ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

கிறுஸ்துவின் கடைசி சபலம் -49


மனிதர்களையா?

பிறகு, ஆடுகளையாக் கொல்லச்சொல்கிறேன்.

    நான் இதுவரை எந்த மனிதனையும் கொன்றதில்லை. ஆனால் என்னால் கொல்ல முடியும். கடந்த மாதம் ஒரு எருதை என் கையாலேயே தான் கொன்று, அதன் தோலை உரித்து இறைச்சியை எடுத்தேன்.

    எங்களுடன் வா! ஒரு மனிதனைக் கொல்வது அதனைக் காட்டிலும் வெகு எளிது என்று உனக்குக் காட்டுகிறேன்.

    பிலிப்பின் குரல் நடுங்கியது. நீ, புரட்சியாளர்களில் ஒருவனா? பதறிய முகத்தில் வியர்வை வழிந்தது. அவன் அவர்களைப் பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தான். சகோதரத்துவம் என்ற பெயரில் அந்தத் தீவிரவாதக் கூட்டம் செயல்படுகிறது. புனிதக் கொலையாளிகள் என்று மக்களால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் ஹெர்மான் மலையிலிருந்து கீழே சாக்கடல் வரை எதிராளிகள் அனைவரையும் அச்சுறுத்துகின்றனர். இன்னும் தெற்கே இதுமியாவின் பாலை நிலம் வரை அவர்கள் தங்கள் போராளிகளை, உளவு பார்க்கவும், எதிரிகளைத்தீர்த்துக் கட்டவும் மக்களோடு மக்களாகப் பதுங்கி நோட்டமிடுகின்றனர். எதிரிகளுக்கு அவர்கள் தலை வணங்குவதில்லை. நமக்கிருப்பதோ ஒரே ஒரு கடவுள்! யூதர்களின் தெய்வம்! அவரின் புனிதச்சட்டங்களுக்கு அடிபணியாத எல்லா யூதர்களையும் கொல்லவேண்டும். கடவுளின் எதிரியாகிய ரோமானியர்களுடன் அணுக்கம் கொள்ளும், அவர்களுடன் இயைந்து பழகுபவர்களையும், வேலை செய்பவர்களையும், பாரபட்சமின்றிக் கொல்லத்தான் வேண்டும். மெசியா வருகின்ற பாதையில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது. நாங்கள் கொலைகளின் மூலம் உலகைத் தூய்மைப் படுத்துகிறோம். தெருக்களின் வழிப்பாதைகளை அவனுக்காகத் திறந்து வைத்துக் காத்திருக்கிறோம். அவன் வந்து கொண்டிருக்கிறான் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளனர்.

    அவர்கள் கிராமங்களிலும்,  நகரங்களிலும் பகலின் பெரும் பொழுதுகளில் ஒரு வேட்டை நாய் போல உலாவுகின்றனர். யாரிடமும் எந்த பச்சாதபமுமில்லை அவர்களுக்கு. எந்த ஒரு நம்பிக்கை துரோகம் செய்கின்ற யூதனையும், தங்கள் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் ரோமானியர்களையும் அவர்கள் கொல்வதற்குத் தயங்குவதில்லை. நிலச்சுவான்தார்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் எல்லோரும் அவர்களின் பெயரில், தங்கள் உயிரைக் கையில் பிடித்துகொண்டு நடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் விசுவாசமின்மைக்காக, சொந்த நிலத்தை அடகு வைத்ததற்காக, இவர்களுக்கு எதிராக, ரோமன் படைகளில் புகார் செய்து அவர்களைக் காட்டிக் கொடுத்ததற்காக என்று கொன்று புதைக்கப்பட்டனர். படுகொலைகள் அங்காங்கே அவ்வப்பொழுது, தேவைப்படும் கால இடைவெளிகளில் நடந்தேறிய வண்ணம் இருந்தது. யூதர்களின் ரத்தப்பெருக்கு ஒரு ஆறாக நிலமெங்கும் வழி தேடி ஓடிக் கொண்டிருந்தது.

    நீயும் அந்தக் கிளர்ச்சியாளர்களில் ஒருவனா? பிலிப் தாழ்ந்தக் குரலில் அவனிடம் கேட்டான்.

    பயப்படுகிறாயா? என் பெருமை மிகு நண்பா! செந்தாடிக்காரன் வெறுப்புடன் பற்களைக் காட்டிச் சிரித்தான். என்ன எச்சரிக்கைக் கொள்கிறாயா? புனித ஆடே! நாங்கள் ஒன்றும் கொலைகாரர்களல்ல. நம் விடுதலைக்காகப் போராடும் போராளிகள். நம் கடவுளின் சங்கிலிகளை உடைத்தெறிய, நம் ஆன்மாக்களைக் கட்டுண்டிருக்கும் பிணைகளை முறித்து வெளியேற்ற வந்திருக்கிறோம். எழு ஆண்மகனே! உனக்கானத் தருணம் இது, நீ ஒரு ஆண் என நிரூபிக்க! வா! எங்களுடன் இணைந்து கொள்.

    ஆனால் பிலிப்பின் பார்வைத் தரையில் குத்திட்டிருந்தது. யூதாசின் தங்குதடையற்றுப் பீறிடும் முழக்கங்களிலிருந்து அவன் தன்னை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். பெருமை மிகுக் கோஷங்கள் எல்லாம் சரிதான். அதை நாம் நம் நண்பனுடன் அமர்ந்து நன்றாகச் சாப்பிட்டுக், குடித்து ஓய்வாகப் பேசிக் கொள்ளும் போது, "நான் செய்கிறேன், உனக்கு என்னவென்று காட்டுகிறேன் பார்!"என்று முஷ்டியை மடக்கிக் கத்தும் பொழுது உண்மையில் சுகமாக இருக்கும். அரிப்பினைச் சொரிந்து கொள்வதைப் போல. ஆனால், ஆனால்...அதன் கடுமையானப் பாதைகளில் செல்லும் துணிச்சல்! அதுதான்! அப்பொழுது, அகம் பாதுகாப்பாக இரு! எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காதே! உண்மையில் சாவைப் பற்றியும், கொல்வதைப் பற்றி எண்ணும் பொழுது, பின் வாங்குகிறது. அழிவினை நெருங்கும் பொழுதுதான் சொந்த அகம் தான் யார் என்று காட்டுகிறதோ என்னவோ!

    யூதாஸ் அவனைக் கண்ணுக்குக் கண் நேரடியாகப் பார்த்து நிமிர்ந்து நின்றான். தன் கைகளால் அவன் தோள்களைத் தழுவிக் கொண்டு மெல்லியக் குரலில் பேச ஆரம்பித்தான்.

    மனிதனின் வாழ்வு என்பது என்ன? அதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? அவன் கட்டுண்டு கிடந்தால். நாம் அதனை விடுவிக்க வேண்டும். அதற்கே போராடுகிறோம். நான் சொல்கிறேன். நீ எங்களுடன் இணைந்து கொள்.

    பிலிப் இன்னும் அமைதியாக நின்றுகொண்டிருந்தான். யூதாசின் வலுவானக் கைகள் அவன் தோள்களில் தான் இன்னும்  இருந்தது. 

நீ ஒரு மனிதன். நீயே முடிவெடு! உன்னிடம் கத்தி இருக்கிறதா?

ஆமாம்.

    எப்பொழுதும் அதை உன்னிடம் வைத்துக் கொள். எந்தத் தருணத்திலும் அது உனக்குத் தேவைப்படலாம். நாம் மிகக்கடுமையான நாட்களைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. என் சகோதரா!

    உன்னால் அவனின் காலடிச் சப்தங்களைக் கேட்க முடிகிறதா? கனத்துக் கனத்து மிதந்து வரும் நம் மெசியாவின் ஒலியை நான் உணர்கிறேன். அவனது வருகையின் பொழுது நமது பாதைகள் எதுவும் அடைந்திருக்கக்கூடாது. ஒரு ரொட்டித்துண்டத்தை விட ஒரு கத்தி அதற்காக நமக்கு உதவும். இங்கே என்னைப் பார்!

    அவன் தன் மேலங்கியைத் திறந்து தன் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் இருமுனைகளும் கூர்மையான, நாடோடிகள் உபயோகிக்கும் கத்தியைக் காண்பித்தான். சூரிய ஒளிக்கதிர்கள் அவனது மேலுடலில் அப்பியிருந்த புழுதியைத் தழுவியது. 

    செபெதீயின் அலைவுறும் மனநிலை கொண்ட மகன் ஜேக்கப்பிற்காக இது துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் துரோகியின் இருதயத்தை இன்று எப்படியானாலும் இதன் கூர் முனைகளால் குத்திப் பிளப்பேன். நேற்று நாசரேத்தை விட்டு வெளிவரும்பொழுது அவனின் சகோதரத்துவத்தை நாங்கள் சரிவர அறிந்து கொண்டோம். அவனுடைய மரணமே அதற்குப்பரிசாக அவனுக்கு அளிக்கப்படவேண்டும்.

யார்?

    அவனைக் கொல்கின்ற பாக்கியம் என் கைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.

    யாரை? பிலிப்பின் கால்கள் நடுங்கின. திரும்பவும் விசனத்துடன் கேட்டான்.

    அது என்னுடைய வேலை. மற்றவர்கள் விவகாரங்களில் நீ தலையிட வேண்டாம் என்று பேச்சைத் திசை திருப்ப முயன்றான்.

என் மேல் நம்பிக்கையில்லையா?

    யூதாஸ் பிலிப்பை உற்றுப்பார்த்தான். பின் அவனது வலுவானக் கைகளால் அவனைப் பிடித்து உலுக்கினான்.

    நான் சொல்வதைக் கவனமாகக் கேள் பிலிப்! யாரிடமும் இதைப்பற்றி மூச்சு கூட விட்டுவிடாதே! இல்லையென்றால் உனக்குத்தான் பாதிப்பு. நான் இங்கிருந்து பாலைவனம் வழியாக அங்கிருக்கும் மடாலயத்திற்கு செல்கிறேன். அங்கு ஏதோ சில இரும்புப் பொருட்கள் செய்துத் தர வேண்டித் துறவிகள் அழைத்திருக்கின்றனர். இன்னும் சில தினங்களில், இரண்டு அல்லது மூன்று நாட்களில்,  உங்கள்  ஆட்டு மந்தைகள் பட்டியிட்ட, கூடாரம் வழியாகத்தான் நான் கடப்பேன். நாம் உரையாடிக் கொண்டதைத் திரும்பவும் உன் மனதில் நிறுத்திக் கொள்!  நீயே ஒரு முடிவெடு! இதைப்பற்றி வெளியில் பேசிக்கொள்ளாதே! நீ ஒரு ஆண் மகன் எனில், சரியான வழியையேத் தேர்ந்தெடுப்பாய்! அப்பொழுது நான் உனக்கு நம் திட்டங்களைப் பற்றி சரியாக விளக்குவேன்.

    எந்த அவசரமுமில்லை. நிதானமாக முடிவெடு. நீ இன்னும் எங்கள் குழுவில் இணைந்துவிடவில்லை. எங்கள் சகோதரர்களில் ஒருவனாக ஆகிவிடவில்லை. அவனது வலியக் கைகளைத் தோள்களில் இருந்து தளர்வித்தான். போய் வருகிறேன் பிலிப்! இப்போது வரை நீ எதுவுமில்லை. நீ உயிருடன் இருந்தாலும் இல்லை செத்தாலும் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. எல்லாமும் ஒன்றுதான். நானும் அப்படித்தான் இருந்தேன். எப்பொழுது நான் அவர்களின் குழுவில் ஒரு சகோதரனாக ஏற்றுக் கொள்ளப்பட்டேனோ அன்றிலிருந்து எல்லாமும் மாறிவிட்டது. நான் புதியவனாகி விட்டேன். நான் ஒரு ஆண்மகனானேன். அதன் பிறகு நான் கொல்லனோ, யூதாசோ இல்லை. ஒரு அடிமை எருதினைப் போல என் பட்டறையில் உழைத்துக் கொண்டு லாடங்களையும், அசிங்கமான இம்மனிதர்களுக்கு ஆபரணங்களையும் செய்து கொடுத்து என் வாழ்க்கையினை ஓட்ட வேண்டிய அவசியம் இனி இல்லை. நான் ஒரு பெரிய லட்சியத்தின் பால் என்னை வழிநடத்த ஒப்புவிக்கிறேன். ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக எவனொருவன் தன் வாழ்வினை அர்ப்பணிக்கிறானோ, அவனின் செயல் சிறியதாயினும், அவன் மனிதருள் மாமனிதன் ஆகிவிடுகிறான். புரிந்ததா! அதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கிறேன். சரி! நான் வருகிறேன்" தன் கழுதையை ஓட்டிக் கொண்டு, பாலைவனத்தை நோக்கி செல்லத் தொடங்கினான் யூதாஸ். 

    பிலிப், தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தான். தன் துரட்டியினை அங்கும் இங்கும் அசைத்தான். தொலைவில் சென்றுகொண்டிருக்கும் யூதாசின் விரைவானத் தப்படிகளைக் கண்ணுற்றான். வேக வேகமாக பாறைகளைக் கடந்து, வெற்று நிலங்களைத் தாண்டி அவன் புள்ளியாக மறைவது வரை அவனின் திசையையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிலிப்.

    பார்! இந்த செந்தாடிக்காரன் நன்றாகப் பேசுகிறான். ஒரு புனிதனைப் போல சிந்திக்கிறான். நிறையத் தற்பெருமை அடித்துக் கொள்கிறான். அது யாருக்கு வேண்டும். அவனது வார்த்தைகளைக் கேட்கும் போது ஆவேசம் பொங்குகிறது. மனம் அவனின் வழிப்பாதையில் செல்ல விரைகிறது. தான் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்டவன். உயர்ந்த லட்சியத்திற்காக நாமும் நம் உயிரைக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றி விடுகிறது. ஆனால் செயலில் இறங்கும் பொழுதுதான் எல்லாமே தடுமாறுகிறது. 

    "கவனமாக இரு, பிலிப்" உன் பாவப்பட்ட ஆடுகளைப் பற்றி நினைத்துப்பார்த்தாயா! இந்தத் தொழிலில் எந்தப் பிரச்சனையுமில்லை. நிம்மதியாக உறங்க முடிகிறது. பேசாமல் இதையே செய். இந்த ஆடுகளுடன் உனக்கு எந்தப் பாதகமும் ஏற்பட்டுவிடாது. தேவையில்லாமல் குழப்பிக் கொள்ளாதே! வார்த்தை ஜாலங்கள் எப்பொழுதும் வயிற்றுக்கு உதவாது. என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு பேசாமல் காத்திரு. அதுதான் உனக்கேற்ற வழி. பிலிப் தனக்குள்ளேயே சமாதானப் படுத்திக் கொண்டான்.

    தன் துரட்டிக் கம்பினைத் தோள்களில் பொருத்தியவன்,  ஆடுகளின் கிலுங்கும் மணிச்சப்தத்தைக் கேட்டான். விசிலடித்துக் கொண்டே சத்தம் வந்தத் திசை நோக்கி விரைந்தான்.

    செபெதீயின் தத்துப்பிள்ளைகள் சமையல் செய்துகொண்டிருந்தனர். ஒரு புறம் அடுப்பில் மீன் சூப் கொதித்துக் கொண்டிருந்தது. பாறைமீன்கள், கடல் ஊமத்தைகள், சிப்பிகள், நவரை மீன்கள் எல்லாம் இட்டு, சிறிது நறுமணப்பாசிகளையும், மிளகுப்பொடியும் உப்பும் அளவாக இட்டுக் கலக்கிக்கொண்டிருந்தனர். மீன்களின் கவுச்சி மணம் மாறி வெம்மையான அதன் நெய் மணம் காற்றில் பரவியது. இன்னொருபுறம் விளமீனையும், மடவையையும் அரிந்துக் கழிவிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அதுவும் பானையில் இடுவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தது. எப்படி வெறும் பாறைமீன்களையும், சிப்பிகளையும் கொண்டு அவர்கள் பசியாற முடியும். அவர்கள் அனைவரும் அடுப்பைச்சுற்றிப் பசியுடன் நின்றுகொண்டு தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். இன்றைக்கு சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார் கிழவர் என்றான் ஒருவன். அந்தக் கொல்லன் அவர் முகத்தையே சொற்களால் கிழித்துவிட்டான். பொறுமை! ஒரு நாள் பாவப்பட்டவர்கள் முன்னேறி வருவார்கள். பணக்காரர்கள் கீழிறங்குவார்கள். அதுதானே நியதி.

    நீ நினைக்கிறாயே! அப்படி ஏதும் அதிசயம் இந்தப் பூமியில் நிகழும் என்று. பிறந்ததிலிருந்தே பசியை மட்டுமே அறிந்த ஒருவன் பொறுமையற்றுச் சற்றுக் கண்டிபான குரலில் கத்தினான்.

    ஒரு கடவுள் இருக்கிறார்? அவர் நிச்சயமாக இருக்கிறார் என்று நம்புகிறோம் இல்லையா! அப்படியென்றால் அவருக்குத்தெரியும், எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று, அதனால் நிச்சயமாக அது நடக்கும். பொறுமை, நம்பிக்கை இது இரண்டும் தான் நமக்கு கடவுளால் அளிக்கப்பட்டச் சொற்கள். அதனால் நம்பு! என்றார் அதிலிருந்த ஒரு முதியவர்.

    என்ன, அங்கே குசுகுசுவெனச் சப்தம், செபெதீ அவர்களைப் பார்த்து அதற்றினார்.

    திடீரென உள்ளே நுழைந்தவரை யாரும் எதிர்பார்க்கவில்லை. குரல் வந்தத் திசை நோக்கி சந்தேகமாகப் பார்த்தார்.

    "நீங்கள் உங்கள் வேலைகளைச் சரியாகவும், முதலாளிக்கு விசுவாமாகவும் செய்யுங்கள், கடவுளிற்கு நீங்கள் வேலை சொல்லிக் கொடுக்க வேண்டாம். அவனுக்குத்தெரியும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று"

    அனைவரும் ஒருமித்து அமைதியாகினர். வயதான மீனவன் தன் மரக்கரண்டிகளை எடுத்துக் கோப்பையில் ஊற்றி வைத்திருந்த சூப்பை ஊதி ஊதி உறிஞ்சத் தொடங்கினான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக