வியாழன், 17 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -18

    


கயிற்றினை சுற்றி சரியாக இழுத்து அவன் உடலின் இருபாகங்களும் சிலுவையின் இரு பகுதியிலும் சரிசமமான எடையுடன் இருக்கும் படி, நிறுத்தி, முழங்கைகளில் கயிற்றினால் இறுக்கிக் கட்டினர். அவனது பெரிய தலை காற்றில் அலையும் சருகுகள் போல ஆடியது. இருபுறமும் கயிறு இறுகி ரத்தம் கன்றியிருந்தது. நரம்புகள் வழிப் புடைந்திருந்த ரத்தக்குழாய்கள் வெடித்துப் பீறிடக் காத்துக் கொண்டிருந்தது. கால்கள் இரண்டையும் குறுக்காகத் தரித்து இடப்புறமாக வளைத்து, பாதங்கள் முன் நோக்கி இருக்கும்படிக் கட்டியிருந்தனர். செம்மயிரடர்ந்த ஆண்குறி தொடைகளுக்கிடையில் பிதுங்கியிருந்தது. பின் கூர்மையான ஆணிகளை எடுத்து அவனது இரு உள்ளங்கைகளிலும் சரியாக நடுப்பகுதியில் வைத்து அழுத்தி இறக்கினர். எலும்புகள் முறியும் சப்தம். மனித இறைச்சியின் வீச்சமும், உப்பின் வெம்மணமும். சூடான குருதி வெடித்துக் கிளம்பியது. சதை கிழியும் ஒலி! கீழே குத்தவைத்து கற்களை சமன் படுத்திக் கொண்டிருந்த ஜீசஸின் முகத்தில்  அடர்கருஞ்சிவப்பு ரத்தம் ஒரு கூழ் போலப் பதிந்து வழிந்தது. அண்ணாந்து பார்க்கையில் மணிக்கட்டுகள் உடைந்து சாம்பல் நிற ஆணிகளின் உள்ளிருந்து  அவனது இருபுறமும் கிளர்ச்சியாளனின் ஊன் ஒரு புனல் வழியே வழிவது போல சொட்டிக் கொண்டிருந்தது. தன் கழுத்து நரம்புகள் இழுபட, உதறித்தள்ளிப் பின் வாங்கினான் இளைஞன். இமைகளற்ற விழிகளைப் போன்றக் காயம் அவனது உள்ளங்கைகளில் பிளர்ந்து இளைஞனை வெறித்தது.

    மேரியின் குரல் உயர்ந்தடங்கியது. ஜீசஸ்! என் மகனே!

    ஒரு ஆழ்ந்த விளி! ஒரு குரல்! ஒரு அலறல்! ஒரு தவிப்பு! ஒரு ஆற்றாமை! ஒரு பழிப்பு! ஒரு வன்மம்! ஒரு இறைஞ்சல்! வலி! வலி! வலி!

    அது மனிதக்குரல் போலவே இல்லை. சுற்றி நின்ற அனைவரின் செவிகளிலும் கிழிந்து உள் நுழைந்தது அவ்விளி. இரைச்சல்களின் நொதித்தல். அக்குரல், குரல்களாய், மறுதலிக்க முடியாத மறுகலாய் பெருகிப் பெருகி வானும் மண்ணும் நிரம்பியது. அது மானுடம் மொத்ததையும் ஒன்று சேர்த்த ஆதி உணர்வின் வன் விளி! அனைவரின் உடலிலிருந்தும் ரத்தம் பீறிட்டது. எல்லாக் கைகளிலும் திரும்பத் திரும்ப ஆணிகள் இறங்கிக் கொண்டே இருந்தன. அது எபிரேயர்களின் ஓருடல் பலி. 

    கிளர்ச்சியாளனின் செங்குருதித் தெறிப்பின் துளிகள் சில ஜீசசின் உதடுகளைத் தழுவின. சொந்தக்குருதியைக் குடிப்பது போலவே அதன் உப்பினை நக்கினான். உடனேத் தளர்ந்த அவனது கால்கள் வெட்டு வந்தது போல இழுக்கத் தொடங்கியது. முகம் கோணிப் பற்கள் கிட்டித்தன. சரியான நேரத்தில் மேரி அவனைக் கீழே விழாமல் தன் மடியில் தாங்கினாள். தாங்கவொண்ணாத வலியின் விஷக்கொடுக்குகள் அவனது உடல் முழுதும் குத்திக் கிளறின.

    மலை உச்சியின் மேடு, சிலுவையைச் சுற்றிக் குருதிக்குமிழ்கள் தெறித்து, அவ்விடமே ஒரு கசாப்புக் கடை போல ஆகியிருந்தது. மலை ஈக்களின் ரீங்கரிப்பும், காகங்களின் ஓயாத கரைதலும், பசியயோடு குரைக்கும் கூர்ப்பற்கள் கொண்ட நாய்களும் இணைந்து ஏதோ சபிக்கப்பட்ட நிலம் போல இருந்தது.

    சிலுவையில் வதைபடுபவனின் முதியத் தாய் மெல்ல ஏறி  வந்து அமைதியாக வானைப் பார்த்து வெறித்துத் தொங்கும் தன் மகனை ஏறிட்டாள். தன் குருதி ஒரு ஓடையாக அவனைச்சுற்றி வழிவதைத் சொந்தக் கைகளால் ஸ்பரிசித்தாள். ரணத்தில் முனகும் அவனது அமானுடக் குரலுக்கு சற்றே செவி சாய்த்தாள். அனங்கி அனங்கி பின் ம்ம்!ம்ம்ம்!ம்ம்ம்ம்! என்று தன்னால் விழுங்க இயலாததை தொண்டைக் குழியினுள் வலியத் தள்ளிக் கொண்டே இருப்பதைப் போன்ற சப்தம். இரு பாதங்களையும் இணைத்து குழித்திருக்கும் ஆணியினை வருடினாள். அவளது தொடுகைக்கு பதில் சொல்வது போல முணக்கம். குழிந்த பகுதியில் உறைந்து திட்டுகளாய்ப் பதிந்திருக்கும் ஊனில் நடுநடுங்க தன் உதடுகள் பதிய முத்தமிட்டாள். அமைதியாகத் திரும்பியவளின் உடல் முழுதும் வெலவெலத்துக் கொண்டிருந்தது. வெளிறிப் போன அவளின் முகத்தில் உக்கிரம் குடி கொண்டிருந்தது. எதிர் வரும் அனைத்தையும் எரித்து சாம்பலாக்கும் சொல் அவள் நாவினில் துளிர்த்திருந்தது. அருகே மேரியின் அழுகையினைக் கூர்ந்தவள். ஜீசஸைக் கண்டாள். இந்தப் பிறவிதானா அது! யூதர்களின் சாத்தான்! இவ்விழிந்த பிறவி இன்னும் எதற்காக உயிருடன் இருக்கிறது. என் மகனுக்கானக் கொலைமரத்தை செய்த கீழ் மகன் நீதானே! அவன் கைகளிலும் கால்களிலும் ஆழ இறங்கிய உயிருள்ள ஆணிகள் நீயும் உன் அன்னையும் தான். மிகுந்த வேதனையுடன் தலையை அசைத்துக் கொண்டே அவர்களைப் பார்த்து சபித்தாள்.

    நான் உள்ளூற எரிந்து கொண்டிருக்கிறேன். தச்சனின் மகனே! இதைப் போலவே நீயும் வதைந்து வதைந்தே சாவாய்?

    என்னைப் போலவே நீயும், சொந்த மகனின் மரணத்தைக் குடித்து வலியுறுவாய்!

    நா தழுதழுக்க நின்றவள், திரும்பக் கடைசி முறையாக, வெட்ட வெளியில் தன்னந்தனியே துடிதுடித்துக் கொண்டிருக்கும் தன் மகனைக் கண்டாள். அவனது பாதங்களைத் தழுவிய மாக்தலேன், இறுதி அஞ்சலியின் பாடல்களை உளமுருக அச்சிலுவையின் காலடியில் சமர்ப்பித்தாள்.' பின் அவனது ரத்தம் தோய்ந்த உடலைக், கைகளை, கால்களை, பாதங்களை தன் விரல்களால் தழுவித் தழுவித் தன் பிரார்த்தனைகளை அளித்தாள்.

    எல்லாம் முடிந்த பின், தண்டனையை நிறைவேற்றிய ரோம் அடிமைகள், உரிந்த அவனின் கந்தலான உடைகளைக் கத்தியினால் தூண்டுகளாக்கினர்.

ஒரு துணி மட்டும் மீதமிருந்தது. அது சிலுவையில் தொங்குபவனின் தலைக்குட்டை. அவ்வெள்ளை நிறத் துணி குருதிபடிந்து கருஞ்சிவப்பாக இருந்தது. உப்பு வீச்சம் மாறாத அத்துணியை எடுத்து ஜீசஸை அணுகினர்.

இதனை இத்தச்சனிடம் கொடுப்போம்! அவனுக்கான சரியானக் கூலி!

எடுத்துக்கொள் தச்சனே! உன்னுடைய சிறந்த வேலைக்கு கூலியாக இப்பங்கினை எடுத்துக் கொள்!

எதுவும் கேளாது நடுங்கிக் கொண்டிருந்த இளைஞன் அவர்களை நோக்கித் திரும்பினான்.

இன்னும் நிறைய நிறைய சிலுவைகள் இங்கு அறையப்படட்டும் என்று சிரித்துக் கொண்டே சொன்னவன் அத்துணியை ஜீசஸின் கைகளில் திணித்தான். பின் ஆதுரமாக அவன் முதுகில் தட்டி விட்டு நகர்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக