மிக ஆழமானச்சோர்வு அவனை ஆட்கொண்டது. கால்கள் தளர்ந்து தொய்வுற்றுன. அறையின் மூட்டமான வீச்சம், பசி, தாகம் எல்லாம் சேர்ந்து அவனைக் கலங்கடித்தது. சம்மணமிட்டு தரையில் உட்கார்ந்ததும், மயக்கம் வருவது போலவும், அடிவயிற்றில் இழுத்து குமட்டுவது போலவும் இருந்தது. வாயை அழுத்திப் பொத்திக் கொண்டு தொண்டையில் சத்தம் வராமல் எதுக்கழித்தான். வறண்ட ஏப்பங்கள் மட்டுமே வெளிவந்தது.
நீ திரும்பி நில்! நான் விளக்கைக் கொளுத்தப் போகிறேன். இருளினுள் அம்மணமாக இருக்கும் மேரியின் குரல், ஒரு வித ரகசியத்துடன் அவனை அடைந்தது.
நான் செல்கிறேன் மேரி! அவனின் முழுசக்தியையும் ஒன்றுதிரட்டி ஆழ்ந்த பெருமூச்சுகளிட்டான்.
யாராவது கூடத்தில் இன்னும் இருக்கிறார்களா என்று பார்! இருந்தால் வெளியே போகும் படி அறிவி! அவனின் வார்த்தைகளைக் கேட்காதது போல மேரி, ஜீசஸிடம் கட்டளையிட்டாள்.
கதவைத்திறந்து வெளியைப் பார்த்தான் இளைஞன். இருள் காற்றின் மென் ஒலி. மாதுளையின் கணுக்களும், இலைகளும் அயர்ந்திருந்தது. கூண்டினுள் எந்த அணக்கமுமில்லை. இருளினுள் அங்காங்கே உத்திரத்திலிருந்து பெய்யும் ஒளித்துணுக்குகள். வாசலில் சைப்ரஸ் மரத்தினடியிலிருந்த அடுப்பையும், மற்றப் பாத்திரங்களையும் முற்றத்தில் கொண்டு வைத்து விட்டு தன்னுடைய இருப்புப்பலகையில் அமர்ந்து கண்ணயர்ந்திருந்தாள் கிழவி. மழையின் சப்தம்! தனித்தனிக் குமிழ்களாய் ஒன்று ஒன்றாய் இறங்கி பூமிய நனைக்கத் தொடங்கியது வானம். காற்றின் மென் சில்லிடல். அசைவற்றதெல்லாம் உயிர் பெறுகிறது. மிக நீண்ட வெம்மையைத் துளைத்து நீர்மையின் சுகந்தம், தங்குதடையின்றி அனைத்தையும் அணைத்துக் கொண்டிருந்தது.
யாருமில்லை என்று சொல்லிக் கொண்டே கதவினைச்சாத்தினான். அதன் துவாரங்கள் மற்றும் இடைவெளிகள் வழியே காற்றின் குளிர்மை உள்ளே அப்பத்தொடங்கியது.
கட்டிலிலிருந்து எழுந்து அலங்காரங்களும், பின்னல் வேலைகளும் செய்த ஒரு விலையுயர்ந்த சால்வையை எடுத்துத் தன்னை முழுதுமாக மறைத்துக் கொண்டாள். சால்வையில் சிங்கக்கூட்டமும், மான் கூட்டமும் பின்னலின் வழியே வெறித்தன. அது அன்று காலையில் தான் எத்தியோப்பிய வியாபாரி ஒருவன் அவளுக்குக் கொடுத்தது.
தன் தோள்களும், இடுப்பும் தெரியும் படி அதை அணிந்திருந்தாள். குழைந்து குழைந்து நடந்து சென்றவள், தொங்கிக் கொண்டிருந்த விளக்கை கையில் எடுத்துக் கொண்டாள்.
யாருமில்லை மேரி! மகிழ்ச்சியான அவனின் குரல்! இதுவரையிலும் இருந்த எல்லா அழுத்தங்களையும் விடுவித்தது.
மழை சிறிது சிறிதாக வலுத்துக் கொண்டிருந்தது. முற்றத்திற்கு விளக்குடன் வந்தவள், அந்த முதியவள் இருளினுள் அமர்ந்திருப்பத்தைக் கண்டாள்.
நோமி! பாட்டி! மழை இன்னும் உரைக்கும்போல இருக்கிறது. நீங்கள் உங்கள் பாத்திர பண்டங்களை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள். நான் கதவை மூடப்போகிறேன். நாளை பார்க்கலாம். இனிமேல் யாரும் வரமாட்டார்கள்.
உன் காதலன் உள்ளே இருக்கிறான் இல்லையா! கிழவி இனி வியாபாரம் செய்ய முடியாது என்பதை நினைத்து சற்று விசனத்துடனே அவளிடம் கேட்டாள்.
முணுமுணுத்துக்கொண்டே மிச்சம் இருந்த உணவினையும், பாத்திரங்களையும் மூட்டைக் கட்டத் தொடங்கினாள்.
மானங்கெட்டப் பயல்! உண்மையில் உன் காதலன் சரியான ஆள்தான்! பொக்கை வாயிலிருந்து வார்த்தைகள் எச்சிலுடன் தெறித்தன.
சரி! சரி! போ! போ! என்று அவளை நெருக்கித் தள்ளி வாசலுக்கு வந்து கதவைச்சாத்தினாள்.
திறந்திருந்த வானிலிருந்து முற்றத்தில் மழைத்துளிகள் பெருகி வழிந்தன. பல்லாயிரம் ஏக்கங்களின் குரல்கள் ஒட்டுமொத்தமாய்க் கூவி கூவி அறைவதை போலச் சுவர்களை அறைந்தன. இது நாள் வரை வெளித்தெரியாமல் தனக்குள்ளேயே பதுக்கி வைத்திருந்த தாபங்களின் கூச்சல். அவளிற்குள்ளும் அக்கூச்சல் நிரம்பியது. சிறுவயதிலிருந்தே வசந்தத்தின் முதல் மழை அந்த ஏக்கத்தை கிளப்பிவிட்டு விடும். ஆனால் இன்று கொஞ்சம் விசித்திரமானதாக இருந்தது. இத்தனைத் துக்கத்திற்குப் பிறகும், வலி, அயர்ச்சி, சோர்விற்குப்பிறகும் ஒரு மழைத்துளி இவ்வுடலுக்கு போதுமானதாக இருந்தது. அனைத்து மகிழ்வையும், களிப்பையும் ஒருங்கேக் கொண்டு வருவதற்கு என்று நினைத்தவளின் சால்வை தொப்பலாக நனைந்திருந்தது.
அறை நடுவே குத்துக்காலிட்டு அமர்ந்தவனின் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. போவதா! இருப்பதா! எதுவாகிலும் அது ஆண்டவனின் விருப்பம்! இங்கு நன்றாக இருக்கிறது. கதகதப்பாக உணர்கிறேன். இந்தக் குமட்டல் மணம் கூடப் பழகி விட்டது. வெளியே மழையின் குளிர்மைக்கு இதமாக இங்கிருப்பதும் நல்ல யோசனைதான். மாக்தலாவிலோ, காபெர்னம்மிலோ அவனுக்கு அவளைத்தவிர வேறு யாரையும் தெரியாது. ஆனால் எந்த முடிவும் எடுக்க முடியாது அங்கும் இங்கும் அலைக்கழியும் அவனின் உடல் அசைவுகள், நிலத்தில் பதற்றத்துடன் எங்கேயாவது சிறிது அதிர்வு ஏற்பட்டாலும் சட்டென தன் பொந்திற்குள் மறைந்துகொள்ளும் ஊர்வன போல அவளுக்குக் காட்சியளித்தது.
மழை வலுத்துக் கொட்டுகிறது. நிச்சயமாக நீ எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டாய்! அந்த விளக்கைக் கொளுத்து! சமைக்கலாம்!
அவளது குரல் அமைதியாகவும், பரிவுடனும் அவனைத் தழுவியது ஒரு அன்னையைப் போல.
நான் செல்கிறேன்! கதவினைப் பிடித்துக் கொண்டு திரும்பி நின்றுகொண்டிருந்தான் இளைஞன்.
கொஞ்சம் பொறு! இங்கே உட்கார்! நாம் சேர்ந்து உணவருந்தலாம். கனத்த குரலுடன் கட்டளையிட்டாள்.
ஒருவேளை உனக்கு அருவருப்பாக இருக்கிறதா? ஒரு பரத்தையின் குடிலில் அவளுடன் சேர்ந்து உண்பது, உன் புனிதத்தைக் குலைத்துவிடும் என்று.
இளைஞன் மெல்ல எழுந்து, ஜன்னல் கிராதியில் கொளுத்தியிருந்த, குமிழ் விளக்கினை எடுத்தான். திரியினைத் தூண்டிப் பற்ற வைத்தான். மஞ்சள் ஒளிக் கனன்று அவனைச் சூழ்ந்து பரவியது.
மாக்தலேன் உள்ளூற மகிழ்ச்சியும் அமைதியும் கொண்டாள். அவனைப்பார்த்து புன்முறுவலுடன் சென்றவள், அடுப்பில் எரியூட்டி பானையை வைத்து நீரூற்றினாள். சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பையிலிருந்து இருகைகள் நிறைய, அவரைக்காய்களை எடுத்து பானையில் இட்டாள். வெளிச்சத்திலிருந்து ஜன்னல் வழியே ஊறும் இருட்டை நோக்கி, வானத்தின் தகிப்பைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஜீசஸ்! ஜீசஸ்! இருக்கிறாயா!
நீ என்னக் கேட்டாய்! நாம் குழந்தைகளாய் விளையாடியப் பொழுதுகள் ஞாபகம் இருக்கிறதா என்றுதானே?
அருகே அமர்ந்திருந்த இளைஞனின் நினைவுகள் வேறு எங்கோ தப்பிக் கொண்டிருந்தன. அடுப்பிலிலிருந்து ஜ்வாலையின் கனத்த வெக்கை அவர்களின் முகங்களில் ஒளிர்ந்தது. மஞ்சள் ஒளியில் அவனும் அவளும், அவர்களது நிழல்களும் காலமற்று அங்கே அருகமர்ந்திருந்தன. அவர்களுக்குள் யாருமில்லை. முழுக்க முழுக்க அவனுக்காகவே அவள் அருகில் அமர்ந்திருந்தாள். பாவனைகளற்ற அதே குழந்தைமை. ஆனால் அவனின் அகமோ! தன்னைத் துறவியாகப் பாவித்துக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறியத் தொட்டிக்குள் இங்கும் அங்கும் சதா அலைந்து கொண்டே இருக்கும் தனித்த மீனைப் போல அவனது அகமும் தன் உலகைச் சுருக்கி வைத்திருக்கிறது. அந்த உலகினுள் தன் அமைதி, அன்பு, பாதுகாப்பு. இது மட்டுமே போதும், வாழ்வு திருப்திகரமானது என்று அவனை நம்பச்சொன்னது. ஆனால் தொட்டி உடைவதைப் பற்றியோ, நீரற்றுப் போனால் தன் கதி என்னவாகும் என்பதைப் பற்றியோ அது அதிகமாகச் சிந்திக்கவில்லை. சின்னஞ்சிறிய உலகம்!
ஜீசஸ்! அவள் திரும்பவும் அவனை விளித்து அதே கேள்வியைக் கேட்டாள்.
ஒளித்தெறிப்புகளில் அவளது அழகிய முகம் இன்னும் இன்னும் எனப் பொலிந்து வந்தது. அத்தனைக் காதலைக்கொண்டு அவனை உற்று நோக்கினாள். ஜீசஸ்! எனும் ஒற்றைச்சொல்லே போதும்! அவளின் அபரிவிதமான அன்பு ஒரு சுணை போலத் தோண்டதோண்ட அவளுள் பெருகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவனோ பாலை நிலத்தில் தன்னை மூழ்கடித்திருந்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக