! அதனால் பொறுமை கொள்ளுங்கள்! அற்புதத்தின் தருணத்தை எதிர்நோக்கி அமைதியுடன் காத்திருப்பது ஒன்றே நம் இறைவன் நமக்கிட்ட வழி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக