செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் - 14

  


  தன்னிலை மறந்து அவர்கள் அனைவரும் உரக்க பாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அனைவரின் மனதிற்குள்ளும் ஏதோ போதாமை உந்திக் கொண்டிருந்தது. சிதறடிப்போம் என்று ஒவ்வொரு முறை வெறியெழக் கத்தும் பொழுதும் தங்களின் தேசம் எப்படி துண்டுகளாக்கப்பட்டு அதிகாரம் தலையெழுந்தது என்று அவர்கள் வேதனையுற்றனர். அவர்களின் ஒரே எதிரியான ரோமப்பேரரசின் மகத்தான கழுகுகள் பதித்த ஸ்தூபம் நாசரேத் நகரின் நடுமையத்தில் பிரஸ்தாபிக்கப்பட்ட நாளினை எண்ணினர். நகர் மையத்திலேயே வலுவாகக் கட்டியெழுப்பப்பட்ட அவர்களின் கோட்டையின் மண் நிறம், அதன் நாற்புறமும் அவர்களின் அழியா முத்திரை பதிந்த  பறக்கும் இரு சிறகுகள் பதிந்த மஞ்சள் நிறக்கழுகுகளின் கூர் அலகுகளை, பாரபட்சமற்ற சென்னிறக்கண்களை, கட்டற்ற ஒற்றைப்படையான அதிகாரத்தின் திளைப்பில் மூழ்கிக் கிடக்கும் அந்த பிசாசுகளின் கோட்டைதான் அவர்கள் அனைவரின் நினைவிலும் நிலைத்திருந்தது.

    அந்த உயரமான கோட்டைச்சுவர்களுக்கு கீழே, ரோம் பேரரசின் நூற்றுவர் தலைவன் நின்று கொண்டிருக்கிறான். அவர்களை அழிக்கும் ரத்த வெறியுடன் தன் படையுடன் நிற்கிறான் ஒரு புரட்சிவீரன்.  அவனது படைக்கு கீழே குதிரைகளும், நாய்களும், ஒட்டகங்களும், அடிமைகளும் நிறுத்தபட்டிருக்கின்றன.  அதற்கும் கீழே அடியாழமற்ற ஒரு வறண்ட கிணறு. காற்றில், அவ்வீரனின் சென்னிறத் தலைமுடி ஒரு அனல் போலச் சுழல்கிறது. நாள்பட்ட பித்தேறியக்கண்களைச் சுற்றிப் படலமாய் கருமை அண்டியிருக்கிறது. 

    அதிகாரத்தின் தலைகள் கொய்யப்படும். அதன் கோட்டை, கொத்தளங்கள், படைகள் அனைத்தும் கண் சிமிட்டும் நொடியில் நொறுங்கி மண்ணாகும். கடவுளுக்கான வழி என்பது அழிக்கமுடியாத நீதி. அதிகாரத்தின்  எல்லாத் தவறான அடித்தளங்களுக்கடியிலும், வஞ்சிக்கப்பட்டவர்களின் அணையாத வெம்மை புதைக்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் நம்பினர்.

    மக்காபீசின் குலவழியின் கடைசி வழித்தோன்றலான அக்கலகக் காரனுக்கு,  இஸ்ரவேலின் தெய்வம்,  வழி வழியாக புனித அழியா விதையாக  சார்புகளற்ற நீதியை மட்டுமே அளித்திருந்தது. ஓர் இரவு ஏரோது , யூதர்களின் நிலத்தில், ரோமின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த அந்தக் கிழட்டு மன்னன்,  சதுக்கத்தில் தீப்பந்தங்கள் போல உயிரோடு எரிந்து புகையாய் சாம்பலாய் ஆகும் நாற்பது இளைஞர்களைக் கண்கள் இமைக்காது தணலாக அவர்கள் அங்கும் இங்கும் உயிர் வழிய ஓடிக் கொண்டிருப்பதை, கதறுவதை, வெறித்த நகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஏன்? யூதர்களின் ஆலயத்தில், ரோமின் குலச்சின்னமான கழுகுகள் பதித்திருந்த பீடத்தை அவர்கள் இழுத்து உடைத்தனர் என்பது தான் குற்றம்.

    ஆனால் ஒருவன்! அவர்களை வழி நடத்திய அந்த நாற்பத்தியொன்றாவது ஆள் மட்டும் தப்பிவிட்டான். கடவுளுக்குத்தான் தெரியும் அவன் எப்படிப் பிழைத்தான் என்று. மக்காபீஸ் குலத்தின் கடைசி எஞ்சிய ஒருத்தனான அந்த இளைஞன் தன் நண்பர்கள் எரிந்து புகைமண்டலமாக ஆனதை நினைத்து வேதனையுற்றான். சுருக்கங்கள் அடர்ந்த அவனது நெற்றியிலிருந்து வியர்வைத் துளிகள் காதுமடல்கள் வழி வழிந்து கொண்டிருந்தது. பெருங்குழப்பத்திலும், வெறியிலும் அலைக்கழிந்து கொண்டிருந்தன அவனது தீர்க்கமானக் கண்கள்.

காலங்கள் கடந்தன. ஒரு நாடோடி போல அவன் மலைக்குன்றுகளில் அலைந்து கொண்டிருந்தான். கடவுள் நம் மக்களுக்காக தருவித்த இந்நிலத்தை மீட்பது ஒன்றுதான் அவனது பிரார்த்தனையும், லட்சியமுமாக இருந்தது. 

"இறைவா! நீயே வழி!

உன் சொல்லே வாக்கு!

எனக்கு அளிக்கப்பட்ட உன் சொல்லின் வழியே என்னை நடத்துகிறேன். எங்கள் பூமியின் மண்ணிற்கு, யாரும் எந்த வரியும் இட முடியாது. எதையும் சிறுமைப்படுத்துவதல்ல, நம் இஸ்ரவேலின் தெய்வத்தின் நியதியினால் நாம் விடுதலை அடைவதுதான் நமக்கான ஒரே நோக்கம். மாபெரும் பலிபீடங்களில் இடைவிடாது மாடுகளின், ஆடுகளின் ரத்தங்களால் நனைத்து நம் வேண்டுதல்களுக்கு செவி கூரும் எந்த தெய்வமும் எங்களுக்கு தேவையில்லை. 

    எங்களின் இறைவன் ஒருவனே! அவன் இஸ்ரவேலின் தெய்வம்!

    இந்நிலத்தின் ஒட்டுமொத்த மரங்களிலிருந்தும், பூத்துக் குலுங்கிக் கனிந்திருக்கும் ஒருவன், மெசியா!

    ஆனால் இறைவனின் கரங்களிலிருந்து அவன் ஏதோ ஒரு தருணத்தில் நழுவி விட்டான். ரோம் படையினர்களிடம் மாட்டிக் கொண்டான். இந்தச் செய்தி நாசரேத் ஊரின் எல்லா இண்டு இடுக்குகளிலும் பரவியது. மக்கள் ஒருவர் விட்டு ஒருவராக, ஜென்னசரெட் ஏரியிலிருக்கும் மீனவர்கள் மூலமாக, நாசரேத்திலிருந்த இளைஞர்கள், பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் அதனை அறிந்திருந்தனர். அங்கு வந்த வழிப்போக்கர்களுக்கு கூட அந்த செய்தி தெரிந்திருந்தது. எல்லோரும் மீண்டும் மீண்டும் தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டனர், அந்த புரட்சிக்காரனை சிலுவையில் அறையப்போகிறார்கள். எல்லாக் குற்றங்களுக்கும் தண்டனையாக, அரசனின் நிமித்தோன் தெருத்தெருவாக அறிவித்துக் கொண்டு சென்றான். ஆனால் மக்களிடம் வேறு விதமான நாள்பட்ட ஆவல் எழுந்தது என்பது தான் உண்மை. அது ஒரு ஆவல் கூட அல்ல, ஒரு ஏக்கம், தவிப்பு, மன்றாட்டு, பிரார்த்தனை. ஒரு சமயம் வருத்தம்  கொண்டவர்கள் மறுசமயம் அந்நாளை எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களின் தேவனின் அற்புதம் நிகழும் நாள் என எண்ணி ஏங்கினர். நீளமான பேரீச்சை மரக் கிளைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு தங்களின் மீட்பரின் வருகையினை எதிர் நோக்கும் தருணமிது என்று அவர்கள் நம்பினர்.

    செந்தாடிக்காரனின் தோள்களில் நின்று கொண்டு அந்த முதிய போதகர் தூரத்தே வெறித்துக் கத்தத் தொடங்கினார். அங்கு ரோமின் படைகள் தண்டனையை நிறைவேற்ற வந்து கொண்டிருந்தது. 

    அவன் வருகிறான்! ஆம்! அவன் வருகிறான்! அந்த வறண்டக் கிணற்றினருகில் நிற்பது நம் மெசியா! அவன் நமக்காகக் காத்திருக்கிறான். எல்லாத் தடைகளையும் உடைத்து நம்மை விடுவித்து நமக்கான நம் மண்ணிற்கான சுதந்திரத்தை வழங்க வந்து கொண்டிருக்கிறான். முதிய போதகர் கூச்சலிட்டு முழங்கினார்.

    ஆம்! நம் கடவுளின் பெயரால்! எனத் தன் கையிலிருந்த கோடாரியை உயர்த்தி ஒரு கான்மிருகத்தின் கேவல் போல பராபஸ் கதறினான்.

    மக்கள் அனைவரும் ஒரு விதக் கிளர்ச்சியில் கத்தினர். தங்கள் இடுப்பு வார்ப்பட்டைகளில், உடைகளினுள் சொருகி வைத்திருந்த கத்தியினை ஆண்கள் இன்னொருமுறை சரிபார்த்துக் கொண்டனர். சிறுவர்கள் கையில் கவண்களுடன் தயாராக இருந்தனர். ரோமப்படையினரை நோக்கி பராபஸ் முன்செல்ல அவர்கள் அவனைத் தொடர்ந்தனர். கண்கள் கூசும் வானின் ஒளியினுள் யாரும் அந்த சிறிய மூடுபல்லக்கு  அவர்களை நோக்கி வருவதைக் கவனிக்கவில்லை. சற்று நின்ற அதனின் உள்ளிருந்து மெல்லத் தன் கால்களை வெளியே வைத்து மக்கள் எல்லோரையும் பார்த்து நின்றாள் மாக்தலேனா. மிகவும் வெளிறியிருந்தது அவளின் முகம். தவிர்க்கவே முடியாத ஒன்றிடம் தன்னை ஒப்புவிக்கும் தாவர உண்ணியின் கட்டக்கடைசியான மரண பாவனை அவளது கண்களில் அப்பியிருந்தது. பலியிடப்போகும் அந்த மனிதனை எண்ணிய அவளது நெஞ்சம் விம்மித் துடித்தது. சற்று இறங்கி நின்ற அவள், இவ்வுலகில் மனிதனால் தர முடிந்த ஆகச்சிறந்த இனிமையையும், மகிழ்வையும் அவனுக்கு தன்னால் அளிக்க முடியாத இரவினை எண்ணி எண்ணி மூர்ச்சையுற்றாள்.

    ஒரு மூர்க்கமான நிலையில் தன்னை இந்த தேசத்தின் விடுதலைக்காக அவன் அர்ப்பணித்திருந்தான். ஒரு முழு இரவும் மாக்தலேனிற்கு எதிரிலேயெ இருந்தும் அவனது கண்களும் உள்ளமும் அவளை சிறிதி கூட நோக்கவில்லை. ஒரு கனவுலகவாதியாக, லட்சிய வாதியாக அந்தப் புனித ஜெருசலேம் மண்ணை அவன் தன் அகத்தில் நிலைத்திருந்தான். அதற்கான சத்தியத்தில் அவன் வழுவவேயில்லை. தன் தலை முடியைத் திருத்தவில்லை, எந்தப் பெண்ணையும் ஏன் மதுவைக் கூடத் தொடாது முழு மூச்சாக இந்த லட்சியப்பாதையில் செல்ல சத்தியம் செய்து கொண்டிருந்தான். அப்புனித நகரம், அதன் ஏழு மாபெரும் கோட்டை வாயில்கள், அதற்கு காவலாக ஏழு தேவதைகள், இந்நிலத்தின் மைந்தர்களான எழுபத்து ஏழு பேர்கள் என அனைத்தும் அதன் காலடியில் இருப்பதாய் தனக்குள் தானே நினைத்து மகிழ்ந்திருந்தான்.

    ஜெருசலேம் எனும் தாயின் குளிர்ந்த முலைகளில் முகம் புதைத்துக் கொள்வதன் மூலம் அவன் அனைத்தையும் மறந்திருந்தான். வாழ்வோ! சாவோ! அவனது உலகம் அதனைக் கடந்ததாய் இருந்தது. தன் உள்ளங்கைகளை உற்று நோக்கித் திரும்பத் திரும்ப அவன் எண்ணியது, இஸ்ரவேலின் கடவுளை! கத்தரிக்கப்படாத நீண்ட கேசத்தைக் கொண்ட, மதுவோ, பெண்களோ தீண்டாத உடல் கொண்ட தெய்வம். என்னைப் போலவே! முழு இரவும் ஒரு குழந்தையினைப் போலக் கைகளில் ஜெருசலேமைத் தாங்கிக் கொண்டிருப்பதாய் நினைத்தான். தன் கைகளுள் உருளும் இந்நகரம். இறைவனின் ராஜ்ஜியம். சொர்க்கத்தின் ராஜ்ஜியம். மண்ணும் மனிதர்களாலும் நிரம்பிய தேவனின் ராஜ்ஜியம். குளிரில் வெம்மையையும், வெய்யிலில் தண்மையையும் ஒருங்கே கொண்ட நிலமாய் அது இருக்கும் என்று தன்னுள் பெருமை பட்டுக்கொண்டான்.

    படைமுகாமிலிருந்து வெளியே வந்த தன் சொந்த மகளைக் கண்ணுற்றார் முதியதுறவி. தன் வாழ்விற்கான பெரும் அவமானத்தின் ரூபமாய் அவள் இருந்தாள். வெறுமனே தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ஒரு புனிதனைக் காண ஏன் இந்த வேசை வருகிறாள். தவிர்க்கவே முடியாத வலியின் நகங்கள் அவிழ்க்க முடியாதபடி பற்றிக் கொண்டிருக்கும் அவளின் வழியினை நினைத்து தன்னையே நொந்து கொண்டார். ஏன்? அவள் இப்படியானாள் என்று இன்று வரைத் தெளிவாக அவருக்கு தெரிந்திருக்கவில்லை. ஏன்? அவமானத்தினுள் நெளிந்து கொண்டே இருக்க வேண்டிய, குணப்படுத்த முடியாத வலியினைத் தன்னுள் செலுத்திக் கொள்கிற வாழ்வினைத் தேர்ந்தாள் என்றும் தெரியாது வெறுமனே வானை நோக்கி வெறித்தார்.

    ஒரு நாள் கானாவின் கோவில் திருவிழாவிற்கு சென்று அழுது கொண்டே திரும்பவந்தவள், நான் தற்கொலை செய்ய வேண்டும் என்று பிதற்றினாள். தன் உடலெங்கும் ரணம் ரணமாக்கி முற்றிலுமான வலியின் சாசுவதத்தில் நான் மரணமடைய வேண்டும். அது ஒன்று தான் என்னைத் திருப்திபடுத்தும் என்று ஓலமிட்டாள். பின் வெறி கொண்டு சிரித்தாள். தன் நாடியில் வண்ணங்களால் குறி வரைந்து கொண்டாள். போட்டிருந்த அணிகலன்களை அவிழ்த்தெறிந்தாள். அங்கிருந்து வெளியே சென்றவள், சந்தைப்பகுதியின் நாற்சந்தியில் தன் கடையை விரித்தாள். வணிகர்கள் கூடும் இடத்தில் தன் உடலைப் பாளம் பாளமாகப் பிரித்து வைத்துக் கூவி அழைத்தாள்.

    கூட்டத்தை நோக்கி எந்த அச்சமுமின்றி அவள் விரைந்தாள். முகப்பூச்சுகளையும், அலங்காரங்களையும் களைந்து விட்டிருந்தாள். ஒரு முழு நாளின் நீண்ட இரவும் உறங்காது அவனைப் பார்த்துக் கொண்டே இருந்த அவளது கண்கள் சிவந்து தடித்திருந்தது. சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த தன் தந்தையினைப் பார்த்தாள். இன்னும் இன்னும் தன்னால் நலிந்து கொண்டே இருக்கும் அவரின் முகத்தைக் காண சகிக்காது திரும்பிக் கொண்டாள். ஒரு கசந்த இளிப்பை தனக்காக மட்டும் இளித்துக் கொண்டாள். கலங்கிய கண்களுடன் தன்னைத், தன் உடலை உற்று நோக்கினாள். ஏழு சாத்தான்களால் பீடிக்கப்பட்ட சரீரம். கடவுளையும், மனிதர்களையும் கைவிட்டு அவள் வெகு தொலைவில் வந்து விட்டிருந்தாள். உடல் மட்டுமேயான் உலகில் தன் உடலும் இன்னொரு உடலும் , அதன் விம்மலும், தேக்கமும், வலிகளும், உழலல்களும் தவிர்த்து அவளிடம் ஏதொன்றுமில்லை.  ஆனால் ஏழு சாத்தான்களல்ல மீள மீளத் தன் இருதயத்தில் ஏழு கூர்க்கத்திகளினால் குத்தியும் பிளந்தும் கொண்டிருந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக